|
||||||||
சித்த மருத்துவ மறுமலர்ச்சியும், தமிழ்நாட்டின் வளர்ச்சியும் -01 : அறிமுகம் |
||||||||
சித்த மருத்துவர் அருள் அமுதன், BSMS,MD(siddha),MSc.(Medical Pharmacology),MSc(Yoga and Naturopathy)
உதவி பேராசிரியர், Manipal Academy of Higher Education
சித்த மருத்துவர். அருள் அமுதன், BSMS, MD(siddha), MSc.(Medical Pharmacology), MSc(Yoga and Naturopathy) உதவி பேராசிரியர், Manipal Academy of Higher Education
“மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம் எல்லாப் புகழும் தரும்” – திருக்குறள் 457 இந்த குறளின்படி, மன நலம் நல்ல நிலையில் பேணப்பட்டால், உயிர்கள் ஆக்கமாக இருக்கும். அதுபோல, ஒரு இனத்தின் நலம் நல்ல நிலையில் பேணப்பட்டால், அவ்வினத்துக்கு எல்லா புகழும் கிடைத்து, உலகின் உயர்ந்த இனமாக கருதப்படும். இந்த ஆழமான சிந்தனையில் அடிப்படையில் தான் மனித இனம் தன்னுடைய நலத்தை பேணுவதற்காக, அக்காலத்தின் அறிவியல் அறிஞர்கள் நமக்கு அளித்த கொடைதான் சித்த மருத்துவம். இந்தியாவில், அதிலும் தமிழ் இனத்தில் அறிவியல் அறிஞர்கள் வாழ்ந்து இருக்கிறார்கள் என்று சொன்னால் நம்மவர்களே இன்று அதை நம்பும் நிலையில் இல்லாத அளவுக்கு நாம் நமது பாரம்பரியத்தை தொலைத்திருக்கிறோம். சித்தர் பெருமக்களை தான் நான் அறிவியல் அறிஞர்கள் என்று நான் குறிப்பிடுகிறேன். "கடவுள் தன்மையை (கடவுளை) அடைய முயற்சிப்பவன் பக்தன் கடவுள் தன்மையை (கடவுளை) அடைந்து விட்டவன் சித்தன்" சித்தர்கள் என்போர்கள் அறிவில் உயர்ந்தவர்கள், சிறந்த முற்போக்கு சிந்தனை வாதிகள், சமுதாயத்துக்கு தேவையான பல விடயங்களை உருவாக்கியவர்கள். படைக்கும் திறன் படைத்தவரே கடவுள், என்பது போல அறிவியல் நுட்பங்களை படைக்கும் திறத்தை சித்தர்கள் பெற்றிருந்தனர். அவர்கள் உருவாக்கிய ஆயக்கலைகள் அறுபத்தி நான்கில், பாரம்பரிய சித்த வைத்தியம் இன்னமும் அழிந்து போகாமல், மக்களோடு மக்களாக, மக்களுக்காக, பயன்பாட்டில் இருக்கும் ஒன்றாகும். பாரம்பரிய மருத்துவத் துறையில், தமிழர்கள் நிச்சயமாக முன்னோடிகளாகத்தான் இருந்திருக்கிறார்கள். சித்த மருத்துவம் என்பது தமிழர் அறிவியலின் உச்ச கட்டம் என்றால் அது மிகையில்லை. தமிழ் பரம்பரை இன்றுவரை வாழையடி வாழையாக வாழ்வாங்கு வாழ்ந்திருக்கிறது என்றால், அதிலிருந்து சித்த மருத்துவத்தின் பங்களிப்பை நம்மால் புரிந்து கொள்ள முடியும். பல்லாயிரம் ஆண்டுகளிக்கு முன்பே தமிழ் மண்ணில் பகுத்தறிவு சிந்தனை ஓங்கி இருந்தது. அவனவன் முன் ஜென்ம பாவத்தால் தான் நோய்கள் தோன்றுகின்றன, அதை அனுபவிக்கத்தான் பிறவி எடுக்கிறான், அதை தீர்க்க முடியாது என்றும் நம்பி கொண்டிருந்த காலத்திலே, சில விஞ்ஞானிகள் அறிவை பயன்படுத்தி, நோய்களை தீர்பதற்கான வழிமுறைகளை கண்டறிந்தனர். அந்த விஞ்ஞானிகள் சித்தர்கள் எனவும், அறிவுப் பூர்வமான மருத்துவத்தை படைத்ததால், அது சித்த மருத்துவம் எனவும் அழைக்கபட்டது. சித்தம் என்றால் தெளிந்த அறிவு பூர்வமான என்று பொருள், நாம் கூட சிலர் அறிவு பூர்வமான கேள்விகள் கேட்டவுடன் அவர்களுடன் சித்தாந்தம் பேசுகிறான் என்று கூறுவது வழக்கம். கல்தோன்றி மண் தோன்றா காலத்தே தோன்றிய மூத்த தமிழ் குடிகள் வாளோடும் வேலோடும் புறப்பட்டு உலகெங்கும் வணிகம் முலம் கோலோச்சி விளங்கினர். பல நாடுகளை ஆண்டும் வந்தனர். இன்றும் தமிழ் குடிகளே (Tamil Diaspora) உலகெங்கும் பரந்து விரிந்த பெருங்குடிகள். தனது பாரமரிய கலை, இலக்கியம், சினிமா, கடவுளர்கள், உணவு எல்லாவற்றையும் எடுத்து சென்ற தமிழன் தனது அறிவியலின் உச்சமான சித்த மருத்துவத்தை சுமந்து செல்ல மறந்து விட்டான். அதன் விளைவு, தமிழன்னையின் அறிவியல் முகம் (scientific domain of Tamil culture) புதைந்து கிடக்கிறது. சித்த வைத்தியத்தை உலகளவில் மனித குலத்தின் பயன்பாட்டுக்கு எடுத்துச் சென்றால், கண்டிப்பாக தமிழனின் அறிவு மெச்சப்படும். தமிழ் சமுதாயத்தின் முக்கியத்துவத்தை உலக மக்களால் உணரப்பதுவதற்கு சித்த மருத்துவத்தை உலகளாவ செய்வது ஒன்றே வழியாகும். கடந்த சில ஆண்டுகளாகத்தான் அமெரிக்காவில் “தமிழ் பேசும் மேடைகளிலெல்லாம், சித்தமருத்துவமும் பேசுவோம், அது நம் மரபு மருத்துவம், மருத்துவ அறிவியல்” என்ற குரல் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்துள்ளது தமிழக சித்த மருத்துவர்களுக்கு ஒரு நம்பிக்கையூட்டும் விடயமாகும். இந்தியாவில் 1652 மொழிகள் பேசப்பட்டாலும், 150 மொழிகள் அதிக மக்கள் பேசப்படும் மொழியாக சொல்லப்படுகிறது. அவற்றில் 22 மொழிகள் அரசியலமைப்பு சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளாக இருந்தாலும், அதில் தமிழ் என்ற ஒரு மொழிக்குதான் மருத்துவ அறிவியல் சித்தர் பாடல்களுடன் இருக்கிறது என்பதும், அதையொட்டி ஆயுர்வேதம் உருவாகியுள்ளது என்பதும் நாம் பெருமைப்படவேண்டிய ஒன்றாகும். இந்தியாவின் மருத்துவங்களாக ஒவ்வொரு இந்தியரும் பெருமையுடன் தூக்கிக் கொண்டாடவேண்டிய மரபு மருத்துவம் சித்தமருத்துவம் மற்றும் ஆயுர்வேதமாகும். முதல் மனிதன் தோன்றிய உடனேயே, நோயும் மருத்துவமும் தோன்றியது என்பது ஏற்றுகொள்ள வேண்டிய எதார்த்தம் ஆகும். நச்சு பூச்சிகள் கடித்தல், வேட்டையாடிய காயங்கள், அடிபடுத்தல், இனக்குழுக்களுக்குள் மோதல்கள் போன்ற அன்றாட பிரச்சனைகளுக்கு தீர்வு அளித்த அந்த வைத்திய முறைதான் பிற்காலத்தில், தமிழனின் மரபு வைத்திய முறையான சித்த மருத்துமாகியது. புதிய உணவுகளை உண்ண முயற்சித்த போதும், நச்சு கடிகளால் ஏற்படும் அசவுரியங்களை சரி செய்ய ஆரம்பித்த தேடல்தான், பின்பு சித்த மருத்துவத்தில், நஞ்சு முறிவு என்ற துறை உருவாகியது. போர்கள், இனக்குழுக்களுக்குள் சண்டைகள், சிலம்பம் போன்ற விளையாட்டுகளில் அடிபடுதல், பனை மற்றும் தென்னை மரமேறி விழும்போது ஏற்பட்ட விளைவுகளை புரிந்து கொள்ள முயற்சித்து அதன் விளைவாக கண்ட தீர்வே வர்ம மருத்துவம் ஆகும். இதை போல, குழந்தை மருத்துவம், மகளிர் மருத்துவம், சூல் மருத்துவம், ஆண்கள் மருத்துவம், வயிறு நோய்கள் மருத்தவம், இரண (புண்கள்) மருத்துவம் என சித்த மருத்துவ துறை பல விழுதுகளை பரப்பி இருக்கிறது. இன்று தமிழக, இந்திய மற்றும் உலக தமிழர்களின் அரங்கில், ஏற்படும் பொருளாதார தாக்கம், சித்த மருத்துவ வளர்ச்சியிலும் பிரதி பலிக்கிறது. உடல் ஆரோக்கியத்தை தருவதோடு மட்டுமல்லாமல், பல லட்சம் மக்களுக்கு நேரடியாகவும் மறை முகமாகவும் வேலை வாய்ப்பை அள்ளி தருகிறது சித்த மருத்துவம். தமிழர்களின் மொழிக்கு BA, MA, MPhil, PhD போன்ற பல்கலை கழக அங்கீகாரம் பெற்ற படிப்புகள் உள்ளன. ஆனால், நம்முடைய பாரம்பரிய வேளாண்மை, உணவு, கட்டடக் கலை, சிற்ப கலை போன்ற இன்னும் எத்தனையோ விடயங்களுக்கு அரசின் பல்கலைகழக அங்கீகாரம் போதிய அளவு இல்லை. இதில் சிறப்பம்சமாக, சித்த மருத்துவத்துக்கு என்று BSMS, MD, MPhil, PhD போன்ற பல்கலை கழக அங்கீகாரம் பெற்ற படிப்புகள் இந்தியா மற்றும் இலங்கையில் உள்ளன. இவ்வளவு பின் புலம் இருந்தும் ஏன் நமது சித்த மருத்துவம் இன்றளவும் லேகியம் என்றும் கஷாயம் என்றும், midnight masala (தொலைகாட்சி மூலம்) என்றும் கேலிக்கு உள்ளாகிறது. ஏன் சீன மருத்துவத்தை போல நோபல் பரிசு பெறும் நிலைக்கு உயர்வாக பார்க்கப்படவில்லை? இந்திய அளவில் ஏன் இதற்கு ஒரு முக்கியத்துவம் கிடைக்கவில்லை? இந்தியா இதை தன் பெருமையாக உயர்த்திப்பிடித்து உலக அரங்கில் சீனாவிற்கு இணையான மரபு மருத்துவத்தை நாங்களும் கொண்டுள்ளோம் என்று ஏன் உயர்த்திப்பிடிக்கவில்லை? ஒரு இந்தியனாக, ஒரு தமிழனாக இதை ஆராய்வதும், பரந்துபட்ட சிந்தனையுடன், உலகப்பார்வையுடன், அமெரிக்கா, சீனா, கொரியா, மலேசியா, ஹாங்காங் உள்ளிட்ட பல நாடுகளில் பாரம்பரிய மருத்துவம் குறித்த ஆராய்ச்சி மாநாடுகள் தொடர்பாக சுற்றிவந்துள்ள அனுபவத்தைக் கொண்டு நமக்கு கொட்டிக்கிடக்கும் பொருளாதார, வேலைவாய்ப்பு உள்ளிட்ட ஆக்கப்பூர்வமாக வாய்ப்புகளை விவாதிப்பதுமே இந்தக் கட்டுரையின் நோக்கம். உலகில் ஒவ்வொரு இனமும் தமது அடையாளங்களான பாரம்பரியத்தை தேடி கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில், நமது சித்த மருத்துவ முறைகள் நமக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. நம் சமூகம் மருத்துவ அறிவியலில் வளர்ச்சி கண்ட சமூகம் என்று மார்தட்டி கொள்ள வாய்ப்பு இருந்தால் மறுப்பார் யார்? சக்கரத்தின் கணித சூத்திரம் தெரியாமலே, சக்கரம் செய்து மாட்டு வண்டி ஓட்டி கொண்டுருந்தோம். இதை போலதான் என்னவென்றே தெரியாமலே நமது வாழ்க்கை முறைகள் அறிவியலால் பொதிந்து உருண்டு ஓடுகிறது. உணவு பழக்கம், மருத்துவம், உளவியல் கூறுகள் அனைத்தும் சமுக அளவில் (Public Health Practice) புழக்கத்தில் கொண்டு வரப்பட்டு, அதை நடை முறைப்படுத்தும் பொழுது ஆன்மிக மற்றும் சமையத்தை மையமாக வைத்து நமது பண்டைய ஆரோக்கிய வாழ்வு முறை சுழன்று கொண்டிருந்தது. ஆனால், இன்று எல்லாமே அறிவியலை மையமாக வைத்தே இயங்குகிறது. இக்கால கட்டத்தில், நமது பாரம்பரிய மருத்துவம் மற்றும் நலவாழ்வு முறைகள் எல்லாம், அறிவியலை மையமாக வைத்து சுழற்ற வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. பல கால கட்டத்தில் பல தன்னார்வ அமைப்புகள், வைத்திய பெருங்குடிகள், அரசுகள், என்று எல்லோரும் எடுத்த முயற்சிகள் ஏன் இன்று அதன் பலனை தரவில்லை? சித்த மருத்துவம் வளர்வதால் தமிழக பொருளாதாரம் வளரும்; தமிழகப் பொருளாதாரம் வளர்வதால் இந்தியப் பொருளாதாரம் வளரும். சித்த மருத்துவம் கடந்து வந்த பாதைகள், சித்த மருத்துவம் எந்த இடத்தில் இருக்கிறது, அது எவ்வாறு நமது தமிழக பொருளாதாரத்தை வலுப்படுத்தும், என்ன திட்டங்கள் தேவை, சித்த மருத்துவர்கள் சந்திக்கும் சவால்கள், சித்த மருத்துவ முறை மற்ற மருத்துவ முறைகளுடன் போட்டி போட முடியுமா, வெளி நாடு வாழ் தமிழர்கள் என்ன செய்யலாம், எப்படி சித்த மருத்துவத்தை சந்தை படுத்துவது, எப்படி மற்ற நாடுகளுக்கு எடுத்து செல்வது, எப்படி வேலை வாய்ப்புகளை பெருக்குவது என்பன போன்ற பல்வேறு கோணங்களில் இந்த தொடர் கட்டுரை அலசி ஆராய போகிறது. - சித்தம் தெளியும் (சித்தம் வளரும்) |
||||||||
by Swathi on 28 Apr 2018 0 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|