LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

பேராசிரியர் முனைவர் இறையரசன் 75வது பிறந்தநாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது

மிகச் சிறந்த ஆசிரியர் இறையரசன் என்பதற்கு அவருடைய மாணவர்களே சான்று! மூத்த தமிழறிஞர் சுந்தரமூர்த்தி புகழாரம்!!


பேராசிரியர் முனைவர் தஞ்சை இறையரசன் அவர்களின் 75 வது பிறந்ததின விழா சென்னை முகப்பேரில் நேற்று(19.03.23) மாலை நடைபெற்றது.

விழாவிற்கு திராவிட தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன் தலைமை தாங்கினார்.

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத் தலைவரும் மூத்த தமிழறிஞருமான முனைவர்.இ. சுந்தரமூர்த்தி  மற்றும் வலைத்தமிழ் ச.பார்த்தசாரதி ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.

முனைவர்.இ. சுந்தரமூர்த்தி
"முனைவர் இறையரசன் மாணவர்கள் நிறையபேர் இங்கு வந்துள்ளனர். அவர்கள் தங்கள் ஆசிரியரின் பண்புகளை குறிப்பிட்டு பெருமிதத்துடன் பேசினர்.

பொதுவாக ஆசிரியர்களை நான்கு வகையாக பிரிக்கலாம். சராசரியான ஆசிரியர், நல்ல ஆசிரியர் ,சிறந்த ஆசிரியர் ,மிகச் சிறந்த ஆசிரியர். மிகச் சிறந்த ஆசிரியர் தம் மாணவர்களை "மோட்டிவேட்" செய்து தன்னைக் காட்டிலும் திறன் பெற்றவர்களாக உருவாக்குவார். அத்தகைய ஆசிரியரிடம் கல்வி பயின்று வெளியே வருபவர்கள் பல துறைகளிலும் சாதனை படைப்பார்கள். இறையரசன் மிகச்சிறந்த ஆசிரியர் என்பதற்கு அவருடைய மாணவர்களே சான்று. இவ்வாறு முனைவர் இறையரசனுக்கு புகழாரம் சூட்டி முனைவர்.இ. சுந்தரமூர்த்தி வாழ்த்திப் பேசினார்.


வலைத்தமிழ் நிறுவனர் ச.பார்த்தசாரதி:
தமிழர்களை பொதுவாக மூன்றுவகையாகப் பிரிக்கலாம் 1. கொள்கையுடைய உணர்வாளர்கள், 2. கொள்கையற்ற உணர்வாளர்கள், 3. கொள்கையும் உணர்வும் இல்லாதவர்கள் . இதில் பேராசிரியர் தஞ்சை இறையரசன் அவர்கள் கொள்கையுடைய உணர்வாளராக தமிழ் சமூகம் சந்திக்கும் பல சவால்களை ஆரம்பகாலம் தொட்டு கொகைமாறாமல் களமாடுபவர். தமிழின் இன்றைய நிலைகுறித்து தொடர்ந்து சிந்திப்பவர். தமிழுக்கு தன்னலமில்லா தொண்டாற்றுவோர் சமூகத்தின் சொத்து. அவர்களை வயதைத் தாண்டி, முதுமையைத் தாண்டி அவர்கள் என்றும் உற்சாகத்துடன் , இளமையான மனதுடன் சமூகப்பணி செய்பவர்கள். அந்தவகையில் பேராசிரியர் இறையரசன் பிரபஞ்சத்தின் ஆற்றலைப் பெற்றவர். சித்தமருத்துவம் , தமிழ்ப்பெயர்கள் உள்ளிட்ட தமிழின் பல துறைகளில் பரந்துபட்டு செயலாற்றுபவர். அவருடைய பயணத்தில் அவரை வழிகாட்டியாகக் கொண்டு இளைஞர்கள் துணைநிற்போம் என்று குறிப்பிட்டார். மேலும் முனைவர் இறையரசனையும் தம்மையும் தமிழ் இணைத்து வைத்ததாக குறிப்பிட்டார்‌.

பேராசிரியர் தமிழடியான்(இறை மாணவர்):
முதுநிலை படிப்பின்போது நான் அவருடைய மாணவன். பாடம் நடத்தும்போதே நாட்டு நடப்பு, அரசியல் உள்பட அனைத்தையும் புரிய வைத்து விடுவார். தமிழ்,இனத்துக்கு ஆபத்து வரும்போது என்னுள் எழும் போராட்ட குணம் அவரிடம் இருந்து கற்றதே.

இப்போதெல்லாம் 10 ,11, 12 வகுப்புகளில் படிக்கும் மாணவர்களை எல்லாம் கலை மற்றும் விளையாட்டுகளுக்கு அனுப்பாமல் ஜெயிலில் அடைப்பதை போல முடக்கி வைத்து விடுகிறார்கள். என்னை பேசுவதற்கு அழைக்கும் பள்ளிக்கூடங்களுக்கு செல்லும் போதெல்லாம் கலை மற்றும் விளையாட்டுகளில் சிறந்து விளங்கும் மாணவர்களை படி படி என்று அடைத்து வைக்காதீர்கள். அவர்களுக்கு அதுதான் படிப்பு"என்பேன். மாணவர்களின் எதிர்காலத்துக்கு உண்மையிலேயே நன்மை தரும் வழிமுறைகளை
அவர் எங்களுக்கு கற்றுத் தந்தார்.

செயந்தி ஆனைவாரி ஆனந்தன் (முன்னாள் மாணவர்):
ஐயா நடத்தும் இலக்கண வகுப்புகள் இனிக்கும். அவர் வகுப்புக்காக ஆவலுடன் காத்திருப்போம். அவருடைய பேச்சுத் தமிழில் பிறமொழிச் சொல் இருக்காது. மிகவும் சுறுசுறுப்பானவர். கல்லூரிக்கு அவர் செல்லும் பேருந்தில்தான் நானும் போவேன்.
பேருந்தில் இறங்கி கல்லூரிக்கு அவர் நடப்பார். அவர் வேகத்திற்கு என்னால் நடக்க இயலாது, ஓடுவேன், என்றார்.

தஞ்சை கோ.கண்ணன்:

நான் சிறுவனாக இருந்த காலம் முதல் அவருடன் பழக்கம் உண்டு. வங்கிப் பணி ஓய்வுக்குப் பிறகு அவர் நிறுவிய தமிழ் எழுச்சி பேரவைக்கு தலைவராக இருந்து அவர் அருகில் இருந்து பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. ஒரு வரலாற்று ஆய்வாளனாக, புத்தக ஆசிரியராக இன்று நான் திகழ்வதற்கு அவர்தான் காரணம். கடாரம் கொண்ட சோழப் பேரரசன் இராசேந்திரன் வழித்தடம் தேடி மலேசியா, கம்போடியா உள்ளிட்ட கிழக்காசிய நாடுகளுக்கு அவருடன் பயணித்தது மறக்க முடியாத அனுபவம்‌.

க.சு.சீதரன்(இராசராசன் வரலாற்றுப் பண்பாட்டுக் குழு, உடையாளூர் ), வருமானவரித்துறை முன்னாள் தலைமை ஆணையர் செந்தாமரைக்கண்ணன்,கலை பண்பாட்டுத் துறை முன்னாள் இயக்குநர் வ.செயபால், புலவர்.க.பொன்னுசாமி ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

தமிழ் எழுச்சிப் பேரவை புரவலரும் இராசராசன் புகழ்பாடும் பொன்னியின் செல்வன் நாவலை காமிக்ஸ் வடிவில் கொண்டு வந்தவருமான சரவணராசாபொன்னுசாமி தொகுத்து வழங்கினார். அவர் வாழ்த்துரை வழங்குகையில், "முனைவர் இறையரசன்
அவர்களுடைய தமிழ்ப்பற்றும் சமுதாய ஈடுபாடும் அவருடன் என்னை பயணிக்க வைத்தது" என்றார்.

திருப்பனந்தாள் கல்லூரியில் முதல்வராக இருந்த முனைவர் சு.இராமனின் "திருமந்திரத்தில் முப்பொருள்"
நூலைத் திராவிடத் தமிழர் பேரவைத் தலைவர் சுப.வீரபாண்டியன் வெளியிட, பேராசிரியர் இராமன் பிள்ளைகள் திரு.மஞ்சுநாதன்,
திருமதி. தேவி அசோக் பேரப்பிள்ளைகள் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

ஏற்புரை வழங்கிய முனைவர் இராமன் மகன் மஞ்சு நாதன் தந்தையின் ஆய்வு நூலாய் வருவதற்குக் காரணமாயிருந்த முனைவர் இறையரனுக்குத் நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்.

இஸ்ரோ விஞ்ஞானி பாண்டுரங்கன்,கவிஞர் ஆனைவாரி ஆனந்தன், இந்திராணி, காவல்துறை முன்னாள் அதிகாரி பாலசுப் பிரமணியன், மொழிபெயர்ப்பு பணிக்காக தமிழக அரசு விருது பெற்ற "ஆக்கம்" மதிவாணன், செல்வி நிலா, மருத்துவத் தொண்டில் இந்திய விருது பெற்ற மருத்துவர் ரேணுகா இராமகிருட்டிணன், நன்னன்குடி திருமதி வேண்மாள், மணிவாசகர் பதிப்பக குருமூர்த்தி, தினமணி முன்னாள் உதவி ஆசிரியர் மஞ்சுளா , இயற்கை ஆர்வலர் பத்திரிகையாளர் மரிய பெல்சின், பேராசிரியர் பாரதிதாசன்,ஓவியர் பவானி ராசதுரை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த தமிழ் ஆர்வலர்கள், தமிழ் அறிஞர்கள் அவர் தம் குடும்பத்தினர். பத்திரிகை, ஊடக நண்பர்கள் எனத் திரளானவர்கள் பங்கேற்று வாழ்த்தியும் வாழ்த்து பெற்றும் சென்றனர்.

முனைவர் தஞ்சை இறையரசனார் மகன்
அறிவுடை செந்தில் ஏற்புரையாற்றினார். " நம் தாய்மொழியை உடனடியாக ஆட்சிமொழியாகவும் நீதிமன்ற பயன்பாட்டு மொழியாக ஆக்குவதும் இயலாத காரியம். ஆனால் தாய்மொழியில் பேசுவதும் நம் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்டுவதும் நம்மால் முடிகிற செயல்கள், அதை செய்வோம் என்று தம் தந்தையார் சார்பில் கேட்டுக் கொண்டார்.

தொகுப்பு :
புலவர் க. பொன்னுசாமி.
ம.வி.ராசதுரை.

by Swathi   on 22 Mar 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.