|
|||||
தமிழக நிதிநிலை அறிக்கை 2025- திருக்குறள், தமிழ் வளர்ச்சிக்கான திட்டங்கள் என்னென்ன? |
|||||
* திருக்குறளை 45 புதிய மொழிகளில் மொழிபெயர்க்க ரூ.133 லட்சம் ஒதுக்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். * வருங்காலங்களில் தமிழ்ப் புத்தகக் கண்காட்சிகளை இந்தியப் பெருநகரங்கள் மற்றும் சிங்கப்பூர், மலேசியா, துபாய் ஆகிய வெளி நாட்டின் நகரங்களிலும் நடத்த ரூ.2 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
* ஆண்டுக்கு நூறு புத்தகங்கள் வீதம் வருகின்ற ஐந்து ஆண்டுகளில் 500 தமிழ்ப் புத்தகங்களை மற்ற மொழிகளில் மொழிபெயர்க்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
* வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் இளைய தலைமுறையினருக்குத் தமிழ் மரபை முறையாக அறிமுகம் செய்திடும் வகையில், அயலகத் தமிழர் நல வாரியம் மூலம் அவர்களுக்குத் தமிழ் மொழி மற்றும் நாட்டுப்புறக் கலையைப் பயிற்றுவிக்கும் 100 தமிழ் ஆசிரியர்கள் மற்றும் கலைஞர்களை வைத்து நேரடி வகுப்புகளை நடத்திட ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* தமிழின் பெருமை மற்றும் சிறப்பை உலகத் தமிழ் இளைஞர்கள் மத்தியில் கொண்டு செல்ல, தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவில் உள்ள பிற நகரங்களில் உள்ள பள்ளிகளிலும், உலகத் தமிழ் மையங்களிலும் பயிலும் மாணவர்களுக்குக் கணினி வழி உலகத் தமிழ் ஒலிம்பியாட் போட்டி ஒவ்வோர் ஆண்டும் நடைபெறும். இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு ரூ. 1 கோடி வழங்கப்படும்.
* தமிழ்மொழியின் தொன்மை மற்றும் தொடர்ச்சியினை அறிந்து கொள்ளும் வகையில், அகரம் - மொழிகளின் அருங்காட்சியகம் ஒன்று மதுரை உலகத் தமிழ்ச்சங்க வளாகத்தில் அமைக்கப்படும்.
* அகழ்வாராய்ச்சியில் வெளிக்கொணரப்பட்ட தொல்லியல் பொருட்களில் தொல் மரபணுவியல், உலோகவியல் பகுப்பாய்வு, நுண் தாவரவியல், மகரந்தப் பகுப்பாய்வு, தூண்டொளி வெப்பக் காலக் கணிப்பு, மட்பாண்ட வியல் உள்ளிட்ட உயர்தொழில்நுட்ப ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளது. அதற்காக, வரும் நிதி ஆண்டில் தொல்லியல் ஆராய்ச்சி மற்றும் அறிவியல் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள ரூ. 7 கோடி நிதி ஒதுக்கப்படும்.
* தென்கிழக்கு ஆசியா, மத்தியத் தரைக்கடல், அரேபியத் தீபகற்பம், ரோமப் பேரரசு பகுதிகளுடன் வைத்துக்கொண்ட கடல் வழி வணிகம் தொடர்பாக ஆழ்கடல் அகழாய்வுகளைத் தமிழ்நாடு கடற்கரைப் பகுதிகளில் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன் முதல்கட்டமாக இந்த ஆண்டு தொல்லியல் ஆய்வாளர்களின் அறிவுரைப்படி காவிரிப்பூம்பட்டினம் முதல் நாகப்பட்டினம் வரை ஆழ்கடல் அகழாய்வு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
* ஐம்பொன்னால் ஆன இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட செப்புத் திருமேனிகள் எழும்பூர் அருங்காட்சியகத்தில் இடம் பெற்றுள்ளன. அதன் சிறப்பை வெளிநாட்டினரும் ரசிக்கும் வகையில், மரபுசார் கட்டட அமைப்பில் தனியாகக் காட்சி அரங்கம் ஒன்று எழும்பூர் அருங்காட்சியகத்தில் அமைக்க ரு. 40 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
* கொடுமணல் அகழாய்வுகளை முன்னிலைப்படுத்தி ஈரோடு மாவட்டத்தில், நொய்யல் அருங்காட்சியகம் ரூ.22 கோடி மதிப்பீட்டிலும், சங்ககாலப் பாண்டியரின் கடல்வழி வணிகச் சிறப்பை விளக்கிடும் வகையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் நாவாய் அருங்காட்சியகம் ரூ. 21 கோடி மதிப்பீட்டிலும் உருவாக்கப்படும்
|
|||||
by hemavathi on 16 Mar 2025 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|