|
||||||||
சித்த மருத்துவ மறுமலர்ச்சியும் தமிழ்நாட்டின் வளர்ச்சியும் - 04 : அமையட்டும் அகத்தியர் சித்த மருத்துவ பல்கலைகழகம் |
||||||||
![]() சித்த மருத்துவர். அருள் அமுதன், BSMS, MD(siddha), MSc.(Medical Pharmacology), MSc(Yoga and Naturopathy) உதவி பேராசிரியர், Manipal Academy of Higher Education அமையட்டும் "அகத்தியர் சித்த மருத்துவ பல்கலைகழகம்" மற்றும் மாவட்டம் தோறும் ஒரு சித்த மருத்துவ கல்லூரி சீனா மற்றும் கொரியா நாடுகளில் பயணிக்கும் போது, அவர்களின் பாரம்பரிய மருத்துவ முறைக்காக, உலகத்தரம் வாய்ந்த பல்கலைகழகங்களும், கல்லூரிகளும், அருங்காட்சியகமும் வைத்து, அதை வளர்த்து வருவது கண் கூடாக பார்க்க முடிந்தது. சங்கம் வைத்து தமிழ் வளர்த்த நம் தமிழ் மண்ணில் இது போல, பல்கலை கழகம் வைத்து சித்த மருத்துவம் வளர்ப்பது ஒன்றும் கடினமான செயலாக இருக்காது என்று எண்ணுகிறேன். தமிழ்நாடு மாநிலம் இந்தியாவில் ஒரு முன்னோடி மாநிலம். தமிழ் நாட்டில், நமக்கு மொத்தமாக 19 அரசு மருத்துவ கல்லூரிகள் இன்று வரை நிறுவப்பட்டு உள்ளன. இது மட்டுமல்லாது, 16 தனியார் மருத்துவ கல்லூரிகளும் தமிழகத்தில் உள்ளன. இவ்வளவு மருத்துவ கல்லூரிகள் இருந்தும், இன்றைய சூழலில் பல நாட்பட்ட நோய்களை கட்டுப்படுத்த அல்லது குணப்படுத்த ஆங்கில மருத்துவம் மட்டும் போதுமானதாக இல்லை. அத்துடன் நமது சித்த மருத்துவம், பாரம்பரிய வாழ்வியல் மற்றும் ஓகம் போன்றவைகளின் கூட்டு சிகிட்சை முறைகள்தான் இன்று நமக்கு தேவை. நவீன மருத்துவர் சே.நெ.தெய்வ நாயகம் அய்யா அவர்கள் AIDS என்ற கொடிய நோய்க்கு ரசகந்தி மெழுகு, அமுக்கரா சூரணம் மற்றும் நெல்லிக்காய் லேகியம் என்ற மூன்று சித்த மருந்து கலவைகளை கொண்டு பல நோயாளிகளை பிழைக்க வைத்துள்ளது மனதில் கொள்ள வேண்டியது. அவரின் காலத்திற்கு பிறகு, அந்த ஆராய்ச்சியை எவரும் தொடராதது மிகவும் வருத்தம் அளிக்கிறது. இதைப்போல உலகத்துக்கு தேவையான, கூட்டு மருத்துவ முறை சிகிட்சை (Integrative Medicine care) முறை உருவாக தமிழகம் ஒரு முன்னோடி மாநிலமாக திகழ ஒரே வழி, மாவட்டம் தோறும் சித்த மருத்துவ கல்லூரி நிறுவி, ஆராய்ச்சிக்கு உரிய முக்கியத்துவம் கொடுத்ததால் பல மக்களை நோய்களிலிருந்து காக்கலாம். மாநிலத்தின் மருத்துவ வளர்ச்சியிலும் முன்னோடியாக வர வாய்ப்புள்ளது. ஒவ்வொரு மாவட்ட சித்த மருத்துவ கல்லூரியிலும் ஆங்கில மருத்துவத்துடன் இணைந்த ஒரு ஒருங்கிணைந்த மருத்துவ ஆராய்ச்சி முறை உருவாக்குவது மிகுந்த பயனளிக்கும். “வரப்புயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும், நெல் உயரக் குடி உயரும், குடி உயரக் கோல் உயரும், கோல் உயரக் கோலன் உயர்வான்” - ஒவ்வைபாட்டி ஒவ்வொரு இந்திய குடிமகனும் மகிழ்ச்சியான ஆரோக்கிய வாழ்வை வாழ்ந்தால் மட்டுமே, நாடு நலம் பெறும். அது மாவட்டம் தோறும் சித்த மருத்துவ கல்லூரிகளை நிறுவினால் மட்டுமே சாத்தியமாகும். மொத்தம் எத்தனை: தமிழ்நாட்டில் மொத்தம் 32 மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் 25 ஏக்கர் நிலம் அரசு ஒதுக்குமானால், அங்கு தொலை நோக்கு பார்வையுடன் கூடிய உலகத்தரம் வாய்ந்த அரசு சித்த மருத்துவ கல்லூரிகள் ஆரம்பிக்கலாம். ஒவ்வொரு கல்லூரியும் ஒரு சித்தரின் பெயர் தாங்கி நிற்குமானால் அதுதான், நாம் நம் அறிவில் சிறந்த முன்னோர்களுக்கு செய்யும் நன்றிக்கடன் ஆகும். ஏற்கனவே இரண்டு அரசு சித்த மருத்துவ கல்லூரிகள் (பாளையம் கோட்டை மற்றும் சென்னை) உள்ளன. சமீப களத்தில், பழனியில் புதிதாக ஒரு சித்த மருத்துவ கல்லூரி அமைக்கப்படும் என்ற அரசின் அறிவிப்பு இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. ஆண்டுக்கு இரு கல்லூரிகள் விகிதம் அமைத்தால், அடுத்த பதினைந்து வருடத்தில், நாம் எல்லா மாவட்டங்களிலும் சித்த மருத்துவ கல்லூரிகள் அமையப் பெற்று விடுவோம். எல்லா கல்லூரிகளையும் அகத்தியர் சித்த மருத்தவ பல்கலைகழகத்துக்கு கீழே கொண்டு வந்து செயல்படுத்த வேண்டும். எதற்கு தேவை இத்தனை கல்லூரிகள்: முதலில் நமக்கு தோன்றும் கேள்வி, இத்தனை செலவு செய்து அரசு சித்த மருத்துவ கல்லூரிகள் அமைக்க வேண்டுமா? அது அத்தனை தேவையா? என்பதுதான். எதோ சித்த மருத்துவ கல்லூரி அமைந்தால், சித்த மருத்துவர்களுக்குதானே லாபம் என்ற விவரம் அறியாத கேள்வி நம்முள் எழத்தான் செய்யும். இதை வேறு விதமாக உங்களுக்கு விளக்கலாம் என்று எண்ணுகிறேன். ஒவ்வருக்கு வாழ்வியல் சார்ந்த ஒரு நோய் (life style disorder, உதாரணமாக மதுமேகம் அல்லது நீரிழிவு என்ற Diabetes mellitus) 40 வயதில் வருகிறது என்று வைத்து கொள்வோம். அவர் இன்னும் சராசரியாக குறைந்தது 30 வருடமாவது ஆரோக்கியமாக வாழ்ந்தாக வேண்டி இருக்கிறது. இந்த 30 வருடத்திற்குள், அவர் அலோபதி மருத்துவம் மட்டுமே எடுத்து கொண்டால், அது அவரது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் (glucose) அளவையும், மூன்று மாதகால சராசரி இரத்த சர்க்கரை (glycosylated hemoglobin – HbA1c) அளவையும் கட்டுக்குள் வைக்க மட்டுமே பெரும் பாடுபட வேண்டி இருக்கும். அவரது, கல்லீரல் பாதிப்பு, சிறுநீரக பாதிப்பு, கண் பார்வை பாதிப்பு, நரம்பு மண்டல பாதிப்பு, இதய நோய்கள், கொழுப்பு சம்பந்தமான நோய்கள், ஆறாத புண்கள், பக்க வாதம், போன்ற பல சொல்லொண்ணா நோயின் வருங்கால விளைவுகளை (Complications of diabetes) தடுக்க அல்லது தள்ளிபோட மருந்தே இல்லை. ஒரு கட்டத்தில் நோய் கட்டுக்குள் வராமல் போகவே, அடுத்து வாழ்க்கை முழுதும் இன்சுலின் ஊசி போட்டுகொண்டே இருப்பதும், சந்தையில் ஏதாவது புதிய மாத்திரை வந்து நம்மை காப்பாற்றி விடாதா என்ற ஏக்கத்துடன் நாட்களை கழிப்பதும் ஒரு வித மன உளைச்சலை தந்து விடும். போதாக்குறைக்கு, மாத்திரை மருந்துகள் பல புதிய நோய்களையும் (Iatrogenic diseases) உண்டாக்கும். ஆக, மதுமேகம் வந்த ஒருவர் அடுத்த பதினைந்து இருபது வருடங்களில் காலின் ஒரு விரலையோ அல்லது, காலையோ இழக்க தன் மனதை தயாராக்கிக் கொள்ள நவீன மருத்துவம் பழக்கி விடுகிறது. இந்த உடல் மற்றும் மன உளைச்சலில் சிக்கி இருக்கும் ஒருவர், கண்டிப்பாக நடைபிணம் ஆகிவிடுகிறார். அவரால் தனது பணிகளை அல்லது தொழிலை கூட சரிவர செய்ய முடியாமல் போகிறது, ஆக மொத்தத்தில் அவரின் வாழ்க்கை தரம் (Quality of Life) குறைந்து விடுகிறது. இந்த சூழ்நிலையில்தான், ஒருவர் மூட நம்பிக்கைக்கு அடிமையாகி, எப்படியாவது இதுலிருந்து மீள வேண்டும் என்றும், யாராவது வந்து தம் துன்பங்களை, வலியை போக்க மாட்டார்களா என்றும் போலி சாமியார்கள் அல்லது மதவாதிகள் பின்னாலும், தொலைக்காட்சிகளிலும், தெருவோர சுவர் ஒட்டிகளில் வரும் மூலிகை ஆசாமிகளிடமும் மாட்டி, சிரமப்பட்டு, ஏமாற்றபட்டு, ஒரு கட்டத்தில், ஆண்டவன் மீதும் சித்த வைத்தியம் மீதும் நம்பிக்கை இழந்து போதல் நடக்கிறது. சித்த மருத்துவம் ஒரு வாழ்வியல் முறை, நம் பாரம்பரிய வாழ்வியல் அறிவு. நம் முன்னோர்கள் நோய் வராமல் காப்பதற்காக உருவாக்கிய வாழ்வியல் முறையை கடைபிடிப்பதன் மூலமும், அதிக செலவில்லாத அவர்கள் வீடுகளுக்கு பக்கத்தில் கிடைக்கும் மூலிகை, உணவு முறைகளை கடைபிடித்து அவர்களின் உடல்நலனை காத்துகொள்ளவும், மாவட்ட அளவிலான சித்த மருத்துவ கல்லூரி மருத்துவர்களுக்கு உரிய பயிற்சி வழங்கி ஆரோக்கியமான உணவு, உறக்கம் , உழைப்பு, ஓகம், தியானம் என்று அவர்களுக்கு நோய்கள் வராமல் காக்க உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு முன்வரவேண்டும். நோய் வந்தவர்களுக்கு உரிய மருத்துவம் வழங்கி அவர்கள் மீண்டும் பழைய நிலைக்கு வர சரியான ஆலோசனைகளை வழங்க வழி செய்யவேண்டும். மேலை நாடுகளில் நோயாளிகளுடன் மருத்துவர்கள் அமர்ந்து உரையாடி ஒரு ஆலோசகராக அவர்களுக்கு உள்ள சிக்கலை படம் போட்டு விளக்கி அவர்களுக்கு புரியவைக்க முனைகிறார்கள். ஒவ்வொரு மருத்துவ சிகிச்சையையும் நோயாளிக்கு புரியவைத்து அவர் அனுமதித்து முழு மனதுடன் புரிந்துகொண்டபிறகு மட்டுமே அடுத்த கட்டத்திற்கு நகர்கிறார். நோயாளிக்கு அதை தீர்க்க உள்ள பலவழிமுறைகளை விளக்கி அவருக்கு உரிய வழிமுறையை தேர்ந்தெடுக்க உதவுகிறார்கள். மருத்துவர்கள் ஒரு பேராசிரியர்களைப் போல விளங்குவதாக அமெரிக்காவில் உள்ள நண்பர்கள் கூறுவதுண்டு. அவர்கள் இந்தியா வரும்போது, மருந்து பெயரையோ அல்லது நோய் குறித்து ஆழமாக அறிந்துகொள்ள விரும்பி, இந்தியாவில் உள்ள மருத்துவர்களை அணுகினால், இந்திய மருத்துவர்கள் சிலர் கோபப்படுவதாகவும், உரிய நேரம் எடுத்து விளக்கிக் கூறுவதில்லை என்றும் பகிர்ந்துகொண்டார். ஒவ்வொரு மாவடத்திலும் ஒரு சித்த மருத்துவக் கல்லூரியும், சித்த மருத்துவ – ஆங்கில மருத்துவ ஒருங்கிணைந்த ஆய்வும் தமிழகத்திலுள்ள சித்த மருத்தவர்களின் ஒட்டுமொத்த கோரிக்கையாக, மக்களின் கோரிக்கையாக மாறுமானால், இது நடைமுறைக்கு உகந்ததுதான் என்பதை நாம் காண்போம். ஆக, கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்தது மாதிரி, மாவட்டம் தோறும் சித்த மருத்துவ கல்லூரிகள் இருக்குமேயானால், இப்படிப்பட்ட மதுமேக நோயாளிகள் ஆரம்பத்திலேயே சித்த வைத்தியமுறைகளை கையாண்டு வந்தால், கண்டிப்பாக இருபத்தைந்து வருடம் நவீன மருந்துகள் இல்லாமேலேயே, நோயின் வருங்கால விளைவுகளும் (Complications of diabetes) இல்லாமலேயே, தனது 65 வயதை மகிழ்ச்சியாக கடக்க முடியும். அதற்கு அப்புறம், தேவைக்கேற்ப நவீன மருத்துவம் கைகொடுக்கும், அவரது ஆரோக்கியமான ஆயுளும் நீளும். அவரின் வாழ்க்கை தரம் (Quality of Life) அதிகமாகி, தனது தொழிலை சரிவர செய்யவும் வழிவகுக்கும். இதனால் தமிழகத்தின் மனித வளம் பாதுகாக்கப்பட்டு, அதன் பயனை தமிழகம் கண்டிப்பாக அடையும். நன்றாக தொழில் செய்து, பணம் சேர்த்து, மகிழ்ச்சியாக ஆவது குடும்பம் மட்டுமல்ல, தமிழ்நாடும் அதன் மூலம் இந்தியாவும் நல்ல பலனடையும். இதே போலதான், இதய வியாதிகள், குழந்தை இன்மை, சிறுநீரக நோய்கள், கருப்பை நோய்கள், புற்று நோய்கள், விபத்துக்களின் இழப்புகள் (Trauma, accident, etc.) என எல்லா நோய்களையும், சித்த மருத்துவம், ஓகம் மற்றும் நவீன மருத்துவத்தின் ஒருங்கிணைந்த அணுகுமுறை கொண்டு அணுகினால், கண்டிப்பாக மனித இனம் மகிழ்ச்சியாக வாழ வழிவகை செய்யும். தமிழக அரசு மற்றும் மத்திய இந்திய அரசு தமிழ் நாட்டு மக்களின் மருத்துவ செலவுக்கு ஆண்டு தோறும் பல கோடிகள் செய்யும் செலவுகள் கண்டிப்பாக குறையும். மனிதனை நடை பிணமாக அலைய வைக்க பயன்படுத்தும் இந்த பணத்தை, வருமுன் காப்போம் என்ற அடிப்படையில் சித்த மருத்துவ கல்லூரிகள் அமைக்க செலவிடலாமே. தனி மனிதன் ஆரோக்கியமாக இருந்தால் தான், நாடு வளர்ச்சி அடையும். என்ன என்ன பலன்கள் தமிழ் நாட்டுக்கு:
அரசு என்ன செய்ய வேண்டும்: மாற்று மருத்துவ முறைகள் மீது மக்களுக்கு அதிக நம்பிக்கை வளர்ந்து உள்ளது. பல ஆராய்ச்சிகளும் அவற்றின் பயன்பாடுகளை உறுதி செய்கின்றன. எனவே அரசு ஆண்டுக்கு இரு கல்லூரிகள் விகிதம் அமைத்தால், அடுத்த பதினைந்து வருடத்தில், நாம் எல்லா மாவட்டங்களிலும் சித்த மருத்துவ கல்லூரிகள் அமையப் பெற்று விடுவோம்.
இவ்வாறு அமையுமேயானால், ஒவ்வொரு இந்திய குடிமகனும் மகிழ்ச்சியான ஆரோக்கிய வாழ்வை வாழ்ந்து, தொழில் பல செய்து, குடும்பத்தையும், நாட்டையும் முன்னேரற்றுவர் என்பதை மறுக்க முடியாது. இதைத்தான், “வரப்புயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும், நெல் உயரக் குடி உயரும், குடி உயரக் கோல் உயரும், கோல் உயரக் கோலன் உயர்வான்” என்று அன்றே சொல்லி வைத்தாள் நம் ஒவ்வைபாட்டி. - சித்தம் தெளியும் (சித்தம் வளரும்)... மாற்று மருத்துவ முறைகள் மீது மக்களுக்கு அதிக நம்பிக்கை வளர்ந்து உள்ளது. பல ஆராய்ச்சிகளும் அவற்றின் பயன்பாடுகளை உறுதி செய்கின்றன. எனவே அரசு ஆண்டுக்கு இரு கல்லூரிகள் விகிதம் அமைத்தால், அடுத்த பதினைந்து வருடத்தில், நாம் எல்லா மாவட்டங்களிலும் சித்த மருத்துவ கல்லூரிகள் அமையப் பெற்று விடுவோம். |
||||||||
![]() ![]() |
||||||||
![]() |
||||||||
by Swathi on 29 Jun 2018 1 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|