LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    இந்து மதம் Print Friendly and PDF
- தமிழ் மண்ணில் சாமிகள்

கிருபானந்த வாரியார்

கிருபானந்த வாரியார்

     பாமரனின் உள்ளத்தில் பரமனை விதைத்தவர். சிந்தனைக்குரிய வார்த்தைகளைச் சிரிக்கும்படி சொன்னவர். 64-வது நாயன்மாராக வலம் வந்த அருள் மொழி அரசு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் வாழ்க்கையிலிருந்து சில துளிகள்...

     வேலூர் அருகே, காங்கேயநல்லூரில் 1906-ம் ஆண்டு, மல்லைய தாஸ பாகவதர் - கனகவல்லி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். இவரோடு பிறந்தவர்கள் 11 பேர். இவர் நான்காவது குழந்தை. வாரியாருக்கு அறிவு ஞானம் அனைத்தையும் வழங்கியவர் அவரது அப்பா. வீட்டிலேயே இலக்கியம், இலக்கணம், இசை எல்லாம் கற்றுக்கொடுத்தார். பிரம்மஸ்ரீ தென்மடம் வரதாச்சாரியாரிடம் வீணை கற்றார். எட்டு வயதில் வெண்பா பாடும் ஆற்றல் வந்தது. 12 வயதில் 10,000 பாடல்களை மனப்பாடம் செய்தார். மறையும் வரை எந்தப் பாட்டும் மறக்கவில்லை!

     வாரியார் இளைஞனாக இருந்தபோது, அவருடைய தந்தையார் ஒரு நவராத்திரி விழாவில், மைசூருக்கு அவரை அழைத்துச் சென்று வீணை சேஷண்ணாவிடமிருந்து ஒரு வீணை வாங்கிக் கொடுத்தார். பின்னர் சென்னையில் நாட்டுப் பிள்ளையார் கோயில் தெருவில் வசிக்கும் ஓர் இசை ஆசிரியரிடம் வீணை கற்றுக் கொள்ள ஏற்பாடு செய்தார். வாரியாருக்கு 23 வயதானபோது, சென்னை ஆனைகவுனி தென்மடம் பிரம்மஸ்ரீ வரதாசாரியாரிடம் ஏறத்தாழ நான்கு ஆண்டுகள் வீணைப் பயிற்சி பெற்றார். தனது சங்கீத ஞானத்தால் அவர் கதாகாலட்சேபம் செய்யும் பொழுது திருப்புகழ், தேவாரம், திருவாசகம் முதலான தோத்திரப்பாக்களை இன்னிசையுடன் பாடினார். அவருடைய சங்கீத ஞானத்தைப் பாராட்டி, சென்னைத் தமிழிசை மன்ற வெள்ளி விழாவின் போது "இசைப் பேரறிஞர்" பட்டம் வழங்கி கெளரவித்தார்கள்.

                தன் தந்தையின் வழியில் வாரியார் சுவாமிகள் தமது 15ஆம் வயதிலிருந்தே சொற்பொழிவு செய்யும் திறம் உடையவரானார். 19ஆம் வயதிலிருந்தே தனியாகப் புராணப் பிரசங்கங்கள் செய்யத் தொடங்கினார். அவருடைய பிரசங்கங்கள் பெரும்பாலும் பேச்சு வழக்கை ஒட்டியே அமைந்திருந்த காரணத்தால், பாமர மக்களது உள்ளம் கவர்ந்தவரானார். அவரது "ஆன்மிக மொழி" பாமரர்களுக்கும் புரியும் விதமாக வேதாந்த உண்மைகளையும், சித்தாந்த கருத்துகளையும் கூறியது. பண்டிதர் முதல் படிப்பறிவில்லாதவர் வரை அனைத்துத் தரப்பினரும் அவருடைய பிரசங்கங்களைச் செவிமடுத்து மகிழ்ந்தனர்.

                சுவாமிகள் தமிழோடு சைவ சித்தாந்தத்திலும் பெரும் புலமை பெற்றவர். அற்புதமான நினைவாற்றலும், நாவன்மையும் பெற்றவர். அவர் கூறும் நுட்பங்களைக் கேட்டு "இதுகாறும் இதனை அறிந்திலமே" என்று கல்வியில் சிறந்த புலவர்களும் வியந்து பாராட்டினார்கள்.

                "வாரியார் வாக்கு கங்கை நதியின் பிரவாகம் போலப் பெருக்கெடுத்தோடுகிறது் மிக உயர்ந்த முத்துக்கள் அவர் வாக்கிலிருந்து உதிர்கின்றன" என்று அறிஞர்கள் புகழ்ந்தார்கள். மழையை நாடியிருக்கும் சகோரப் பறவைபோல அவரது பிரசங்கத்தைக் கேட்டு இன்புறுவதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருப்பார்கள்.

டாக்டர் பட்டம்:

     அண்ணாமலைப் பல்கலைக் கழகம் டாக்டர் பட்டம் கொடுத்தது. தஞ்சைப் பல்கலைக்கழகம் 'இலக்கிய முது முனைவர்' என்றது. காஞ்சி மகா பெரியவர் 'சரஸ்வதி கடாக்ஷமிர்தம்' என்று பாராட்டினார். அனைவருமே 'அருள் மொழி அரசு' என்று வணங்கினர். வாரியார் வாங்கிய பட்டங்களின் எண்ணிக்கைக்கு அளவே இல்லை. ஆனால், வாரியார் பள்ளிக்கூடம் சென்று படித்ததே இல்லை!

தந்தையிடம் பாராட்டு பெற்ற வாரியார்:

     சிறுவயதில், பாலாறுக்குத் தினமும் குளிக்கச் செல்வார். அப்போது தனது அம்மாவிடம் அரிசி வாங்கி, போகும் வழியில் எறும்புப் புற்று இருக்கும் இடங்களைத் தேடிச் சென்று அதில் அரிசியைப் போட்டுக்கொண்டே போவாராம்!

     மகன் ஆன்மிகச் சொற்பொழிவு ஆற்ற ஊர் ஊராகப் போய் வருவது ஆரம்பக் காலத்தில் அவரது அப்பாவுக்குத் தெரியாது. காங்கேயநல்லூர் முருகன் ஆலய ராஜ கோபுரம் கட்டியதில் தந்தைக்கு ஏற்பட்டிருந்த ரூ.5,000 கடனைத் தனது சொற்பொழிவு வருமானத்தில் அடைத்தார் வாரியார். அதன் பிறகுதான் அதை அறிந்து பாராட்டினார் தந்தை!

குடும்பம்:

     வீர சைவ மரபினைச் சேர்ந்த சுவாமிகள் தம் ஐந்தாவது வயதில் கழுத்தில் சிவலிங்கம் அணிந்தார். 1936 முதல் தினமும் முருகனுக்கு பூஜை செய்த பின்பே உணவு உட்கொள்வது வழக்கம்.  வாரியார் தனது 19-வது வயதில் தாய் மாமன் மகள் அமிர்த லட்சுமியைத் திருமணம் செய்துகொண்டார். பிரம்மச்சர்யத்தைக் கடைப்பிடித்ததால், குழந்தைகள் இல்லை!

பெண்களைப் போற்றல்:

     தியாகராஜ பாகவதர் கதாநாயகனாக நடித்து ஒரு வருடத்துக்கு மேல் ஓடிப் புகழ் பெற்ற 'சிவகவி' திரைப்படத்துக்கு வசனம் எழுதியவர் வாரியாரே. வெளியூர் சென்றாலும் கூடவே பூஜைப் பெட்டியை எடுத்துச் செல்வது வழக்கம். தொடர்ந்து 57 வருடங்கள் ஒரு நாள்கூட இடைவெளி இன்றி பூஜை செய்தவர்!

     எம்.ஜி.ஆருக்கு எத்தனையோ பட்டங்கள் இருந்தாலும், 'பொன் மனச் செம்மல்' என்பது அனைவராலும் சொல்லப்படுவது. அப்பட்டத்தை வழங்கியவர் இவரே! 'பெற்றெடுத்த தாயின் பெயரை இனிஷியலாகப் போடலாமே!' என்று பெண்களைப் போற்றும் ஒரு கருத்தை அக்காலத்திலேயே கூறியவர்!

'ராமகிருஷ்ண குடில்' 

     திருப்புகழ் உரை நடை, மகாபாரதம், கம்பராமாயணம், கந்த புராணம், பெரிய புராணம் என்று இவர் எழுதிய நூல்களின் எண்ணிக்கை 200 இருக்கும். அவை அனைத்தையும் படிக்கும்போது வாரியாரின் பேச்சைக் கேட்பதுபோலவே இருக்கும்! 'எனக்கு அஜீரணம் என்பது என்னவென்றே இதுவரை தெரியாது. பசியெடுத்த பின் கையை வாய்க்குள் வைப்பவனும், பசி அடங்குவதற்கு முன் கையை வாயைவிட்டு எடுத்துக்கொள்பவனும் நோய்வாய்ப்பட மாட்டான்!' என்று ஒரு முஸ்லிம் அன்பர் கூறியதை நினைவில் வைத்திருக்கிறேன்!' என்பார்!

                27 லட்ச ரூபாய் நன்கொடை வசூலித்து, திருப்பராய்த்துறையில் 'ராமகிருஷ்ண குடில்' அமைத்தார். ஆதரவற்ற சிறுவர்களின் புகலிடமாக அது விளங்கி வருகிறது!

திருமுருக கிருபானந்த வாரியார் பொதுநல நிதி அறக்கட்டளை:

     தான் பிறந்த காங்கேய நல்லூரில் ஆரம்பப் பள்ளி,  நடுநிலைப் பள்ளி, பெண்கள் உயர்நிலைப் பள்ளி, ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றை நிறுவினார். பள்ளிக்கு என உதவி கேட்டால் உடனே செய்வார்!

                'ஏழைகள், மாணவர்கள், விதவைகள், மருத்துவ உதவி வேண்டுவோர் எனப் பல தரப்பினருக்கும் நிதி உதவி செய்திட 'திருமுருக கிருபானந்த வாரியார் பொதுநல நிதி அறக்கட்டளை' ஒன்றைத் தன் சொந்தப் பணத்தில் அமைத்தார்!

     ஆன்மிகச் சொற்பொழிவுகளின் இடையே சிறுவர்களிடம் கேள்விகள் கேட்டு, சரியாகப் பதில் சொல்பவர்களை மேடைக்கு அழைத்து, புத்தகங்கள் பரிசளித்து ஊக்குவிப்பது வாரியார் வழக்கம்!

தமிழின் பெருமைபற்றி வாரியார்:

     தமிழின் பெருமைபற்றி வாரியார்: கூறியது இது... 'பாரிஸ் நகர நூல் நிலையத்தில் மடக்கிவைத்துள்ள பீரோக்களை நீட்டிவைத்தால், ஆறு மைல் நீளம் வரும். மிகப் பெரிய நூலகம். அதில் எண் ஒன்று போட்டு பைபிள் உள்ளது. எண் இரண்டு போட்டு திருக்குறளை வைத்திருக்கிறார்கள்!' மானம் என்ற சொல் தமிழில் தவிர வேறு எந்த மொழிகளிலும் இல்லை!

'நாம் செய்வது என்ன'…

     பழநி ஈசான சிவாச்சாரியார், 'டால்ஸ்டாய் எழுதிய 'நாம் செய்வது என்ன' என்ற புத்தகத்தை நீ ஒரு முறை படி. நான் படித்தால் அழுகை வருகிறது' என்றார். அந்நூலைப் படித்து முடித்ததும் பொன், பொருள், உலகம் ஆகிய பற்றுகள் அகன்றுவிட்டன வாரியாருக்கு. அன்று முதல், தான் அணிந்திருந்த தங்க ருத்திராட்ச மாலை, மோதிரங்கள் உட்பட அத்தனை அணிகலன்களையும் கழற்றி காங்கேய நல்லூர் முருகனுக்கு அர்ப்பணித்துவிட்டார் வாரியார்!

இரை தேடுவதோடு இறையையும் தேடு:

     தன் விரிவுரைகளுக்குக் கிடைத்த வருவாயில் காங்கேய நல்லூரில் நான்கு ஏக்கர் நிலத்தை வாங்கினார் வாரியார். அதிலிருந்து கிடைக்கும் வருவாயைவைத்து தினமும் தயிர் சாதம் தானமாக வழங்க உத்தரவிட்டார். 56 ஆண்டுகளாக இது தடை இல்லாமல் நடக்கிறது! 'எம்பெருமான் திருவருளாலே...' என்ற வார்த்தைகள் இல்லாமல் அவர் பேசியதே இல்லை! 20 வயதுக்கு மேல், மேல் சட்டை அணிந்தது இல்லை. ஆட்டோகிராஃப் கேட்பவர்களுக்கு 'இரை தேடுவதோடு இறையையும் தேடு' என்ற வார்த்தைகளையே பெரும்பாலும் எழுதிக் கையெழுத்து இடுவார்

by Lakshmi G   on 09 Nov 2020  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு கண்ணகி கோயில் திருவிழா கோலாகலம். சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு கண்ணகி கோயில் திருவிழா கோலாகலம்.
மதுரை வைகை ஆற்றில் தங்கக் குதிரை வாகனத்தில் பச்சைப் பட்டு உடுத்தி எழுந்தருளினார் கள்ளழகர். மதுரை வைகை ஆற்றில் தங்கக் குதிரை வாகனத்தில் பச்சைப் பட்டு உடுத்தி எழுந்தருளினார் கள்ளழகர்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமி கோவிலில் பங்குனி தேரோட்டம் கோலாகலம். ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமி கோவிலில் பங்குனி தேரோட்டம் கோலாகலம்.
உலகின் மிகப்பெரிய 10 இந்துக் கோவில்கள் எங்கு உள்ளது தெரியுமா? உலகின் மிகப்பெரிய 10 இந்துக் கோவில்கள் எங்கு உள்ளது தெரியுமா?
பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு. பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு.
பங்குனி உத்திரம் 2024 எப்போது? நேரம், தேதி குறித்த தகவல்கள். பங்குனி உத்திரம் 2024 எப்போது? நேரம், தேதி குறித்த தகவல்கள்.
மாசி மாத சங்கடஹர சதுர்த்தி எப்போது? மஞ்சள் கயிறு மாற்றுவதற்கான நேரம் என்ன? மாசி மாத சங்கடஹர சதுர்த்தி எப்போது? மஞ்சள் கயிறு மாற்றுவதற்கான நேரம் என்ன?
மாசி மகம் 2024 எப்போது? நேரம், தேதி குறித்த தகவல்கள்...! மாசி மகம் 2024 எப்போது? நேரம், தேதி குறித்த தகவல்கள்...!
கருத்துகள்
14-May-2021 12:59:26 விஸ்வேஸ்வரன் said : Report Abuse
இஸ்லாமியர்கள் தினமும் 5 வேளை பள்ளிவாசலில் தொழுகை செய்ய வேண்டும். கிறித்துவர் ஞாயிறு தோறும் தேவாலயம் செல்ல வேண்டும். பார்ப்பன இந்துக்கள் தினந்தோறும் 3 முறை சந்தியாவந்தனம் செய்ய வேண்டும். வேத மரபு. சூத்திர இந்துக்கள் தினந்தோறும் கடைபிடிக்க வேண்டிய மத வழிபாடு என்ன?
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.