|
|||||
கேண்டிடேட்ஸ் தொடரில் வென்ற தமிழக வீரர் குகேஷுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத் தொகையை முதல்வர் ஸ்டாலின் வழங்கி பாராட்டு. |
|||||
கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் வெற்றி பெற்றுள்ள தமிழக வீரர் குகேஷுக்கு ஊக்கத்தொகை யாக ரூ.75 லட்சத்துக்கான காசோலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: கனடாவின் டொரன்டோவில் நடைபெற்ற ஃபிடே கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் குகேஷ் 17 வயதில், ‘சேலஞ்சராக' வெற்றி பெற்று வரலாறு படைத்துள்ளார். பதின்பருவத்தில் இத்தகைய வெற்றியை முதல் வீரராகச் சாதித்துள்ளார்.
அவர் தனது 12-ஆவது வயதிலேயே இளம் கிராண்ட்மாஸ்டராக தகுதி பெற்றவர். இளம் வீரராக வரலாறு படைத்த அவர் சென்னை வந்தடைந்தார். இந்நிலையில், முதல்வர் மு.க. ஸ்டாலின், உடனடியாக அவரை முகாம் அலுவலகத்துக்கு அழைத்து குகேஷை பாராட்டி உயரிய ஊக்கத்தொகையாக ரூ.75 லட்சத்துக்கான காசோலை மற்றும் கேடயத்தை வழங்கி சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
ஏற்கெனவே இப்போட்டியில் பயிற்சி பெறுவதற்காக, தமிழக அரசின் சார்பில் குகேஷுக்கு ரூ.15 லட்சம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து, உலக செஸ் சாம்பியன்ஷிப்புக்கான போட்டியிலும் அவர் வெற்றி வாகை சூட முதல்வர் வாழ்த்து தெரிவித்தார்.
இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைத்தளப் பதிவில், ‘இளம் வயதில் ஃபிடே கேண்டிடேட்ஸ் தொடரில் வெற்றி பெற்று அனைவரின் புருவத்தையும் உயர்த்தச் செய்து தாயகம் திரும்பியுள்ள குகேஷுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத் தொகையை அளித்து வாழ்த்தினேன், கல்வியுடன் சேர்த்து அனைத்து விளையாட்டுகளையும் ஊக்குவித்து, தமிழகத்திலிருந்து மேலும் பல சாதனையாளர்கள் உருவாக உழைத்துவரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அதிகாரிகளுக்கு பாராட்டுகள்.
இளைஞர்கள் படிப்புடன் ஏதேனும் ஒரு விளையாட்டையும் தங்கள் அன்றாட வழக்கங்களில் இணைத்துக் கொள்ளுங்கள், உங்கள் உடலையும், மனதையும் விழிப்புடனும் சுறுசுறுப்பாகவும் வைத்துக்கொள்ள அது உதவும்’ என்று தெரிவித்துள்ளார்.
ஊக்கத்தொகை பெற்ற குகேஷ் கூறும்போது, ‘‘தமிழக அரசு விளையாட்டு வீரர்களைப் பல்வேறு வகையில் ஊக்குவித்து வருகிறது. பயிற்சி பெறும்போது ஊக்கத்தொகையையும், போட்டி முடிந்த பிறகு பரிசுத் தொகையையும் உடனடியாக வழங்கியது மகிழ்ச்சியும், ஊக்கமும் அளிக்கிறது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறார்’’ என்றார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் உதய நிதி ஸ்டாலின், துறைச் செயலர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி உள்ளிட்டோருடன் இருந்தனர். |
|||||
by Kumar on 01 May 2024 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|