|
||||||||
நலம் காக்கும் சித்த மருத்துவம் – 32 |
||||||||
![]() இள வேனில் காலத்தில் பின்பற்ற வேண்டிய பழக்கங்கள்
பருவகால ஒழுக்கங்கள் என்ற தலைப்பின் கீழ் முதலில் இளவேனில் காலத்தில் பின்பற்ற வேண்டிய ஒழுக்கங்களை (பழக்க வழக்கங்களை) இவ்வாரம் பார்க்க உள்ளோம்.
இளவேனில் கால உடல் மாற்றங்கள் 1. இள வேனில் என்பது வெப்ப காலத்தின் தொடக்கம் (Mid April to Mid June). இது பின்பனி காலத்திற்கு அடுத்த படியாக வருகின்றது. பின்பனி காலத்தில் இயல்பாகவே உடலில் கப ஆற்றல் (உயிர் ஆற்றல் என்ற தலைப்பின் கீழ் விளக்கப்பட்டுள்ளது) உயர்ந்திருக்கும். இதனால் அக்காலத்தில் மார்பிலும் வயிற்றிலும் கோழை (சளி போன்ற பொருள்) அதிகமாக உருவாகும். அக்காலத்தில் உருவான கோழை இள வேனில் காலத்திலும் உடலில் தங்கியிருக்கும். அக்கோழையின் வேகம் சற்று அதிகமாகி மார்பில் சளிகட்டினையும் பசி மந்தத்தையும் ஏற்படுத்தும். 2. மார்பில் உள்ள அதிகப்படியான கோழையாலும் வயிற்றின் பசிக் குறைவாலும் செரிமானக் குறைவாலும் உடலில் உயிர்ச்சத்துக் குறைவினை ஏற்படுத்தும். உடல் சோர்வும் மனச் சோர்வும் ஏற்படும். 3. இளவேனில் காலத்தின் நடுப்பகுதியிலும் பின்பகுதியிலும் உடம்பின் நீர்த்துவம் குறைந்து தோல் வறட்சி, கண் வறட்சி, நாக்கு வறட்சி ஏற்படும். எனவே இப்பகுதிகளில் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்படும். காட்டாக தோல் அரிப்பு, கண் எரிச்சல், வாய்புண்கள் உருவாகும். சிறுநீர் எரிச்சலும் மறைவிடங்களில் தோல் வெடிப்பும் ஏற்படும். முடி உதிர்தல், பொடுகு ஏற்படலாம். 4. சூழலில் குளிர்ச்சி மாறி வெப்பம் அதிகரிப்பால் மனதிலும் இனம்புரியாத கவலை, பதற்றம், வெறுப்பு ஏற்படும். செய்யும் வேலையில் ஒரு ஈடுபாடற்ற நிலையும் உருவாகலாம்.
இளவேனில் காலத்தில் கடைபிடிக்க வேண்டியவை 1. பின்பனி காலத்தில் உடலில் ஏற்பட்டுள்ள அதிகப்படியான கப ஆற்றலை நீக்க வேண்டும். மார்பிலும் வயிற்றிலும் தங்கியுள்ள கோழையை நீக்க வாந்தி மருத்துவம் மற்றும் நசிய மருத்துவம் (தனியாக விளக்கப் பட்டுள்ளது) மேற்கொள்ளல் வேண்டும். இதனால் மார்பும், வயிறு, குடல் பகுதிகளும் தூய்மையாகி மந்த நிலை மாறி பசி ஆர்வம் கூடும். சீரணம் சிறப்பாக நடக்கும். உடலிற்குத் தேவையான ஆற்றல் இயல்பாகக் கிடைக்கும். மன அழுத்தம் மாறி மன ஆற்றல் மேம்படும். இளவேனில் காலம் மட்டுமல்லாமல் ஆண்டு முழுவதும் உடல் சீராக இயங்க இப்போது எடுத்துக் கொள்ளும் வாந்தி மருத்துவமும், நசிய மருத்துவமும் உதவும். 2. வாரம் இரு முறை எண்ணெய்க் குளியல் செய்ய வேண்டும். நல்லெண்ணையுடன் சீரகம், ஓமம், சிறிய வெங்காயம் சேர்த்துக் காய்ச்சிய எண்ணெயை பயன்படுத்துவதால் இளவேனில் கால உடல் கேடுகள் நீங்கும். (மேலும் விபரங்களுக்கு எண்ணெய் இட்டுக் குளித்தல் பகுதியை பார்க்கவும்) 3. காலையில் நீரோ, நீராகாரமோ, மோரோ பருக வேண்டும். அதனுடன் சீரகம், அதிமதுரம் (நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) அரைத் தேக்கரண்டி அளவு சேர்த்துக் கொள்ளலாம். இதனால் உடலின் நீர்த்துவம் பாதுகாக்கப்படும். நீர்ப் பற்றாக் குறைவினால் ஏற்படும் உடல் பிரச்சனைகளிலிருந்து பாதுகாக்க இது மிகுந்த பலனளிக்கும். 4. சுவை : இந்த காலத்தில் கசப்பு, காரம், துவர்ப்பு சுவையுடைய பொருட்களை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். அறுசுவைக் கலவை சிறந்தது எனினும் இந்த சுவையுடைய உணவுகளை அதிகம் எடுப்பதால் உடல் இயக்கம் சீராகும். 5.பருகும் நீர் : மண்பானையில் நீர் விட்டு அதனுடன் சந்தத்தூள் அல்லது வெட்டி வேர் அல்லது நன்னாரி வேர் சேர்த்து ஊற விட்ட நீர் சிறந்தது. இந்த நீர் 1 லிட்டருக்கு 5 மி. லி. அளவு தேன் சேர்த்துப் பருகினால் அது இக்காலத்திற்கு ஏற்ற உடல் மாற்றத்திற்கு உகந்ததாயிருக்கும். 6. “புனல் விளையாட்டும் பொழில் விளையாட்டும்” நன்மையுண்டாக்கும் என சித்தர் பாடல் குறிப்பிடுகின்றது. அதாவது தூய நீர் நிலைகளில் நீந்தி விளையாடுவதும் சிறிது நேரம் உடல் குளிரும்படியாகக் குளிப்பதும் உடலிற்கும் மனதிற்கும் நல்லது. அதே போன்று மலர்கள் அதிகமிருக்கும் சோலைகளில் சிறிது நேரம் தங்குவதும் விளையாடுவதும் நன்மையுண்டாக்கும். வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் இவ்விடங்களுக்குச் சென்று வர வேண்டும். 7. தவிர்க்க வேண்டியவை: i. எளிதில் செரிக்காத உணவுகள், அதிகம் புளிப்புள்ள உணவுகள், குழ குழப்புத் தன்மையுடைய உணவுகளைத் தவிர்க்க வேண்டும். இவை பசி மந்தத்தை உண்டாக்கும். (மா, நெல்லி, எலுமிச்சையில் உள்ள புளிப்புத் தன்மை வயிற்றுக்குள் சென்று இனிப்பாக மாறி விடும். உடல் ஊட்டத்தையும் கொடுக்கும். எனவே அவற்றை சேர்த்துக் கொள்ளலாம்) ii. பகல்தூக்கம், இரவு கண் விழித்தல் போன்றவற்றால் உடல் வெப்பமும் வறட்சியும் கூடி இக்காலத்தில் பல கேடுகளை விளைவிக்கும். iii. உப்பு குறைத்து பயன்படுத்த வேண்டும். iv. கடுமையான உடல் உழைப்பு கூடாது. v. அதிக சூட்டுடன் உண்ணக் கூடாது. அதிக குளிர்ச்சியுடைய உணவுகளையும் தவிர்க்க வேண்டும். 8. மேலும் சில: i. சந்தனம் சேர்த்த எண்ணெய் தலைக்குத் தடவ வேண்டும். தூய சந்தனம் இல்லை யெனில் சீரகம் சேர்த்துக் கொள்ளலாம். உடலிலும் சிறிது பூசிக் கொள்ளலாம். ii. இரவு உறங்கும் முன் அல்லது ஓய்வாக இருக்கும் போது பாதத்தில் எண்ணெய் தேய்க்க வேண்டும். இது உடலைக் குறிப்பாகக் கண்களைக் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவும். iii. மருதாணி அரைத்து பாதத்திலும், உள்ளங்கை களிலும் வைத்துக் கொள்ளலாம். iv. திராட்சை, பனைவெல்லம், தேன் கலந்த கலவை சிறந்த ஊட்டத்தைக் கொடுக்கும். பதநீர், நுங்கு, இளநீர், கரும்புச் சாறு, பழச்சாறுகள் நன்மையுண்டாக்கும். v. வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் மர நிழலில் அமர்ந்திருக்க வேண்டும்.
நலப்பயணம் தொடரும்.................................................
|
||||||||
by Swathi on 23 Apr 2015 1 Comments | ||||||||
Tags: இளவேனில் காலம் வெயில் காலம் இளவேனில் சம்மர் Summer Season IlaVenil Siddha Maruthuvam | ||||||||
Disclaimer: |
||||||||
|
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|