|
|||||
தமிழ் எழுத்துகளைத் தெலுங்கில் சேர்க்கும் முடிவைக் கைவிட்டது ஒருங்குறிச் சேர்த்தியம் |
|||||
![]() தமிழ் எழுத்துகளைத் தெலுங்கில் சேர்க்க முடிவு செய்த ஒருங்குறிச் சேர்த்தியம், தற்போது அந்த முடிவை பின்னெடுத்துக் கொண்டது என்ற நல்ல செய்தி இன்று கிடைத்துள்ளது. போன ஏப்ரல் மாதம் தமிழின் ழ, ற எழுத்துகளை, தெலுங்கு ஒருங்குறிக்கு அதன் நெடுங்கணக்கில் சேர்க்கத் திரு,வினோதுராசன் முன்னீடு வைத்திருந்தார். ஒருங்குறிச் சேர்த்தியம் அதை ஏற்றுக்கொண்டு அறிவிக்கை செய்திருந்தது.
இதை மறுத்து நானும் இராம.கி ஐயாவும் அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்றோம்.
தமிழக அரசின் தமிழ் இணையக் கல்விக்கழகம் வல்லுநர் குழு அமைத்து அதை ஆய்வு செய்து, அந்த முன்னீட்டில் இருக்கும் பிழையான கூறுகளைச் சுட்டிக்காட்டி, தமிழெழுத்துகளைச் சேர்க்கக் கூடாது என்று ஒருங்குறிச் சேர்த்தியத்திற்கு, எழுதியிருந்தது.
தற்போது ஒருங்குறிச் சேர்த்தியம் தன் முடிவை மாற்றிக்கொண்டு, அவ்வெழுத்துகளை பின்னெடுப்பதாக அறிவித்திருக்கிறது.
தமிழிணையக் கல்விக்கழகத்திற்கும் தமிழக அரசுக்கும் நன்றிகள்.
வல்லுநர்குழுவில் பேரா.பொன்னவைக்கோ, முனைவர் இராம.கி, முனைவர் இராசவேலு, முனைவர் இரமணசர்மா, முனைவர் சேம்சு அந்தோணி ஆகியோருடன் நானும் பங்காற்றியிருந்தேன்.
முனைவர் இராம.கியின் பன்மொழிப் புலமை இதில் முக்கிய பங்காற்றியது. அவரே அறிக்கையையும் வல்லுநர் குழுவின் சார்பில் எழுதினர்.
மேலும் இவ்வாய்வுகள் செம்மையாக நடந்து அறிக்கைகள் சேர்த்தியத்திற்குச் செல்ல உதவியாகத் திரு.உதயச்சந்திரன் இ.ஆ.ப இருந்தார்.
நேரடியாகவும், பின்புலத்திலும் உதவியும், சான்றுகளும், ஆதரவும் அளித்த நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். சில தெலுங்கு தேசத்தைச் சேர்ந்த மொழி வல்லுநர் செய்த மொழி சார்ந்த உதவிகள் பயன் தந்தன. அவர்களுக்கு நன்றிகள்.
எளிதாக முடிந்திருக்க வேண்டிய இவ்விதயம், நம்மவர் சிலர் மேம்போக்காக அந்த முன்னீட்டைப் பார்த்துவிட்டு, "தெலுங்குக்குத் தமிழ் எழுத்துகள் போனால், அது தமிழுக்கு நல்லது" என்றும் "தமிழ் தெலுங்குக்குப் போவதை மறுக்க வேண்டியது தெலுங்கர்கள் உரிமை, நாம் ஏன் அலட்ட வேண்டும்" என்றும் முகநூலில் எழுதிக் குழப்பிவிட்டதால், பல இடங்களில் எங்களுக்குக் கடுமையான நெருக்கடிகளைத் தந்தது. ஆயினும் இறுதியில் நல்லபடியாக முடிந்ததில் எமக்கு/நமக்கு மகிழ்ச்சி.
-நாக.இளங்கோவன்
தெலுங்குக்குத் தமிழ் எழுத்துகள் போகக்கூடாது என்ற ஆய்வறிக்கையின் தமிழ் வடிவத்தை இங்கே காணலாம்.
https://nayanam.blogspot.com/2020/06/blog-post.html...
#ஒருங்குறி #Unicode
|
|||||
by hemavathi on 05 Aug 2025 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|