|
||||||||
மக்களைக் காக்கும் சித்த மருத்துவம் - மருத்துவர் ஆ.சுவாமிநாதன் |
||||||||
மக்களைக் காக்கும் சித்த மருத்துவம் - மருத்துவர் ஆ.சுவாமிநாதன் அறிமுகம்: கட்டுப்பிடி வைத்தியம் எனப்படும் சித்த மருத்துவத்தின் தொக்கண முறையை அறிவியல் முறைப்படியே செய்ய வேண்டும் என்ற இலக்குடன் அதனைப் பின்பற்றுபவர் மருத்துவர் சுவாமிநாதன் அவர்கள் ஆவார். இவர் கோவிட்-19 சூழலில் சித்த மருத்துவத்தின் புற மருத்துவ முறைகளைக் கையாண்டு திறம்படச் செயலாற்றிய வல்லுநராக உள்ளார். தற்போது தேனி மாவட்டத்திலுள்ள உத்தமபாளையத்தில் உதவி சித்த மருத்துவ அலுவலராக பணியாற்றி வருகின்றார். ஆயுர்வேதத்தின் ஆதிக்கம்: சித்த மருத்துவத்தில் பல்வேறு விதமான புற மருத்துவ முறைகள் உள்ளன. எனினும் அவற்றைப் பலரும் பெரிதளவில் அறிந்திருப்பதில்லை. ஆனால் ஆயுர்வேத மருத்துவத்தில் இந்நிலை இல்லை. மாறாக ஆயுர்வேதத்தின் ஆதிக்க நிலையைக் காணலாம். இதற்கு மூன்று முக்கிய காரணங்களை மருத்துவர் சுவாமிநாதன் புலப்படுத்துகின்றார். • மருத்துவமுறைகளில் எளிமை • சிக்கல்களற்ற நிலை • தேவையறிந்து செயல்படல் போன்றவற்றை ஆயுர்வேத மருத்துவத்தில் கடைப்பிடிக்கப்பட்டுள்ளதால் அதன் ஆதிக்கம் நிலவுகின்றது என்று கூறுதலைக் காணலாம். சித்த மருத்துவத்தின் பின்னடைவு: தமிழ்நாட்டில் சித்த மருத்துவம் மிகப் பழமை வாய்ந்ததாகும். இதனை இலக்கியங்கள் பலவும் நிரூபிக்கின்றன. எனினும் தற்போதையச் சூழலில் ஆயுர்வேதத்தோடு ஒப்பிடும் போது அவ்வளவு பிரசித்தி பெற்றதாகச் சித்த மருத்துவம் அமையவில்லை என்று கூறலாம். சித்த மருத்துவத்தில் பல அரிய விஷயங்கள் உள்ளன. ஆனால் இவற்றைப் பல சித்த மருத்துவர்களே அறிந்திருப்பதில்லை என்பது உண்மை. சித்த மருத்துவத்தில் 32 புற மருத்துவ முறைகள் கூறப்பட்டுள்ளன. ஆனால் பெருமளவு இவை பயன்படுத்தப்படவில்லை. இம்முறைகளில் தொக்கண முறையும் ஒன்றாகும். ஆயுர்வேதத்தில் ‘பஞ்சகர்மா’ என்ற பெயரில் தொக்கண முறை பின்பற்றப்படுகின்றது. ஆனால் சித்த மருத்துவத்தில் தொக்கணம் என்ற சொல், தற்போதே பேசுபொருளாக உள்ளதைக் காணலாம். தொக்கண முறை: பலருக்கும் தொக்கணம் என்றால் என்னவென்றே தெரிவதில்லை. எனவே இதற்கான புரிதல் அவசியமாக உள்ளது. தகவல் பரிமாற்றம் என்பது ஆதிகாலத்தில் சைகைகளாக இருந்தது. பின்பு சித்திர வடிவத்திலிருந்தது. தற்போதைய காலத்திலேயே வரிவடிவமாகவும் பேச்சு வடிவமாகவும் மாற்றம் பெற்றுள்ளது. தொக்கண முறையையும் இதனோடு ஒப்பிட்டுக் கூற முடியும். அதாவது ஒரு நோயாளிக்கும் ஒரு மருத்துவருக்கும் இடையேயான உடல்மொழி சார்ந்த தகவல் பரிமாற்றமே தொக்கண முறையாகும். வெறும் தொடுதல் என்ற முறையில் இதனை எடுத்துக்கொள்ள முடியாது. இதற்குப்பின் அறிவியல் பூர்வமான காரணங்கள் உள்ளன. தொக்கண முறையை எளிமையாகக் கூறவேண்டுமெனில் உருவுதல் என்று கூறலாம். ஆனால் இதனை மருத்துவ முறையாக மட்டுமே அணுக வேண்டும். தொக்கண முறையை முழுமையாகத் திறம்பட கற்ற வல்லுநர் ஒருவராலே இம்முறையைச் சிறப்புடன் கையாள முடியும். இன்றைய பட்டதாரி மருத்துவர்கள் இவற்றை அறிந்து செயலாற்றினால் தொக்கணமுறை மேன்மேலும் வளரும் என்பதில் ஐயமில்லை. தொக்கணம் - பெயர்க்காரணம்: தொக்கணம் மற்றும் மசாஜ் ஆகிய இருசொற்கள் ஒரு பொருளைக் குறிப்பனவாக உள்ளன. சித்த மருத்துவ நூல்களில் தொக்கணம் என்ற சொல்லே பயன்படுத்தப்பட்டுள்ளது. தொக்கணம் என்பதன் மறுசொல் மர்த்தனம் என்பதாகும். மர்த்தனம் என்றால் மல்யுத்தம் செய்தல், மல்லுப்படுத்துதல் என்று பொருள்படும். அதாவது மல்யுத்த விளையாட்டில் அடிபட்ட ஒருவருக்குச் செய்யக்கூடிய சிகிச்சை முறையே மர்த்தனம் அல்லது தொக்கணம் ஆகும். தயார்ப்படுத்தும் செயல்முறை: தொக்கண சிகிச்சை முறையை மருத்துவர் தொடங்க எண்ணும் போது சில ஆயத்த பணிகளை மேற்கொள்வது அவசியமாகும். ஏனெனில் தொக்கணம் ஒரு உடல்வழி தகவல் பரிமாற்றம் ஆகும். ஒரு நோயாளிக்குச் சிகிச்சை மேற்கொள்ளும்போது மருத்துவர் உரிய நடவடிக்கைச்செயல்களை செய்திருக்க வேண்டும். மருத்துவரின் இடுப்பு வரை உயரமுள்ள மேசை போன்றவை மிகவும் முக்கியமாகும். தொக்கண சிகிச்சை முறையில் மருத்துவரின் 2 கட்டைவிரல்களும் பெரும்பங்கு வகிக்கின்றன. மருத்துவருக்குப் பெருமளவு பாதிக்கப்படக் கூடிய இடங்களும் இவையேயாகும். எனவே இதற்குரிய உடற்பயிற்சிகளை மருத்துவர் மேற்கொள்ள வேண்டும். மேலும் மருத்துவர் சிறந்த உடல்நிலையைப் பெற்றிருத்தல் அவசியமாகும். சிறந்த தூய்மையை மருத்துவர் மற்றும் நோயாளி ஆகிய இருவரும் கடைப்பிடிக்க வேண்டும். மேலும் தேவைப்பட்ட நோயாளிகளுக்கு மட்டுமே தொக்கண சிகிச்சை முறையை மேற்கொள்ள வேண்டும். அறிவியல்பூர்வ காரணத்தின் தேவை: இன்றைய உலகில் அனைத்து நிகழ்வுகளும் அறிவியல் பூர்வ காரணத்தின் அடிப்படையிலேயே பார்க்கப்படுகின்றன. சித்த மருத்துவம் என்பது நம் அறிவிற்கும் அப்பாற்பட்ட பரந்துபட்ட தன்மை உடையது. எனினும் இதிலுள்ள மருத்துவ முறைகளை அறிவியல் அடிப்படைக்காரணங்களில் வெளிப்படுத்தும் போது உலகளவில் பார்க்கப்படும் என்பது முக்கியமானது. சித்த மருத்துவத்தில் சுவையின் அடிப்படையில் மருந்து தேர்வு செய்து அதன்மூலம் குறிப்பிட்ட சுவையைக் கொடுக்கப்படும். சித்த மருத்துவத்தில் மனித உடலின் அமைப்பு பஞ்சபூதத்தின் அமைப்புடன் ஒப்புமைப்படுத்தப்படுகின்றது. பஞ்சபூதத்திலான மனித உடலில் பாதிப்பு ஏற்படும்போது குறிப்பிட்ட சுவையுடைய மூலிகைகள் மூலம் சரிசெய்தல் என்பது சித்த மருத்துவ முறையாகும். இங்கு மூடநம்பிக்கைகள் என்பது சற்றும் கிடையாது. இவை யாவும் அறிவியல் உண்மைகளாகும். தொக்கணத்தைப் பயன்படுத்தும் முறை: ஒரு நோயாளி குறிப்பிட்ட இடங்களில் வலி ஏற்படுகின்றது என்று கூறும்போது எந்தெந்த சூழல்களில் வலி ஏற்படுகின்றது என்பதையும் வலியின் தன்மையையும் மருத்துவர் புரிந்து கொள்ள வேண்டும். அந்தந்த உடற்பாகங்களில் ஏற்படும் வலிகளை வகைமைப்படுத்திய பின்பே அந்நோயாளிக்குத் தொக்கணம் தேவையாக உள்ளதா என்பதை மருத்துவர் அறிந்திருக்க வேண்டும். தொக்கணத்தில் 9 நிலைகள் உள்ளன. அவை தட்டல், பிடித்தல், இறுக்கல், முறுக்கல், கைத்தட்டல், அழுத்தல், இழுத்தல், மல்லாத்துதல், அசைத்தல் ஆகியவையாகும். இவற்றை மருத்துவர் அறிந்து பயன்படுத்த வேண்டும். தொக்கண படிநிலையான அழுத்தல் என்பதும் வர்மம் என்பதும் ஒன்றுபட்டதாக அமையும். வர்மத்திற்குக் கொடுக்கப்படும் சிகிச்சை முறையான ஈடு என்பது தொக்கணத்தின் அழுத்தல் நிலையோடு ஒப்புமையாக உள்ளதைக் காணலாம். இவற்றை அறிந்து தொக்கணத்தைப் பயன்படுத்துதல் அவசியமாகும். அதேபோல தொக்கண சிகிச்சை பெற்ற பின் நோயாளி வெந்நீரில் குளித்தல் முக்கியமாகும். சித்த மருத்துவ முறையில் கோவிட்-19: மருத்துவர் சுவாமிநாதன் அவர்கள் கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் ஓமப்பொட்டலம் மற்றும் மஞ்சள் திரி போன்றவற்றைப் பயன்படுத்தி வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்த எண்ணினார். அதன்படி தேனி மாவட்டத்தில் பெருந்தொற்று சிகிச்சை மையத்தில் இம்முறை அமல்படுத்தப்பெற்று நல்ல வரவேற்பு கிடைத்தது. சித்த மருத்துவத்தில் ஒரு நோயிற்குச் சிகிச்சை அளிக்க மூன்று படிநிலைகள் உள்ளன. அவை 1. காப்பு 2. நீக்கம் 3. நிறைவு ஆகியனவாகும். இம்முறையில் மருத்துவர் சுவாமிநாதன் அவர்கள் கோவிட்-19 சூழலில் சிகிச்சை மேற்கொண்டார். இதன்மூலம் பெருந்தொற்றினை சற்று கட்டுப்படுத்த முடிந்தது என்று கூறியுள்ளார். வினைக்களம் என்ற நூலின்மூலம் சித்த மருத்துவ புற மருத்துவ முறைகளையும் அவற்றில் தொக்கண முறையையும் அறிவியல் அடிப்படையில் மிக விரிவாகவும் நுட்பமாகவும் மருத்துவர் சுவாமிநாதன் அவர்கள் விளக்கியுள்ளார். சித்த மருத்துவத்தில் இப்புத்தகம் முக்கியப்பங்கு வகிக்கும் என்பது நிதர்சனம். |
||||||||
by Lakshmi G on 02 Jan 2021 0 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|