தேசிய நினைவுச்சின்னமாக உள்ள செஞ்சிக் கோட்டையை உலக புராதனச் சின்னமாக யுனெஸ்கோ இன்று (ஜூலை 12) அறிவித்துள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றான செஞ்சிக்கோட்டை 13ம் நூற்றாண்டில் கோன் சமூக ராஜ வம்சத்தால் கட்டப்பட்டது. சோழர்கள் பலவீனம் அடைந்தபின் ஆட்சியை நிறுவிய ஆனந்தகோன் என்ற குறுநில மன்னரால் இந்தக் கோட்டை கட்டப்பட்டது.
மூன்று மலைகளை அரணாகக் கொண்டு, சுமார் 13 கிலோ மீட்டர் சுற்றளவையும், 11 சதுர கிலோ மீட்டர் பரப்பளவையும் கொண்டு மிகப்பெரிய அரணாக விளங்கியது. இதனால் ‘இந்தியாவின் தலைசிறந்த உட்புக முடியாத கோட்டை’ என மராத்திய மன்னர் சத்ரபதி சிவாஜியால் பாராட்டப்பட்டது. ஆங்கிலேயர்கள் இந்தக் கோட்டையை ‘கிழக்கின் ட்ராய்’ என்று அழைத்தனர்.
1921ம் ஆண்டு செஞ்சிக்கோட்டை முக்கியமான தேசிய நினைவுச்சின்னமாக அறிவிக்கப்பட்டு, மத்தியத் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. இதற்கிடையே 2024- 25ம் ஆண்டில் இந்தியாவில் செஞ்சிக் கோட்டை உட்பட 12 இடங்களை உலக பாரம்பரியச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என யுனெஸ்கோ அமைப்பிற்கு மத்திய அரசு பரிந்துரை செய்தது.
இதனையடுத்து யுனெஸ்கோ அமைப்பினர் மற்றும் நினைவுச்சின்னங்கள் மற்றும் தலங்களுக்கான சர்வதேச ஆணைய உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர் கடந்த செப்டம்பர் 27ம் தேதி செஞ்சிக்கோட்டையை நேரில் வந்து ஆய்வு செய்தனர். அவர்கள் அளித்த அறிக்கையின் பேரில், செஞ்சிக் கோட்டையை உலக புராதனச் சின்னமாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது. இதன்மூலம் செஞ்சிக் கோட்டைக்குச் சர்வதேச அளவில் அங்கீகாரம், சுற்றுலா மேம்பாடு, நிதி உதவிகள் மற்றும் சட்டப்பூர்வப் பாதுகாப்பு ஆகியவை வழங்கப்படும்.
இது வரலாற்று ஆய்வாளர்கள், தொல்லியல் நிபுணர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
|