LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    உலகத் தமிழ் மாநாடுகள் Print Friendly and PDF
- இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு

இரண்டாவது உலகத்தமிழ் மாநாட்டில் தீவுத்திடலில் பேரறிஞர் அண்ணா ஆற்றிய உரையின் சுருக்கம்

தயங்காதே தமிழா
இரண்டாவது உலகத்தமிழ் மாநாட்டில் பேரறிஞர் அண்ணா
அவர்கள் ஆற்றிய உரையின் சுருக்கம் சென்னைப் பூம்புகாரில் (தீவுத்திடலில்)


உள்ளமெல்லாம் தமிழ் நிறைந்திருக்கும் வேளை - ஊனும் உயிரும் தமிழோடு கலந்திருக்கும் வேளை - எதைப்பற்றிப் பேசினாலும் தமிழைப்பற்றியே பேசிடும் வேளை - எதையும் தமிழோடு ஒப்பிட்டுப் பார்க்கும் வேளை. இந்த வேளையில் நான் ஆற்றும் பேருரை பேருக்குத்தான் உரையாக அமையுமே யல்லாது, பேருரையாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. இங்குப் பூம்புகாரில் பத்து நாள்களாக நாம் கண்ட காட்சி - கேட்ட கருத்துகள் - உற்சாகத்தோடும், உள்ள எழுச்சியோடும் இங்கும் காணப் போகிறோமா என்றால் காணமுடியாது. ஏதாவது ஒரு முறையில் இந்த மாநாடு தொடர்ந்து நடக்காதா? பத்து நாள் நிலவிய தமிழ் நாதம் நிரந்தர நாதமாக இருக்காதா? இந்த மாநாடு போல் எல்லா ஊர்களிலும் மாநாடு நடத்தக் கூடாதா? தமிழ் மக்கள் ஒவ்வொருவருடைய எண்ணத்திலும் தமிழ் எழுச்சி எழச் செய்யக்கூடாதா? என்று அனைவரும் நினைக்கத்தக்க அளவில் பூம்புகார் மாநாடு அமைந்தது. வெளிநாட்டார் வியந்திடும் மாநாடு!
பூம்புகார் மாநாடு இவ்விதம் அமையும்: இவ்வளவு ஏற்றமுடன் அமையும் என்று நாங்கள் தொடக்கத்தில் நினைக்கவில்லை.


மொழிக்காக ஒரு மாநாடு கூட்டமுடியும்; அதற்கு இலட்சக்கணக்கில் மக்கள் வருவார்கள்; மணிக்கணக்காக - நாள் கணக்காக உட்கார்ந்திருப்பார்கள் என்று நாங்கள் அவ்வளவு அதிகமாக எதிர்பார்க்கவில்லை. ஆனால் தமிழ்மொழிப் பற்று எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை மக்கள் காட்டிவிட்டார்கள். மக்களின் இந்த ஆர்வத்தைக் கண்ட வெளிநாட்டார் தத்தமது நாட்டிற்குச் சென்று கூறப்போகிறார்கள். "எந்தத் தமிழைப் பற்றி ஆராயத் தமிழகம் சென்றோமோ அந்த தமிழகத்தில் உள்ள மக்கள், எங்களுக்கு முன்பே நெடுங்காலம் தொட்டு ஆராய்ந்து, அந்த ஆராய்ச்சியால் அகமகிழ்ந்து, அந்தத் தமிழ்மொழியை தங்கள் உயிரினும் மேலாக நேசிக்கிறார்கள்; தங்களுக்கு இன்பம் அளிக்கும் எல்லாச் சாதனங்களிலும் உயர்ந்ததாகத் தங்கள் தமிழை நினைக்கிறார்கள். தமிழ்மொழியின் மாண்பை எண்ணி எண்ணி மகிழ்கிறார்கள். அந்தத் தமிழுக்கு எந்தப் பக்கமிருந்து - எவரிடமிருந்து எந்த வகையான ஊறு வந்தாலும் - ஊறு வரும் என்று ஐயப்பட்டாலும், தமது இன்னுயிரைத் தந்தேனும் தமிழைக் காப்போம் என்கிற உறுதி பூண்டவர்கள் தமிழர்கள்” இப்படியெல்லாம் அந்த வெளிநாட்டு வித்தகர்கள் தமது நாடுகளான இரஷ்யாவிலும், ஆஸ்திரேலியாவிலும், அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும், இலங்கையிலும், மலேசியாவிலும், சிங்கப்பூரிலும், இந்தோநேஷியாவிலும், மொரீசியஸ் தீவிலும், பிஜித் தீவிலும் பேச இருக்கிறார்கள். பேச வாய்ப்பும், உரிமையும் உள்ள இடங்களில் எல்லாம் அவர்கள் பேசவிருக்கிறார்கள்.


மாநாட்டு மேடையில் சேர - சோழ - பாண்டியர்!
இந்தப் பூம்புகார் மாநாட்டில் எந்த வகையில் - எந்த முறையில் யார் பங்கு கொண்டிருந்தாலும் - வாழ்நாளிலேயே எண்ணி எண்ணிப் பெருமிதம் அடையும் நாளாக இந்தப் பத்து நாள்களும் அமையும். இந்த மாநாட்டில் பெரும் புலவர்களைக் கண்டீர்கள்; அவர்தம் கவியுள்ளங்களைக் கண்டீர்கள். தமிழையும், தமிழ் நாட்டைப் பற்றியும் அவர்கள் பாடிய பாடல்களையும் பேசிய பேச்சுகளையும் கேட்டீர்கள். உரை வல்லுநர் பொருள் கூறியதையும், அவர்களது பொருள் உரையில் ஓடிய கருத்துக்கும் காலத்துக்கும் உள்ள தொடர்பு பற்றியும் கேட்டிருப்பீர்கள். ஒரு நாள் தாய்மார்ளுக்கு என்றே 'மகளிர் நாள்' என ஒதுக்கப்பட்டது. தாய்த் திருக்குலம் தமிழ்மொழி பற்றி ஆற்றிய உரைகளையும் கேட்டிருப்பீர்கள். இந்த மாநாட்டு மேடையில் - சேரன் ஒரு நாள் நின்றிருப்புான்; சோழன் இன்னொரு நாள் உலவியிருப்பான்; பாண்டியன்: மற்றொரு நாள் தோன்றியிருப்பான்! இளங்கோவடிகள் வந்திருப்பார்! இலக்கண ஆய்வாளர்கள் வருகை புரிந்திருப்பார்கள்! வெளியிலே நிலவொளி வீட்டிலே இருள் பூம்புகார் என்ற இந்தத் திருப்பெயரைக் கேட்டபோதோ, நம் நினைவு எங்கோ சென்றிருக்கும். அன்று எத்துணைச் சிறப்பாக வாழ்ந்தோம் இப்போது எத்துணை இடர்ப்பாடுகளில் சிக்கித் தவிக்கிறோம்! அன்று வளமாக வாழ்ந்தோம் : இன்று வறுமைப் பள்ளத்தில் வீழ்ந்திருக்கிறோம். அன்று உலகத்தார் பாராட்டிட வாழ்ந்தோம்; இன்று நம்மிடம் உள்ளதைப் பறிக்க, பிறர் வரும் நிலையையும் பார்க்கிறோம். 


வானத்தில் பால் நிலவு காய்கின்ற வேளை - அந்த நிலவொளி பட்டதால் கவிதை உணர்ச்சி உள்ளத்தில் பொங்கி எழுகிறது! யாப்புத் தெரியாவிடினும், இலக்கணம் புரியாவிடினும் பால் நிலவொளி மேனியில் பட்டு இன்பம் பெருக்கிய காரணத்தால் - அந்தப் பசுமை நினைவு மாறாத காரணத்தால் - கவிதை உணர்ந்து நமது வாழ்வு விளக்காம் தமிழைப் பாடிட நினைக்கிறோம்.
அது முடிந்து இல்லத்தில் உள்ளே செல்லும்போது இல்லத்தில் இருக்கும் ஒரே விளக்கும் எண்ணெய் இல்லாத காரணத்தால் ஒளி குன்றி அணைந்திட, இல்லத்தில் இருள் சூழ்ந்தால் உள்ளம் என்ன பாடுபடும்!


வெளியிலே நிலவொளி; உள்ளே இருள்! வெளியே உணர்ச்சிப் பெருக்கு ; உள்ளே மனம் உடைந்த நிலை! தத்தளிப்பு! தவிப்பு!  
பத்து நாள்களும் தமிழ்ப் பெருமக்கள் தந்த விளக்கம் கேட்டு, பால் நிலவு ஒளியில் தோன்றிய பெருமித உணர்ச்சியை அடைகிறோம். நிகழ்காலம் பற்றி நினைக்கும்போது விளக்கு அணைந்த வீடுபோல் நம் உள்ளம் மாறுகிறது. உன்னதத் தமிழைப் பெற்ற உங்களை வாழ்த்துவதா? அத்தகைய தமிழ் இருந்தும் வாழ்வில் வளம் அடைய முடியாத நிலை குறித்து வருந்துவதா? எனத் தெரியவில்லை. 


ஐம்பெருங் காப்பியங்களும் காவியங்களும் படைத்த தமிழ்மொழியின் இருப்பது கண்டு வருந்துவதா? எனத் தெரியவில்லை. 

மழலைக் குழந்தைளுடன் மாநாட்டில் தாய்மார்கள் 

தமிழ்ச் சமுதாயம் தமிழ் அடிப்படையில்தான் இயங்குகிறது. மொழியின் இதை உணர்ந்திருந்தாலும், எடுத்துச் சொல்ல முடியாமல் எடுத்துச் சொல்லும் வகை அறியாது நாம் இருக்கலாம்.
ஆனால் தமிழ் வாழ்ந்தால்தான் தமிழர் வாழ முடியும்; தமிழர் வாழழ்ந்தால்தான் தமிழ்ச் சமுதாயம் வாழமுடியும் என்று உள்ளுர நாம் உணர்ந்திருக்கிறோம். அதனால்தான் மொழிக்காக ஒரு மாநாடு என்றால், தமிழாசிரியர் மட்டும் - புலவர்கள் மட்டும் - கற்றறிந்த கலிவாணர் மட்டும் இந்த மாநாட்டுக்கு வரவில்லை. தமிழர் அனைவரும் வந்திருக்கிறார்கள்.


அவர்களே ஒரு கவிதையாக விளங்குகிறார்கள்; அவர்கள் பேச்சிலே ஒரு பட்டொளி! அவர்கள் மூச்சிலே தமிழ் எழுச்சி! அவர்கள் நடமாடும்போது, வீரத் தமிழகமே நடமாடுவது போன்ற ஓர் உணர்வு இங்கே தோன்றுகிறது. இங்கே ஆடவரும் வந்திருக்கிறார்கள்; ஆரணங்குகளும் வந்திருக்கிறார்கள் ; இளைஞர்களும் வந்திருக்கிறார்கள்; முதியவர்களும் வந்திருக்கிறார்கள் ; தாய்மார்கள் தாங்கள் பெற்றெடுத்த வெற்றியான குழந்தைகளுடன் வந்திருக்கிறார்கள். தமிழ் இன்பத்தைத் தாங்கள் செவிமடுப்பதோடு - தஙகள் குழந்தைகளுக்குக் கருத்து விளங்கினாலும், விளங்காவிட்டாலும், தமிழ் ஓசை இன்பம் அந்தக் குழந்தைகளின் செவிவழிப் புகுந்து,  இரத்தத்தோடு இரத்தமாய் மழலையோடு மழலையாய் - மாறட்டும் என்ற நினைப்பில், இடுப்பில் குழந்தைகளுடன் வந்திருக்கிறார்கள் தாய்மார்கள்.


ஒளிவெள்ளம் பாய்ச்சும் உயரிய காட்சிகள்
அரும்பும் மலரும் பூத்திடும் பூங்காலை ஓவியமாகத் தீட்ட நினைக்கலாம் ஓர் ஓவியன். அதைக் கவிதை ஆக்கிடத் துணியலாம் கவிபாடக் கற்றவன். நான் ஓவியன் அல்லன்: அதைக் கற்றுத் தோற்றவன். கவி பாடிட நினைத்திருந்தும் நேரம் இல்லாதவன்; எனினும் உள்ளத்தில் பதிந்ததை என்றும் மறவாமல் நினைவில் வைத்திருப்பவன்! ஆகவே, இங்கு நான் கண்ட காட்சியைக் கண்கள் திறந்திருக்கிற நேரத்தில் மட்டும் அல்ல; கண்களை மூடியிருக்கின்ற நேரத்திலும் மறக்க முடியாது. ‘பூம்புகார் என்ற நகரையும் - இந்த நகரில் அந்நாளில் அமைந்த கட்டம் போல் எழுந்துள்ள பழங்காலக் கோட்டையையும் - இங்கு ஒளிவிடும் சூழல் விளக்குகளையும் - அந்த ஒளி வெள்ளத்தையும் மிஞ்சும் வகையில் உங்கள் கண்களிலிருந்து ஒளிக்கதிர் கிளம்பி, அந்த ஒளி விரவிப் பரவி நிற்கும் காட்சிகளையும் - என்னால் மறக்க முடியாது; இவை என் மனத்தைவிட்டு என்றும் மறையமாட்டா! 

 

இந்த உணர்ச்சி எனக்கு மட்டும் அல்ல - உங்களுக்கும் இருக்கும்.
இந்த மாநாடு நடந்த பிறகும் பல மாநாடுகள் நடக்கலாம் ஆனால் ‘அந்தப் பூம்புகார் மாநாடுபோல் ஆகுமோ?” என்று நீங்கள் கேட்கப் போகிறீர்கள்.— எங்கள் ஊருக்கு ஒரு தமிழ்ப் புலவர் வருகிறார் என்று கூறினால் "பூம்புகார் மாநாட்டில் பார்க்காத புலவரா?" என்று நீங்கள் கேட்கப் போகிறீர்கள். அந்த அளவுக்குப் பூம்புகாருக்கும் உங்களுக்கும் இடையே நெருங்கிய உறவை - நீக்க முடியாத பாசத்தைத் - தமிழ் எழுச்சியை - உணர்வை உண்டாக்கிக் கொண்டுவிட்டீர்கள்.

எம்.ஜி.ஆர்.ஒரு கவிதை
இன்றிரவு நான் சொல்வதற்காகவாவது கவிதை எழுதத் தொடங்குங்கள். தமிழ் உணர்வு உள்ளத்தில் உள்ள காரணத்தால் கட்டாயம் கவிதை வரும். அதைக் கவிதை இல்லை என்று புலவர்கள் கூறலாம். ஆனால் நான் கவிதை இல்லையென்று கூறமாட்டேன். இலக்கணத்தை அடிப்படையாக வைத்து அதைக் கவிதை இல்லை என்று புலவர்கள் கூறலாம். நான் உணர்ச்சியை வைத்து அதைக் கவிதைதான் என்கிறேன்.


இன்னும் சொன்னால் ?
உங்கள் பார்வையே ஒரு கவிதை; உங்கள் பேச்சே ஒரு கவிதை; உங்கள் கையொலியே ஒரு கவிதை; உங்கள் வாழ்த்தொலியே ஒரு கவிதை; இங்கே எங்கும் நிறைந்திருக்கும் நாதமே ஒரு கவிதை!
இதைப்பற்றி எந்தக் கவிஞன் முழுமையாகப் பாடிட முடியும்? அன்றலர்ந்த மலரைத்தான் கவிஞன் பாடிட முடியும். பத்து நாள்களும் மலர்ந்திருக்கும் உலகத் தமிழ் மாநாட்டிலே கலந்துகொண்ட மக்களின் முகமலர்களைப்பற்றி எந்தக் கவிஞன் பாடிட முடியும்? ஒரு பெண்ணிலவைத்தான் கவிஞன் பாடிட முடியும் இந்த இலட்சக் கணக்கான வெண்ணிலவுகளை எந்தக் கவிஞன் பாடிட முடியும்? நீங்களே கவிதையாகி விட்டபிறகு யார் உங்களைக் கவிதையில் வடிக்க முடியும்? புரட்சி நடிகர் எம். ஜி. ஆர். பேசும்போது- கவிதை என்பது அழகும் உள்ள உணர்ச்சியும் உள்ளது
கவிதை என்றார்.


அப்போது நீங்கள் கை தட்டினீர்கள். கைத்தட்டலுக்குப் பொருள் என்ன என்று சிந்தித்துப் பார்த்தேன். அழகும் உள்ள உணர்ச்சியும் உள்ளவர் எம். ஜி. ஆர். எனவே அவரே ஒரு கவிதை
என்பதால் - நீங்கள் கைதட்டினீர்கள் என்பதைக் கண்டேன்!


கவிதையின் அளவுகோல் என்னைப் பொறுத்தவரை உணர்ச்சிதான். அந்தக் கவிதையில் சந்தம் இல்லாமல் இருக்கலாம்; இலக்கணம் இல்லாமல் இருக்கலாம்; இப்படி நான் சொல்வதால் கவிதைக்கு இலக்கணம் கூடாது என்று நான் கூறவில்லை. ஆனால் இலக்கணத்திற்கும் மேலாக - ஈடாக இணைந்தோடும் உணர்ச்சியும், அழகும், தூய்மையும், நல்ல திறமையும் கொண்டு செய்யப்படும் செயலும் அந்தச் செயலுக்குக் காரணமான சிந்தனையும் ஒரு கவிதை!

தமிழனின் தனிப்பண்பு
"முன்பு மாநிலம் ஆண்ட தமிழர் மீண்டும் அரசாளும் நாள் வருமா?" எனக் கேட்ட புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், 'தமிழர் அரசு வரும்' என்று தித்திப்பான சேதியைக் கூறினார். தமிழர்கள் தங்கள் அரசைப் பெற்றிருக்கிறார்களா? - என்பது விரிவாக விவாதிக்க வேண்டிய பொருள். ஆனால் ஒன்றை நீங்கள் ஒப்புக் கொள்ளவேண்டும்; தமிழர்கள் தங்களை உணரத் தொடங்கிவிட்டார்கள்.
தமிழனின் பண்பு - யாருக்கும் தாழ்ந்தவனாக இருப்பது அல்ல; யாரையும் தாழ்த்துவது அல்ல. தமிழகம் உலகின் ஒரு பகுதியாக இருக்கலாம். ஆனால் அது யாருடைய வேட்டைக் காடாகவும் இருந்திட ஒருநாளும் ஒருப்பட மாட்டோம்! முன்பிருந்த மன்னர்கள் அலை கடலை வென்றார்கள். நம்முடைய வணிகர்கள் நாவாய்களில் (கப்பல்களில்) ஏறிக்கொண்டு, மாரீஸ் தீவுக்கும், பிஜித் தீவுக்கும், மடகாஸ்கருக்கும் சென்று தமிழ் மணம் பரப்பினர் என்று இப்போது ஆராய்ச்சியாளர்கள் அறிவித்திருக்கிறார்கள். ஆனால் இந்தச் செய்தியை நமது பழம்பெரும் இலக்கியங்கள் வெகுநாள்களுக்கு முன்பே கூறியிருக்கின்றன.


தாரணி மெச்ச வாழ்ந்தோம் ஒருநாள்!
தாரணியிலிருந்து யார் - என்ன - 
கொடுப்பார்கள் என்று ஏங்குகிறோம் இன்று!
ஞாயிறாகத் திகழ்ந்தோம் அன்று;
இருட்குகையில் சிக்கித் தவிக்கிறோம் இன்று!
அதற்காக 'அந்த ஞாயிறு மறைந்துவிட்டது என்று பொருள் அல்ல'
நமது கண் கொஞ்சும் மங்கலாகிவிட்டது; பழுதாகிவிட்டது - என்றுகூடக் கூறமாட்டோன்.
மங்கலாகிவிட்ட கண்களைக் கொஞ்சும்
துடைத்துவிட்டுக் கொண்டு பார்த்தால் ஞாயிறு தெரியும்.
நாமும் ஏறிட்டுப் பார்த்து,
நெஞ்சு நிமிர்த்தி
'ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்'
என்று இளங்கோவடிகளைப் போலப் பாடிடலாம்!
தயங்காதே. தமிழா!
மயங்காதே தமிழா!


தமிழகம் இன்று தனது இயல்பான மாண்புகளை மறந்து துயில் கொள்கிறது என்று கூறமாட்டேன்; மயங்கிக் கிடக்கிறது என்று கூற மாட்டேன். ஆனால் தயக்கம் இருக்கிறது என்றுதான் கூறுவேன். 'நம்மால் முடியுமா?' என்ற தயக்கம் நமக்கு இருக்கிறது. சேரன் வடநாட்டின்மீது படையெடுத்துச் சென்றபோது 'நம்மால் முடியுமா?' என்று அவன் தயங்கவில்லை. சோழன் நாவாய்களைச் செலுத்தி அலைகடலுக்கு அப்பால் உள்ள நாடுகள் வென்றபோது 'நம்மால் முடியுமா?" என்று அவன் தயங்கவில்லை. காட்டுப்புறத்தில் தினை பொறுக்கச் சென்ற தமிழ்ச் சீமாட்டி யொருத்தி மீது புலி பாய்ந்து வந்தபோது - ‘நம்மால் முடியுமா? என்று அவள் நினைக்கவில்லை. கையில் கிடைத்த முறத்தால் அடித்து விரட்டினாள். ‘காட்டுக்கு அரசன் ஆயிற்றே நாம்' இவள் வீட்டுக்கு அரசிதானே வேலை எடுக்காமல் - வாளை எடுக்காமல் - குப்பை கொட்டும் முறத்தால் நம்மைத் தாக்க வருகிறாளே! இது தமிழ்நாடு அல்லவா? இது தமிழச்சியின் ஆற்றல் திறம் அல்லவா?' என்று எண்ணி அந்தப் புலி வெட்கத்தால் ஒடியிருக்கும் என்றே கருதுகிறேன்.


அன்று தமிழ்ப் பெண்கள் புலியை முறத்தால் அடித்துத் துரத்தினர். இன்றும் தமிழ்ப் பெண்கள் நமது பகையை முறத்தால் அடித்து விரட்டத் தயார் எனினும், அந்த முறம் கிடைத்தால் அதை எங்கு விலைக்கு விற்றுக் காசாக்கலாம் எனக் கருதுகிற மனம்தான் நமக்குப் பகை. முதலில் நமக்கு இருக்கிற தயக்கத்தைப் போக்கும் மாநாடுதான் இந்தப் பூம்புகர் மாநாடு! ‘தயங்காதே தமிழா! என்று அடிப்படைப் பாடத்தைத் தருகிற மாநாடு இது' அந்தப் பாடத்தோடு, 'மயங்காதே, தமிழா!'  என்ற பாடத்தையும் சேர்த்துக் கொள்ளவேண்டும். மயக்கம் ஏனென்றால் பத்து நாள்களாக நாம் தமிழின் பெருமை கேட்டு அந்த மயக்கத்திலே இருக்கிறோம். ஆனால் இந்த மயக்கம் கெடுதல் செய்யாத மயக்கம்! தமிழன் ஒருவன்தான் இவ்விதம் கெடுதல் தராத மயக்கத்தை மொழிதரும் இன்பத்தால் மயக்கத்தைப் பெறுபவன். அந்த மயக்கத்திலிருந்தும் நாம் விடுபட்டாக வேண்டும். ஏனெனில் வேலை இருக்கிறது நிரம்ப! வேலை இருக்கிறது ஒவ்வொருவருக்கும்! வேலை இருக்கிறது ஒவ்வொரு நாளும்! பறவை இனமும் தமிழினம் ஆகும் . காடு திருத்திட வேண்டும்; வளம் பெருக்கிட வேண்டும்; வேலையற்றோருக்கு வேலை தந்து அவர்களைச் செய்தொழில் நேர்த்தி கொண்டவர்களாக மாற்றிட வேண்டும்.


நிலத்தைத் தோண்டிக் கனிப்பொருள்களை எடுத்திட வேண்டும்; சாதாரணப் பொருள்களை மட்டும் அல்லாமல் வரலாற்றுப் பொருள்களையும் தோண்டி எடுக்க வேண்டும். தூர்ந்து போன துறைமுகங்களைக் கண்டறிந்து, அவற்றின் எழில் முகத்தைச் சீர்திருத்தி அவற்றிலிருந்து தமிழ் நாவாய்களை - கப்பல்களைச் செலுத்தியவாறு தமிழகத்து மாலுமிகள் தமிழ்க் கவிதைகளை இசைத்துக்கொண்டு செல்ல வேண்டும் வானத்தில் பறக்கும் புள்ளினம், வேறு பக்கம் பறந்துகொண்டு இருப்பினும் இனிய கானத்தில் ஈர்க்கப்பட்டுக் கப்பல் இருக்கும் திசை நோக்கி வரும்.
கப்பல்மீது புள்ளினம் சிறகடித்துப் பறப்பது கப்பலுக்கு வானக் குடை விரித்ததுபோல் அக் காட்சி அமைய வேண்டும். தமிழரின் இசையை அந்தப் புள்ளினம் கேட்டு, அவை பாடி, புள்ளினத்தின் பாட்டை மாலுமிகளாகிய இவர்கள் பாட வேண்டும். 'பறவைகளாகிய எங்களுக்குத் தூய உள்ளம். ஆகவே நாங்களும் தமிழினம்தான். உயர உயரப் போகிறோம் - இதுதான் தமிழன் மாண்பு! ஆகவே நாங்களும் தமிழினம்' என்று கூறிட வேண்டும் அந்தப் பறவையினம்! இந்த நாளை எண்ணிப் பார்க்கிறோம்.

கண்ணகியின் வீரம் எங்கே?
எண்ணியது நடக்கும் நாம் திண்ணியர் ஆகப் பெற்றால் - என்று வள்ளுவர் கூறுகிறார். வள்ளுவரின் வாய்மொழியை நாவலர் போல் மிடுக்காகக் கூறிட என்னால் முடியாது. எனினும் பிழிந்து எடுத்ததை உங்கள்முன் தெரிவிக்கிறேன். உலகத்தில் நாம் எண்ணியது நடக்கும் நாம் திண்ணியர் ஆகப் பெற்றால்! 'தயங்காதே தமிழா' மயங்காதே தமிழா! என்ற பாடங்களோடு, தமிழர் திண்ணியர் ஆகவும் வேண்டும். அவ்விதம் திண்ணியரானால் உலகில் அவர்கள் எடுக்கின்ற காரியங்கள் அனைத்தும் வெற்றியோடும் முடியும் என்ற நம்பிக்கையை - நாதம் நிறைந்த பாடத்தைப் பெற்றால், நம்மை உலகிற்கு யார் என்று அறிவிக்கும் நாளும் வரும்.


அந்த உறுதியைப் பெறப் பழம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தின் தலைவி கண்ணகியைப் பார்த்தால் தெரியும்! நீதி கேட்டுக் கண்ணீர் உகுத்தவாறு கையில் காற்சிலம்போடு அரசவை சென்று வாயிலோனை அழைத்து 'அறிவு அறை போகிய அரசனே' என்று நெடுஞ்செழியப் பாண்டியனையே அறைகூவி அழைத்தாள் - உள்ள உறுதி இருந்த காரணத்தால்! இத்தனைக்கும் அவள் கணவனை இழந்த காரிகைதான்! கணவன் இறந்தான் என்றதும் அழுது புலம்பாமல் - இன்னும் சிறிதுகாலம் பிழைத்திருக்கலாம்; மறுவாழ்வு வாழலாம் என்று நினையாமல் - நீதிக்ககுப் போராடிய சோழ வளநாட்டின் பத்தினித் தெய்வம் அல்வவா கண்ணகி! கணவனை இழந்தபோதும் அவன் பெயருக்கு மட்டும் மாசு சூழ்ந்திட விடமாட்டேன் என வஞ்சினம் பூண்டு, அரசவை சென்று - அறிவு அறை போகிய மன்னா! என்று முரசறைந்தாளே - அந்தத் தமிழினத்தின் பத்தினித் தெய்வம் தரும் வீர உணர்ச்சி நாம் பெறாத காரணம் என்ன?
இதைத்தான் கடற்கரையில் கண்ணகியின் சிலை திறந்த காட்சியும் மாட்சியும் நமக்குப் போதிக்கின்றன. கணவனை இழந்த ஒரு பெண் அறிவைத் தவிர வேறொன்றும் துணையில்லாதவள் - மன்னனையே பார்த்து  'அறிவு அறை போகிய மன்னா!' என்று அழைக்கும் அந்நாள் உணர்ச்சியை - எழுச்சியை - நாம் மீண்டும் பெறவேண்டும். தமிழ் மாநாடு தருகின்ற நற்செய்தி-
நாம் உலகிற்குத் தர முடிந்தது இந்த அறிவுச் செல்வத்தைத்தான். அதுதான் கொடுக்க குறையாத செல்வம்!


இந்தப் பத்து நாட்களாகக் கண்ட எழில்மிகு காட்சிகளையும் - உலாவையும் - விழாவையும் - அதனால் ஏற்பட்ட அகப் பொலிவையும் முகப்பொலிவையும் நல்லோர்க்கெல்லாம் எடுத்துச் சொல்லுங்கள். எல்லோருக்கும் இந்தத் தமிழ் மாநாடு தரும் இனிய செய்தியை எடுத்துச் சொல்லுங்கள். இதனைக் கேட்டு நல்லவர்கள் ஆகிறவர்களும் ஆகலாம். இத்தகைய நற்செய்தியை எடுத்துச் செல்லும் திருத்தூதர்களாய் நீங்கள் சென்று வாருங்கள் - வென்று வாருங்கள், தமிழகத்திற்கு வளம் சேர்த்துத் தாருங்கள்!

by Swathi   on 08 Dec 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
10வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் வலைத்தமிழ் வைத்த பதாகை 10வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் வலைத்தமிழ் வைத்த பதாகை
உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு - நோக்கவுரை உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு - நோக்கவுரை
IATR – 2ND INTERNATIONAL CONFERENCE OF TAMIL STUDIES CHENNAI, TAMILNADU, INDIA - JAN 1968 IATR – 2ND INTERNATIONAL CONFERENCE OF TAMIL STUDIES CHENNAI, TAMILNADU, INDIA - JAN 1968
IATR – 2ND INTERNATIONAL CONFERENCE OF TAMIL STUDIES CHENNAI, TAMILNADU, INDIA - JAN 1968 IATR – 2ND INTERNATIONAL CONFERENCE OF TAMIL STUDIES CHENNAI, TAMILNADU, INDIA - JAN 1968
உலகத்‌ தமிழ்‌ ஆராய்ச்சி மாநாடு - நோக்கவுரை! உலகத்‌ தமிழ்‌ ஆராய்ச்சி மாநாடு - நோக்கவுரை!
10-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுக் குறிப்புகள் மற்றும் அமர்வுகள் 10-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுக் குறிப்புகள் மற்றும் அமர்வுகள்
சிகாகோவில்  3.4 லட்சம் தமிழ் வார்த்தைகளைக் கொண்ட சொற்குவை இணையதள சொற்குவை  திட்டத்தை அமைச்சர் தொடங்கிவைத்தார். சிகாகோவில் 3.4 லட்சம் தமிழ் வார்த்தைகளைக் கொண்ட சொற்குவை இணையதள சொற்குவை திட்டத்தை அமைச்சர் தொடங்கிவைத்தார்.
உலகத் தமிழ் மாநாடுகள்: ஒரு பார்வை! உலகத் தமிழ் மாநாடுகள்: ஒரு பார்வை!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.