திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதுப்பெரும் தலைவரும், தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதி வயது மூப்பு காரணமாக உடல் உறுப்புகள் செயலிழந்த நிலையில் இன்று (07.08.2018) மாலை 6.10 மணியளவில் சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் காலமானார்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் முத்துவேலு மற்றும் அஞ்சுகம் அம்மையாருக்கு மகனாக 1924 ஆம் ஆன்டு ஜூன் 3 ஆம் தேதி பிறந்தார் கருணாநிதி. தமிழகத்தின் தன்னிகரில்லாத அரசியல் தலைவராகவும், தமிழகத்தின் முதல்வராக 5 முறை பதவி வகித்திருக்கிறார் முத்தமிழ் அறிஞர் மு. கருணாநிதி.
கடந்த 11 நாட்களாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கருணாநிதியின் உடல்நிலை கடந்த இரண்டு நாட்களாக இயல்பான செயல்பாட்டில் பெரும் பின்னடைவை சந்தித்திருந்த நிலையில், தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் உயிரிழந்தார்.
கருணாநிதியின் உடல் காவேரி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் கோபாலபுரம் இல்லத்துக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு நெருங்கிய உறவினர்களின் அஞ்சலிக்காக இரவு 1 மணி வரை வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர், சிஐடி காலனி இல்லத்துக்கு கருணாநிதியின் உடல் கொண்டு செல்லப்பட்டு அதிகாலை 3 மணி வரை அங்கு இறுதி அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.
அதன்பின்னர் அதிகாலை 4 மணிக்கு ராஜாஜி அரங்கத்துக்கு கருணாநிதியின் உடல் கொண்டு வரப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.
இந்தியாவின் பல முக்கிய அரசியல் தலைவர்கள் கருணாநிதிக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக நாளை சென்னை வர இருக்கின்றனர்.
ஐந்து முறை தமிழக முதல்வரும், தமிழ் மொழியின் சுவையை தனது மிகச்சிறந்த உரையால், எழுத்தால் மக்கள் மனதில் பதித்த கலைஞர் திரு.மு.கருணாநிதி அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை வலைத்தமிழ்.காம் ஆசிரியர் குழு சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம்.
|