|
||||||||
மக்களைக் காக்கும் சித்த மருத்துவம் - மருத்துவர் வருணகுலேந்திரன் |
||||||||
மக்களைக் காக்கும் சித்த மருத்துவம் - மருத்துவர் வருணகுலேந்திரன் இலங்கையில் சித்த மருத்துவம்: சித்த மருத்துவம் என்பது தமிழகத்தில் மட்டுமே தோன்றிவளர்ச்சியுற்றது என்று அதன் பரப்பளவைச் சுருக்கிவிட முடியாது. முற்காலத்தில் சித்தர்கள் பல்வேறு நாடுகளுக்கும் சென்று வளர்த்துள்ளனர். நம் அண்டைநாடான இலங்கையிலும் அவ்வாறு சித்த மருத்துவம் வளர்ந்துள்ளது. சித்த மருத்துவத்திற்கு இலங்கை பெரும்பங்காற்றியுள்ளதை மறுக்க முடியாது. 1989 ஆம் ஆண்டில் சித்த ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி என்ற பெயரில் யாழ்ப்பாணத்தில் முதன்முதலாக சித்த மருத்துவக்கல்லூரி ஏற்படுத்தப்பட்டது. அதன்பின்னர் 1929 ஆம் ஆண்டில் பாலசிங்கம் என்பவரால் கொழும்புவில் சுதேச மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டது, இக்கல்லூரியில் சித்தா, ஆயுர்வேதா, யுனானி ஆகிய 3 மருத்துவங்கள் கற்பிக்கப்பட்டன. பின்பு இக்கல்லூரி 1979 ஆம் ஆண்டில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது. தற்போது யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கீழ் அமைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து 2008 ஆம் ஆண்டில் கிழக்கு பல்கலைக்கழகத்தில் சித்த ஆயுர்வேத மருத்துவத் துறை ஏற்பட்டது. இத்துறையின் முதல் துறைத்தலைவராக மருத்துவர் வருணகுலேந்திரன் அவர்கள் நியமிக்கப்பட்டார். பல பணியிடங்களில் பணிபுரிந்தபின் தற்போது மீண்டும் துறைத்தலைவராக இவர் பணியாற்றுகிறார். பாடத்திட்டங்கள்: கிழக்கு பல்கலைக்கழகத்திலும் கொழும்பு பல்கலைக்கழகத்திலும் தமிழ் தாய்மொழி இல்லாத பிற மொழியினர் சித்த மருத்துவம், ஆயுர்வேதம், யுனானி போன்றவற்றைக் கற்க விரும்பினால் அங்கு ஆங்கில வழியில் கற்கும் வசதியும் உள்ளது. அதற்கென தனி புத்தகங்களும் பாடத்திட்டங்களும் ஆசிரியர்களும் உண்டு. ஆனால் யாழ்ப்பாண கல்லூரியில் இவ்வசதி இன்னும் ஏற்படுத்தப்படவில்லை. இலங்கையில் பாடபுத்தகங்களாக தமிழக புத்தகங்களைக் கொண்டிருந்தாலும் அந்நாட்டவர்களுக்கு சில தனித்த நூல்களின் பயன்பாடுகள் உள்ளன. இவை யாவும் மருத்துவக் கலைச்சொற்களுடன் இருப்பது குறிப்பிடத்தகுந்ததாகும். பயிற்சி முறைகள்: தமிழ்நாட்டில் சித்த மருத்துவ படிப்பு நான்கரை ஆண்டுகளாகவும் பயிற்சி ஒரு ஆண்டாகவும் பின்பற்றப்படுகின்றது. ஆனால் இலங்கையில் இம்முறை சற்று மாறுபடுகின்றது. படிப்பு 5 வருடமும் பயிற்சி ஒரு வருடமும் என மொத்தம் 6 ஆண்டுகள் சித்த மருத்துவம் கற்பிக்கப்படுகின்றது. 5 வருடப் படிப்பிற்குப்பின் ஒரு வருடம் பயிற்சிக்காகச் சுகாதார அமைச்சக மருத்துவ சாலைக்கு மட்டுமே இலங்கைக்குச் செல்கின்றனர். சித்தமருந்துகளின் இருப்பு: இலங்கையில் சித்தமருந்துகள் குறிப்பிட்ட அரசு அமைப்புகளின் கீழ் கிடைப்பதில்லை. ஒருசில தனியார் நிறுவனங்களின் மூலம் சித்தமருந்துகள் கிடைக்கின்றன. தற்போது அரசின் கீழ் ஒவ்வொரு மாகாணத்திலும் மருந்து செய் நிறுவனம் உருவாக்கப்பட இருக்கின்றன. மூலிகைகளாகவும் ஜீவ பொருட்களாகவும் மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. இலங்கையில் சித்த மருத்துவம் மற்றும் யுனானி போன்றவை ஆயுர்வேதத்தின் கீழ் இருப்பதால் இங்குப் பெரும்பான்மை ஆயுர்வேத மருந்துகளே கிடைக்கின்றன. சித்த மருந்துகளின் தேவை இங்கு மிகுந்திருப்பதைக் காணலாம். வேலைவாய்ப்புகள்: இலங்கையில் சித்த மருத்துவம் படித்து ஓராண்டு பயிற்சி பெற்ற பின்பு ஓரளவு வேலைவாய்ப்புகள் மட்டுமே கிடைக்கின்றன. இங்கு அனுபவத்தின் அடிப்படையில் அரசு வேலைகள் கிடைக்கின்றன. படித்து முடித்தவுடன் அரசுவேலை கிடைப்பது இங்கு அரிதாக உள்ளது. தனியாக வைத்திய சாலைகள் மூலம் வேலை புரியும் சாத்தியக்கூறுகள் இலங்கையில் இருப்பதைக் காணலாம். இந்தியாவின் உதவி: 2007 ஆம் ஆண்டில் கிழக்கு பல்கலைக்கழகத்தில் சித்த மருத்துவத் துறை தொடங்க எண்ணியது. அப்போது அந்நாட்டின் பல்கலைக்கழக மானியக்குழு நிதியுதவி கிடைக்காது என்றும் ஆனால் துறையைத் தொடங்கலாம் என்றும் அனுமதி அளித்தது. அதன்படி இந்தியத் தூதரகத்தின் மூலம் இந்தியாவில் உள்ள எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகம் மற்றும் பிற பல்கலைக்கழகத்தின் மூலம் இத்துறைக்குத் தேவையான ஆய்வு உபகரணங்கள் வழங்கப்பட்டன. கிட்டத்தட்ட 132 மில்லியன் வரை செலவாகின. 2010 ஆம் ஆண்டில் இத்துறை தொடங்க சகல பொருட்களும் இந்திய அரசு நல்கியது. இலங்கையில் கோவிட்-19 சிகிச்சை: உலகளவில் கோவிட்-19 பாதித்திருந்த சூழலில் இலங்கையில் சித்த மருத்துவச் சிகிச்சை முறைகள் சில கடைப்பிடிக்கப்பட்டன. தமிழ்நாட்டினை போலவே கபசுர நீர் மக்களுக்கு அளித்தல் போன்றவை கடைப்பிடிக்கப்பட்டன. ஆனால் இந்தியாவைப் போலப் பெருமளவு சித்த மருத்துவத்தில் சிகிச்சை அளிக்கப்படவில்லை. இங்குப் பெரும்பான்மை சிகிச்சையைச் சுகாதார மருத்துவ அமைச்சகமும் இராணுவமும் செய்தன. சித்த மருத்துவ நூல்கள்: தமிழகத்தில் சித்த மருத்துவ நூல்களாகத் தேரர், அகத்தியர், கருவு+ரார் இயற்றிய நூல்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன. அதேபோல இலங்கையில் பிள்ளைப்பிணி மருத்துவம், இராவணக்காவியம் போன்ற நூல்கள் சித்த மருத்துவ நூல்களாக உள்ளன. எனினும் சித்த மருத்துவ நூல்கள் இலங்கையில் பெரிதளவும் கிடைப்பதில்லை. இலங்கையில் முன்பு சித்தர்கள் இயற்றிய நூல்கள் கிடைத்தது போன்று தற்போது கிடைப்பதில்லை. சில அசாதாரண சூழலில் அவை அழிக்கப்பட்டுள்ளன. உதாரணமாக இராவணன் இயற்றிய இராவண பொது மருத்துவம், இராவணன் மாதர் மருத்துவம் போன்ற நூல்கள் தற்போது கிடைப்பதில்லை. ஆசியாவிலேயே பெரிய நூலகமான யாழ்ப்பாண நூலகத்திலும் இப்பழைய நூல்கள் கிடைப்பதில்லை. பழைய ஓலைச்சுவடிகளை நூல்களாக்கும் முயற்சிகள் தற்போது நடைபெறுகின்றன. சித்த மருத்துவத்தின் வளர்ச்சி: இலங்கையில் ஆயுர்வேதம் மற்றும் அல்லோபதி போன்ற மருத்துவ முறைகள் பெரும்பங்கு வகிக்கின்றன. இவற்றிற்கு அடுத்தநிலையிலேயே சித்த மருத்துவம் குறிப்பிடப்படுகின்றது. குறிப்பாக 1961 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஆயுர்வேத மருத்துவமே பெரும்பங்கு வகிக்கத்தொடங்கியது. எனவே இலங்கையில் சித்த மருத்துவம் இன்னும் முன்னேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. சித்த மருத்துவர்களே இதற்குப் பொறுப்பேற்று முன்னெடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் அவசியமாகும். |
||||||||
by Lakshmi G on 14 Jan 2021 0 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|