விவசாயக் கடன் தள்ளுபடித் திட்டத்தில் எந்த ஊழலும் நடைபெறவில்லை என மத்திய வேளாண்துறை அமைச்சர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் விவசாயக் கடன் தள்ளுபடித் திட்டத்தில் சுமார் 10,000 கோடிரூபாய்க்கு மேல் ஊழல் நடந்திருப்பதாக தலைமை கணக்குத் தணிக்கையாளர் துறை சமீபத்தில் அறிக்கை வெளியிட்டது. இதற்கு பதிலளித்து பேசிய மத்திய வேளாண் துறை அமைச்சர் சரத் பவார் கூறியதாவது, விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்வது என்று மத்திய அரசு முடிவு செய்து. அதற்கான பணத்தை வங்கிகளுக்கு அனுப்பப்பட்டது. ரிசர்வ் வங்கி மற்றும் நபார்டு வங்கியின் மேற்பார்வையின் கீழ், வங்கிக் கணக்குகள் மற்றும் பயனாளிகளின் பட்டியலை வங்கிகள் தேர்வு செய்தன. பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு பணம் நேரடியாக மாற்றப்பட்டது. எனவே இதில் எந்தவித முறைகேடும் நடந்திருக்க வாய்ப்பில்லை என அவர் தெரிவித்தார். எனினும், வங்கிகள் தயாரித்த பயனாளிகள் பட்டியலில், தகுதி பெற்ற விவசாயிகளின் பெயர்கள் சேர்க்கப்படாமல் போனதற்கும், தகுதியற்ற விவசாயிகள் சேர்க்கப்பட்டிருக்கவும் வாய்ப்புண்டு. மொத்தமுள்ள 3.7 கோடி வங்கிக் கணக்குகளில், வெறும் 90,576 கணக்குகளை மட்டுமே தலைமை கணக்குத் தணிக்கையாளர் துறை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டது. இந்தியா முழுவதும் அமல்படுத்தப்பட்ட இவ்வளவு பெரிய திட்டம் குறித்து, சிறிய எண்ணிக்கையிலான பயனாளர்களிடம் ஆய்வு நடத்தி ஊழல் நடந்திருப்பதாக கருதகூடது என அவர் தெரிவித்தார்.
|