|
||||||||
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் வரலாறு |
||||||||
![]() மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் - துவக்கம் 1949 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தோற்றுவித்த பேரறிஞர் அண்ணா அவர்கள், தோழர்கள் அனைவரையும் ‘தம்பி’ என்று பாசத்துடன் அழைத்து, அன்புகாட்டி அரவணைத்து, உலகில் வேறு எந்த அரசியல் இயக்கத்திலும் காணமுடியாத குடும்பப் பாச உணர்வுடன், கட்சியைக் கட்டி வளர்த்தார். 18 ஆண்டுகள் அயராத உழைப்பில், காங்கிரசை வீழ்த்தி, 1967 ஆம் ஆண்டு கழகத்தை ஆட்சி பீடத்தில் அமர்த்தினார். இந்த மண்ணுக்குத் ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டினார். ஆனால், புற்றுநோய்த் தாக்குதலால் உடல்நலம் குன்றி, இரண்டு ஆண்டுகளுக்கு உள்ளாக, 1969 பிப்ரவரி 3 ஆம் நாள், இயற்கை எய்தினார். அவருக்குப் பின்னர், சூழ்ச்சியாலும், வஞ்சகத்தாலும் ஆட்சியையும், கட்சித் தலைமையையும் கைப்பற்றிக்கொண்ட கருணாநிதி, கழகத்தில் தமக்குப் பிடிக்காதவர்களை ஓரங்கட்டி ஒழிக்கத் தொடங்கினார். மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு இயக்கத்திலும், மக்களிடமும் செல்வாக்குப் பெருகியதைக் கண்டு பொறுக்காமல், வீண்பழிகளைச் சுமத்தி, அவரை இயக்கத்தை விட்டே வெளியேற்றினார். அண்ணா காலத்தில் தி.மு.கழகத்தின் முன்னணித் தலைவர்களாகத் திகழ்ந்தவர்கள் அனைவரையும் அவமதித்து, படிப்படியாக வெளியேற்றினார்; அரசியலை விட்டே விலகச்செய்தார். கட்சியையும், ஆட்சியையும் பயன்படுத்தி, தமது குடும்பத்துக்காகச் சொத்துகளைக் குவிக்கத் தொடங்கினார். கலைஞர் கருணாநிதியின் ஊழல்களை, மக்கள் மன்றத்தில் எம்.ஜி.ஆர். தோல் உரித்துக் காட்டினார். 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், கருணாநிதியின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளால், தி.மு.கழகம் படுதோல்வி அடைந்தது. அவரால் கழகம் அவமானத்துக்கு உள்ளாகி, கூனிக்குறுகியது. அடுத்த 13 ஆண்டுகள், தொடர்ந்து மூன்று சட்டப்பேரவைத் தேர்தல்களில், கருணாநிதி தலைமையில், தோல்விமேல் தோல்விகளைச் சந்தித்தது தி.மு.கழகம். ஆட்சி பறிபோனதால், கொஞ்சம்கொஞ்சமாக, தி.மு.கழகத்தைத் தனது குடும்பச் சொத்தாக ஆக்கினார் கருணாநிதி. தமது மகனைக் கட்சியில் வாரிசாக முன்னிறுத்தினார். அப்போது, தி.மு.கழகத்தின் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த வைகோ, தனித்து நின்று, தமிழகத்தின் உரிமைக்குரலை ஓங்கி ஒலித்ததால், இயல்பாகவே தி.மு.கழகத் தொண்டர்கள் அவரிடம் பாசம் காட்டினார்கள். வைகோவுக்கு, கட்சியில் எழுந்த ஆதரவைக் கண்டு திடுக்கிட்ட கருணாநிதி, அவரை எவ்விதத்திலேனும் கட்சியில் இருந்து விரட்டத் திட்டமிட்டார். 1991 நவம்பர் 26 ஆம் தேதி கட்சியின் செயற்குழுவை கூட்டி வைகோவை கட்சியில் இருந்து நீக்க கருணாநிதி முடிவு செய்தார் அச்செயற்குழுவில் வைகோ மீது அபாண்டமான பழிகளைச் சுமத்தி கருணாநிதி உரையாற்றினார் , அவரின் அறிவுரையின்படி வேறு சிலரும் வைகோவைப் பற்றி அவதூறு பேசினார்கள், பின்னர் வைகோ தன்னிலை விளக்கம் அளித்தார் .இவ்விளக்கத்தை கேட்ட கட்சியின் செயற்குழுவினரில் 99 விழுக்காடு உறுப்பினர்கள் வைகோவின் பக்கமே நியாயம் இருப்பதை உணர்ந்தனர் . அங்கு நிலவிய நிலைமையை உணர்ந்து கொண்டு வைகோவை அன்று கட்சியிலிருந்து நீக்குவதை கருணாநிதி ஒத்தி வைத்தார் .திமுகவின் செயற்குழுவில் தான் நினைத்ததை சாதிக்காதது கருணாநிதிக்கு அதுவே முதல்முறை . 1993 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், ‘வைகோவின் அரசியல் நலன்களுக்காக, விடுதலைப்புலிகள் தம்மைக் கொலை செய்யத் திட்டமிட்டு உள்ளார்கள்’ என்று ஒரு கொலைப்பழியைச் சுமத்தினார் கருணாநிதி. ஆனால், கருணாநிதியின் சுயநல, குடும்ப அரசியலைக் கண்டித்தும், வைகோவைக் கட்சியில் இருந்து நீக்கக்கூடாது என்றும் வலியுறுத்தி, நொச்சிப்பட்டி தண்டபாணி, இடிமழை உதயன், கோவை காமராசபுரம் பாலன், மேலப்பாளையம் ஜஹாங்கீர், உப்பிலியாபுரம் வீரப்பன் ஆகியோர், தீக்குளித்து மடிந்தனர். உலகில் வேறு எந்த இயக்கத்திலும், கட்சித்தலைமையைக் கண்டித்து, இவ்வாறு தீக்குளித்த மடிந்ததாக வரலாறு இல்லை. ஆயினும், வைகோவைக் கட்சியில் இருந்து வெளியேற்றினார் கருணாநிதி. தி.மு.கழகத்தின் ஒன்பது மாவட்டச் செயலாளர்களும், 400 க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களும், கருணாநிதியின் குடும்ப அரசியலைக் கண்டித்து, வைகோவைக் கட்சியில் இருந்து நீக்கக்கூடாது என்று வலியுறுத்தியதால், அவர்கள் அனைவரையுமே கட்சியில் இருந்து வெளியேற்றினார் கருணாநிதி. எனவே, கருணாநிதியால் வெளியேற்றப்பட்டவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து, பேரறிஞர் அண்ணா அவர்களின் கொள்கைகளைக் காப்பதற்காக, ‘மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்’ என்ற புதிய அரசியல் அமைப்பை உருவாக்கினர். 1994 ஆம் ஆண்டு மே மாதம் 6 ஆம் நாள், சென்னை, தியாகராய நகரில் உள்ள ‘தென்னிந்திய நடிகர் சங்கக் கட்டடத்தில் கூடிய பொதுக்குழு, புதிய அமைப்பின் கொடி, கொள்கை, குறிக்கோள்களைத் திட்டமிட்டு வகுத்தது. மேலும்,கீழும் சிவப்பு வண்ணத்துடனும், நடுவில் கருப்பு வண்ணமும் கொண்டதாக கட்சியின் கொடி அறிமுகப்படுத்தப்பட்டது. கழகத்தின் பொதுச்செயலாளராக வைகோ தேர்ந்து எடுக்கப்பட்டார். ‘அரசியலில் நேர்மை; பொதுவாழ்வில் துhய்மை; இலட்சியத்தில் உறுதி’ என்ற முழக்கங்களை முன்வைத்தார். கட்சி சார்பற்ற வகையில், தமிழகத்தின் இளைய தலைமுறையினர் அனைவரும், மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின்பால் ஈர்க்கப்பட்டனர். தமிழக அரசியல் களத்தில் அதுவரையிலும் இல்லாத அரசியல் எழுச்சி நாயகராக வைகோ திகழ்ந்தார். அப்போதைய அண்ணா தி.மு.க. ஆட்சிக்கு எதிராக, கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரையிலும், கோவை, சேலம் வழியாக, 1500 கிலோமீட்டர் தொலைவு 51 நாள்கள், பல்லாயிரக்கணக்கான தோழர்களுடன் எழுச்சி நடைப்பயணம் மேற்கொண்டார்; தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சைக்கிள் பயணம் மேற்கொண்டார். 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) ஜனதா தளம் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. சென்னை பனகல் பூங்காவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத் தொடக்க விழாவில், தமது சொத்துக்கணக்கை வெளியிட்டார் வைகோ. கழகத்தின் தலைமையில் மாற்றத்துக்கான அறிகுறிகள் தென்பட்ட சூழலில், எதிர்பாராத திருப்பமாக, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தோற்றமும், சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஆதரவும் சேர்ந்து, தி.மு.கழகக் கூட்டணி வெற்றி பெறவும், கழகம் தோல்வி அடையவும் நேர்ந்தது. 1998 நாடாளுமன்றத் தேர்தலில், ம.தி.மு.க,. சிவகாசி, பழநி, திண்டிவனம் ஆகிய மூன்று தொகுதிகளில் வெற்றி பெற்றது. பாரதிய ஜனதா கட்சி தலைமையில் கூட்டணி அரசு அமைவதற்கு ஆதரவு அளித்தது. 1999 நாடாளுமன்றத் தேர்தலில், சிவகாசி, பொள்ளாச்சி, திண்டிவனம், திருச்செங்கோடு ஆகிய தொகுதிகளில் ம.தி.மு.க. வெற்றி பெற்றது. வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைச்சரவையில் இடம் பெற்றது. இரண்டு அமைச்சர்கள் பொறுப்பு வகித்தனர். 2004 நாடாளுமன்றத் தேர்தலில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்ற ம.தி.மு.க. சிவகாசி, பொள்ளாச்சி, வந்தவாசி, திருச்சி ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆட்சியில் பங்கு ஏற்காமல், பிரச்சினைகளின் அடிப்படையில் அரசுக்கு ஆதரவு அளித்தது. பல்வேறு பிரச்சினைகளில் அரசின் செயல்பாட்டைக் கண்டித்து, 2007 ஆம் ஆண்டு, அரசுக்கு அளித்து வந்த ஆதரவைத் திரும்பப் பெற்றுக் கொண்டது. 2006 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில், வாசுதேவநல்லூர், சிவகாசி, விருதுநகர், திருமங்கலம், தொண்டாமுத்தூர், கம்பம் ஆகிய தொகுதிகளில் ம.தி.மு.க. வெற்றி பெற்றது. இட ஒதுக்கீடு, விவசாயிகள் பிரச்சினை, நதிநீர் இணைப்பு, மாநில சுயாட்சி, நடுத்தர ஏழை மக்களைப் பாதிக்கும் விலைவாசி உயர்வு ஆகிய பிரச்சினைகளில் மறுமலர்ச்சி தி.மு.கழகம் அழுத்தமான கருத்துகளைத் தெரிவித்துப் போராடி வருகிறது. அதற்காகப் பலமுறை சிறை நிரப்பும் போராட்டங்களை நடத்தி இருக்கிறது. திருநெல்வேலியில் இருந்து திருச்சி, தஞ்சாவூர், கடலூர் , பாண்டிச்சேரி வழியாக சென்னை வரையிலும், சீருடை அணிந்த 3000 தொண்டர்களுடன் 42 நாள்கள், 1200 கி.மீ.மறுமலர்ச்சி நடைபயணம் மேற்கொண்டார் வைகோ. காவிரி நதிநீரில் தமிழகத்தின் உரிமைக்காக, பூம்புகாரில் இருந்து கல்லணை வரையிலும் ஏழு நாள்கள் 175 கி.மீ. நடைபயணத்தையும் கழகம் நடத்தியது. முல்லைப்பெரியாறு அணையில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட, மதுரையில் இருந்து, கம்பம்-கூடலூர் வரையிலும் நடைபயணத்தை நடத்தியது. ஈழத்தமிழர் பிரச்சினையில், தொடக்கம் முதல் இன்றுவரையிலும் ஒரே நிலைப்பாட்டைக் கொண்டு, ஆதரவு தெரிவித்து வருகிறது. கலைஞர் கருணாநிதியின் சுயநல வெறியால், குடும்ப அரசியலால் சீரழிந்த தமிழக அரசியல் களத்தின் பண்பாட்டு நெறிகளைச் சீர்படுத்திட, பேரறிஞர் அண்ணா அவர்களின் கொள்கைளைப் பாதுகாத்திட முனைப்புடன் பணி ஆற்றுகிறது. குறிக்கோள் : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சமுதாய அரசியல் கொள்கைகளின் குறிக்கோள் தந்தை பெரியார், பேரறிஞர் அணணா வகுத்திட்ட நெறிமுறைகளின்படி தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் பழங்குடி மக்களுக்கும் சமூக நீதி கிடைக்கப் பாடுபடுவது ஆகும். சிறுபான்மை மக்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் வழங்குவது மக்கள் ஆட்சியின் அடிப்படைக் கோட்பாடுகளில் ஒன்று என்பதால் வளர்ந்து வரும் மதவெறிக் கொடுமையை வேரறுக்கவும், சிறுபான்மை மக்களின் பாதுகாப்பிற்குப் பாடுபடவும், இந்திய அரசியலில் மதச்சார்பற்ற தன்மையை வெற்றிபெறச் செய்யவும் உறுதி பூண்டு உள்ளோம். உலகத் தமிழர்களின் நலனுக்குப் பாதிப்பு எங்கு ஏற்பட்டாலும் அவர்களைப் பாதுகாக்க எங்களின் போர்க்குரல் ஓங்கி ஒலிக்கும். இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு ஏற்பட்டுள்ள அறை கூவலைச் சந்திப்பதற்கு, உண்மையான கூட்டாட்சித் தத்துவத்தை ஏற்று மாநில சுயாட்சி வழங்கப்படும் வகையில் அரசியல் சட்டத் திருத்தங்களை ஏற்படுத்த, இந்தியாவில் உள்ள முற்போக்குச் சக்திகளுடன் இணைந்து போராடுவோம். எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கை இன்றி வேலை இல்லாத் திண்டாட்டத்தால் வேதனையுறும் இளைஞர்கள், தங்களது ஆற்றலையும் அறிவுத் திறனையும் உழைப்பையும் முதலீடாக்கி வளம் நிறைந்த வாழ்வை அமைத்துக் கொள்ளவும், தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு வழி காணவும், பயன்படுத்தப்படாமல், கிடக்கும் இயற்கை வளத்தையும், மனித சக்தியையும் பயன்படுத்தி, பொருளாதாரத் திட்டங்களை வகுத்து வேளாண்மைத் துறைக்கும் தொழில் துறைக்கும் இணக்கம் காணும்படியான தொழில் வளம் பெருகிடவும் பாடுபடுவோம். திராவிட இயக்கச் சிந்தனைகளும், தமிழக, தமிழின முன்னேற்றத்தில் அக்கறையும் கொண்ட அறிஞர் பெருமக்களைக் கொண்டு ஓர் ஆய்வு மையம் அமைத்திடவும், அவர்கள் தமிழக அரசியல், சமூக, பொருளாதாரப் பிரச்சினைகளை ஆராய்ந்து மாதந்தோறும் தலைமைக்கு அறிக்கை தரவும் வகை செய்வோம். பேரறிஞர் அண்ணா அவர்கள் உருவாக்கிப் பாதுகாத்து வந்த கூட்டுத் தலைமை எனும் அடிப்படையில் செயல்பட உறுதி ஏற்று, கழகத்தில் நாம் அனைவரும் உடன்பிறப்புகள், தோழர்கள் எனும் உணர்வின் அடிப்படையில் ஒருங்கு இணைந்து கடமை, கண்ணியம், கட்டுப்பாடு காத்து செயல் ஆற்றுவோம். மாநில சுயாட்சி பல்வேறு மொழிகள், பண்பாடுகள், இனங்களைக் கொண்ட இந்தியாவின் ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதற்கு மத்தியில் முழுமையான கூட்டாட்சி முறையும், மாநிலங்களில் சுயாட்சியும் அமையவேண்டும் என்பது வரலாற்றுக் கட்டாயம் ஆகும். மத்தியில் அதிகாரங்களைக் குவிப்பது ஒருமைப்பாட்டுக்கு பெரும் கேடு விளைவிக்கும். அந்த நிலை மாற்றப்பட வேண்டும் என்பதுடன் மாநில அரசுகளைக் கவிழ்க்கும் அரசியல் சட்டத்தின் 356 ஆவது பிரிவும் நீக்கப்பட வேண்டும். இருபதாம் நூற்றாண்டின் வைகறைக் காலம் பாட்டாளிகள் நடத்தும் புரட்சிகளைச் சந்தித்து, நூற்றாண்டின் இறுதிக்காலம் உலகெங்கும் தேசிய இனங்களின் எழுச்சிக்குச் சான்றாகி நிற்கிறது. காக்ஷ்மீரத்திலும், பஞ்சாபிலும் வடகிழக்கு மாநிலங்களிலும் ஏற்பட்டுள்ள இன எழுச்சிக் கிளர்ச்சிகளை மனத்தில் கொண்டு இந்தியாவின் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க வேண்டுமெனில் மாநில சுயாட்சி ஒன்றே மாமருந்தாக அமையும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டு இருக்கிறோம் . 1911 ஆம் ஆண்டு முதற்கொண்டே இந்திய அரசியல் அரங்கத்தில் மாநில சுயாட்சிக் கொள்கை ஓர் அரசியல் முழக்கமாக ஒலித்து வருகிறது. “மாநிலங்களுக்குத் தேவையான அதிகாரங்களை மாநிலங்கள் எடுத்துக் கொள்ளட்டும்; பின்னர் மாநிலங்கள் விரும்பித் தருகின்ற எஞ்சிய அதிகாரங்களை மத்திய அரசு எடுத்துக் கொள்ளட்டும்; அதிகாரம் அனைத்தும் டில்லியில் இருப்பதை மாற்றிடத்தான் மாநில சுயாட்சித் தத்துவம் பிறந்து உள்ளது” என்று முதல் அமைச்சர் பொறுப்பில் இருந்த பேரறிஞர் அண்ணா அவர்கள் 1968 ஜூலை 28 ஆம் நாள் கூறிய கருத்தினை மத்திய அரசு ஏற்றுக் கொண்டு, மத்தியில் கூட்டாட்சியும், மாநிலங்களில் சுயாட்சியும் அமைந்திடத் தேவையான திருத்தங்களை இந்திய அரசியல் சட்டத்தில் இடம்பெறச் செய்திடும் வகையில் தமிழ்நாட்டு மக்களிடம் விழிப்பு உணர்வையும், எழுச்சியையும் ஏற்படுத்துவதற்கு உரிய பணிகளை மேற்கொள்ள உறுதி பூண்டுள்ளோம். மொழிக் கொள்கை காவிரி நீர் உரிமை என்பது தொன்றுதொட்டு தமிழகம் அனுபவித்து வரும் அடிப்படை உரிமை ஆகும். எந்தவொரு நதியின் தண்ணீரையும் பயன்படுத்திக் கொள்ளும் உரிமை அந்த நதி இயல்பாகப் பாய்கின்ற அத்தனை நாடுகளுக்கும் உண்டு என்பது, பின்லாந்து நாட்டின் தலைநகர் ஹெல்சிங்கி நகரில் வகுக்கப்பட்ட விதிகளின்படி உலக நாடுகள் ஒப்புக் கெண்டுள்ள நெறிமுறை ஆகும். இந்த நெறிமுறையின் அடிப்படையில்தான் பாகிஸ்தானுடனும், வங்கதேசத்துடனும் இந்தியா நதி நீர்ப் பூசல்களைத் தீர்த்துக் கொண்டது. ஆனால், ஒரே நாட்டில் இருக்கும் இரு மாநிலங்களுக்குள் நிலவும் நதி நீர்ப் பூசலை மத்திய அரசு முழுமனதுடன் தீர்க்க முன்வரவில்லை. மத்திய அரசின் நடவடிக்கைகள் ஒருதலைப்பட்சமாகவே உள்ளன. மத்திய அரசு நடுவர் மன்ற இடைக்கால ஆணையினை அரசு இதழில் வெளியிட்ட பிறகும் கர்நாடக அரசு அதைச் செயல்படுத்தப் பிடிவாதமாய் மறுத்து வருகிறது. காவிரிப் பிரச்சனையில் தமிழகத்தின் உரிமைகளைப் பெற்றிடப் போராடுவோம். தமிழ்நாட்டின் நலன் காக்கும் திட்டங்கள் ‘வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது’ என்ற அறிஞர் அண்ணாவின் கருத்தின் உயிரோட்டமான உண்மை தொடர்ந்து நீடிக்கிறது. வெள்ளையர் காலத்திலேயே 9 முறை ஆய்வு செய்யப்பட்ட இந்தத் திட்டத்துக்கு 1963 ஆம் ஆண்டில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துவிட்டு பின்னர், அன்றைய இலங்கை அரசின் நலனுக்காகத் திட்டத்தை நிறைவேற்றாமல், கிடப்பில் போட்டது. 1998 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற மறுமலர்ச்சிப் பேரணி பொதுக்கூட்டத்தில் சேது சமுத்திரத் திட்டத்தினை நிறைவேற்றுவோம் என்ற உறுதிமொழியை அன்றைய பிரதமரிடம் பெற்றுத் தந்தோம். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோரிக்கையை ஏற்று இத்திட்டம் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் குறைந்த பட்ச செயல்திட்டத்தில் இடம்பெற்றது. தற்போது திட்டம் நிறைவேறுவதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. 1. ஒகேனக்கல் மின்நிலையத் திட்டம் 2. மேற்கு நோக்கிக் கடலில் வீணாகும் நீரைத் தமிழகத்துக்கு திருப்பும் திட்டம் 3. கன்னியாகுமரி முட்டம் துறைமுகம் 4. கடலூர், நாகப்பட்டினம் துறைமுகங்கள் விரிவாக்கத் திட்டம் 5. சேலம் உருட்டாலையை உருக்காலை ஆக்கிடும் திட்டம் 6. ஊட்டி இந்துஸ்தான் பிலிம் உற்பத்தித் தொழிற்சாலையின் விரிவாக்கத் திட்டம், கலர் பிலிம் தொழிற்சாலை அமைத்திடும் திட்டம் 7. தமிழகம் முழுவதும் அகல இரயில் பாதைத் திட்டம் 8. எண்ணூர் செயற்கைக் கோள் துறைமுகத்திட்டம் போன்ற இத்தகைய திட்டங்களை நிறைவேற்ற தமிழ்நாட்டு மக்களிடம், குறிப்பாக இளைஞர்களிடம் எழுச்சியை ஏற்படுத்தி மத்திய அரசை வலியுறுத்துவோம். தமிழ் ஈழம்தான் தீர்வு நெடுங்காலமாக இலங்கைத் தீவில் தமிழர்களுக்கென தனியான நிலப்பரப்பும், அரசாட்சியும் இருந்து வந்தது. இந்த அரசைப் போரில் தோற்கடித்து மேலைநாட்டார் கைப்பற்றினர். கைப்பற்றப்பட்ட இந்த அரசு சிங்கள அரசுடன் பின்னர் ஆங்கிலேயரால் இணைக்கப்பட்டு ஆட்சி செய்யப்பட்டது. 1948 இல் சிங்களவருடன் ஒரே அரசை விட்டுவிட்டு ஆங்கிலேயர் வெளியேறினர். அதற்குப் பின் அந்த அரசில் பெரும்பான்மை பலம் பெற்று இருந்த சிங்களவர் தமிழர்களின் நிலப்பரப்பைக் கைப்பற்றித் தமிழரின் வாழ்வு உரிமை, மொழி உரிமை, தொழில் உரிமை, கல்வி உரிமை ஆகியவற்றைப் பறித்துக்கொண்டு, அந்தத் தீவை சிங்களவர்களுக்கு மட்டுமே உரிய தீவாக மாற்ற படிப்படியாகச் சட்டங்கள் மூலமும் இன ஒழிப்பு நடவடிக்கை மூலமும் முயன்று வந்தனர். 1948, 1951, 1954, 1958, 1961, 1966, 1974, 1976, 1978, 1981, 1983 ஆகிய ஆண்டுகளில் நேரடியாகத் தமிழ் இன ஒழிப்புச் சட்டங்களையும் தமிழ் இனத்தைக் கருவறுக்கும் வகையில் கொலை, கற்பழிப்பு, நிலப்பரப்பைக் கையாடல் ஆகிய முயற்சிகளையும் மேற்கொண்டு வந்தனர். இதையொட்டி 1948 முதல் மலைநாட்டுத் தமிழர்களும், தமிழ் ஈழத் தமிழர்களும் தமது எதிர்ப்பையும் கண்டனங்களையும் அறப்போராட்ட - பாராளுமன்ற நடவடிக்கைகள் மூலம் இடையீடின்றி எடுத்து வந்தனர். முதலில் கூட்டாட்சி முறை அரசியல் அமைப்புக்குள் சிங்களவருடன் இணைந்து வாழ தமிழர் ஒருமித்துக் கோரியும் சிங்களவர் ஒப்புக் கொள்ளாததால் 1976 ஆம் ஆண்டு தமிழ் ஈழத் தந்தை செல்வநாயகம் தலைமையில் தமிழ் ஈழத் தலைவர்கள், வட்டுக்கோட்டையில் ஒன்றுகூடி, தமிழ் ஈழத் தனி அரசுக்காகப் போராடத் தீர்மானித்தனர். அந்தத் தீர்மானத்தை 1977 இல் நடந்த பொதுத் தேர்தலில் தமிழ் ஈழ மக்களின் முன் வைத்து ஆணை கேட்டனர். இவ்வாறு ஆணை கேட்டுப் போட்டியிட்ட வேட்பாளர்களில் 90 சதவீத அளவுக்கு வாக்குகள் அளித்து தமிழ் ஈழ மக்கள் வெற்றி பெறச் செய்தனர். 1983 இல் தொடங்கி தமிழர்கனை ஒழிப்பதற்கு அரசுப் படைகளை நேரடியாகத் தரை வழியும், வான்வழியும், கடல்வழியும் சிங்கள அரசு ஏவிவிட்டது. தமிழ்நாட்டுக்கும் உலகின் பல பாகங்களுக்கும் ஈழத் தமிழர்கள் பலர் அகதிகளாகச் சென்றனர். 1948 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து ஈழத் தமிழர் நடத்தும் போராட்டத்துக்கு தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் ஆதரவு கொடுத்து வந்தனர். சிங்கள அரசின் கொடுமைகளைக் கண்டித்து தி.மு.க. குரல் எழுப்பியது. தி.மு.கழகமும், தமிழக மக்களும் தொடர்ச்சியாக சிங்கள அரசின் கொடுமைகளை எதிர்த்து முரசு கொட்டியதையும் 1983 - க்குப் பின் இக்கண்டனக் குரல் தீவிரம் அடைந்ததையும், ஈழத்தமிழர் இனப்பிரச்சினைக்குத் தமிழ் ஈழம்தான் தீர்வு என தி.மு.க. பொதுக்குழு தீர்மானம் இயற்றி ஆதரவுக்குரல் கொடுத்ததையும் கவனத்தில் கொண்டு, இலங்கையில் தமிழர்கள் உரிமையுடனும், மானத்துடனும், அமைதியாகவும் வாழ்வதற்குத் தமிழரின் மரபு வழித் தாயகத்தில் தமிழ் ஈழம் அமைவதுதான் ஈழத்தமிழர் இனப்பிரச்சினையின் தீர்வுக்கான ஒரே வழி என்று கருதுகிறோம். பெண்கள் முன்னேற்றம் இன்றைய சமூகத்தில் சரிபாதியாகப் பெண்கள் இருந்து வருகின்றனர். ஆனால், அவர்கள் மானுடத்தின் பெருமையும், உரிமையும் மறுக்கப்பட்டவர்களாக நடத்தப்படுகின்றனர். சமுதாய ஒடுக்குமுறைக்கும் அரசியல் புறக்கணிப்பிற்கும் பொருளாதாரச் சுரண்டலுக்கும் பெண்கள் ஆட்படுத்தப்பட்டு வருகின்றனர். இந்நிலை முற்றிலும் மாற்றப்பட்டாக வேண்டும. பெண்கள் தங்கள் நிலை உணர்ந்து விழிப்பு உணர்வு பெற்று உரிமைகளைப் பெறுவதற்குரிய சூழ்நிலையை ஏற்படுத்தித் தருவது நம் கடமை. விவசாயிகளின் துயர் துடைப்போம் இந்திய நாடு கிராமங்களில் வாழ்கிறது என்று சொல்லப்பட்டாலும், கிராமத்து உழவர்களின் வாழ்க்கைநிலை அவலம் நிறைந்ததாக இருந்து வருகிறது. இடுபொருட்களின் விலை உயர்ந்து செல்கிறது. விளைபொருட்களுக்கு நியாய விலை மறுக்கப்படுகிறது. அரசின் அரைகுறை உதவித் திட்டங்களும் இளைத்துப் போய்விட்டன. கடன் எனும் புதைச் சேற்றில் சிக்கி மீள முடியாமல் விவசாயிகள் தவிக்கிறார்கள். இத்துயரநிலை அடியோடு மாறி, வேளாண்மை என்பது இலாபம் தரும் தொழிலாக மாறுவதற்கு ஏற்ற வகையில் மத்திய, மாநில அரசுகளின் கொள்கைகளில் அடிப்படை மாற்றம் காணப் பாடுபடுவோம். அரசியலில் ஊடுருவி ஆட்டிப் படைக்கும் இலஞ்ச ஊழலாலும், பொது வாழ்வைச் செல்லரித்துக் கொண்டு இருக்கும் ஒழுக்கக் கேட்டாலும் மக்கள் ஆட்சி செயல்பாடுகளின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து வரும் நிலையையும், இந்தப் பின்னணியில் குறிப்பாக இளைஞர்கள் சமூக, பொருளாதார அழுத்தங்களால் வெறுப்பும், வேதனையும் அடைந்து தீவிரவாதத்தையும், ஆயுத வன்முறையையும் நாடுகிற அபாயத்தையும் கவலையுடன் கவனத்தில் கொண்டு, அரசியலில் நேர்மையையும், பொதுவாழ்வில் தூய்மையையும், நிலைநாட்டுவதன் மூலம் மக்கள் ஆட்சித் தத்துவத்தின் மீது மக்களின் நம்பிக்கையை நிலைபெறச் செய்யும் வரலாற்றின் போக்கைத் தீர்மானிக்கும் வல்லமை பெற்ற இளைஞர்களைப் பேரறிஞர் அண்ணா அவர்கள் அமைத்த இலட்சியப் பயணத்தில் அணிவகுக்கச் செய்யவும், அதன் மூலம் தமிழகத்தில் புதிய மறுமலர்ச்சியை உருவாக்கிட, தன்னலம் தவிர்த்த அர்ப்பணிப்பு உணர்வுடன் முழுமையான தியாகத்துக்கும் எங்களை ஆட்படுத்திக் கொண்டு பாடுபட உறுதி கொண்டு உள்ளோம். தேர்தல் சின்னம்: ஜூலை 29, 2010 ஆணையில் இந்திய தேர்தல் ஆணையம் மாநில கட்சிக்கான விதிகளை மதிமுக பெறாததால் மதிமுக-விற்கான மாநில கட்சி என்ற உரிமையை பறித்துள்ளது. ஆனால் இக்கட்சி பம்பரம் சின்னத்தை இன்னும் ஆறு ஆண்டுகளுக்கு பயன்படுத்தலாம் என கூறியுள்ளது. மதிமுக அரசியல்வாதிகள்: வைகோ- பொதுச்செயலாளர் திருப்பூர் சு. துரைசாமி - அவைத்தலைவர் புளியங்குடி க.பழனிச்சாமி - தலைமை அரசியல் ஆலோசகர் |
||||||||
by Swathi on 28 Aug 2012 0 Comments | ||||||||
Tags: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் MDMK ம தி மு க வைகோ ம தி மு க வரலாறு ம தி மு க செய்திகள் MDMK Leader | ||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|