|
||||||||
சித்தர் இலக்கிய ரகசியங்கள் - டாக்டர். அன்பு கணபதி – நிகழ்வு – 4 |
||||||||
சித்தர் இலக்கிய ரகசியங்கள் - டாக்டர். அன்பு கணபதி – நிகழ்வு – 4 சித்தர் இலக்கியத்தில் மருத்துவம் தமிழ் மருத்துவம்: சித்தர்களின் பல்வேறு பரிணாமங்களில் ஒன்று ‘மருத்துவம்’. உலக மருத்துவங்களிலெல்லாம் தனித்து நிற்கக்கூடிய மருத்துவமாக ‘தமிழ் மருத்துவம்’ இருக்கிறது. தமிழ் மொழியில், தமிழ் இனத்தில், தமிழ் மண்ணில் உருவான புராதனமான மருத்துவமாக ‘தமிழ் மருத்துவம்’ விளங்குகின்றது. பிற்காலத்தில் தமிழ் மருத்துவத்தின் சிறந்த அறிவியல் ஞானிகளாகத் திகழ்ந்த சித்தர்கள் அந்த மருத்துவத்தினுடைய மேம்பாட்டிற்காக நிறையப் பாடுபட்டார்கள். அதன்படி, பல வழிகளை, உத்திகளை வகுத்து வளர்த்தார்கள். அதிலே 18 சித்தர்கள் முதன்மையானவர்கள் என்று பெயர் பெற்றார்கள். அதைப் பின்னொற்றி ‘சித்த மருத்துவம்’ என்ற பெயர் தமிழ் மருத்துவத்திற்கு ஏற்பட்டது. ‘மருந்து’ எனும் சொல்: சித்த மருத்துவத்திற்கே உரியச் சிறப்பு என்னவென்றால் ‘உணவே மருந்து; மருந்தே உணவு’ என்பதாகும். மருந்து எனப் பொருள்படுகின்ற ‘drug’ எனும் ஆங்கிலச் சொல், ‘droug’ என்கிற கிரேக்கச் சொல்லிலிருந்து வந்தது. ‘droug’ எனும் சொல்லின் பொருள் ‘மூலிகைகள்’ என்பதாகும். ஆக, உலகம் முழுவதும் மக்கள் தாவரங்களையே மருந்தாகப் பயன்படுத்தியுள்ளனர் என்பது விளங்குகிறது. பிற்காலத்தில் வேதியியல் பொருட்களைப் பிரித்தெடுத்து, அதன் செயல்பாட்டைத் துரிதப்படுத்துவதற்கு மேலைநாட்டு மருத்துவம் முயற்சி செய்து கொண்டிருந்த போதிலும் கூட, அந்த மருந்துகளின் கண்டுபிடிப்புகளுக்கு மூலமாகத் திகழ்ந்தவை மூலிகைகளே ஆகும். மாறுபடுகின்ற சித்தாந்தம்: ‘Drug’ எனும் சொல்லிற்கு, ‘Drug is an optical other than food; intended to affect the structure and function of the body’ என்று ’’Journal of American Association’ ஒரு வரையறைத் தந்தது. அதாவது 'drug' என்பது ஒரு பொருள்; உடலின் அமைப்பிலும், செயலிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிற ஒரு உணவற்ற பொருள்; அதுவே ‘மருந்து’ என்று நவீன அறிவியல் விளக்கம் தந்தது. இந்த விளக்கத்தை உலகம் ஏற்றுக் கொண்டது. ஆனால் சித்தர்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. ‘Drug is diet; Diet is drug’ என்பது சித்தர்களின் சித்தாந்தம். அதாவது ‘எது உணவோ அதுவே மருந்தாக இருக்க வேண்டும்; எது மருந்தோ அதுவே உணவாக இருக்க வேண்டும்’ என்று சித்தர்கள் கூறினர். மருந்துகளும், மருத்துவங்களும்: மேலைநாட்டு மருத்துவத்திற்கு ‘அலோபதி’ என்று பெயர். இது நோய்க்கு எதிரான பொருளை மருந்தாகப் பயன்படுத்துகிறது. ஜெர்மனியிலிருந்து ஒரு மருத்துவம் தோன்றியது. அதற்குப் பெயர் ‘ஹோமியோபதி’. நோயை உருவாக்குகிற பொருளையே மருந்தாக இது பயன்படுத்துகிறது. உணவாகப் பயன்படுத்தக்கூடிய பொருளையே அடர்த்திக் கூட்டி மருந்தாகப் பயன்படுத்துதல் என்ற கொள்கையை அடிப்படையாகக் கொண்டது தமிழ் மருத்துவம். பஞ்ச பூதங்கள்: தமிழ் மருத்துவம் பஞ்ச பூதத்தை அடிப்படையாகக் கொண்டது. நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களால் ஆனதே உலகம். “அண்டத்தில் உள்ளதே பிண்டத்தில் பிண்டத்தில் உள்ளதே அண்டத்தில் அண்டமும் பிண்டமும் ஒன்றேதான் அறிந்துதான் பார்க்கும் போதே” அறிவால் ஆராய்ந்து பார்த்தால் இந்த உலகத்தில் உள்ள பஞ்ச பூதங்களும் மனிதனுடைய உடலிலும் இருக்கிறது என்று சட்டை முனி கூறுகின்றார். இந்த தத்துவம் தான் சித்த மருத்துவத்தின் அடிப்படை சித்தாந்தம் ஆகும். வெங்காயத்தின் மேல்தோல்: “தன்காயம் தோணாமல் சாணகல பாத்திகட்டி வெங்காயம் நாத்துவிட்டு வெகுநாளாய் காத்திருந்தேன் வெங்காயம் தின்னாமல் மேல்தோலை தின்றதனால் தன்காயம் தோணாமல் என்கண்ணம்மா நான் சாகின்றனடி சாகாமல்”
“பரியாசம் போலவே கடித்த பாம்பு பலபேரறியவே மெத்த வீங்கிப் பரியாரமொருமாது பார்த்த போது பையோடே கழன்றதென்றாடாய் பாம்பே” வெங்காயத்தை ‘காமம்’ என்கின்ற நாகம், தந்தை என்கின்ற பெயரிலே தாயைப் பரியாசமாய்த் தீண்டியது. இது யாரும் இல்லாத அந்தரங்கத்திலே நிகழ்ந்தது. ரகசியமாய் நிகழ்ந்த இது வயிறு வீங்கியதால் பல பேருக்கும் தெரியும்படி ஆகிவிட்டது. தந்தை விந்துவை, தாய் முட்டையை என்று வெங்காயத்திற்கு இரண்டு பேர் நாற்று விட்டார்கள். வெங்காயத்திற்கு 5 தோல் உண்டு. இதுபோலே வெப்பம் பொருந்தியிருக்கக் கூடிய உடலுக்கு 5 பொறிகள் உண்டு. மனிதன் வெங்காயத்தின் தோலைத் தின்று விட்டு, வெங்காயத்தைக் காணவில்லை என்று கூறுகிறானேத் தவிர, அந்த வெங்காயம் உருவாவதற்குக் காரணமாக இருக்கக் கூடிய ஆற்றல் இருக்கிறதே ஐPவன் அந்த தன்காயத்தை அறிவதற்கு அவன் முயற்சி செய்யவேயில்லை. வெறும் தோலையே தின்றுவிட்டு தன்காயத்தை அறியாமல் அந்த வெங்காயம் அழிந்து போகிறது. தன்காயம் அழியவில்லை. வாதம், பித்தம், கபம்: “மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர் வளிமுதலாய் எண்ணிய மூன்று” வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றும் கூடினாலும், குறைந்தாலும் நோய் வரும். எந்த மருத்துவமாக இருந்தாலும் சித்தர்கள் சொன்னதை மறுக்கவியலாது. சித்த மருத்துவத்தின் முதல் சித்தாந்தம் ‘உணவே மருந்து; மருந்தே உணவு’ என்பதாகும். இரண்டாவது சித்தாந்தம் பருவுடல் நோயுறுவதற்குக் காரணம் வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றும் தன்நிலையிலிருந்து மாறுபடுவதே ஆகும். இந்த மாறுபாட்டை உணவைக் கொண்டே சரிசெய்து கொள்ளலாம் என்று சித்தர்கள் உணவை வகைப்படுத்தினார்கள். “ஓடி ஓடி ஓடி ஓடி உலகளந்த ஜோதியை நாடி நாடி நாடி நாடி நாட்களும் கழிந்துபோய் வாடி வாடி வாடி வாடி மாண்டுபோன மாந்தர்கள் கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே”
“உடம்பார் அழியின் உயிரார் அழிவர் திடம்பட மெய்ஞானம் சேரவும் மாடட்டார் உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே” சாவை வெல்வதற்கு மருந்து உண்டு என்று திருமூலன் கூறுகிறான். உடம்பை வளர்த்தல் என்றால் உடலை நெடுநாள் வாழ வைப்பது என்று பொருள். நீடூழி நெடுங்காலம் சரீரம் சீதலமடையாமல் காப்பது எப்படி என்று சித்தர்கள் ஆராய்ந்தார்கள். அப்Nபுhது தான் இறைநிலையை அடைய முடியும் என்றும் சொன்னார்கள். அந்த இறைநிலையை அடைவதே சித்தர்களின் நோக்கமாகும். “கீற்றுதநுதலாய் மிக்க கிஞ்சுக மானே கேளாய் தோற்றிய நாடி மூன்றும் துயரற நடக்குமாயின் ஏற்றிய தீபம் தன்னில் எரிசுடர் நுனியை போலே கூற்றனுக்கிடமுமில்லை குறைபடா மருந்து செய்யில்” கீற்றினை போன்ற நுதலினைக் கொண்ட கண்ணுக்குச் சொந்தக்காரியே, கிஞ்சகத்தினை போன்ற இனிய மொழிக்குச் சொந்தக்காரியே, மான் போன்ற சாயலுக்குச் சொந்தக்காரியே உனக்கொரு கருத்தைச் சொல்கிறேன் கேள், விளக்கு மீது படுகின்ற லேசான வெப்பச்சலனக்காற்றால் சுடர் சிறிதாக அசையும். அந்த அசைவினை போன்று நாடி துடிக்க வேண்டும். அப்படித் துடித்தால் எமனும் வர அஞ்சுவான் என்கிறார் அகத்தியர். நாடி: “கரிமுகனடியை வாழ்த்தி கைதனில் நாடி பார்க்கில் பெருவிரல் அங்குலத்தில் பிடித்தடி நடுவிற் தொட்டால் ஒருவிரல் ஓடில் வாதம் உயர்நடுவிரலில் பித்தம் திருவிரல் மூன்றிற்றோடில் சேத்தும நாடியாமே”
“ஆகியநாடி மூன்றில் படபடடென்றோடிற் சன்னி வாகிணின்னங் கோழி மயிலென நடக்கும் வாதம் ஏகிய வானம் பட்டை யிவையென நடக்கும் பித்தம் போகிய தவளை பாம்பு போலவாஞ் சேத்துமந்தானே”
“சேத்துமந்தெழுந்திருக்கிற் றித்திப்பு நாவிலேறும் ஏற்றியகசப்பு மீறிலெழுப்பிடும் பித்தமாகும் மாற்றிய புளிப்பு மீறில் வந்திடும் வாதமாகும் சேத்துமந் தன்னிற் பித்தந்தீக் காற்று வாதமாமே” இப்பாடல்கள் நாடி இருக்கின்ற இடத்தையும், நாடி துடிக்கின்ற முறையையும், சுவைகளின் வழி மாறுபடுகின்ற நாடித்துடிப்பையும் விளக்குகின்றது. தண்ணீர் என்று அழைக்கக்கூடிய பூதம் தான் உடலில் ‘சேத்துமம்’ என்ற பெயரில் இயங்கிக் கொண்டிருக்கிறது. தீ என்கிற பூதம் தான் பித்தம் என்கிற பெயரில் உடலில் இயங்கிக் கொண்டிருக்கிறது. தகுந்த பயிற்சிகளின் வழி நாடி பார்க்கும் விதத்தையும் கற்றுக் கொள்ளலாம் என்கிறார் டாக்டர். அன்பு கணபதி அவர்கள். நோயை தடுக்கக்கூடிய நாடித்துடிப்பு: “வழங்கிய வாதம் மாத்திரை ஒன்றாகில் தழங்கிய பித்தம் தன்னில் அரைவாசி அழுங்கும் கபம்தான் அடங்கியே கால்ஓடில் புழுங்கிய சீவர்க்கு பிசகொன்றும் இல்லையே’ இந்த உடலுக்குள்ளே பழங்கிக் கொண்டிருக்கிற ஜீவனுக்குப் பிணக்கு வாரது. எப்போதெனில் வாதம் ஒன்று, பித்தம் அரை, கபம் கால்மாத்திரை என்ற விகிதத்தில் இயங்கிக் கொண்டிருக்கிற வரை. நாடியைப் பார்த்து நோயை அறிந்து அந்த நாடியைச் சமன் செய்வதற்கு, உணவையே மருந்தாக்கிக் கொடுத்து உடல் நலத்தைப் பேணி, நீண்ட ஆயுளைக் காப்பாற்றுவதற்குரிய ஒரு மருத்துவம் சித்த மருத்துவம் ஆகும். இது தமிழ் மதத்தின் தமிழ் மொழியின் பாரம்பரிய மருத்துவம் ஆகும். |
||||||||
by Lakshmi G on 25 Oct 2021 0 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|