|
||||||||
மக்களைக் காக்கும் சித்த மருத்துவம் - “சித்த மருத்துவ பட்டப்படிப்பு – கலந்தாய்வு - வழிகாட்டுதல்களும் வேலைவாய்ப்பும்” |
||||||||
மக்களைக் காக்கும் சித்த மருத்துவம் - “சித்த மருத்துவ பட்டப்படிப்பு – கலந்தாய்வு - வழிகாட்டுதல்களும் வேலைவாய்ப்பும்” அறிமுகம்: தற்போதைய காலத்தில் சித்த மருத்துவத்தில் கல்வி பயில வரும் மாணவர்கள் ஏராளமாக உள்ளனர் என்பது சிறப்பு. எனவே இம்மாணாக்கர்கள் சித்த மருத்துவ பட்டப்படிப்பில் பயிலுவதற்கு முன் கலந்தாய்வினைப் பற்றியும் வேலைவாய்ப்பினை பற்றியும் அறிந்திருத்தல் அவசியம். சாய்ராம் குழுமத்தின் முதன்மை வணிக அதிகாரி திரு.சதீஷ்குமார் அவர்கள் மற்றும் சாய்ராம் சித்த மருத்துவக் கல்லூரியின் முதல்வரும் மருத்துவரும் பேராசிரியருமான திரு.மதுக்குமார் போன்றோர் மாணவர்களுக்குச் சிறந்த ஆலோசனைகளைத் தந்துள்ளனர். அவை யாவும் மாணவர்களுக்குத் தெளிவு+ட்டும் வண்ணம் அமைந்துள்ளன. எனவே அக்கருத்துக்களைக் காணலாம். சித்தர் மொழி: தமிழர்களின் திருவிழாக்களில் முதன்மையானது பொங்கல் பண்டிகையாகும். அறுவடைத்திருநாளான பொங்கல் இன்றைய காலத்தில் பலஇடங்களில் பரவலாகக் கொண்டாடப்படுகின்றது. பொங்கல் என்றாலே நினைவில் வருவது கரும்பு. இக்கரும்பின் நற்பயன்களைச் சித்தர்கள் கூறியுள்ளனர். அவ்விதம் பதார்த்த குண சிந்தாமணி என்னும் நூல் கரும்பின் மகத்துவத்தையும் கரும்பினை உண்ணும் முறையினையும் கூறுகின்றது. அதன்படி கரும்பினை சிறுசிறு துண்டுகளாக்கிக் குறைவான அனலில் வைத்துச் சாப்பிடவேண்டும் என்று கூறுவதைக் காணலாம். இவ்வாறு கரும்பினை சாப்பிடுவதன் மூலம் பித்தநோய், செரியாமை, சுவையின்மை, அடங்கா விக்கல் போன்ற பிணிகள் தீரும் என்பது சித்தர் மொழியாக உள்ளது. ஆயுஷ் மருத்துவத் துறைகள்: கடந்த ஆண்டுகளுக்கு முன் மருத்துவம் பயில எண்ணுபவர்கள் அல்லோபதியை மட்டுமே பெரும்பான்மையாகக் கருதுவர். ஆனால் தற்காலத்தில் ஆயுஷ் மருத்துவங்களைப் பயிலப் பலரும் முன்வருதலைக் காணமுடிகின்றது. இதற்குக் காரணம் யாதெனில் ஆயுஷ் மருந்துகள் சிறந்த கொரோனா நிவாரணிகளாகச் செயல்பட்டமையே ஆகும். ஆயுர்வேதம், யோக மருத்துவம், யுனானி, சித்த மருத்துவம், ஹோமியோபதி போன்ற ஐந்து மருத்துவத் துறைகளின் சுருக்கக் குறியீடே ஆயுஷ் ஆகும். இவை இணைந்ததே ஆயுஷ் மருத்துவத் துறைகள் எனப்படுகின்றன. தமிழகத்தில் ஆயுஷ் மருத்துவத் துறைகள் இணைந்து மொத்தம் 1780 இடங்களில் உள்ளன. சித்த மருத்துவத்துறை: தமிழகத்தில் சித்த மருத்துவக் கல்லூரிகளாக இரண்டு அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இதைத்தவிரத் தனியார் சித்த மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. அரசு மருத்துவக் கல்லூரிகளில் 160 இடங்கள் சித்த மருத்துவத்திற்கு உள்ளன. மேலும் தனியார் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 570 இடங்கள் சித்த மருத்துவத்திற்கு இருப்பதைக் காணலாம். விண்ணப்ப முறைகள்: அரசு மற்றும் தனியார் சித்த மருத்துவக் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்க விண்ணப்ப முறையை அறிந்துகொள்ளுதல் அவசியமானது. விண்ணப்ப முறைகளில் இருமுறைகள் உள்ளன. அவை மத்திய பிரிவு மற்றும் மாநில பிரிவு ஆகியனவாகும். மத்திய பிரிவின் கீழ் இந்தியாவிலுள்ள அனைவரும் விண்ணப்பிக்கலாம். மாநில பிரிவில் இரு வகைகள் உண்டு. அவை அரசுப்பிரிவு மற்றும் நிர்வாகப் பிரிவாகும். அதாவது மாநில அரசுப்பிரிவு மற்றும் மாநில நிர்வாகப் பிரிவு என்றும் கூறலாம். மாநிலத்திற்குப்பட்டவர்கள் குறிப்பிட்ட பிரிவுகளின் அடிப்படையில் விண்ணப்பிக்கலாம். கல்லூரியின் பிரிவுகள்: அரசு மருத்துவ கல்லூரியில் 100 சதவிகிதம் அரசுப்பிரிவில் மட்டுமே உள்ளன. தனியார் கல்லூரிகளில் 15 சதவிகிதம் மத்திய பிரிவாகவும் 35 சதவிகிதம் நிர்வாகப்பிரிவாகவும் 65 சதவிகிதம் அரசுப்பிரிவாகவும் விண்ணப்பப்பிரிவுகள் உள்ளன. ஆயுஷில் நீட் தேர்வு: தற்காலத்தில் மருத்துவத் துறைகளுக்கு நுழைவுத்தேர்வான நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆயுஷ் மருத்துவத்துறைகளில் யோக மருத்துவத்தைத் தவிரப் பிற நான்கு துறைகளில் நீட் தேர்வு கட்டாயமாக உள்ளது. நீட் தேர்வில் சித்த மருத்துவத்தில் 147 மதிப்பெண்கள் அதாவது 50 சதம் எடுத்தால் பொதுப்பிரிவினர் தேர்ச்சியுறுவர். 113 மதிப்பெண்கள் அதாவது 40 சதம் பெற்றால் பிற்படுத்தப்பட்டோர் தேர்ச்சிபெற்றவராகக் கருதப்படுவர். கட்டணமுறைகள்: அரசுப்பிரிவு மற்றும் நிர்வாகப்பிரிவின் கீழ் சித்த மருத்துவத்திற்கு விண்ணப்பிப்பவர்கள் கல்விக்கட்டணத்தை அறிந்திருத்தல் அவசியம். அதன்படி அரசு பிரிவினர் ஆண்டிற்கு 1 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய் கல்விக்கட்டணம் செலுத்துபவர்களாகவும் நிர்வாகப்பிரிவினர் 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்துபவர்களாகவும் உள்ளனர். இக்கட்டண வரையறையை கட்டணக்குழுவினரே நிர்ணயித்திருப்பதைக் காணலாம். வெளிநாட்டில் கல்வி: அயலக வாழ் தமிழர்கள் பிற நாட்டின் அரசு மருத்துவக் கல்லூரியில் சித்த மருத்துவம் பயிலும் வாய்ப்பு இல்லாத நிலையே உள்ளது. மலேசிய நாட்டில் மட்டும் அங்குள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் 3 இடங்கள் மட்டுமே தரப்பட்டுள்ளது. இதைத்தவிர நிர்வாகப்பிரிவின் கீழ் அயலக வாழ் தமிழர்கள் அல்லது தமிழ்நாட்டிலிருந்து செல்லும் மக்களோ பயிலலாம். இதற்கு 10 அல்லது 12 வகுப்பு வரை அடிப்படைத்தமிழ் கற்றிருக்க வேண்டும். கலந்தாய்வு முறைகள்: சித்த மருத்துவக் கல்லூரிகளில் சேர கலந்தாய்வுகள் நடைபெறுகின்றன. இக்கலந்தாய்வுகளுக்குக் குறிப்பிட்ட வழிகாட்டுமுறைகள் உள்ளன. அதன்படி 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், வசிப்பிட சான்றிதழ், நிர்வாகச்சான்றிதழ், தகுதிச்சான்றிதழ், நீட் தேர்வின் தேர்ச்சி சான்றிதழ் போன்றவற்றின் அசல் சான்றிதழ்கள் கொண்டுசெல்ல வேண்டும். இவற்றோடு இதன் சரிபார்க்கப்பட்ட நகல் சான்றிதழ்களையும் எடுத்துச்செல்லுதல் முக்கியமாகும். கலந்தாய்விற்குப் பின் இடம் கிடைத்த கல்லூரியில் சான்றிதழ் சமர்ப்பித்தல் அவசியம். இல்லையெனில் அளிக்கப்பட்ட இடம் நிராகரிக்கவும் வாய்ப்புண்டு. கலந்தாய்வுகள் முதல்நிலை, இரண்டாம் நிலை மற்றும் இறுதி நிலை என மூன்றாக உள்ளன. நிரப்பிடாத இடங்களின் அடிப்படையில் அடுத்தடுத்த நிலை கலந்தாய்வுகள் நடைபெறுகின்றன. முதல்நிலையில் தேர்ச்சி பெற்று இடம்பெற்றவர்களே அடுத்த கலந்தாய்வில் கலந்துகொள்ள முடியும் என்பது திரு.சதீஷ் குமார் அவர்களின் கருத்தாக உள்ளது. சித்த பாடப்பிரிவுகள்: சித்த மருத்துவத்தைப் படிக்க விரும்பும் மாணவர்கள் அதிலுள்ள பாடப்பிரிவுகளைத் தெரிந்திருப்பதின் மூலம் கல்வி சார்ந்த பயமின்மையுடன் விளங்குவர். சித்த மருத்துவத்தில் பாரம்பரிய மற்றும் நவீன பாடப்பிரிவுகள் என இரண்டு வகையில் பாடப்பிரிவுகள் உள்ளன. நவீனப் பாடப்பிரிவுகளில் உயிர்வேதியியல், நுண்உயிரியியல் போன்றவற்றைக் கூறலாம். பாரம்பரிய பாடப்பிரிவுகளில் மருத்துவ தாவரவியல், சித்த மருத்துவ அடிப்படைத் தத்துவங்களும் வரலாறுகளும் போன்ற பாடங்களைக் கூறலாம். மிக முக்கியமாகச் சித்த குணப்பாடம் எனும் பாடப்பிரிவினைக் கூறலாம். சித்த மருத்துவம் ஐந்தரை ஆண்டு கல்வியாக உள்ளது. நான்கரை ஆண்டுகள் கல்வி, ஒரு ஆண்டு மருத்துவ பயிற்சி எனச் சித்த மருத்துவம் கற்பிக்கப்படுகின்றது. ஆண்டிற்கு ஒருமுறை தேர்வுக்காலமாக அமைகின்றது. பட்ட மேற்படிப்பு வாய்ப்புகள்: இளநிலை சித்த மருத்துவக் கல்வி பயின்ற பின்பு பட்ட மேற்படிப்புகள் உதவித்தொகையுடன் படிப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன. இம்மேற்படிப்புகள் தனியார் கல்லூரிகளில் இல்லை. அரசுக்கல்லூரிகளில் மட்டுமே உள்ளன. சென்னையில் தேசிய சித்த மருத்துவ ஆய்வு நிறுவனம், அரும்பாக்கம் அரசு சித்த மருத்துவக் கல்லூரி, பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரி போன்ற 3 இடங்களில் மட்டுமே மேற்படிப்பு வாய்ப்புகள் உள்ளன. இங்கு இலட்சக்கணக்கில் ஊக்கத்தொகையுடன் கூடிய மேற்படிப்பு வாய்ப்புகள் உள்ளன. எனவே தற்காலத்தில் சித்த மருத்துவத்தில் பயின்று சாதிக்கும் வாய்ப்புகள் பெருகி கொண்டு வருவது நிதர்சனமாகும்.
|
||||||||
by Lakshmi G on 24 Jan 2021 0 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|