|
|||||
பாரம்பரிய நெல் விதைகளை பாதுகாத்து வரும் நமது நெல்லைக் காப்போம் இயக்கம் !! |
|||||
விளை நிலங்கள் எல்லாம் மனைகளாக மாறிக் கொண்டிருக்கும் காலத்திலும் விதை நெல்லை காக்க 'நமது நெல்லைக் காப்போம்’ என்ற பெயரில் ஓர் இயக்கம். நெல் உற்பத்தியின் அவசியம், இயற்கை விவசாயம் செய்ய வேண்டியதன் அவசியம் ஆகியவற்றை முன்வைக்கும் இந்த இயக்கம், அழிந்து போகும் நிலையில் உள்ள நம்முடைய பாரம்பரிய நெல் விதைகளைச் சேகரித்துப் பாதுகாக்கும் முக்கியப் பணியைச் செய்கிறது. அப்படி அவர்கள் பாதுகாத்து வைத்த விதை நெல்லை, ஊர் ஊராக சென்று விவாசயிகளுக்குத் தந்து அதை பயிர் செய்ய சொல்வதன் மூலம் பாரம்பரிய நெல்வகைகளை பெருகச் செய்திருக்கிறார்கள். முதன் முதலில் இப்படி ஊர் ஊராகச் சென்று விதை நெல்லை வழங்கியவர் கட்டிமேடு ஜெயராமன் தான்(படத்தில் இருப்பவர்) விதை நெல்லை வாங்கிப் பயிர் செய்யும் விவசாயிகள் நெல்லுக்குப் பணம் கொடுக்க வேண்டியது இல்லை. பதிலாக, அந்த நெல் விளைந்தவுடன் நான்கு கிலோவாக திருப்பித் தர வேண்டும். இப்படி 2001-ல் நமது நெல்லைக் காப்போம் என்ற பிரசார இயக்கம் ஆரம்பித்ததன் பலனாக, இன்று 13,000-த்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பாரம்பரிய விதைகளின் பக்கம் தங்கள் கவனத்தைத் திருப்பி இருக்கிறார்கள். முன்பு விவசாயிகளைத் தேடிப்போய் நெல்லைக் கொடுத்த நிலை மாறி, இப்போது தமிழ்நாடு முழுவதும் இருந்து ஆதிரெங்கத்தில் இருக்கும் இவர்களுடைய பண்ணையைத் தேடிவந்து வாங்கிச் செல்கிறார்கள் விவசாயிகள். அது சரி, இயற்கை விவசாயம் என்றால் என்ன? அப்படி எந்த பாரம்பரிய விதை நெல்லை பாதுகாக்கிறார்கள். அதன் அவசியம் தான் என்ன? ஆராச்சி செய்து கண்டுப்பிடிக்கப் படுகிற நவீன நெல் வகைகள் மனிதனுக்கு நோய் ஏற்படுத்தக் கூடியவை. ரசாயனத்தால் விளையும் அவை மனிதனின் உடலில் அந்த ரசாயனத்தை இறக்கி வைத்துவிடுகின்றன. அதாவது உரம் மற்றும் பூச்சு மருந்து தெளித்து வளர்க்கபடுபவை. ஆனால்,நம் பாராம்பரிய நெல் வகைகளில் ஒவ்வொரு வியாதிக்கும் ஓர் அரிசி, மருந்தாகவே பயன்பட்டு இருக்கிறது. மாப்பிள்ளை சம்பாவும், காட்டுயானமும் உடலில் சர்க்கரையைக் கட்டுப்படுத்தி வைக்கும் நல் மருந்துகள். விதைத்து விட்டு வந்தால், அறுவடைக்குத்தான் வயலுக்குப்போக வேண்டும். இடையில் எந்த உரமும் பூச்சி மருந்தும் அடிக்கத் தேவை இல்லை. அதனால், அதில் ரசாயனம் ஏறாது. சாப்பிடுகிறவருக்கும் வியாதியைத் தராது. அதனால்தான் இந்த நெல் ரகங்களைப் பாதுகாக்க வேண்டும். இதுவே இயற்கை விவசாய முறை. இப்படி இயற்கை விவசாயம் அழியாமல் இருக்கவும், அந்த விதை நெல் மூலம் பல விவசாயிகள் பயன் பெற வேண்டும் என்ற நல்ல எண்ணத்திலும் விழிப்புணர்வை ஏற்படுத்திய திரு. ஜெயராமன் அவர்களை மனதார பாராட்டுவோம். விவசாயம் வாழ்ந்தால் என்ன அழிந்தால் என்ன என்று அரசாங்கமே இங்கு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க, சுயநலமின்றி இந்த இயக்கத்தில் இணைந்து சேவை செய்யும் அனைத்து விவசாயிகளையும் நெஞ்சம் நெகிழ்ந்து பாராட்டுவோம். |
|||||
by Swathi on 24 Mar 2014 9 Comments | |||||
Tags: Traditional Paddy Paarambariya Nel பாரம்பரிய நெல் நெல் விதைகள் | |||||
கருத்துகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|