|
|||||
அதிவேக சதத்தால் உலக சாதனை படைத்தார் நியூசிலாந்தின் கோரி ஆண்டர்சன் !! |
|||||
![]() நேற்று கிரிக்கெட் ரசிகர்களுக்கு புத்தாண்டு பரிசு வழங்கும் விதமாக, ஒரு நாள் போட்டிகளில் அதிவேக சதம் அடித்து நியூசிலாந்தின் கோரி ஆண்டர்சன் உலக சாதனை படைத்துள்ளார்.
நியுசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இன்டிஸ் அணி 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வென்றது. இரண்டாவது போட்டி மழையால் ரத்தானது. மூன்றாவது போட்டி குயின்ஸ்டவுனில் நேற்று நடந்தது.
மழை காரணமாக, போட்டி 21 ஓவர்களாக குறைக்கப்பட்டது. ‘டாஸ்’ வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் டுவைன் பிராவோ, முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். நியூசிலாந்து அணிக்கு துவக்க வீரர் குப்டில் ஒரு ரன் எடுத்து ஏமாற்றினார். கேப்டன் பிரண்டன் மெக்கலம் (33), ராஸ் டெய்லர் (9) அதிக நேரம் தாக்குப்பிடிக்கவில்லை.
அதிரடி ஆரம்பம் :
பின்னர் ஜோடி சேர்ந்த ஜெசி ரைடரும், கோரி ஆண்டர்சனும் அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தினர். வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை அடித்து நொறுக்கிய இவர்கள் சிக்சர் மழை பொழிந்தனர். பிராவோ பந்தில் பவுண்டரி அடித்து ரன்கணக்கை ஆரம்பித்த கோரி ஆண்டர்சன், நரைன், ராம்பால் ஓவர்களில் தலா 4 சிக்சர்கள் பறக்கவிட்டார். எதிர்முனையில் பிராவோ வேகத்தில் பவுண்டரிகள் விளாசினார் ரைடர். மில்லர் பந்தில் சிக்சர் அடித்த ஆண்டர்சன், தனது முதல் ஒருநாள் சதத்தை 36 பந்தில் அடித்து புதிய உலக சாதனை படைத்தார். தனது 46வது பந்தில் சதம் அடித்த ரைடர் (104) ஹோல்டர் பந்தில் அவுட்டானார். 21 ஓவரில் நியூசிலாந்து அணி 4 விக்கெட்டுக்கு 283 ரன்கள் குவித்தது. ஆண்டர்சன் (131), ராஞ்சி (3) அவுட்டாகாமல் இருந்தனர்.
284 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய வேஸ்ட் இண்டீஸ் அணி, 21 ஓவர் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட்டுக்கு 124 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது. ஆட்டநாயகன் விருதை நியூசிலாந்தின் கோரி ஆண்டர்சன் வென்றார்.
அப்ரிடியின் சாதனை முறியடிப்பு :
வேஸ்ட் இண்டீசுக்கு எதிராக 36 பந்தில் சதம் அடித்த நியூசிலாந்து வீரர் கோரி ஆண்டர்சன், பாகிஸ்தான் ஆல்-ரவுண்டர் அப்ரிடியின் 17 ஆண்டு கால சாதனையை முறியடித்தார்.
சிக்சரில் மூன்றாவது இடம் :
நேற்று நடந்த போட்டியில் 14 சிக்சர் விளாசிய நியூசிலாந்தின் கோரி ஆண்டர்சன், ஒருநாள் போட்டியில் ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர் அடித்த வீரர்கள் வரிசையில் மூன்றாவது இடம் பிடித்தார். முதல் இரண்டு இடத்தில் இந்தியாவின் ரோகித் சர்மா (16), ஆஸ்திரேலியாவின் வாட்சன் (15) உள்ளனர்.
நியூசிலாந்து அணி முதலிடம் :
நேற்றைய போட்டியில் நியூசிலாந்து வீரர்கள் மொத்தமாக 22 சிக்சர்கள் விளாசினர். இதன்மூலம் ஒருநாள் வரலாற்றில் அதிக சிக்சர் அடித்த அணிகள் வரிசையில் நியூசிலாந்து அணி, இந்தியாவை (19 சிக்சர்) பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்தது.
20 ஓவர்களுக்குள் சதம் அபாரமாக ஆடிய நியூசிலாந்தின் கோரி ஆண்டர்சன், ஜெசி ரைடர் ஆகியோர் 20 ஓவர்களுக்குள் சதம் அடித்தனர். ஒருநாள் போட்டியில் இதுவரை 9 வீரர்கள் இதுவரை இச்சாதனை படைத்தனர். முன்னதாக சேவக் (இந்தியா), வாட்சன் (ஆஸி.,), அப்ரிதி (பாக்.,), ஜெயசூர்யா (இலங்கை), ஜான் டேவிசன் (கனடா), தில்ஷன் (இலங்கை) ஆகியோர் இம்மைல்கல்லை எட்டினர். |
|||||
by Swathi on 01 Jan 2014 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|