LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன் அவர்கள் மறைவுக்கு புகழஞ்சலி

பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன் அவர்கள் மறைவுக்கு வலைத்தமிழ் புகழஞ்சலியை செலுத்துகிறது. 

உரைவேந்தர் ஔவை துரைசாமியாரின் மகன் உலகறிந்த தமிழறிஞர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்தவர் பத்மசிறீ பேராசிரியர் ஔவை நடராசனார் அவர்களின் மறைவு ஈடு செய்ய இயலாத பேரிழப்பு.

தமிழ்நாடு அரசின் மொழிபெயர்ப்புத்துறை இயக்குநராகவும் பணியாற்றியவர். மேலும் தமிழ்வளர்ச்சிக்கென்றே ஒரு தனித்துறை தமிழ்நாடு அரசில் நிறுவப்பட்டவுடன் அதன் முதல் செயலாளராகப் பணியாற்றியவர்.

தருமை ஆதீனம் 25 ஆவது கயிலை குருமணிகள் அருளாட்சி காலத்தில் தருமை ஆதீனப் புலவராகத் திகழ்ந்த ஒளவை துரைசாமி பிள்ளையின் புதல்வர். 1992 ஆண்டு ஆவணிமூல விழாவில் 26 ஆவது குருமணிகளின் திருக்கரங்களால் "விரிவுரை வேந்தர்"என்னும் தங்கப்பதக்க விருது பெற்றவர் ஔவை நடராசனார்,

நற்றமிழ் நாவலர் ஔவை நடராசன் அவர்கள் ஆற்றிய தமிழ்ப்பணியால் அவர் என்றென்றும் நம் நெஞ்சில் நிலைத்திருக்கிறார்.

தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் பேச்சாற்றலும் எழுத்தாற்றலும் மிக்க சிலருள் ஒருவர் அறிஞர் முதுமுனைவர் ஒளவை து.நடராசன்; எந்தத் தலைப்பாக இருந்தாலும் கையில் எந்தக் குறிப்புமின்றிச் சிறப்பாகப் பேசும் சீரிய சிந்தனையாளர்; பட்டிமன்றங்கள், பொது நிகழ்ச்சிகள் வாயிலாக நாடறிந்த நல்லறிஞராகத் திகழ்பவர். நகைச்சுவையாகப் பேசும் பலரும் அந்தந்த நேரத்திற்கான ஆரவாரத் துணுக்குகளை உதிர்ப்பவர்களாக உள்ளனர். அவ்வாறில்லாமல், நகைச்சுவையாக, அதே நேரம் அறிவார்ந்த கருத்துகளைப் பேசும் நாவரசர். இவரது உரை வளமும் குரல் வளமும் கேட்டவர்களை இவர் பக்கம் பிணைத்துப் புகழ் ஏணியில் இவரை ஏற்றுகின்றன. உரைவேந்தர் ஒளவை சு.துரைசாமி அவர்களின் உரை வளம் இவரின் சொல்வளமாக மாறித் தமிழ் உலகை மகிழ்விக்கிறது.

குடும்பம்:
தமிழறிஞர் உரைவேந்தர் ஒளவை துரைசாமி – உலோகாம்பாள் இணையரின் திருமகனாக சித்திரை 32. 1967 / 24.04.1936 இல் இன்றைய திருவண்ணாமலை (அன்றைய வடஆர்க்காடு) மாவட்டத்திலுள்ள செய்யாறு என்னும் ஊரில் பிறந்தார். தமக்கை, மூன்று தங்கையர், நான்கு தம்பியர் உடையவர். மனைவி குழந்தை நல மருத்துவர் தாரா நடராசன் அரசின் மருத்துவக் கல்லூரித் தலைமையாளராக( Dean)ப் பணி நிறைவு பெற்றவர். மரு. கண்ணன் நடராசன், முனைவர் அருள் நடராசன், மருத்துவர் பரதன் நடராசன் என்னும் நன்மக்கள் மூவர் இவ்விணையருக்கு உள்ளனர்.

கல்வி:
தமிழில் முதுகலைப் பட்டம்(மதுரை தியாகராசர் கல்லூரி), இளமுனைவர் பட்டம்(சென்னை பச்சையப்பன் கல்லூரி)முனைவர் பட்டம் பெற்றவர். இவர் அளித்துள்ள ‘சங்க இலக்கியத்தில் பெயரிடு மரபு’ என்னும் தலைப்பில் இள முனைவர் பட்டத்திற்கான ஆய்வேடும்(1958) ‘சங்க காலப் புலமைச் செவ்வியர்’ என்னும் தலைப்பில் முனைவர் பட்டத்திற்கான ஆய்வேடும் இவரின் சங்க இலக்கிய ஈடுபாட்டையும் ஆய்வுப் புலமையையும் உணர்த்துவன.

நாநலம்:
நாநலம் என்னும் நலனுடைமை இவருக்கு மாணவப்பருவத்திலேயே வாய்த்தது. அதனால் பேச்சுப் போட்டிகளில் பங்கேற்கும் வகையில் பல்வேறு கல்லூரிகளுக்கும் செல்லும் வாய்ப்பைப் பெற்றார். இளைஞர் கூட்டம் இவரால் ஈர்க்கப்பட்டு இவரை மொய்த்தன. படித்தபின்பு பணியாற்றும் பொழுதும் இவரைச் சுற்றி இளைஞர் கூட்டம் இருந்தது. அல்லது இளைஞர்கள் இருந்த இடத்தில் இவர் இருந்தார். அந்தப் பேச்சுத்திறமைதான் இவரைக் கலைஞர் கருணாநிதி, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் , செல்வி ஜெ.ஜெயலலிதா முதலானவர்களின் அன்பிற்கு ஆட்படுத்த வைத்தது. இதுவே உரிய காலத்தில் மும்முதல்வர்களால் சிறப்பு மிக்கப் பணிப்பொறுப்பு ஏற்கும் வாய்ப்புகளை நல்கியது.

பணி:
மதுரையில் உள்ள தியாகராசர் கல்லூரியில் தமிழ்ப்பயிற்றுநராக இவரது பணி வாழ்க்கை தொடங்கியது. பின் தஞ்சாவூரிலுள்ள மன்னர் சரபோசி கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றினார். ஆசிரியர்கள் வகுப்பு எடுக்கும் பொழுது மாணாக்கர்கள்பலர் வெளியே செல்வது வழக்கமாக உள்ளது. ஆனால், இவர் வகுப்பு எடுக்கும் பொழுது பிற வகுப்புகளில் பயிலும் மாணாக்கர்களும் இவர் பாட உரையைக் கேட்க வந்து நெருக்கியடித்து உட்கார்ந்து கொள்வார்களாம். அவ்வாறு பாடங்களையும் நகைச்சுவையாகவும் பிறரை ஈர்க்கும் வகையிலும் விளக்கியுள்ளார்.

அடுத்துப் புதுதில்லியில் அனைத்து இந்திய வானொலியில் செய்தி வாசிப்பாளர், அறிவிப்பாளர் எனப் பணியாற்றி வானலை வழியும் புகழ் பெற்றார். அங்கிருந்து விலகிய பின்னர், காந்தி-இராமலிங்கர் பணி மன்றச் செயலாளராகப் பணியாற்றி அருட்பணிகளையும் தமிழ்ச்சிறப்புகளையும் பரப்புவதில் ஈடுபட்டார். இப்பணி அவருக்கு எண்ணற்ற ஆன்றோர்கள் அறிஞர்களின் தொடர்பை ஏற்படுத்தித் தந்தது. மக்களைக் கவரும் பேச்சாற்றல் மிக்க இவர் தமிழக அரசில் பணியாற்ற வேண்டும் என விரும்பினார். அதே எண்ணங் கொண்டிருந்த அப்போதைய முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி இவரைச் செய்தி மக்கள் தொடர்புத் துறையில் துணை இயக்குநராகப் பணியமர்த்தினார். பின்னர் மொழிபெயர்ப்புத் துறை இயக்குநரானார்(1975-84). இந்திய ஆட்சிப்பணித் துறையைச் சேர்ந்தவர்கள் மட்டும் பணியாற்றும் அரசு செயலர் பணியிடத்தில் அப்போதைய முதல்வர் புரட்சித்தலைவர் எம்.ஜி.இராமச்சந்திரன் இவரை அமர்த்தி, தமிழ் வளர்ச்சி- பண்பாட்டுத்துறைச் செயலாளராகப் பணியாற்றச் செய்தார்(1984-92). இவருக்கு முன்னரும் பின்னரும் இ.ஆ.ப. அல்லாத எவரும் அரசு செயலராகப் பணியாற்றியதில்லை என்னும் சிறப்பு இவருக்குரியது. அதிகாரப் பகட்டு இல்லாமல் எளிமையாய் யாவருடனும் பழகும் நேர்த்தியும் அடுத்தவர் கருத்துகளுக்குச் செவிமடுத்து அவர்களை மதிக்கும் பண்பும் எந்நாளும் எப்பொழுதும் இவர் அறையில் பலரும் வந்து செல்லும் நிலையை ஏற்படுத்தியது.

பின்னர் அப்போதைய முதல்வர் புரட்சித்தலைவி ஜெ.ஜெயலலிதாவினால் தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பொறுப்பினை (1992 திசம்பர் 16ஆம் நாள் முதல் 1995 திசம்பர் 15ஆம் நாள் வரை) வகித்தார். 2014 ஆம் ஆண்டில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் துணைத்தலைவராக இருந்தார். 2015 ஆம் ஆண்டு முதல் சென்னையிலுள்ள பாரத்து பல்கலைக்கழகத்தின் வேந்தராக இருந்து வருகிறார்.

வழிகாட்டி:
பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆய்வு வழிகாட்டியாகச் செயல்பட்டிருக்கிறார். உலகின் பல்கலைக்கழகங்கள் பலவற்றில் நடைபெற்ற மாநாடுகளில் பங்கேற்றுச் சிறப்பித்திருக்கிறார். 1982-இல் சான்பிரான்சிசுகோவில் நடைபெற்ற அனைத்து நாடுகளின் கவிஞர்கள் மாநாட்டில் தமிழகச் சார்பாளராகப் பங்கேற்றுச் சிறப்பித்திருக்கிறார். மதுரையில் நடைபெற்ற ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டின் செயலாளராகச் சிறப்பாகப் பணியாற்றியுள்ளார். தென்கிழக்கு ஆசிய மாநாட்டில் மருத்துவத் தொழில்நுட்ப சொல்லாக்கக் குழுத் துணைத்தலைவராகப் பங்கேற்று சிறப்பித்திருக்கிறார். இவ்வாறு பல்வேறு பொறுப்புகள் மூலம் திறம்படப் பணியாற்றித் தமிழ்த்தொண்டாற்றி உள்ளார். இவர் பொறுப்பிலிருந்தும் வாளாவிருக்க வேண்டிய சூழல் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத்தலைவராக இருந்த பொழுது ஏற்பட்டது. ஆனால், பிற எல்லா நிலைகளிலும் இவரது சுறுசுறுப்பும் விரிந்து பரந்த அறிவும் தமிழுலகு தழைக்கவும் தமிழன்பர்கள் உயரவும் உதவின என்பதில் ஐயமில்லை.

விருதுகள்:
அரசுகளாலும் அமைப்புகளாலும் இவருக்குப் பல்வேறு விருதுகள் வழங்கப்பெற்றுள்ளன. அவற்றுள் குறிப்பிடத்தக்கவை வருமாறு

 • தமிழக அரசின் ‘கலைமாமணி’ விருது
 • இந்திய ஒன்றிய அரசின் ‘தாமரைத்திரு’(பத்மசிறீ) விருது(2011)
 • இலங்கை, கம்பர் கழகத்தின் ‘“தன்னேரில்லாத தமிழ் மகன்’ விருது
 • தமிழக அரசின் 2009ஆம் ஆண்டிற்கான ‘அறிஞர் அண்ணா ‘விருது
 • கொழும்புக் கம்பன் கழகத்தின் ‘கம்பன் புகழ்’ விருது (2012)
 • தினத்தந்தி நாளிதழின் ‘சி. பா. ஆதித்தனார் மூத்த தமிழறிஞர்’ விருது. (2014)

நூல்கள்:
நூற்றுக்கணக்கான மாநாடுகளிலும் கருத்தரங்கங்களிலும் இவர் ஆற்றியுள்ள தொடக்கவுரைகள், மையக் கருத்துரைகள், சிறப்புரைகள் முதலியன இலக்கியச் சிறப்பு மிக்கன. ஆங்கிலத்திலும், தமிழிலும் ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். ஒளவை நடராசனார்க்கு இருக்கும் அறிவு வளத்திற்கு எண்ணற்ற நூல்களை எழுதியிருக்கலாம். இருந்தாலும் இவரது பணிச்சூழலும் இலக்கியச் சூழலும் அதற்கான வாய்ப்புகளை வழங்கவில்லை. எனினும் இவரது சொற்பொழிவுகள் சில நூல்வடிவம் பெற்றுள்ளன. அவை வருமாறு:

 • வாழ்விக்க வந்த வள்ளலார்
 • பேரறிஞர் அண்ணா
 • கம்பர் காட்சி
 • கம்பர் விருந்து
 • திருப்பாவை விளக்கம்
 • திருவெம்பாவை விளக்கம்
 • சங்க இலக்கியப் பெண்பாற் புலவர்கள்
 • அருளுக்கு ஔவை சொன்னது

#avvai_natarajan #avvai_natarasan #avvai #அவ்வை_நடராசன் #அவ்வை_நடராஜன் #madurai #condolence #Thanjavur

by Swathi   on 22 Nov 2022  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பேராசிரியர் முனைவர் இறையரசன் 75வது பிறந்தநாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது பேராசிரியர் முனைவர் இறையரசன் 75வது பிறந்தநாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது
இசைத்தமிழ்க் கலைஞர்கள் நூலுக்குச் சென்னையில் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது இசைத்தமிழ்க் கலைஞர்கள் நூலுக்குச் சென்னையில் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது
சென்னையில் முனைவர் மு. இளங்கோவனின் இசைத்தமிழ்க் கலைஞர்கள் நூல் வெளியீட்டு விழா சென்னையில் முனைவர் மு. இளங்கோவனின் இசைத்தமிழ்க் கலைஞர்கள் நூல் வெளியீட்டு விழா
இலக்கியவாதிகளா? வணிகர்களா? யார் முன்னிற்பது - இரண்டு வணிக நிறுவனங்களின் இலக்கிய ஊக்குவிப்பு இலக்கியவாதிகளா? வணிகர்களா? யார் முன்னிற்பது - இரண்டு வணிக நிறுவனங்களின் இலக்கிய ஊக்குவிப்பு
தஞ்சையில் இணையை தமிழ் மாநாடு நிறைவுவிழா தஞ்சையில் இணையை தமிழ் மாநாடு நிறைவுவிழா
மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் பேத்தி திருமதி.லலிதா பாரதி அவர்கள் வயது முதிர்வின் காரணமாக இயற்கை எய்தினார் மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் பேத்தி திருமதி.லலிதா பாரதி அவர்கள் வயது முதிர்வின் காரணமாக இயற்கை எய்தினார்
கீச்சுக்குரலில் இருந்து கம்பீர குரலுக்கு மாற சிறப்பு சிகிச்சை மறுத்த்துவர் குமரேசன் எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு கீச்சுக்குரலில் இருந்து கம்பீர குரலுக்கு மாற சிறப்பு சிகிச்சை மறுத்த்துவர் குமரேசன் எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு
வலைத்தமிழ் அமைப்புகளும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான பல்வேறு முன்னெடுப்புகளும் வலைத்தமிழ் அமைப்புகளும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான பல்வேறு முன்னெடுப்புகளும்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.