LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

மூன்றாம் திருமுறை-76

3.076.திருவேதவனம் 
பண் - சாதாரி 
திருச்சிற்றம்பலம் 
வேதவனம் என்பது வேதாரணியம். இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - வேதாரணியேசுவரர். 
தேவியார் - யாழைப்பழித்தமொழியம்மை. 
3614 கற்பொலிசு ரத்தினெரி கானினிடை 
மாநடம தாடிமடவார்
இற்பலி கொளப்புகுது மெந்தைபெரு
மானதிட மென்பர் புவிமேல்
மற்பொலி கலிக்கடன் மலைக்குவ
டெனத்திரை கொழித்தமணியை
விற்பொலி நுதற்கொடி யிடைக்கணிகை
மார்கவரும் வேதவனமே
3.076.1
பருக்கைக் கற்கள் மிகுந்த, பாலைவனம் போன்ற வெப்பம் உடைய சுடுகாட்டில் சிவபெருமான் நடனமாடுகின்றார். அவர் மகளிர்களின் இல்லந்தோறும் புகுந்து பிச்சை ஏற்பவர். எம் தந்தையாகிய அச்சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம், இப்பூமியில், ஒலிக்கின்ற கடலலைகள் மலைச்சிகரங்களைப் போல உயர்ந்து ஓடிவந்து கரையிலே ஒதுக்குகின்ற இரத்தினங்களை வில்லைப் போன்ற வளைந்த நெற்றியும், பூங்கொடி போன்ற மெல்லிய, குறுகிய இடையும் உடைய உருத்திரகணிகையர்கள் வாரிக் கொள்கின்ற வளமிக்க திருவேதவனமாகும். 
3615 பண்டிரை பயப்புணரி யிற்கனக 
மால்வரையை நட்டரவினைக் 
கொண்டுகயி றிற்கடைய வந்தவிட
முண்டகுழ கன்றனிடமாம்
வண்டிரை நிழற்பொழிலின் மாதவியின்
மீதணவு தென்றல்வெறியார்
வெண்டிரைகள் செம்பவள முந்துகடல்
வந்தமொழி வேதவனமே
3.076.2
முற்காலத்தில் ஒலிக்கின்ற அலைகளையுடைய பாற்கடலில், பொன்மயமான மந்தரமலையை மத்தாக ஊன்றி, வாசுகி என்னும் பாம்பைக் கயிறாகக் கொண்டு தேவர்கள் கடைய எழுந்த ஆலகால விடத்தை, அமுது போன்று உண்டருளிய அழகனான சிவபெருமான் வீற்றிருந்தருளும்இடம், நிழல்தரும் சோலைகளில் வண்டுகள் ஆரவாரிப்பதாய், மாதவி முதலிய மரங்களின் மீது தவழும் தென்றற் காற்றின் நறுமணமுடையதாய்க் கடலின் வெண்ணிற அலைகள் செம்பவளங்களை உந்தித் தள்ளும், புகழுடைய திருவேதவனம் என்னும் திருத்தலமாகும். 
3616 காரியன்மெல் லோதிநதி மாதைமுடி 
வார்சடையில் வைத்துமலையார்
நாரியொரு பான்மகிழு நம்பருறை
வென்பர்நெடு மாடமறுகில்
தேரியல் விழாவினொலி திண்பணில
மொண்படக நாளுமிசையால்
வேரிமலி வார்குழனன் மாதரிசை
பாடலொலி வேதவனமே
3.076.3
மேகத்தையொத்த மெல்லிய கூந்தலையுடைய, கங்காதேவியை நீண்ட சடைமுடியில் தாங்கி, மலைமகளைத் தன திருமேனியின் பாதிப்பாகமாகக் கொண்டு சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற தலமாவது. நீண்ட மாடங்களையுடைய வீதிகளில் தேர் ஓடும் திருவிழாக்களின் ஒலியும், திண்ணிய சங்குகளின் ஒலியும், ஒளி பொருந்திய பேரி அல்லது தம்பட்டம் என்னும் வாத்தியத்தின் ஒலியும், நாடோறும் ஒலிக்க, நறுமணம் கமழும் தொங்கும் கூந்தலையுடைய பெண்கள் இசைக்கருவிகளோடு பாடுகின்ற பாட்டினிசையும் ஒலிக்கின்ற திருவேதவனம் என்னும் திருத்தலமாகும். 
3617 நீறுதிரு மேனியின் மிசைத்தொளிபெ
றத்தடவி வந்திடபமே
ஏறியுல கங்கடொறும் பிச்சைநுக
ரிச்சைய ரிருந்தபதியாம்
ஊறுபொரு ளின்றமி ழியற்கிளவி
தேருமட மாதருடனார்
வேறுதிசை யாடவர்கள் கூறவிசை
தேருமெழில் வேதவனமே
3.076.4
சிவபெருமான் தம் திருமேனியிலே திருநீற்றை ஒளி பொருந்தப் பூசியவர். இடபவாகனத்தில் ஏறியவர். ஊர்கள்தொறும் சென்று பிச்சை எடுத்து உண்பதில் இச்சையுடையவர். அப்பெருமான் வீற்றிருந்தருளும் தலமாவது, இனிய தமிழ்மொழியில் இயற்சொற்களைத் தேர்ந்தெடுத்துப் பேசும் இளம்பெண்களுடன், வாணிகத்தின் பொருட்டு வேற்றுத் திசைகளிலிருந்து கப்பலில் வந்த ஆண்கள் பேசுவதற்குச் சொற்களைத் தெரிந்து கொள்ளும் அழகிய திருவேதவனம் ஆகும். 
3618 கத்திரிகை துத்திரி கறங்குதுடி
தக்கையொ டிடக்கைபடகம்
எத்தணை யுலப்பில்கரு வித்திர
ளலம்பவிமை யோர்கள்பரச
ஒத்தற மிதித்துநட மிட்டவொரு
வர்க்கிடம தென்பருலகில்
மெய்த்தகைய பத்தரொடு சித்தர்கண்
மிடைந்துகளும் வேதவனமே
3.076.5
கத்தரிகை, துத்தரி, ஒலிக்கின்ற உடுக்கை, தக்கை, படகம் என்னும் இசைக்கருவிகள் ஒலிக்க, தேவர்கள் துதிக்க, தாளத்திற்கேற்பத் திருத்தாளையூன்றி நடனமாடும் ஒப்பற்ற சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம், உண்மைத் தன்மையுடைய பத்தர்களும், சித்து வல்லவர்களும் நெருங்கி மகிழ்ச்சி மீதூரத் துள்ளிக்குதிக்கும் திருவேதவனம் என்னும் திருத்தலமாகும். 
3619 மாலைமதி வாளரவு கொன்றைமலர்
துன்றுசடை நின்றசுழலக்
காலையி லெழுந்தகதிர் தாரகை
மடங்கவன லாடுமரனூர்
சோலையின் மரங்க டொறு மிண்டியின
வண்டுமது வுண்டிசைசெய
வேலையொலி சங்குதிரை வங்கசுற
வங்கொணரும் வேதவனமே
3.076.6
மாலையில் தோன்றும் சந்திரனும், ஒளி பொருந்திய பாம்பும், கொன்றை மலரும் நெருங்கிய சடையில் தங்கிச் சுழன்று புரள, காலையில் தோன்றிய கதிரவன் ஒளியும் விண் மீன்களின் ஒளியும், திருமேனியின் ஒளியும், திருநீற்றுப் பூச்சின் ஒளியும் கண்டு அடங்குமாறு, நெருப்பேந்தி நடனமாடுகின்ற சிவபெருமான் வீற்றிருந்தருளும் தலம், சோலைகளிலுள்ள மரங்களில் வண்டினங்கள் தேனைக்குடித்து ஒலி செய்ய, கடலினின்றும் ஒலிக்கும் சங்குகளையும், கப்பல்களையுடைக்கும் சுறாமீன்களையும் அலைகள் கரைக்குக் கொணரும் திருவேதவனம் என்னும் திருத்தலமாகும். 
3620 வஞ்சகம னத்தவுணர் வல்லரண
மன்றவிய வார்சிலைவளைத்
தஞ்சக மவித்தவம ரர்க்கமர
னாதிபெரு மானதிடமாம்
கிஞ்சுக விதழ்க்கனிக ளூறியசெவ்
வாயவர்கள் பாடல்பயில
விஞ்சுக வியக்கர்முனி வக்கண
நிறைந்துமிடை வேதவனமே
3.076.7
வஞ்சகம் பொருந்திய மனத்தையுடைய அசுரர்களின் மூன்று மதில்களையும் பெரிய மேருமலையை வில்லாக வளைத்து அழகிய உலகில் ஒழித்த தேவதேவனாம், முழுமுதற் கடவுளான சிவபெருமான் வீற்றிருந்தருளும் தலமாவது, முள் முருக்கம் பூவையொத்த உதடுகளால், கனிபோன்று இனிய மொழிகளைப் பேசும் சிவந்த வாயையுடைய பெண்கள் பாட, வியக்கும் மனத்தையுடைய இயக்கர்களும், முனிவர் கூட்டங்களும் நிறைந்து போற்ற விளங்கும் திருவேதவனம் என்னும் திருத்தலமாகும். 
3621 முடித்தலைகள் பத்துடை முருட்டுரு
வரக்கனை நெருக்கிவிரலால்
அடித்தலமுன் வைத்தலம ரக்கருணை
வைத்தவ னிடம்பலதுயர்
கெடுத்தலை நினைத்தற மியற்றுதல்
கிளர்ந்துபுல வாணர்வறுமை
விடுத்தலை மதித்துநிதி நல்குமவர்
மல்குபதி வேதவனமே
3.076.8
கிரீடம் அணிந்த பத்துத் தலைகளையுடையனாய், முரட்டுத் தன்மையுடைய அரக்கனான இராவணனைத் தன் காற்பெருவிரலை ஊன்றி மலையின்கீழ் நெருக்கிப் பின் அவனுக்குக் கருணைபுரிந்தருளிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் தலம், பலவிதத் துன்பங்களும் கெடும்படி அறம் இயற்றும் முயற்சியுடையவர்களாய், புலவர்களின் வறுமையை நீக்கக் கருதித் திரவியங்களைக் கொடுக்கும் கொடையாளிகள் நிறைந்த திருவேதவனம் என்னும் திருத்தலமாகும். 
3622 வாசமலர் மேவியுறை வானுநெடு
மாலுமறி யாதநெறியைக்
கூசுதல்செ யாதவம ணாதரொடு
தேரர்குறு காதவரனூர்
காசுமணி வார்கனக நீடுகட
லோடுதிரை வார்துவலைமேல்
வீசுவலை வாணரவை வாரிவிலை
பேசுமெழில் வேதவனமே
3.076.9
நறுமணம் கமழும் தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனும், திருமாலும் அறியாத சிவன் பெருமையைப் பழிப்பதற்குக் கூசாத பயனிலிகளாகிய சமணர்களுடன், பௌத்தர்களும் அடையாத சிவபெருமான் வீற்றிருக்கும் தலமாவது செம்படவர்கள் பெரிய கடலலைகள் ஓடிவரும்போது வலையை வீசி, அவை கொணர்கின்ற இரத்தினங்களையும், மணிகளையும் சிறந்த பொன்னையும் வாரி விலைபேசும் அழகிய திருவேதவனம் என்னும் திருத்தலமாகும். 
3623 மந்தமுர வங்கடல் வளங்கெழுவு
காழிபதி மன்னுகவுணி
வெந்தபொடி நீறணியும் வேதவன
வேவுசிவ னின்னருளினால்
சந்தமிவை தண்டமிழி னின்னிசை
யெனப்பரவு பாடலுலகில்
பந்தனுரை கொண்டுமொழி வார்கள்பயில்
வார்களுயர் வானுலகமே
3.076.11
மந்தமான ஓசையுடைய கடல்வளமிக்க சீகாழிப்பதியில் விளங்கும் கவுணியர் கோத்திரத்தில் அவதரித்த ஞானசம்பந்தன், திருவேதவனத்தில் வீற்றிருந்தருளும் திருவெண்ணீறு அணிந்த சிவபெருமானின் இன்னருளால் அவனைப் போற்றிச் சந்தம் விளங்கும் இன்னிசையால் அருளிய இத்திருப்பதிகத்தைப் பாடு பவர்கள் உயர்ந்த சிவலோகத்தில் வாழ்வர். 
திருச்சிற்றம்பலம்

3.076.திருவேதவனம் 
பண் - சாதாரி 
திருச்சிற்றம்பலம் 

வேதவனம் என்பது வேதாரணியம். இத்தலம் சோழநாட்டிலுள்ளது. 
சுவாமிபெயர் - வேதாரணியேசுவரர். தேவியார் - யாழைப்பழித்தமொழியம்மை. 

3614 கற்பொலிசு ரத்தினெரி கானினிடை மாநடம தாடிமடவார்இற்பலி கொளப்புகுது மெந்தைபெருமானதிட மென்பர் புவிமேல்மற்பொலி கலிக்கடன் மலைக்குவடெனத்திரை கொழித்தமணியைவிற்பொலி நுதற்கொடி யிடைக்கணிகைமார்கவரும் வேதவனமே3.076.1
பருக்கைக் கற்கள் மிகுந்த, பாலைவனம் போன்ற வெப்பம் உடைய சுடுகாட்டில் சிவபெருமான் நடனமாடுகின்றார். அவர் மகளிர்களின் இல்லந்தோறும் புகுந்து பிச்சை ஏற்பவர். எம் தந்தையாகிய அச்சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம், இப்பூமியில், ஒலிக்கின்ற கடலலைகள் மலைச்சிகரங்களைப் போல உயர்ந்து ஓடிவந்து கரையிலே ஒதுக்குகின்ற இரத்தினங்களை வில்லைப் போன்ற வளைந்த நெற்றியும், பூங்கொடி போன்ற மெல்லிய, குறுகிய இடையும் உடைய உருத்திரகணிகையர்கள் வாரிக் கொள்கின்ற வளமிக்க திருவேதவனமாகும். 

3615 பண்டிரை பயப்புணரி யிற்கனக மால்வரையை நட்டரவினைக் கொண்டுகயி றிற்கடைய வந்தவிடமுண்டகுழ கன்றனிடமாம்வண்டிரை நிழற்பொழிலின் மாதவியின்மீதணவு தென்றல்வெறியார்வெண்டிரைகள் செம்பவள முந்துகடல்வந்தமொழி வேதவனமே3.076.2
முற்காலத்தில் ஒலிக்கின்ற அலைகளையுடைய பாற்கடலில், பொன்மயமான மந்தரமலையை மத்தாக ஊன்றி, வாசுகி என்னும் பாம்பைக் கயிறாகக் கொண்டு தேவர்கள் கடைய எழுந்த ஆலகால விடத்தை, அமுது போன்று உண்டருளிய அழகனான சிவபெருமான் வீற்றிருந்தருளும்இடம், நிழல்தரும் சோலைகளில் வண்டுகள் ஆரவாரிப்பதாய், மாதவி முதலிய மரங்களின் மீது தவழும் தென்றற் காற்றின் நறுமணமுடையதாய்க் கடலின் வெண்ணிற அலைகள் செம்பவளங்களை உந்தித் தள்ளும், புகழுடைய திருவேதவனம் என்னும் திருத்தலமாகும். 

3616 காரியன்மெல் லோதிநதி மாதைமுடி வார்சடையில் வைத்துமலையார்நாரியொரு பான்மகிழு நம்பருறைவென்பர்நெடு மாடமறுகில்தேரியல் விழாவினொலி திண்பணிலமொண்படக நாளுமிசையால்வேரிமலி வார்குழனன் மாதரிசைபாடலொலி வேதவனமே3.076.3
மேகத்தையொத்த மெல்லிய கூந்தலையுடைய, கங்காதேவியை நீண்ட சடைமுடியில் தாங்கி, மலைமகளைத் தன திருமேனியின் பாதிப்பாகமாகக் கொண்டு சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற தலமாவது. நீண்ட மாடங்களையுடைய வீதிகளில் தேர் ஓடும் திருவிழாக்களின் ஒலியும், திண்ணிய சங்குகளின் ஒலியும், ஒளி பொருந்திய பேரி அல்லது தம்பட்டம் என்னும் வாத்தியத்தின் ஒலியும், நாடோறும் ஒலிக்க, நறுமணம் கமழும் தொங்கும் கூந்தலையுடைய பெண்கள் இசைக்கருவிகளோடு பாடுகின்ற பாட்டினிசையும் ஒலிக்கின்ற திருவேதவனம் என்னும் திருத்தலமாகும். 

3617 நீறுதிரு மேனியின் மிசைத்தொளிபெறத்தடவி வந்திடபமேஏறியுல கங்கடொறும் பிச்சைநுகரிச்சைய ரிருந்தபதியாம்ஊறுபொரு ளின்றமி ழியற்கிளவிதேருமட மாதருடனார்வேறுதிசை யாடவர்கள் கூறவிசைதேருமெழில் வேதவனமே3.076.4
சிவபெருமான் தம் திருமேனியிலே திருநீற்றை ஒளி பொருந்தப் பூசியவர். இடபவாகனத்தில் ஏறியவர். ஊர்கள்தொறும் சென்று பிச்சை எடுத்து உண்பதில் இச்சையுடையவர். அப்பெருமான் வீற்றிருந்தருளும் தலமாவது, இனிய தமிழ்மொழியில் இயற்சொற்களைத் தேர்ந்தெடுத்துப் பேசும் இளம்பெண்களுடன், வாணிகத்தின் பொருட்டு வேற்றுத் திசைகளிலிருந்து கப்பலில் வந்த ஆண்கள் பேசுவதற்குச் சொற்களைத் தெரிந்து கொள்ளும் அழகிய திருவேதவனம் ஆகும். 

3618 கத்திரிகை துத்திரி கறங்குதுடிதக்கையொ டிடக்கைபடகம்எத்தணை யுலப்பில்கரு வித்திரளலம்பவிமை யோர்கள்பரசஒத்தற மிதித்துநட மிட்டவொருவர்க்கிடம தென்பருலகில்மெய்த்தகைய பத்தரொடு சித்தர்கண்மிடைந்துகளும் வேதவனமே3.076.5
கத்தரிகை, துத்தரி, ஒலிக்கின்ற உடுக்கை, தக்கை, படகம் என்னும் இசைக்கருவிகள் ஒலிக்க, தேவர்கள் துதிக்க, தாளத்திற்கேற்பத் திருத்தாளையூன்றி நடனமாடும் ஒப்பற்ற சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம், உண்மைத் தன்மையுடைய பத்தர்களும், சித்து வல்லவர்களும் நெருங்கி மகிழ்ச்சி மீதூரத் துள்ளிக்குதிக்கும் திருவேதவனம் என்னும் திருத்தலமாகும். 

3619 மாலைமதி வாளரவு கொன்றைமலர்துன்றுசடை நின்றசுழலக்காலையி லெழுந்தகதிர் தாரகைமடங்கவன லாடுமரனூர்சோலையின் மரங்க டொறு மிண்டியினவண்டுமது வுண்டிசைசெயவேலையொலி சங்குதிரை வங்கசுறவங்கொணரும் வேதவனமே3.076.6
மாலையில் தோன்றும் சந்திரனும், ஒளி பொருந்திய பாம்பும், கொன்றை மலரும் நெருங்கிய சடையில் தங்கிச் சுழன்று புரள, காலையில் தோன்றிய கதிரவன் ஒளியும் விண் மீன்களின் ஒளியும், திருமேனியின் ஒளியும், திருநீற்றுப் பூச்சின் ஒளியும் கண்டு அடங்குமாறு, நெருப்பேந்தி நடனமாடுகின்ற சிவபெருமான் வீற்றிருந்தருளும் தலம், சோலைகளிலுள்ள மரங்களில் வண்டினங்கள் தேனைக்குடித்து ஒலி செய்ய, கடலினின்றும் ஒலிக்கும் சங்குகளையும், கப்பல்களையுடைக்கும் சுறாமீன்களையும் அலைகள் கரைக்குக் கொணரும் திருவேதவனம் என்னும் திருத்தலமாகும். 

3620 வஞ்சகம னத்தவுணர் வல்லரணமன்றவிய வார்சிலைவளைத்தஞ்சக மவித்தவம ரர்க்கமரனாதிபெரு மானதிடமாம்கிஞ்சுக விதழ்க்கனிக ளூறியசெவ்வாயவர்கள் பாடல்பயிலவிஞ்சுக வியக்கர்முனி வக்கணநிறைந்துமிடை வேதவனமே3.076.7
வஞ்சகம் பொருந்திய மனத்தையுடைய அசுரர்களின் மூன்று மதில்களையும் பெரிய மேருமலையை வில்லாக வளைத்து அழகிய உலகில் ஒழித்த தேவதேவனாம், முழுமுதற் கடவுளான சிவபெருமான் வீற்றிருந்தருளும் தலமாவது, முள் முருக்கம் பூவையொத்த உதடுகளால், கனிபோன்று இனிய மொழிகளைப் பேசும் சிவந்த வாயையுடைய பெண்கள் பாட, வியக்கும் மனத்தையுடைய இயக்கர்களும், முனிவர் கூட்டங்களும் நிறைந்து போற்ற விளங்கும் திருவேதவனம் என்னும் திருத்தலமாகும். 

3621 முடித்தலைகள் பத்துடை முருட்டுருவரக்கனை நெருக்கிவிரலால்அடித்தலமுன் வைத்தலம ரக்கருணைவைத்தவ னிடம்பலதுயர்கெடுத்தலை நினைத்தற மியற்றுதல்கிளர்ந்துபுல வாணர்வறுமைவிடுத்தலை மதித்துநிதி நல்குமவர்மல்குபதி வேதவனமே3.076.8
கிரீடம் அணிந்த பத்துத் தலைகளையுடையனாய், முரட்டுத் தன்மையுடைய அரக்கனான இராவணனைத் தன் காற்பெருவிரலை ஊன்றி மலையின்கீழ் நெருக்கிப் பின் அவனுக்குக் கருணைபுரிந்தருளிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் தலம், பலவிதத் துன்பங்களும் கெடும்படி அறம் இயற்றும் முயற்சியுடையவர்களாய், புலவர்களின் வறுமையை நீக்கக் கருதித் திரவியங்களைக் கொடுக்கும் கொடையாளிகள் நிறைந்த திருவேதவனம் என்னும் திருத்தலமாகும். 

3622 வாசமலர் மேவியுறை வானுநெடுமாலுமறி யாதநெறியைக்கூசுதல்செ யாதவம ணாதரொடுதேரர்குறு காதவரனூர்காசுமணி வார்கனக நீடுகடலோடுதிரை வார்துவலைமேல்வீசுவலை வாணரவை வாரிவிலைபேசுமெழில் வேதவனமே3.076.9
நறுமணம் கமழும் தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனும், திருமாலும் அறியாத சிவன் பெருமையைப் பழிப்பதற்குக் கூசாத பயனிலிகளாகிய சமணர்களுடன், பௌத்தர்களும் அடையாத சிவபெருமான் வீற்றிருக்கும் தலமாவது செம்படவர்கள் பெரிய கடலலைகள் ஓடிவரும்போது வலையை வீசி, அவை கொணர்கின்ற இரத்தினங்களையும், மணிகளையும் சிறந்த பொன்னையும் வாரி விலைபேசும் அழகிய திருவேதவனம் என்னும் திருத்தலமாகும். 

3623 மந்தமுர வங்கடல் வளங்கெழுவுகாழிபதி மன்னுகவுணிவெந்தபொடி நீறணியும் வேதவனவேவுசிவ னின்னருளினால்சந்தமிவை தண்டமிழி னின்னிசையெனப்பரவு பாடலுலகில்பந்தனுரை கொண்டுமொழி வார்கள்பயில்வார்களுயர் வானுலகமே3.076.11
மந்தமான ஓசையுடைய கடல்வளமிக்க சீகாழிப்பதியில் விளங்கும் கவுணியர் கோத்திரத்தில் அவதரித்த ஞானசம்பந்தன், திருவேதவனத்தில் வீற்றிருந்தருளும் திருவெண்ணீறு அணிந்த சிவபெருமானின் இன்னருளால் அவனைப் போற்றிச் சந்தம் விளங்கும் இன்னிசையால் அருளிய இத்திருப்பதிகத்தைப் பாடு பவர்கள் உயர்ந்த சிவலோகத்தில் வாழ்வர். 

திருச்சிற்றம்பலம்

by Swathi   on 02 Apr 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்

சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.