LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

பழம்பெரும் நடிகை மனோரமா மாரடைப்பால் காலமானார் !!

ஐந்து தலைமுறை நடிகர்களுடன் பணியாற்றிய பழம்பெரும் நடிகை மனோரமா மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 78. 1000 படங்களுக்கு மேலும், 1000 நாடகங்களுக்கு மேலும் நடித்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றவர் நடிகை மனோரமா. கடந்த சில ஆண்டுகளாகவே அடிக்கடி உடல்நலம் சரியில்லாமல் இருந்து வந்தார் மனோரமா. சமீபத்தில் அவரது உடல்நிலை நன்றாக தேறியிருந்தது. அதன்காரணமாக சில தினங்களுக்கு முன்னர் பத்திரிகையாளர்கள் சங்கத்தின் முப்பெரு விழாவில் கலந்து கொண்டார்.
 
இந்நிலையில் நேற்று இரவு சுமார் 10 மணியளவில் அவருக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் உடனடியாக தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலன் இன்றி இரவு 11.15 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது.

தஞ்சை மாவட்டம் மன்னார்குடியில், காசி குலோகுடையார் - ராமாமிதம் ஆகியோருக்கு மகளாக 1937ம் ஆண்டு, மே 26ம் தேதி பிறந்தவர் நடிகை மனோரமா. மனோரமாவின் இயற்பெயர் கோபிசாந்தாவாகும். சின்ன வயதில் இருந்தே நாடகத்தில் அதீத ஆர்வம் கொண்டவர் மனோரமா.

12வயதில் மேடை நாடகம்

வறுமையின் காரணமாக மன்னார்குடியிலிருந்து காரைக்குடி அருகே உள்ள பள்ளத்தூருக்கு இடம்பெயர்ந்தனர் மனோரமா குடும்பத்தார். நாடகத்தில் ஆர்வம் கொண்ட மனோரமா, தனது 12 வயதில் மேடை ஏறினார். நாடக இயக்குநர் திருவேங்கடம் மற்றும் ஆர்மோனிய வித்வான் தியாகராஜன் ஆகியோரது உதவியால் மேடை நாகடங்களில் நடிக்க தொடங்கியதோடு பாடகராவும் மாறினார்.

வைரம் நாடகம் சபாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த மனோரமா, பின்னர் எஸ்.எஸ்.ராஜேந்திரனின் நாடக கம்பெனிக்கு பி.ஏ.குமார் மூலம் அறிமுகமானார். தனது அற்புதமான நடிப்பாலும், வசன உச்சரிப்புகளாலும் ராஜேந்திரனால் ஈர்க்கப்பட்டவர், தொடர்ந்து அவரது நாடக கம்பெனியின் மூலமாக 100க்கும் மேற்பட்ட நாடகளில் நடித்தார். அதில் அவர் நடித்த மணிமகுடம், தென்பாண்டி வீரன், புதுவௌ்ளம் போன்ற நாடகங்கள் பெரிதும் பேசப்பட்டன. இதுவே அவரை சினிமாவுக்கும் அழைத்து செல்ல உதவியது.

முதல் சினிமா படம்

நாடகங்களில் நடித்து வந்த மனோரமா, 1958ம் ஆண்டு கவிஞர் கண்ணதாசனால் மாலையிட்ட மங்கை என்ற படத்தில் சிறிய வேடத்தில் நடித்தார். அதன்பின்னர் ஒரு சில படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்தவர், 1963ம் ஆண்டு கொஞ்சும் குமரி படத்தில் ஹீரோயினாக நடித்தார். அதன்பின்னர் மனோரமா கொஞ்சம் கொஞ்சமாக முன்னணி நடிகர்களான சிவாஜி, எம்ஜிஆர், ஜெமினி கணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன் என அந்தக்கால திரையுலக ஜாம்பவான்களின் படங்களில் நடித்தார்.

மனோரமா பெயர் வந்தது எப்படி.?

நாடக இயக்குநர் திருவேங்கடம் என்பவர் இவருக்கு "மனோரமா என்று பெயர் வைத்தார். முன்னாள் முதல்வர் அண்ணாதுரை எழுதிய "வேலைக்காரி உள்ளிட்ட சில நாடகங்களில் அவருடன் மனோரமா நடித்துள்ளார். கருணாநிதி எழுதிய "உதயசூரியன் நாடகத்தில் கருணாநிதி கதாநாயகனாகவும், மனோரமா கதாநாயகியாகவும் நடித்தனர். ஆயிரம் நாடகங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

திருப்பம் தந்த தில்லானா மோகனம்மாள்

மனோரமா பல படங்களில் நடித்திருந்தாலும் அவரது காமெடி திறனை முழுமையாக வௌிப்படுத்திய படம் என்றால் அது தில்லானா மோகனம்மாள் படம் தான். சிவாஜி-பத்மினியுடன், மனோரமாவும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். ஜில் ஜில் ரமாமணி என்ற கதாபாத்திரம் அவரை பெரிதும் பேச வைத்தது.

நாகேஷ், சோ, சந்திர பாபு, தங்கவேலு, தேங்காய் சீனிவாசன் என அந்தக்கால காமெடி நடிகர்களுக்கு மத்தியில் நடிகையாலும் காமெடி பண்ண முடியும் என்று நிரூபித்தவர். இவர்களின் அநேக படங்களில் மனோரமா காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

கின்னஸ் சாதனை படைத்தவர்

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ள மனோராமா 1000 படங்களுக்கு மேல் நடித்தற்காக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றார். சினிமாவில் மட்டுமின்றி நாடகத்திலும் 1000 நாடகங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

பின்னணி பாடகியாகவும் ஜோலித்துள்ளார் :

மனோரமா சிறந்த நடிகை மட்டுமல்ல, சிறந்த பாடகியும் கூட. மேடை நாடகங்களில் நடிக்க தொடங்கிய காலத்திலேயே பாட்டு பாடி வந்தவர் சினிமாவிலும் சுமார் 300 பாடல்கள் பாடியிருக்கிறார். மகளே உன் சமத்து என்ற படத்தில் முதன்முதலாக பாடினார் மனோரமா. அவர் பாடிய ஜான் பேட்ட ஜக்கு நான் சைதாபேட்டை கொக்கு, டில்லிக்கு ராஜா ஆனாலும் பாட்டி சொல்ல தட்டாதே, மெட்ராஸ சுத்தி பார்க்க போறேன்,முத்து குளிக்க வாரிகளா உள்ளிட்ட பல பாடல்கள் மிகவும் பிரபலமானவை.

ஐந்து முதல்வர்களின் படங்களில் பணியாற்றியவர்

தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களான மறைந்த அண்ணாத்துரை, எம்.ஜி.ஆர்., மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதி, தற்போதைய முதல்வர் ஜெயலலிதா மற்றும் ஆந்திரா முன்னாள் முதல்வர் என்டி.ராமாராவ் ஆகிய ஐந்து முதல்வர்களின் படங்களில் பணியாற்றியுள்ளார் மனோரமா.

ஐந்து தலைமுறை நடிகர்களை கண்ட நடிகை

சினிமாவில் எம்ஜிஆர்., சிவாஜி காலம் தொடங்கி இந்தாக்கால தனுஷ்-சிம்பு வரை ஐந்து தலைமுறை நடிகர்களை கண்டவர் நடிகை மனோரமா.

விருதுகள்

கலைத்துறையில் மனோரமாவின் சாதனையை பாராட்டி மத்திய அரசு கடந்த 2002ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது. இதுதவிர தேசிய விருது, கலைமாமணி விருது, பல மாநில விருதுகள், பிலிம்பேர் மற்றும் வாழ்நாள் சாதனையாளர் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை மனோரமா பெற்றுள்ளார்.

பெண் சிவாஜி கணேசன்

தமிழ் சினிமாவின் நடிப்பு திலகம் என்றால் சிவாஜி கணேசன். அதேப்போன்று மனோரமா ஒரு பெண் சிவாஜி கணேசன் என நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகரும், பத்திரிகையாளருமான சோ ராமசாமி தெரிவித்துள்ளார்.

பொன்விழா கண்டவர்

நாடகத்துறை, சின்னத்திரை, வெள்ளித்திரை என நடிப்பின் அனைத்து பிரிவுகளில் தனது பெயரை நிலைநாட்டியவர். இவர் நடிக்காத கேரக்டர்களே இல்லை என கூறுமளவுக்கு நடிகை, அம்மா, ஆச்சி, வில்லி, காமெடி, பாடல் என அனைத்து கேரக்டர்களிலும் கொடிகட்டி பறந்தவர். நடிப்பில் 50 ஆண்டுகளை கடந்து "பொன்விழா கொண்டாடியவர்.
"உனக்கும் வாழ்வு வரும் என்ற படத்தில், மனோரமா ஊமையாக நடித்திருப்பார்.

"மஞ்சள் குங்குமம் என்ற படத்தில் நடிக்கும் போது, மனோரமாவை "காட்டுவிரியன் பாம்பு கடித்து விட்டது. பின் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். குணமடைந்த பின், அடுத்ததாக நடித்த "ஆடி விரதம் படத்தில் பாம்பு சிலையை குளிப்பாட்டி தாலாட்டும் பாட்டு சீன் ஒன்றில் நடித்தார்.

மனோரமாவின் மறைவை ஒட்டி இன்றைக்கு தமிழ் திரைப்படங்களின் படபிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்வதாக இயக்குனர் சங்கம் அறிவித்துள்ளது.

by Swathi   on 10 Oct 2015  0 Comments
Tags: மனோரமா   Manorama                 
 தொடர்புடையவை-Related Articles
குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -  குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர்  திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர் 
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர்  முனைவர்.ஜாகிர் உசேன் திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர் முனைவர்.ஜாகிர் உசேன்
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது.. திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது..
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்... திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்...
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.