LOGO
  முதல் பக்கம்    தற்சார்பு    விவசாயச் செய்திகள் Print Friendly and PDF

சிவப்பு, மஞ்சள், வயலட், பச்சை கலர்ல குடைமிளகாய்கள்....

குடைமிளகாய்கள் விவசாயத்தில் சாதித்தும், சம்பாதித்தும் வரும் ராஜாராமன் சொல்வதைக் கேட்போமா... 


''எனக்கு சின்ன வயசில் இருந்தே தோட்டக் கலையில ஆர்வம் அதிகம். மதுரையில இருக்கற பாண்டியன் ஓட்டல்ல வருஷாவருஷம் நடக்குற வீட்டுத்தோட்டப் போட்டியில கலந்துகிட்டு நிறைய பரிசுகள் வாங்கியி ருக்கேன். சிறுமலைக்கு ஒரு தடவை சுற்றுலா வந்தப்போ இந்த சூழ்நிலை எனக்குப் பிடிச்சுப் போச்சி. அதனால இங்க நிலத்தை வாங்கி தோட்டம் அமைக்க முடிவு செய்து, உடனடியா அதை நிறைவேத்திட்டேன்.


கொய்மலர்களுக்கு நல்ல வரவேற்பு இருக்குறது தெரிஞ்சு, சோதனை அடிப்படையில் 560 சதுர மீட்டர்ல மட்டும் ஊட்டி ரோஸ் பயிர் செய்தேன். அதுல எனக்கு நல்ல வெற்றி கிடைச்சதால, இன்னொரு யூனிட் போடறதுக்குண்டான முயற்சிகள்ல இறங்கினேன். அப்ப சில நண்பர்கள், தோட்டக்கலை ஆலோசகர்கள் மூலமா குடை மிளகாய் பத்தி தெரிஞ்சுகிட்டேன். அதுக்கான மார்கெட் நிலவரத்தை விசாரிச்சப்ப, நல்ல தேவை இருக் கறது தெரிஞ்சுது. ரோஜாவுக்காக அமைச்ச பசுமைக்குடில்லயே குடை மிளகாயை பயிர் பண்ணிட்டேன்.


ரோஜா மாதிரியே இந்த குடை மிளகாய்க்கும் ஓரளவுக்கு வெப்ப நிலை இருந்தா போதும். 26 டிகிரியில் இருந்து 36 டிகிரி சென்டிகிரேட் வெப்பநிலையும், காற்றோட ஈரப்பதம் 60% முதல் 85% வரைக்கும் இருந்தாபோதும். நல்ல செம்மண் நிலமா இருக்கணும்.


சிவப்பு, மஞ்சள், வயலட், பச்சை கலர்ல குடைமிள காய்கள் இங்க பயிராகுது. ஒன்பது மாசத்துல இதோட காலம் முடிஞ்சிடும். திரும்பவும் நடவு செய்து வளர்க்கலாம். குளிர்காலத்துல மட்டும் சரியான படி காய்ப்பு இருக்காது. அதுக்கு ஏத்த மாதிரி ஜனவரியில் நடவு செய்ய ஆரம்பிக்கலாம். நடவு செஞ்ச தொண்ணூறாவது நாளிலிருந்து பலன் கிடைக்க ஆரம்பிச்சுடும். நாட்டுல இருக்கற ஃபைவ்ஸ்டார் ஓட்டல்ங்க அத்தனையிலயும் இந்த குடைமிளகாய்களுக்கு நல்ல தேவை இருக்கறதால மார்க்கெட் பண்றது சுலபமாயிடுச்சு. இங்க உற்பத்தி யாகற குடைமிளகாய் அத்தனையும் சென்னையில இருக்கற கோயம்பேடு மார்க்கெட்டுக்குதான் போகுது. என் பையன் சென்னையில் இருக்கறது எனக்குக் கூடுதல் வசதி. திண்டுக்கல்ல இருந்து பஸ்ஸுல போட்டு அனுப்பிடுவேன். அதை கோயம்பேடு மார்கெட்டுல சேர்த்து எம்பையன் பணமாக்கிடுவான். அதிக தேவை இருக்கறதால பெரும்பாலும் உடனடி யாவே பணத்தைக் கொடுத்துடறாங்க. என் தோட்டத்துக் காய் தரமா இருக்கறதால கிலோவுக்கு ஐம்பத்தேழு ரூபாய் வரை கொடுக்கறாங்க. இதுக்கு மேலும் தொகையை உயர்த்தித் தர வியாபாரிங்க தயாராவே இருக்கிறாங்க. அதுக்கு தகுந்த மாதிரி உற்பத்தியை கூட்டறதுக்கான வேலைகளை செய்துகிட்டிருக்கேன்.

சாதாரணமா ஒரு கிலோவுக்கு முப்பது ரூபாயி லிருந்து அறுபத்தைந்து ரூபாய் வரைக்கும் நமக்கு கிடைக்கும். நேரடியா ஓட்டல்களுக்கே சப்ளை செஞ்சா அதிக லாபம் பார்க்கலாம். வெளிநாடுகள் லயும் தேவை அதிகமா இருக்கறதால, நிறைய உற்பத்தி செஞ்சா ஏற்றுமதி கூட செய்யலாம்” என்று மூச்சுவிடாமல் பேசிய ராஜாராமன், லாப விஷயங்கள் பற்றிய பட்டியலை எடுத்துப்போட்டார்.


ஆயிரம் சதுர மீட்டரில் ஆறாயிரம் செடிகள் வைக்கலாம். ஒன்பது மாதத்தில் ஒரு செடியிலிருந்து ஐந்து கிலோ காய்கள் கிடைக்கும். மொத்தமாக ஒன்பது மாதத்தில் 30 டன் காய்கள் கிடைக்கும். ஒரு கிலோ சராசரியாக நாற்பது ரூபாய் என்றால்கூட, ஒன்பது மாதத்தில் 12 லட்ச ரூபாய் வருமானம் கிடைக்கும். பார், நாற்று, உரம், தண்ணீர், வேலையாள் சம்பளம், பேக்கிங் உள்ளிட்ட உற்பத்திச் செலவு 4 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய். அதைக் கழித்துவிட்டால் 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் லாபமாகக் கிடைக்கும். ஆயிரம் சதுர மீட்டர் பசுமைக்குடிலுக்கு தனியாக ஆறு லட்ச ரூபாய் செலவு பிடிக்கும். இதை ஏழு ஆண்டுகள் பயன்படுத்தலாம்.


1,000 சதுர மீட்டர் செம்மண் நிலம் அல்லது செம்மண் பரப்பிய நிலத்தை நன்றாக உழுது பசுமைக்குடில் அமைக்கவேண்டும். தட்ப வெப்பநிலையைப் பொறுத்து பசுமைக் குடிலின் அமைப்புகள் மாறுபடும். சூரியனில் இருந்து வரும் புற ஊதாக்கதிர்களை நீக்கி, வெளிச்சத்தை மட்டும் செடிகளுக்கு கொடுக்க வேண்டும் என்பதுதான் முக்கியம். இதைத் தான் பசுமைக்குடில்கள் செய்கின்றன. வெப்பநிலையையும் சீராக வைத்திருக்க அவை உதவுகின்றன.


30 ஆயிரம் கிலோ சாணி, மக்கிய தொழு உரம், நெல் போன்ற தானியங்களின் உமி 1,000 கிலோ, வேப்பம் புண்ணாக்கு 500 கிலோ, பாரிடான் 20 கிலோ இதையெல்லாம் போட்டால் விதைப்பதற்கு நிலம் தயாராகி விடும். ஒரு மீட்டர் இடைவெளி விட்டு பார் (பெட்) தயார் செய்து ஒவ்வொரு பாரிலும் இரண்டு வரிசையில் நாற்றுகளை நட வேண்டும். குறுக்கு வாட்டில் 60 செ.மீ., பக்க வாட்டில் 15 செ.மீ. இருக்குமாறு வரிசையில் நடவேண்டும். ஒரு செடிக்கு ஒரு நாளைக்கு நான்கு லிட்டர் தண்ணீர் சொட்டு நீர்பாசன முறையில் விடவேண்டும். மற்றபடி பூச்சிகள் தாக்காமல் இருக்க, மருந்துகளை ஸ்பிரே செய்யலாம். வேறு எந்தப் பூச்சிகளும் குடிலுக்குள் நுழைந்து விடாமலிருக்க வலை களைக் கட்டி பாதுகாப்புச் செய்யலாம்.


செடி வைத்து தண்டு வளரும்போது, கவட்டை வடிவத்தில் இரண்டு தண்டுகளை மட்டுமே வளரவிட்டு மற்ற தண்டுகளை ஒடித்துவிடவேண்டும். அந்த இரண்டு முனைகளிலிருந்தும் அடுத்து தண்டுகள் வளரும்போது, முன்போலவே இரண்டு தண்டுகளை மட்டுமே வளர விடவேண்டும். அடுத்தடுத்து இப்படியே தண்டுகளை பராமரிப்பதன் மூலம் செடியில் காய்கள் நன்கு காய்க்கும். செடி வைத்த ஒரு மாதத்தில் தண்டுகளின் முனைகளில் கயிற்றைக் கட்டி மேன் பக்கமாக இழுத்துக் கட்ட வேண்டும். அப்போதுதான் காயின் பாரத்தை செடி தாங்கும்.


ஒவ்வொரு காயும் பெரிதாகும் அளவுக்கு இடைவெளி விட்டுப் பக்கத்தில் இருக்கின்ற பிஞ்சுகள், மொட்டுகள், இலைகள் எல்லாவற் றையும் கழித்துவிடலாம். காய் நல்ல வடிவத்தில் கிடைப்பதற்கு இது உதவும். தினமும் தவறாமல் இந்த வேலையைச் செய்து வந்தால், ஒரு காய் 300 கிராம் முதல் 500 கிராம் வரை எடை இருக்கும். ஒன்பது மாதம் முடிந்ததும் செடிகளை அழித்துவிட்டு நிலத்தைத் திரும்பவும் சரிசெய்து நாற்றுகளை நடலாம்.


மிகவிவரமாக தன்னுடைய தொழில்நுட் பங்களைப் பட்டியலிட்ட ராஜாராமன், ''என்னைப் பார்த்துட்டு சிறுமலையில் பத்துக்கும் மேற்பட் டவங்க பசுமைக் குடில் அமைச்சி குடைமிளகாய் பயிரிடுற முயற்சியில இறங்கியிருக் காங்க. என்னால முடிஞ்சவரைக்கும் தொழில்நுட்பங் களை பலருக்கும் சொல்லிக்கிட்டிருக்கேன். யார் கேட்டாலும் சொல்றதுக்கு தயாராவே இருக்கேன்'' என்று எல்லோருக்கும் அழைப்பு வைத்தார் (தொடர்புக்கு: 04512558358, 92442-14273).

 

நன்றி: மதுபாலன்

by Swathi   on 13 Sep 2014  3 Comments
Tags: குடை மிளாகாய்   குடை மிளாகாய் சாகுபடி   Bell Peppers              
 தொடர்புடையவை-Related Articles
சிவப்பு, மஞ்சள், வயலட், பச்சை கலர்ல குடைமிளகாய்கள்.... சிவப்பு, மஞ்சள், வயலட், பச்சை கலர்ல குடைமிளகாய்கள்....
கருத்துகள்
18-Dec-2016 22:30:58 MANIKANDAN K said : Report Abuse
Sir:- I am from Krishnagiri district. I was completed my master degree in chemistry.. But I am very interested in cultivation... Agricultural field.. Give me some idea about green chilly production....
 
20-Sep-2016 23:07:05 சதிஷ் Kumar said : Report Abuse
எந்த மிளகாய் அணைத்து பூமிழும் வருமா
 
07-Sep-2015 09:05:19 vignesh said : Report Abuse
மிக பயன் உஇலதொ மிக எளிமை எலோமே யானதோ மிக லபகரமனதொ
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.