LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

அரசியல்வாதியாக இருந்து உச்சநீதிமன்ற நீதிபதியாக உயர்ந்த வி.ஆர். கிருஷ்ணய்யர் மறைவு !!

மரண தண்டனையை ஒழிக்க, அதற்கு எதிராக நீண்ட காலமாக குரல் கொடுத்து வந்த முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் நேற்று மத்தியம் காலம் ஆனார்.

அவருக்கு வயது 100. கடந்த சில வருடங்களாக சிறுநீரக கோளாறு, இதயக் கோளாறு மற்றும் நிமோனியாவால் அவதிப்பட்டு வந்த அவர், கொச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு திடீரென இருதய கோளாறு ஏற்பட்ட நிலையில், பிற்பகல் 3.30 மணியளவில் அவரது உயிர் பிரிந்ததாக மருத்துவமனை வட்டாரம் தெரிவித்தன.

அவரைப் பற்றிய சில வாழ்க்கைக் குறிப்புகள் :

மரண தண்டனைக்கே மரண தண்டனை வாங்குவதே இவரது லட்சியம், அரசியல்வாதியாக இருந்து உச்சநீதிமன்ற நீதிபதியாக உயர்ந்தவர் நாம் நாட்டிலேயே இவர் ஒருவராகத்தான் இருக்கமுடியும்.

வழக்கறிஞராக, சிறை கைதியாக, சட்டமன்ற உறுப்பினராக, நீதியரசராக, பேராசிரியராக, சமூக போராளியாக பன்முகம் கொண்ட கிருஷ்ணய்யர் இன்று நம்மிடையே இல்லை.

பிறப்பும், அவரது இளமை கால வாழ்வும் :

கடந்த 1914 ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் 15-ம் தேதி கேரளத்தின் பாலக்காட்டில் பிறந்தார் கிருஷ்ணய்யர்.

புகழ் பெற்ற ஒரு வழக்குரைஞரின் மகனாக வளர்ந்த அவர், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் பின் சென்னை சட்டக் கல்லூரியிலும் தனது கல்வியை முடித்தார். பிறகு, வழக்குரைஞராக மலபார், கூர்க் உள்ளிட்ட பகுதிகளில் பணிபுரிந்தார். அந்தக் காலகட்டத்தில் பொதுவுடைமை மற்றும் தொழிற்சங்க இயக்கத்தவருக்கு அவர் தொடர்ந்து வாதாடிவந்தார்.

கைது :

நாடு விடுதலை அடைந்த சமயம், பொதுவுடைமை இயக்கம் தடைசெய்யப்பட்டிருந்தது. கிருஷ்ணய்யர் தொடர்ந்து கம்யூனிஸ்ட்டுகளின் மீது போடப்பட்ட வழக்குகளில் வாதிட்டதால், காவல் துறையினர் கோபத்துடன் இருந்தனர். தலைமறைவு கம்யூனிஸ்ட்டுகளுடன் தொடர்பிருப்பதாகப் பாதுகாப்புச் சட்டத்தில் 1948 மே மாதத்தில் வழக்குப் பதிவுசெய்து, காவல் துறை அவரைக் கைதுசெய்து கண்ணனூர் சிறையில் அடைத்தது. சிறையின் அவலங்களையும், கைதிகளின் நிலையையும் அவர் நேரடியாக உணர இது உதவியது.

சுயேச்சையாக நின்று சட்டமன்ற உறுப்பினர் ஆனவர் :

பொதுவுடைமை இயக்கத்தின் மீதான தடை நீக்கப்பட்டு அவர் விடுதலை செய்யப்பட்டார். 1952-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பரம்பா சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சையாக நின்ற வி.ஆர். கிருஷ்ணய்யர் பொதுவுடைமை இயக்கத்தின் ஆதரவுடன் வெற்றி பெற்று, சென்னை மாகாணச் சட்டமன்ற உறுப்பினர் ஆனார். தனது சட்ட மன்ற தொகுதிக்காக மட்டுமல்லாமல்,  ஒட்டுமொத்த சென்னை மாகாணப் பிரச்சினைகளுக்காக அவர் குரலெழுப்பினார்.

கேரள மாநிலத்தின் அமைச்சரானார் :

மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின்பு, கேரள மாநிலத்தில் 1957-ல் அவர் தலைச்சேரி சட்டமன்றத் தொகுதியில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1957 முதல் 1959 வரை ஆட்சிபுரிந்த ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் தலைமையிலான முதல் கம்யூனிஸ்ட் அரசாங்கத்தில் அவர் அமைச்சராகவும், சட்டம், சிறை நிர்வாகம், உள்துறை, மின்சாரம் மற்றும் நீர்ப்பாசனம், சமூக நலத் துறை அமைச்சராகவும் பதவிவகித்தார்.

இந்தக் காலகட்டத்தில் தமிழகத்தில் காமராஜர் முதல்வராக இருந்தார். பாசனத் துறை அமைச்சராக இருந்த சி.சுப்பிரமணியம், கோவை மாவட்ட விவசாயிகளின் பாசனத்துக்கும், மக்களின் குடிநீர்த் தேவைக்கும் ஒரு திட்டத்தை முன்மொழிந்தார்.

கேரளத்தில் மேற்கு நோக்கிப் பாயும் ஆறுகளைக் கிழக்குப்புறமாகத் திருப்பிவிட்டுத் தமிழகமும் கேரளமும் சேர்ந்து பயன்பெறுவதற்கான பரம்பிக்குளம் திட்டம்தான் இது. கேரள முதல்வர் நம்பூதிரிபாடும் வி.ஆர். கிருஷ்ணய்யரும் இதற்குச் சம்மதித்தனர். ஆனால், கேரளத்தின் அப்போதைய எதிர்க்கட்சியான காங்கிரஸ் வி.ஆர். கிருஷ்ணய்யர் தமிழர் என்பதால், தமிழகத்துக்கு ஆதரவாகச் செயல்படுவதாகக் கூறிப் பிரச்சினையை ஏற்படுத்தினர். காமராஜர் தலையீட்டால் பிரச்சினை பெரிதாகாமல் திட்டம் நிறைவேறியது. இந்தக் காலகட்டத்தில் கேரளாவில், சிறியதும் பெரியதுமான நீர்ப்பாசனத் திட்டங்கள் பலவற்றைத் தொலைநோக்குப் பார்வையோடு வி.ஆர். கிருஷ்ணய்யர் திட்டமிட்டார்.

நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை அன்றே அறிமுகப்படுத்தியவர் :

‘உழைப்பு தானத் திட்டம்’ என்ற பெயரில், இன்றைய நூறு நாள் வேலைத் திட்டம் போல, தினம் ரூ 50 கூலி தரும் திட்டம் செயல்பட ஆலோசனை வழங்கினார். மேலும், சட்ட அமைச்சர் என்ற அளவில், வரதட்சிணை ஒழிப்புச் சட்டத்தை நாட்டிலேயே முதல்முறையாக அவர் அறிமுகம் செய்தார். சிறை சீர்திருத்தம் உள்ளிட்ட ஜனநாயகச் செயல்பாடுகள் பலவும் மேற்கொள்ளப்பட்டன. சிறைக் கைதிகள் கண்ணியத்தோடு நடத்தப்பட, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

சட்டமன்றத்திலிருந்து உச்ச நீதிமன்றத்துக்கு :

1959-ம் ஆண்டு அவர் பங்கேற்றிருந்த மந்திரி சபை அப்போதைய பிரதமர் நேருவால் கலைக்கப்பட்டது. அதன் பின் நடைபெற்ற 1960-ல் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். ஏழு வாக்குகளில் காங்கிரஸ் வேட்பாளரிடம் தோல்வியைத் தழுவினார். அந்தத் தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதையும் வாக்களிக்கும் வயதே வராதவர்களை வைத்துக் கள்ள ஓட்டுகள் போடப்பட்டிருப்பதையும் அறிந்து, அதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல்செய்தார். இரண்டரை ஆண்டுகள் கழித்து, ஐந்து வாக்குகள் வித்தியாசத்தில் கிருஷ்ணய்யர் வெற்றிபெற்றதாக உயர் நீதிமன்றம் அறிவித்தது.

இந்நிலையில் கம்யூனிஸ்ட் கட்சியில் பிளவு ஏற்பட்டது, இதனைத் தொடர்ந்து 1965-ல் நடந்த தேர்தலில் வி.ஆர். கிருஷ்ணய்யர் தோல்வியடைந்தார்.

அதன் பின்பு, அரசியலிலிருந்து விலகி உயர் நீதிமன்ற வழக்குரைஞராகப் பணிபுரிய ஆரம்பித்தார். 1968-ல் உயர் நீதிமன்ற நீதிபதியாக வி.ஆர். கிருஷ்ணய்யர் பொறுப்பேற்றார். 1973ல் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார். இக்காலத்தில் உச்ச நீதிமன்றத்தில் சாமானிய மக்கள் எழுதிய கடிதங்கள்கூட சில சமயம்.
வழக்குகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டன. மரண தண்டனையை வி. ஆர். கிருஷ்ணய்யர் முற்றிலுமாக எதிர்த்தார். அதை, தண்டனை வடிவமாகக் கருத முடியாது என்பதில் உறுதியுடன் நின்றார். மேலும், இலவசச் சட்ட உதவி முறைக்கு அவர் உயிர்கொடுத்தார். 1980 நவம்பர் 14 வரை உச்ச நீதிமன்றத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்றார்.

ஓய்வுக்குப் பின்பும், தொடர்ந்து மனித உரிமைகளுக்காகவும் கண்ணியத்துக்காகவும், முகம் அறியாத அனைவருக்காகவும் அவர் குரல்கொடுத்துக்கொண்டிருந்தார். கேரளா, கொச்சின் மற்றும் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகங்களில் கவுரவ பேராசிரியராக பணியாற்றினார். கேரளாவில் சட்ட அகாடமியை நிறுவிய இவர் இதுவரை 105 புத்தகங்களை எழுதியுள்ளார். மேலும் நான்கு பயணக்கட்டுரையும் எழுதியுள்ளார்.

1999ல் மத்திய அரசு இவருக்கு பத்ம விபூஷன் விருது வழங்கி கவுரவித்தது.

நூற்றாண்டை கடந்தவர் :

கடந்த நவம்பர் 15ஆம் தேதி தனது நூற்றாண்டு பிறந்தநாளை கொண்டாடினார் கிருஷ்ணய்யர். நூறு ஆண்டுகளை நிறைவு செய்த இந்த நீதிதேவன் இன்று மரணத்தை தழுவினாலும் அவரது நினைவுகளும், செயல்களும் என்றுமே மறையாது.

by Swathi   on 04 Dec 2014  0 Comments
Tags: வி.ஆர். கிருஷ்ணய்யர்   VR Krishna Iyer                 
 தொடர்புடையவை-Related Articles
அரசியல்வாதியாக இருந்து உச்சநீதிமன்ற நீதிபதியாக உயர்ந்த வி.ஆர். கிருஷ்ணய்யர் மறைவு !! அரசியல்வாதியாக இருந்து உச்சநீதிமன்ற நீதிபதியாக உயர்ந்த வி.ஆர். கிருஷ்ணய்யர் மறைவு !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.