|
||||||||
ஒருங்கிணைந்த நலவாழ்விற்கு தமிழ் மரபு வாழ்வியலின் முக்கிய 7 கூறுகள் |
||||||||
நோயற்ற வாழ்வு என்பது ஒருங்கிணைந்த இயற்கை வாழ்வியல் முறையால் மட்டுமே சாத்தியம் என்பதை நம் முன்னோர் வாழ்ந்த தரமான வாழ்விலிருந்து அறிகிறோம். இன்றைய காலகட்டத்தில் பிறந்த குழந்தை முதல் ,நடுவயது இளையோர் வரை ஏதோ ஒரு நோயில் துன்புற்று வலியைச் சுமந்து மருந்து, மாத்திரைகளுடன் வாழ்வைக் கழிக்கிறார்கள். வாழும் நாள் வரை மகிழ்ச்சியாக கொண்டாடப்பட வேண்டிய இந்த அரிய மனிதப்பிறவியை ஆக்கப்பூர்வமாக வாழ இன்று நோய் ஒரு மிகப்பெரிய தடையாக இருக்கிறது. இதற்கு என்ன காரணம் என்று ஆராய மருத்துவப்பார்வை, சமூகப்பார்வை, தமிழரின் தொன்மையான மரபு வாழ்வியல் சார்ந்த பார்வை என்ற பல கோணத்தில் சிந்திக்கும்போது ஏழு வழிகள் நம் கண்முன் நிற்கிறது. 1.விதை : ஒரு மனிதனின் உணவு சங்கிலியின் தொடக்கம் இயற்கை விதையிலிருந்து தொடங்குகிறது. மரபணு மாற்றப்படாத, இரசாயனம் கலக்காத வீரிய இயற்கையை விதைகளை நெல், காய், பழம் உள்ளிட்டவற்றை உற்பத்தி செய்வதற்குப் பயன்படுத்தி நோயிலிருந்து தற்காத்து 90-100 வயதைக் கடந்தும் நோயின்றி வாழ்ந்தனர். ஆனால் இன்றைய காலகட்டத்தில் இயற்கையிலிருந்து விலகி , உடல்நலம் கெட்டு, வாழ்நாள் காலமும் குறைந்து, வாழும் நாள் முழுதும் நோய்க்கு மருந்து எடுத்துக்கொண்டு வாழும் அவல நிலையில் உள்ளோம். இயற்கை விதைகளை ஐயா நம்மாழ்வார், திரு.நெல் ஜெயராமன் உள்ளிட்ட பலர் தொடர்ச்சியாகப் பகிர்ந்து இன்று தமிழகம் மீண்டும் இயற்கை வீரிய விதைகளைப் பயிர்செய்ய முனைந்துள்ளது வரவேற்கத்தக்கது. அடுத்த 10 ஆண்டுகளுக்காவது நாம் தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம், தமிழ்நாட்டில் இயற்கை விதைகள் கிடைக்கவும், பரவலாகவும், மக்கள் நம்பி பயன்படுத்தவும் வாய்ப்பாக இருக்கும். 2.விவசாயம்: விவசாயம் என்பது இன்று இரசாயனம் கலந்த உணவு உற்பத்தியையே குறிக்கிறது. இருப்பினும், இயற்கை விவசாயம் , மருந்தில்லா விவசாயம், மரபு விவசாயம் என்று பல பெயரில் இன்று மக்கள் இரசாயன உரங்களைப் பயன்படுத்துவதை படிப்படியாகக் குறைத்துக்கொண்டு இயற்கை விவசாயத்திற்குத் திரும்பிவருகின்றனர். குறிப்பாக இளைய சமூகம் தங்கள் பிள்ளைகள் நஞ்சில்லா உணவை உண்ணவேண்டும் என்ற புரிதலை ஏற்படுத்திக்கொண்டு , அதை நோக்கிப் பயணிக்கிறார்கள். இன்னும் 10 ஆண்டுகளுக்குத் தொடர்ந்து மாவட்ட அளவில் இயற்கை விவசாயம், அதனால் குறையும் இரசாயன உரங்களின் தேவை , குறைந்த செலவு, மாற்று இயற்கை உரங்களின் உற்பத்தி என்று பல செயல்பாடுகளை அரசு , தனியார் அமைப்புகளும் இணைந்து முன்னெடுக்கும்போது இதில் நாம் மிகப்பெரிய வெற்றியைப் பெற முடியும். மேலும் அரசுக்கும் உரங்களில் கொடுக்கும் மானியம் முழுதாகக் குறையும். 3.சிறுதானியம்: தமிழர் உணவு முறையில் சிறுதானியம் என்பது பெரும்பங்கும், நெல் என்பது குறைந்த பயன்பாடும் உள்ள வாழ்வியலை நம் முன்னோர் கொண்டிருந்தனர். குறிப்பாகக் கம்பு, கேழ்வரகு உள்ளிட்டவை விவசாயத்திற்குப் பதில் பயிரிடப்பட்டு சத்து மிகுந்த உணவாகப் பயன்பாட்டிலிருந்துள்ளது. பட்டை தீட்டப்பட்ட மரபணு மாற்றப்பட்ட நெல் ரகங்களால், பாரம்பரிய அரிசி, சிறுதானிய வகைகள் பின் தள்ளப்பட்டிருந்தது. இன்று பல்வேறு நோய்களின் தாக்கங்களால் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரிலும், தங்கள் தலைமுறையின் மேல் உள்ள அக்கரையின் பேரிலும் சிறுதானியங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. அதுவும் இயற்கை முறையில் உற்பத்தியாகவேண்டும் என்று மக்கள் தேடி வாங்கி பயன்படுத்திவருவதும், சிறுதானியங்களை எப்படி சமைப்பது, என்னவெல்லாம் செய்யமுடியும் என்று அறிந்துகொள்ள முனைவதும் நடந்துவருகிறது. பல்வேறு உணவகங்களில் , சிறுதானிய உணவுகள் படிப்படியாக இடம்பிடித்து வருகின்றன. இந்த விழிப்புணர்வு தொடர்ந்து அடுத்த 10 ஆண்டுகளில் மேலும் விரிவடைந்து விவசாயிகளுக்கு மிகப்பெரிய பொருளாதார சந்தையையும், மக்களின் நலனில் மேம்பாட்டையும் ஏற்படுத்தும். 4.சித்தமருத்துவம்: தமிழ்நாட்டின் மரபு மருத்துவம், தமிழ் மருத்துவம் இந்தியாவின் தொன்மையான மருத்துவமுறை என்பது சித்த மருத்துவமாகும். இது முழுதும் தமிழில் இருப்பதாலும், 4448 நோய்களுக்கு இதில் தீர்வுகள் சொல்லப்பட்டுள்ளதாலும், படித்த மருத்துவர்கள் BSMS , MD , PHD என்று படித்து அரசில் பதிவுசெய்துகொண்டும், பாரம்பரிய மருத்துவர்கள் தங்கள் புலமையை நிரூபித்து அரசில் பதிவுசெய்துகொண்டும் சித்த மருத்துவத்தில் 7000 க்கும் அதிகமான சித்த மருத்துவர்கள் மக்களின் உடல்நலனைக் கவனித்துக்கொள்கின்றனர். சித்த மருத்துவம் என்பது சித்தர்களின் பண்புகளான சித்தர் இலக்கிய அறிவு, ஓகம் , தியானம், மூச்சுப்பயிற்சி , வர்மம், உணவு, வாழ்வியல் முறை , மூலிகைப் பயன்பாடு, மருத்துகளின் பயன்பாடு, நோய்த்தடுப்பாற்றல் , நாடி பிடித்து அறிதல் என்று பல்வேறு திறமைகளை , அறிவாற்றலை உள்ளடக்கியது. ஒருவர் படித்து நல்ல அனுபவம் உள்ள மருத்துவரிடம் பயிற்சி பெற்று, மருந்து தயாரிக்கும் முறைகள், மூலிகைகளின் பயன்பாட்டை அறிதல் என்று பல அனுபவத்தைப் பெறும்போது அவர் கைராசி மருத்துவராக, அனைவரும் போற்றும் மருத்துவராக விளங்குகிறார். சித்த மருத்துவம் அறம் சார்ந்த வணிகமாக, மக்களின் நலனை முன்னிறுத்தி, சித்தர்களின் ஆற்றலை கைவரப்பெற்றுச் செய்யப்படவேண்டும் அதனால் சித்த மருத்துவர்களுக்கு ஒரு நல்ல சேவையாற்றும் வாய்ப்பும், பொருளாதார வளர்ச்சியும், மக்களுக்குக் குறைந்த செலவில் உடல்நலத்திற்கான தீர்வும் ஏற்படும். 5.மூலிகைகள்: நம் மண்ணில் உருவாகும் நூற்றுக்கணக்கான மூலிகைகளின் விவரங்கள், அதன் பயன்பாடுகள், நோய்தீர்க்கும் விவரங்கள், அவற்றை பயிரிடும் அறிவு உள்ளிட்ட அனைத்தும் தமிழ் மண்ணில் இயல்பாகவே இருந்துள்ளது. ஆனால், இடைப்பட்ட 25-30 ஆண்டுகளில் இவை படிப்படியாக நம்மிடமிருந்து விடைபெற்றுள்ளது. இன்று மூலிகைகளின் தட்டுப்பாடும், அவற்றை இனம்கண்டு பயன்படுத்தும் திறனும், உற்பத்தி செய்து உரிய பொருளாதாரமாக பார்க்கும் விவசாயத்தின் பார்வையும் குறைந்துள்ளது. இவை மீண்டும் புத்துயிர் பெற்று ஆங்காங்கே இளையோர்களிடம் பெருகி வருவது நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. மூலிகைகள் ஒரு மிகப்பெரிய சந்தையாக முக்கியத்துவம் பெற்று தமிழ்நாடு மட்டுமின்றி உலகெங்கும் ஏற்றுமதி செய்யும் நிலை ஏற்படவேண்டும். 6.நாட்டு மாடுகள் நாட்டு மாடுகள் மட்டுமே ஒரு காலத்தில் தமிழகத்திலிருந்தது. ஒவ்வொரு வீட்டிலும் நாட்டு மாட்டிலிருந்து, சீம்பால், பால், தயிர், வெண்ணெய், மோர் என்று பல்வேறு பலன்களை ஏழை மக்களும் அனுபவித்தனர். இன்று நாட்டு மாடுகள் அதிகம் கறப்பதில்லை என்ற ஒரு பார்வையில், வருமானம் ஈட்ட போதுமானதாக இல்லை என்ற பார்வையில் பல்வேறு மரபணு மாற்றப்பட்ட மாடுகள் அதிக அளவு பால் தருவதைக் கருத்தில்கொண்டு , உடல் நலத்தை பின்னிருத்தி வாழ்க்கையை அமைத்துக்கொண்டதன் விளைவு, இன்று பால் பொருள்கள் எடுத்துக்கொள்வது நல்லதா? என்று விவாதத்தில் கொண்டுவந்து விட்டுள்ளது. இன்று A2 வகை நாட்டு மாட்டுப் பாலின் விலை அதிகமாகி , எளிதாக ஏழை மக்களுக்கு உணவாக இருந்தது இன்று கனவாக மாறிவிட்டது. இந்த நிலை மாறி, ஒவ்வொரு வீட்டிலும் ஒரு நாட்டுமாடு, மாவட்டம்தோறும் நாட்டு மாட்டுச் சந்தைகள் , பஞ்சகாவ்யா தயாரிக்க கோமியம் என்று அனைத்தும் பொருளாதார மதிப்பு பெற்று நாட்டு மாடுகளின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் அதிகரிக்கும்போது மக்களின் உடல்நலமும் முன்னேற்றமடையும். 7.ஓகம் இன்று உலகெங்கும் யோகா என்று ஆங்கிலத்தில் சொல்கிறோமே அதைத்தான் தமிழில் நம் சித்தர்கள் ஓகம் என்று குறிப்பிட்டார்கள். பல நோய்களுக்கு முக்கியத் தொடக்கம் மனம். மனம் மகிழ்ச்சியாக இருந்தால் , நோய் அணுகாது , ஊழலின் நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்கும் என்பது நிறுவப்பட்ட ஒன்று. உடல்,மனம், உணர்ச்சிகள், ஆன்மா ஆகியவற்றை ஒன்றிணைப்பது அல்லது ஒருமுகப்படுத்துவதே யோகக் கலை. உணர்வுகளைக் கட்டுப்படுத்தி, மன அழுத்தங்களைக் குறைத்து அமைதி தருவது. இலக்கின்றி அலையும் மானுட வாழ்வில் இலக்கை நிர்ணயித்து சேர வேண்டிய இலக்கில் கொண்டு போய்ச் சேர்க்க ஓகம் ஒரு சிறந்த வாழ்வியல் முறையாகும்.
ச.பார்த்தசாரதி, Rural Vision Foundation info@ruralvisionfoundation.org
|
||||||||
by Swathi on 19 May 2022 0 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|