|
|||||
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - |
|||||
வானியல் நிகழ்வுகள் குறித்த ஆர்வம் விஞ்ஞானிகளுக்கு மட்டுமல்ல, சாதாரணப் பொதுமக்களுக்கும் அதிகம். அதிலும் சூரிய கிரகணம் குறித்த ஆச்சர்யம் எல்லோருக்கும் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. அதிலும் மிக அரிதான, நீண்ட நேரம் நீடித்த முழு சூரிய கிரகணத்தை 8/4/2024 அன்று இரவு அமெரிக்கா, மெக்சிகோ, கனடாவைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் கண்டு களித்தனர். மூன்று நாடுகளின் வாயிலாக இந்தக் கிரகணம் வட அமெரிக்காவைக் கடந்து சென்றது.
இந்த சூரிய கிரகணத்தின் போது, நான்கு நிமிடங்கள் மற்றும் ஒன்பது வினாடிகளுக்கு முழு இருள் நீடித்தது. இந்த முழு சூரிய கிரகணம் இந்திய நேரப்படி இரவு 9.12 மணிக்குத் தொடங்கி செவ்வாய்க்கிழமை அதிகாலை 2.22 மணிக்கு நிறைவடைந்தது. எனினும், முழு சூரிய கிரகணம், இந்திய நேரப்படி இரவு சுமார் 10.10 மணிக்குத் தொடங்கியது. இரவு நேரம் என்பதால் இந்தியாவில் இந்த கிரகணத்தைப் பார்க்க முடியவில்லை.
இந்தச் சூரிய கிரகணம் குறித்து உலகம் முழுவதிலும் செய்யப்பட்ட ஆராய்ச்சிகள் என்ன, இந்தியாவில் எத்தகைய ஆராய்ச்சி செய்யப்பட்டது.
இந்த முழு சூரிய கிரகணத்திற்கு உலகம் முழுவதிலும் ஆர்வம் ஏற்பட்டது எதனால்? பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் நிலவு செல்லும்போது சூரியனை நிலவு மறைப்பதுதான் சூரிய கிரகணம். சூரிய கிரகணம் ஓராண்டில் இருமுறை தான் நிகழும். ஆனால், இருமுறையும் முழு சூரிய கிரகணமாக இருக்குமா என்பதைச் சொல்ல முடியாது. எனவே, முழு சூரிய கிரகணம் அரிது.
மேலும், நிலப்பகுதியில் சூரிய கிரகணம் தெரிவதென்பது மேலும் அரிதான ஒன்று. கடல் பகுதியில் கூட சூரிய கிரகணம் தென்படலாம். குறிப்பிட்ட இந்த முழு சூரிய கிரகணம் தென்பட்ட மிகப் பெரும்பான்மையான பகுதி நிலப்பகுதியாக இருந்தது. இது, அமெரிக்கா கனடா, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளில் தென்பட்டது. இந்த நாடுகளைப் பொறுத்தவரை பல ஆண்டுகளுக்குப் பிறகு முழு சூரிய கிரகணத்தை மக்கள் பார்ப்பதற்கான வாய்ப்பு அம்மக்களுக்குக் கிடைத்தது.
இந்த முழு சூரிய கிரகணம் நீண்ட நேரத்திற்கு நீடித்ததற்கான காரணம் என்ன?
நிலா பூமியைச் சுற்றி வரும்போது, கோழி முட்டை போன்று நீள்வட்டப் பாதையில் சுற்றும். எனவே, ஒரு சமயத்தில் நிலா பூமிக்கு அருகிலும் மற்றொரு சமயத்தில் பூமியிலிருந்து தொலைவிலும் இருக்கும். ஒரு பொருள் அருகிலிருக்கும் போது பெரிதாகவும் தொலைவிலிருந்தால் சிறியதாகவும் தெரியும் என்பது நமக்குத் தெரியும். அதனால், நிலா பூமியைச் சுற்றிவரும்போது குறிப்பிட்ட சமயத்தில் நிலா அளவில் பெரிதாகத் தெரியும்.
மற்றொரு சமயத்தில் சிறியதாகத் தோன்றும். சிறியதாகத் தோன்றும் சமயத்தில் சூரிய கிரகணம் நிகழ்ந்தால் சிறிது நேரத்திற்குத்தான் கிரகணம் நீடிக்கும். ஏனென்றால் அளவில் சிறியதாகத் தோன்றும் நிலாவால் சூரியனை சிறிது நேரத்திற்குத்தான் மறைக்க முடியும். ஆனால், அதுவே நிலா பெரிதாக இருக்கும்போது சூரிய கிரகணம் ஏற்பட்டால் அது நீண்ட நேரம் நீடிக்கும். இந்த முழு சூரிய கிரகணம், நிலா பெரிதாக இருப்பதற்குச் சற்றேறக்குறைய அருகாமையில் இருந்ததால் இவ்வளவு நேரம் நீடித்தது.
இந்தியாவில் இந்த முழு சூரிய கிரகணத்தைப் பார்க்க முடியாததற்கு என்ன காரணம்?
கோள வடிவிலான பூமி தன்னைத்தானே சுற்றுகிறது. அதனால், அமெரிக்காவில் சூரியன் தெரிந்தால் இந்தியாவில் தெரியாது. இந்த முழு சூரிய கிரகணம், அமெரிக்காவுக்கு நேராக நிலவு, அதற்கு நேர்கோட்டில் சூரியன் இருக்கும்போது ஏற்பட்டுள்ளது. அதனால், இந்தியாவில் தெரியவில்லை. சூரிய கிரகணம் அமெரிக்காவில் நிகழ்ந்தபோது ஏற்கனவே இந்தியாவில் இரவுதான். அதனால், அதனை நம்மால் பார்க்க முடியவில்லை.
இந்த சூரிய கிரகணத்தின்போது நாசா ராக்கெட்டுகள், விமானங்கள் மூலம் பல ஆய்வுகள் செய்துள்ளன.
பள்ளியில் எல்லோரும் இந்தச் சோதனையைச் செய்திருப்போம். ஒரு காந்தத்தைக் காகிதத்தின் அடியில் வைத்துவிட்டு, காகிதத்தின் மேலே இரும்புத் துகள்களை வைத்து காந்தப்புலக் கோடுகளைக் கண்டறிந்திருப்போம். அம்மாதிரி சூரியனுக்கும் காந்தப்புலம் இருக்கிறது. சூரியனை சுற்றியும் அதேபோன்று காந்தப்புலக் கோடுகள் தோன்றும். ஆனால், சூரியனின் காந்தப்புலக் கோடுகள் ‘இடியாப்பம்' போன்று இருக்கும். ஆனால், பூமியைச் சுற்றியிருக்கும் காந்தப்புலத்தைப் பார்த்தால், அழகாக வாரிய கூந்தல் போன்றிருக்கும். சூரியனின் காந்தப்புலத்தின் வடிவம் எப்படியிருக்கிறது என்பதைப் பொறுத்து சூரியனிலிருந்து சூரியப்புயல் உண்டாகும்.
எனவே, சூரியனின் காந்தப்புலம் எப்படி இருக்கிறது என்று தெரிந்தால், சூரியப்புயலை நாம் முன்கூட்டியே கணிக்கலாம். சூரியனின் காந்தப்புலங்களை முழு சூரிய கிரகணத்தின் போது மட்டுமே பார்க்க முடியும். ஏற்கனவே நம்மிடம் உள்ள தகவல்களை வைத்து காந்தப்புலம் இப்படி இருக்கும் என, கணினிவழி உருவாக்கி வைத்துள்ளோம். இது சரியா, இல்லையா என்பதை முழு சூரிய கிரகணத்தின்போது தான் பார்க்க முடியும்.
அந்த ஆராய்ச்சியைத்தான் இந்தியா செய்தது. நம்முடைய கணிப்பில் ஏதேனும் பிழை இருந்தாலும் அடுத்த சூரிய கிரகணத்தில் தான் அதைச் சரிசெய்ய முடியும். கொல்கத்தாவில் உள்ள ஐசர் (IISER) நிறுவனத்தின் சூரிய கிரகணம் குறித்த ஆராய்ச்சிக் குழு இந்த ஆய்வில் ஈடுபட்டது. முனைவர் நந்தி என்பவர் இந்த ஆய்வை வழிநடத்தினார். உலகளவில் இந்தச் சூரிய கிரகணத்தின்போது மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளின் முதன்மை இலக்கு, சூரியனின் காந்தப்புலங்களை ஆராய்வதுதான். |
|||||
by Kumar on 13 Apr 2024 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|