இன்று கேரள மக்களால் அதிகளவு உண்ணப்படும் சற்று பழுப்புநிற அரிசி. தமிழகத்தின் தென் மாவட்டங்களில் குறிப்பாக பழைய ஒன்றுபட்ட மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி மாவட்டங்களில் ஆதியில் விளைந்த நெற்பயிராகும். இதற்கு அதிக தண்ணீர் தேவையில்லை. இந்த நெற்பயிரிலே ஆன்டி – ஆக்ஸிடென்ட் (Anti - Oxidant) இருப்பதால் பூச்சி மருந்துகள் அடிக்க வேண்டியதில்லை. உரங்களும் அதிகமாக தேவைப்படுவது இல்லை.
நீரில்லாமல் வெறும் மண்ணிலே விளைவதால் இதை நாட்டுப்புறத்தில் ‘புழுதிபுரட்டி’ என்பார்கள். சாதாரண மற்ற நெல்களை விட இந்த நெல் நான்கு மடங்கு விளைச்சலைத் தரும். இதை குறித்து இங்கிலாந்து ஹெல்த் பல்கலைக்கழகம் ஆய்வு செய்த போது, இந்த நெல் உடலுக்கு நல்லது. தமிழகத்தின் தென்மாவட்ட மக்கள் இந்த அரிசியினால் நீண்ட நாட்கள் பலமுடன் வாழ்ந்தார்கள். சர்க்கரை நோயும் நெருங்காது என தங்களுடைய ஆய்வில் 1982இல் தெரிவித்தனர்.
நானும் இந்த அரிசியை கடந்த பல ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறேன். இந்த அரிசியில் மொச்சைக் குழம்பு, நாட்டுக் கோழிக் குழம்பு, வத்தக் குழம்பு, ரசம், கட்டி எருமைத் தயிரும் – ஊறுகாய்க்கும் ஒரு பொருத்தமான மதிய உணவாக உள்ளது. இதன் சுவையே தனி. எவ்வளவு தான் சன்ன அரிசி சாப்பிட்டாலும் இந்த சுவைக்கு ஈடாகாது. இதை செந்நெல் என்றும் குறிப்பிடுவதுண்டு. கிராமப்புறத்தில் கடுமையாக உழைப்பவர்கள் இந்த அரிசியை விரும்பி சாப்பிடுவதுண்டு.
“மாடு கட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என்று, யானை கட்டி போரடித்த அழகான தென்மதுரை”
குறிப்பு. நாம் தவறவிட்ட சில பாரம்பரிய நெல் ரகங்கள்: புழுதிபுரட்டி, பாற்கடுக்கன், பனைமூக்கன், சிறைமீட்டான், மலைமுண்டன், கருஞ்சூரை, யானைக்கொம்பன், போரிறங்கல், வாள்சுருணை வாலன், தென்னரங்கரன், செம்பாளை, கறுத்ததிக்கராதி, கண்டசாலி, திருக்குறுங்கை, காடைக்கழுத்தன், குடவாழை, முத்துவெள்ளை, திருப்பதிசரம்,
கே.எஸ்.இராதாகிருஷ்ணன். 06-08-2018
|