திருப்பரங்குன்றத்தில் தெய்வானையுடன் மட்டும் வடக்கு திசை நோக்கி காட்சி தருகிறார். ஆனால் இத்தலத்தில் முருகன், வள்ளி, தெய்வானை இருவருடனும் வடக்கு நோக்கியிருக்கிறார். சேக்கிழார் குருபூஜையின்போது, முருகன் மலைக்கோயிலில் இருந்து, கீழே உள்ள சேக்கிழார் கோயிலுக்குச் சென்று காட்சி கொடுக்கும் வைபவம் நடக்கிறது.சுப்பிரமணியருக்கு அபிஷேகம் செய்த விபூதியையே, பிரசாதமாக தருகின்றனர். கந்தசஷ்டி விழா இங்கு எட்டு நாட்கள் நடக்கிறது.
ஆறாம் நாளில் சூரசம்ஹாரம், ஏழாம் நாள் வள்ளி திருமணம், எட்டாம் நாளில் தெய்வானை திருமணம் நடக்கிறது. பெரியபுராணம் இயற்றிய சேக்கிழார் இவ்வூரில் அவதரித்தவர். இவருக்கு மலையடிவாரத்தில் தனிக்கோயில் இருக்கிறது. குன்றுடன் அமைந்த ஊர் என்பதல் இத்தலம் குன்றத்தூர் என்று அழைக்கப்படுகிறது. மலைப்பாதையின் நடுவே வலஞ்சுழி விநாயகர் சன்னதி இருக்கிறது. 84 படிகள் கொண்ட குன்றின் மீது அமைந்த கோயில் இது. இக்கோயிலில் முருகன் சன்னதிக்கு நேரே நின்று பார்த்தால், முருகன் மட்டுமே தெரிவார். |