டிராபிக் ராமசாமி தமிழக மக்களுக்கு அறிமுகமான ஒரு சிறந்த பொதுநலசேவகர். இவர் சாலைகளில் ஏற்படும் போக்குவரத்தை சரிசெய்ய தானே களத்தில் இறங்கி, சென்னையின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை சீர்படுத்தினார். எனவே போலிசார் இவருக்கு அடையாள அட்டை வழங்கினர். பின்னர் பல்வேறு முக்கியமான பொதுநல வழக்குகளை தொடுத்து அதில் வெற்றிபெற்றுள்ளார். இருப்பினும் பலமுறை இவருடைய வழக்குகளால் பாதிக்கப்பட்டோர் இவரை தாக்கியுள்ளனர். இருப்பினும் பயமின்றி தொடர்ந்து மக்கள் சேவை செய்துவருகிறார். பெரும்பாலான வழக்குகளில் வழக்கறிஞர் துணையின்றி தானே வாதாடும் நடைமுறையை கடைபிடிக்கிறார். அவர் தொடுத்து வெற்றிபெற்ற ஒரு சில வழக்குகள்:
- 2002ல் சென்னையில் அதிக எடை ஏற்றிக் கொண்டு கட்டுபாடில்லாமல் ஓடிய மீன் ஏற்றும் வண்டிகளுக்கு எதிராக நீதிமன்றத்தடை பெற்றவர்.
- சென்னையில் அனுமதி இல்லாமல் பல அடுக்குக் கட்டிடங்களை கட்டிய பெருமுதலாளிகளுக்கு எதிராக பல வழக்குகள் போட்டு பல கட்டிடங்களை இடிக்க வைத்தார். பல கட்டிடங்கள் செயலிழக்கச் செய்தார். கட்டிடங்கள் கட்டுவதில் ஒரு முறைமை உருவாக இது வழி வகுத்தது.
- சென்னையில் கட்டப்படும் எல்லா கட்டிடங்களும் கார் நிறுத்த வசதிகளுடன் மட்டுமே கட்டப்படவேண்டும் என்ற நீதிமன்ற ஆணையினையும் இவர்தான் பெற்றார். இது இன்று தமிழகம் முழுக்க பரவலாக அமல் செய்யப்படுகிறது.
அரசு நிதி வீணடிக்கப்படுவது, முறைகேடான அரசுச் செயல்பாடுகள் ஆகியவற்றுக்கு எதிராக தொடர்ச்சியாக நீதிமன்றத்துக்குச் சென்றபடியே இருக்கிறார் ராமசாமி இவர்மீது பல்வேறு பொய் வழக்குகள் போடப்பட்டுள்ளன. பலமுறை கைதும் செய்யப்பட்டுள்ளார். இருப்பினும் இரும்பு மனம் படைத்த இந்தியன் தாத்தாவாக வலம் வருகிறார். ராமசாமிக்கு ஆயுதப் படை பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவின் பேரில் அவருக்கு துப்பாக்கி ஏந்திய காவல்துறைப் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இவர் தொடர்ந்து பல்வேறு மக்கள் நலப் போராட்டங்களை முன்னின்று நடத்திவருகிறார்.
|