|
||||||||
சித்த மருத்துவ மறுமலர்ச்சியும் தமிழ்நாட்டின் வளர்ச்சியும் - 07 : சித்த மருத்துவ பயிற்சியை வெற்றிகரமாக 21ம் நூற்றாண்டில் செய்வது எப்படி – ஒரு சுய ஆய்வும், 15 வழிகளும் |
||||||||
சித்த மருத்துவர். அருள் அமுதன், BSMS, MD(Siddha), M.Sc.(Medical Pharmacology), M.Sc.(Yoga and Naturopathy) உதவி பேராசிரியர், Manipal Academy of Higher Education சித்த மருத்துவ பயிற்சியை வெற்றிகரமாக 21ம் நூற்றாண்டில் செய்வது எப்படி – ஒரு சுய ஆய்வும், 15 வழிகளும் என்பது குறித்து எட்டு முக்கிய வழிகளை கடந்த வாரக் கட்டுரையில் கண்டோம்... மீதம் உள்ள வழிகளை தற்போது அலசுவோம்... 9. சித்த மருத்துவர் அலோபதி மற்றும் பல மருத்துவ முறைகளுடன் இணைந்து ஒருங்கிணைந்த சேவையை செய்யவேண்டியது அவசியம். நான் கல்லடைப்பு நோய்க்கான சிறப்பு பயிற்சி செய்யும் போது, அதே குறிகுணம் கொண்ட நோயாளி வருகிறார். அவருக்கு, கல்லடைப்பா, எந்த இடத்தில் அடைப்பு, எவ்வளவு அளவு, இதனால் சிறுநீரகத்துக்கு பாதிப்பு ஏற்படுமா, அல்லது வேறு விதமான வயிற்று வலியா, வேறு நோய்கள் உண்டா, ஏற்கனவே அவருக்கு இரு முறை அறுவை மருத்துவம் செய்திருக்கிறாரே, என்பன போன்ற கேள்விகளை எல்லாம் அலசி ஆராய்வதற்கு நமக்கு நவீன மருத்துவரின் துணை தேவைப் படுகிறது. நாம் கல்லடைப்புக்கு பரிகரித்து கொண்டிருக்கும் போது, திடீரென வலி அதிகமாகி விட்டால், அதை கவனித்துக் கொள்ள நம்முடன் கைகோர்க்கும் நவீன மருத்துவர் இருந்தால் நல்லது. அப்படி இல்லாமல், முன்பின் தெரியாத நவீன மருத்துவரிடம் நம் நோயாளி அந்த திடீர் தற்காலிக வலிக்காக செல்ல நேரிட்டால், நமது சித்த மருத்துவம் பற்றியும் நம்மை பற்றியும் அறியாத அந்த மருத்துவர், நோயாளி முன்னால் நம்மையும், சித்த மருத்துவத்தையும் வசைபாடுவார். நம்முடன் கைகோர்க்கும் நவீன மருத்துவரிடம், நம்மால் நோயாளிகளை அனுப்ப முடியுமானால், அது நமக்கும் , நோயாளிக்கும், மருத்துவத்துறைக்கும் நல்லது. ஒரு புதிய வகை தோல் நோயாளி வருகிறார், அவரை தேவைப்பட்டால் நவீன தோல் நோய் நிபுணரிடம் அனுப்பி medical opinion வாங்க தயங்க வேண்டாம். நீரிழிவு நோயாளிகள் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த நவீன மருத்துவரையும், தீராத கால் புண்ணை ஆற்றுவதற்கு சித்த மருத்துவரையும் அணுகுவர். இந்த இடத்தில், ஒரு பொறுப்புள்ள மருத்துவராக இரண்டுபேரும் நடந்து கொள்ள வேண்டுமானால், நமக்குள் நாம் மருத்தவ முறைகளை பற்றி அடிக்கடி பேசிக்கொள்ள வேண்டும், நோயாளிகளை பரஸ்பர அடிப்படையில் அனுப்பும் அணுகுமுறை வேண்டும். பல நேரங்களில் அகஸ்தியர் குழம்பு கொடுத்து, தீராத வாந்தி அல்லது வயிற்று போக்கு ஏற்பட்டு, நோயாளிகள் நவீன மருத்துவமனையை தேடிப்போய், அங்கு அனுமதிக்கப்பட்டு, சித்த மருத்துவத்தின் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாவது தொடர்ந்து நடக்கிறது. அட்டை விடுதல் செய்தபோது, ஒருவருக்கு இரத்தம் நிற்காமல் வடிந்து கொண்டும், கால் வீக்கம் ஏற்பட்டும் இருந்தது. இரண்டு நாட்கள் கழித்து, அந்த நோயாளி நவீன மருத்துவரை நாடிய போது, அட்டையில் இருந்து கிருமி தோற்று ஏற்பட்டு அவருக்கு cellulitis உண்டாகி இருந்தது. மற்றும் இரத்தம் உறைவதில் அவருக்கு குறைபாடு இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. நவீன மருத்துவர் உடனே சித்த மருத்துவரை (மருத்துவத்தை) வசை பாடிவிட்டு, சிகிட்சையை தொடர்ந்தார். ஒருவேளை காலை இழக்க நேரிடுமானால், நீதிமன்றத்தில் நாம் வழக்கை சந்திக்க நேரிடும். நமது கவன குறைபாடு மற்றும் சித்தமருத்த்வத்தை நம்பகத்தன்மையுடன் வளர்த்தெடுக்க, நமது நோயாளிகளின் ஆரோக்கியத்தில் உறுதி அளிக்க, நவீன மருத்துவ நண்பர்களை பயிற்சியில் கூட்டு சேர்த்து கொள்வது அவசியம் என்றே கருதுகிறேன். சித்த மருந்தின் பயனை, ஒரே ஒரு புற்று நோயாளியிடம் நான் நிருபித்ததால், அன்றிலிருந்து கஸ்தூரியா மருத்துவ கல்லூரியின் ஒரு புற்று நோய் மருத்துவர், கடைசி காலத்தில் இருக்கும் பல புற்று நோயாளிகளை எனக்கு அனுப்பி வைகிறார். எனக்கு ஏதாவது சந்தேகங்கள் வரும்போது, அவரிடம் நான் கேட்க தயங்குவதில்லை, சில நேரம் இரண்டு பேரும் சேர்ந்தே நோயாளிக்கு சிகிட்சையை திட்டமிடுகிறோம். நாம் ஒவ்வொருவொரும், இதைபோன்ற மருத்துவ நண்பர்கள் குழுவை ஏற்படுத்தி விட்டால், கண்டிப்பாக நாம் நோயாளிகளின் நம்பிக்கைக்கு பாத்திரமாகி விடுவோம். 10. ஒருங்கிணைந்த Integrative சித்த மருத்துவமனை அமைப்போம் தற்போதைய காலகட்டத்தில், பல வகையான மருத்துவ முறைகள் புழக்கத்தில் உள்ளன, அவற்றை கண்டு நோயாளிகள் மிகுந்த குழப்பத்தில் உள்ளனர். இங்கு ஒரு நோயாளி, நீரிழிவுக்கு இன்சுலின் ஊசி போட்டுக்கொள்கிறார், காலில் உள்ள தீராத புண்ணுக்கு சித்த மருத்துவம் புரிகிறார், முதுகு வலிக்கு யோகா பயிற்சி செய்கிறார், கழுத்து வலிக்கு ஆயுர்வேத மருத்துவம் புரிகிறார், வயிற்று புண்ணுக்கு ஹோமியோபதி மருத்துவம் செய்கிறார், மூட்டு வலிக்கு அக்குபஞ்கர் செய்கிறார், புத்தகத்தை பார்த்து சில மூலிகை குடிநீர்களையும் செய்து குடிக்கிறார். இந்த நோயாளியின் உடலில் என்ன நடக்கிறது, நவீன மருந்துகளும் மூலிகைகளும் வினை புரிகிறதா, எல்லா மருத்துவ முறைகளும் சேர்ந்து கூட்டு பலனை (synergistic action) தருகிறதா, அல்லது அவைகள் ஒவ்வொன்றின் பலனை முறிக்கிறதா, போன்ற கேள்விகளுக்கு விடை இல்லை. ஆக, நோயாளியே தனக்கு எந்த நோய்க்கு எந்த மருத்துவ முறை சிறந்தது என்பதை விளம்பரங்கள் மற்றும் அனுபவ அறிவு கொண்டு தேர்வு செய்யும் நிலைக்கு தள்ளப்படுகிறார். இந்த கலாச்சாரத்தை Medical Pluralism என்பர். நோயாளிகளுக்கு நோய்களை பற்றிய போதிய அறிவு இல்லாமையால், பல நேரங்களில் இந்த கலாச்சாரம் தீய விளைவுகளையே தரும். எனவே சமூக நலனில் அக்கறை கொண்ட சித்த மருத்துவர்கள், தாமே முடிந்த வரை தமது நோயாளிக்கு எந்த நோய்க்கு, எப்போது, எந்த மருத்துவ முறை சிறந்தது என்பதை தேர்ந்தெடுப்பதற்கு உதவி செய்ய வேண்டும். இதை நோக்கித்தான் தற்கால மற்றும் வருங்கால மருத்துவ பயிற்சியிகள் செல்கின்றன. ஒவ்வொரு சித்த மருத்துவரும் இந்த நிலைக்கு தன்னை தயார் செய்து கொள்ள வேண்டும், ஒருங்கிணைந்த Integrative சித்த மருத்துவமனையை அமைக்க முன்வர வேண்டும். சில சித்த மருத்துவர்கள், BSMS படிப்புக்கு பிறகு, MBBS படித்துள்ளனர். சில நேரம் கணவன் மனைவியில் ஒருவர் சித்த மருத்துவரும் மற்றவர் அலோபதி மருத்துவருமாக அமைந்துவிடுவதும் உண்டு. நமது குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் என பலரும் நவீன மருத்துவ துறையில் இருப்பர். தமிழ்நாடு போன்ற பல மாநிலங்களில் மாநில அரசு, சித்த மருத்துவர்களுக்கு அவசர காலத்தில் நவீன மருந்துகளை தேவைக்கேற்ப பயன்படுத்தி நோயாளிக்கு தீர்வை தரலாம் என்ற சிறப்பு அங்கீகாரம் வழங்கி உள்ளது. இது போன்ற வாய்ப்புகளை நாம் நோயாளிகளின் நன்மைக்காக கண்டிப்பாக பயன்படுத்த வேண்டுகிறேன். ஒருங்கிணைந்த சிகிட்சை முறைதான் (Integrative medical care) சிறந்தது. சமீப காலத்தில், மறைந்த அலோபதி டாக்டர். சே.நே.தெய்வநாயகம் அவர்கள் எயிட்ஸ் நோய்க்கு RAN therapy (ரசகந்தி மெழுகு, அமுக்கரா சூரணம், நெல்லிக்காய் லேகியம்) என்ற சித்த மருந்து கலவையை நவீன மருந்துகளுடன் சேர்த்து கொடுக்கும்போது நோயாளி விரைவில் சுகம் கிடைப்பதை ஆராய்ந்து தெளிவுபடுத்தி உள்ளார். அதைப்போல, அலோபதி டாக்டர் ஜோசப் தாஸ் அவர்கள் தீராத தோல் நோய்கள், நீரிழிவில் உண்டாகும் தீராத புண்கள் இவைகளுக்கு சித்த மருந்துகளையும் அலோபதி மருந்துகளையும் சேர்த்து கொடுக்கும் போது விரைவில் குணம் கிடைப்பதை ஆராய்ச்சி கட்டுரையாக எழுதி உள்ளார். மணிப்பால் பல்கலைக்கழகத்தில், புற்று நோய் மற்றும் சொரியாசிஸ் என்ற காளாஞ்சகபடைக்கு சித்த மருத்துவம் மற்றும் நவீன மருத்துவம் கலந்து கொடுக்கும் போது ஏற்படும் நன்மைகளை பற்றிய ஆய்வு தற்போது நடந்து வருகிறது. ஆகவே, பல மருத்துவதுறை வல்லுனர்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த சித்த மருத்துவமனையை அமைப்பதை தனது குறிக்கோளாக நாம் கொண்டிருக்க வேண்டும். 11. ஆராய்ச்சி மனப்பான்மையை வளர்ப்போம் பொதுவாக சித்த மருத்துவர் என்றாலே, அவர் இரண்டாயிரம் ஆண்டுக்கு முன்புள்ள மனநிலையையும், தற்கால அறிவியலில் பிற்போக்கு தன்மையையும் கொண்டிருப்பார் என்கின்ற மனப்பாங்கு மக்களிடம் உண்டு. நமக்கு ஆராய்ச்சி மனப்பான்மை இல்லாததுதான் அதற்கு காரணம். ஒரு நோயை கண்டுபிடிக்க நாம் போதிய கவனம் செலுத்துவதில்லை, அதே போல மருந்து கொடுத்த பின், நோய் குணமாகி விட்டதா என்றும் நாம் கண்டறிய முயற்சி செய்வதில்லை. நோயாளியின் வாயால் சொல்லும் குறிகுணங்களை மட்டுமே அடிப்படையாக கொண்டு மருத்துவம் செய்கிறோம். கல்லடைப்பு நோயில் காணும் வலியை போலவே, வேறு சில நோய்களில் கூட காணும். எனவே இந்த நோய் பகுப்பாய்வு (Differential Diagnosis) செய்ய, சித்த முறைப்படி நாடி பார்ப்பது மட்டுமல்லாமல், நவீன முறைப்படியும் நோயை கணிக்க பழகிக்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்யாமல், தவறாக மருந்து கொடுத்த பல சித்த மருத்துவர்கள் பின்னாளில் சந்திக்கும் சட்ட சிக்கல்களும், அவப்பெயரும் நாம் அறிந்ததே. நோயாளிகள் மிகுந்த சிக்கலுக்கு உட்படுவர், சில நேரம், நோய் முற்றிபோய், நவீன மருத்துவரிடம் செல்லும் போது பல்வேறு கேள்விகள் எழுவதும் நடக்கிறது. எனது உறவினர் ஒருவர், கால் வீக்கம் போடுகிறது என்று நவீன மருத்துவரிடம் சென்றபோது, இதயத்தில் சிறிய பிரச்சனை இருப்பது போலவும், அதற்காக மேற்கொண்டு பரிசோதனைகள் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. உள்ளுரில் பெயர் பெற்ற வாத வைத்தியரிடம் காண்பித்த போது, இது வாத நீர்தான், அதற்கு கஷாயம் தருகிறேன் என்று அதிக பணமும் வாங்கிக் கொண்டு சிகிட்சை அளித்தார். நான் எனது உறவினரை சந்தித்தபோது, காலில் வீக்கம் குறைந்து இருப்பதாகவும், இன்னமும் பல மூலிகை மருந்துகள் உட்கொள்ள வேண்டும் எனவும் சொன்னார். சரியாக ஒருவருடம் கழித்து என் உறவினர் congestive cardiac failure என்ற நோயின் முற்றிய நிலையில், மற்றைய இதய நோய்களும் கலந்து இவ்வுலகை விட்டு மறைந்து விட்டார். ஆக, சரியான நோய்கணிப்பு இன்மையால், தவறான சிகிட்சை அளிப்பதும் சட்டப்படி தவறுதான். அடிப்படையில் நாம் ஆராய்ச்சி மனப்பான்மையை வளர்த்து கொண்டால்தான், நம்மை நாமே கேள்வி கேட்கும் பக்குவம் வளரும், கேள்விக்கு விடை தேடுவதுதானே ஆராய்ச்சி. சித்தம் என்றால் அறிவை பயன்படுத்துவது என்பதுதானே பொருள். தான் கண்ட புதிய மருத்துவ நுட்பங்களை மருத்துவ அறிவியல் இதழில் வெளியிடவும் செய்ய வேண்டும். சம காலத்துக்கேற்ப நமது அறிவை வளர்த்துக் கொள்ள, பல மருத்துவ அறிவியல் இதழ்களை படிக்கும் பழக்கம் வர வேண்டும். நமது பயிற்சியில் நாம் அன்றாடம் காணும் பக்க விளைவுகள், அதை சரிப்படுத்தும் முறை, புதிய நோய்களை குணமாக்கும் விதம், போன்ற பல சித்த மருத்துவ நுணுக்கங்களை அறிவியல் ஆராய்ச்சி மனப்பான்மையுடன் ஆவணப்படுத்தி, உலகறிய செய்ய வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை ஆகும். ஆராய்ச்சிகள் இல்லாததால் தான் சித்த மருத்துவம் உலகில் பரவ வழியில்லாமல் தவிக்கிறது. உலக தமிழர்கள் மத்தியில் கூட நம்மால் இதை எடுத்து செல்ல முடியவில்லையே. ஒவ்வொரு சித்த மருத்துவரும், வருடத்துக்கு இரண்டு case report அல்லது case series அல்லது adverse drug reporting வெளியிட்டாலே, நமது துறை முன்னேறி விடும். தனது அனுபவத்தை அறிவியல் மற்றும் மருத்துவ மாநாடுகளில் சமர்ப்பிப்பதன் மூலம், உங்களை வாழவைக்கும் சித்த மருத்துவ துறையை, நீங்கள் வாழ வைப்பீர்கள், இதுதான் சித்தமருத்துவ துறைக்கு நீங்கள் செய்யும் நன்றிக்கடன் ஆகும், அடுத்த தலைமுறைக்கும் நம் அறிவியல் போய்சேரும். பிற ஆராய்ச்சியாளர்களுக்கும் நம் மகத்துவம் தெரிய வரும். ஏற்கனவே ஆராய்ச்சியில் அனுபவம் உள்ள நண்பரை துணைக்கு வைத்துக்கொண்டு நாமும் ஆரம்பிக்கலாமே. 12. Blog, website வைத்து கொள்வோம் Google ல் சிறுநீரகக் கல்லடைப்பை பற்றி ஒரு அமெரிக்க தமிழர் தட்டினால், உலகெங்கும் உள்ள அத்தனை தகவல்களும் அவருக்கு உடனே கிடைக்கும். பின்னர், இந்தியாவில் யாராவது அதற்கு மூலிகை வைத்தியம் செய்கிறார்களா என்று தேடும்போது, நேராக கேரளாவில் ஒரு முகவரியை காட்டும். அடுத்த முறை தமிழகம் வரும்போது, அவர் சித்த மருத்துவரை விட்டு விட்டு, கேரளாவுக்கு செல்ல நேர்கிறது. நம் ஊரில் சித்த மருத்துவர்கள் எவருமே இல்லையா? எங்களை உங்கள் கண்களுக்கு தெரியாதா? என்றெல்லாம் நாம் கோபப்படாமல், நாம் ஏன் வெளியே தெரியாமல் இருக்கிறோம், நம்மிடம் எல்லா திறமைகளும் இருக்கிறதே, நல்ல சித்த மருந்துகள் இருக்கிறதே, நம்மை எப்படி வெளியே கொண்டு வருவது, மக்களின் நம்பிக்கையை பெறுவது என்று யோசித்தால், நாம் செய்ய வேண்டிய ஒன்று, நமக்கென ஒரு Blog அல்லது website வைத்து கொள்வதுதான். பல நேரங்களில், நல்ல சித்த மருத்துவரை நான் எனக்கு தெரிந்த வெளிநாட்டு நோயாளிகளுக்கு பரிந்துரை செய்த போதும், Google ல் அவர்கள் பெயர்கள் அல்லது அவர்களின் சித்த மருத்துசாலை வராததால், அந்த சித்த மருத்துவரை நம்பாமல் கேரளா சென்ற கதை நிறைய உண்டு. சித்த மருத்துவர்களாகிய உங்களை பொய் சொல்ல சொல்லவில்லை, நீங்கள் என்ன சிகிட்சை செய்கிறீர்கள், என்ன வசதிகள் உங்கள் மருத்துவசாலையில் உள்ளது, உங்கள் தொடர்பு எண்கள், இமெயில், முகவரி, போன்றவைகளை உள்ளடக்கிய Blog அல்லது website இருந்தால் இன்றைய இணைய உலகில் நீங்கள் அங்கீகரிக்கப்படுவீர்கள்.. போலி வைத்தியர்கள் எல்லாம் அட்டகாசமாக தன்னை விளம்பரம் செய்யும் போது, திறமை வாய்ந்த சித்த மருத்துவர் கண்டிப்பாக தன்னை மக்களுக்கு அறிவித்து கொள்ள வேண்டாமா. பிற மருத்துவர்களுக்கு கூட தமது நோயாளிகளை உங்களிடம் பரிந்துரை செய்வதற்கு இது அவசியம்தானே. அதில் உங்களிடம் குணமான நோயாளிகளின் வாக்குமூலங்களையும் போட்டு வைக்கலாம். சமூக வலைத்தளங்களாகிய Blog, website, YouTube, Facebook போன்ற ஊடக சாதனங்கள் வாயிலாக மிக எளிதில் பல கோடி மக்களை நீங்கள் சென்றடையலாம். சித்த மருத்துவம் குறித்த பல அடிப்படை கருத்துக்களை பதிவிடும்போது, மக்கள் மேலும் தெரிந்து கொள்ளவும், வைத்தியம் பார்க்கவும் கண்டிப்பாக தங்களை நாடுவர். “சொல்லாத காதல் எல்லாம், மீட்டாத வீணையை போல்” என்ற சினிமா பாடல் வரிகள் போல, website இல்லாத சித்தர்சாலை, முகவரி இல்லாத சாலை என்பதை மறக்க வேண்டாம். 13. அறிவியலுக்குள் (அறிவியலாளர்கள் கூட்டத்தில்) ஐக்கியமாவோம் சிகாகோ நகருக்கு, சில வருடங்களுக்கு முன்னால் நான் சென்றிருந்த போது, ‘சிகாகோ தமிழ் அன்பர்கள்’ சார்பாக சித்த மருத்துவ நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.. அதைப்பற்றி WhatsApp மூலம் தகவல்கள் பரிமாறி கொள்ளப்பட்டது. அன்றைய தினத்தில் எதிர்பார்த்ததை விடவும் அதிக அளவு மக்கள் வந்திருந்தனர். பல புதிய இளம் முகங்களை முதன் முதலாக சிகாகோ தமிழ் அன்பர்கள் பார்த்தனர். சித்த மருத்துவம் என்றாலே, ஒரு சாமியார் வருவார், ஆன்மிகம் பேசுவார், பாடல் பாடுவார், செந்தமிழில் பேசுவார், பழமை பேசுவார், எதை எடுத்தாலும் ஆன்மீகத்தை மையமாக வைத்தே பேசுவார், இன்றைய கால கட்டத்துக்கு ஏற்ப அறிவியலை மையப்படுத்தி பேசமாட்டார், என்றெல்லாம் சித்த மருத்துவர்களை பற்றிய எண்ணம் இருந்ததால், பல நேரங்களில், கற்ற தமிழர்கள் சித்த மருத்துவம் பக்கம் தலைவைத்து படுப்பதில்லை. மணிப்பால் பல்கலைகழகத்தில் இருந்து ஒருவர் சித்த மருத்தவம் குறித்து பேச இருக்கிறார் என்பதால் கண்டிப்பாக, அறிவியல் அடிப்படையில்தான் அவர் பேசுவார் என்ற ஒரு யூகத்தின் அடிப்படையில் தான் அன்றைய தினத்தில் பலர் வந்து இருந்தனர். இது ஒன்றை நமக்கு தெளிவாக காட்டுகிறது. சித்த மருத்துவம் நமது பரம்பரை சொத்துதான், இருப்பினும் அறிவியல் என்ற மொழியில் இதை பேசாவிட்டால், நமது அடுத்த தலைமுறையும், உலகெங்கும் பரந்துகிடக்கும் தமிழ் சமுதாயமும் இதை ஏற்று கொள்ளபோவதில்லை. அப்படி இருக்க, தமிழர் அல்லாத பிற மக்களிடம் இதை எடுத்து செல்வது எவ்வாறு சாத்தியமாகும்? எனவே நமக்கு இருக்கும் ஒரே ஆயுதம் அறிவியல்தான். அறவியல் அடிப்படையில் அமைந்துள்ள சித்த மருத்துவத்தை அறிவியல் அடிப்படையில் சொல்ல முயற்சி செய்வோம். குறைந்த அளவு, நமக்கு தெரிந்த அறிவியல் ஆராய்ச்சியாளர்களிடம் நாம் இதைப்பற்றி பேசலாம். நம் அருகில் உள்ள கல்லூரிகளில் உள்ள பேராசிரியர்களிடம் இதை பற்றி பேசலாம். அங்குள்ள மாணவர்கள் சித்த மூலிகைகளை அறிவியல் ஆராய்ச்சிக்கு உட்படுத்தி thesis ஆக செய்ய வாய்ப்பு உள்ளது. உங்கள் மருத்துவசாலையில், நீங்கள் வெற்றிகரமாக பயிற்சி செய்யும் மருந்துகளை பற்றி வெளியில் சொல்லுங்கள், எழுதுங்கள், அறிவியல் அரங்குகளில் பேசுங்கள். அப்போது, அதில் ஆர்வமுள்ள அறிவியல் ஆராய்ச்சியாளர்கள், அதை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்வர். ஒவ்வொரு முறையும் நாம் அரசியல்வாதியிடம் வேலை வேண்டும் என்று கேட்கும்போதும் அவர்கள் நம்மை பார்த்து கேட்கும் ஒரே கேள்வி, “எங்கள் ஊருக்கு சித்த மருத்துவமனை வேண்டும் என்று எந்த மக்களாவது போராடுகிறார்களா? அப்படி போராடினால் உடனடியாக உங்களுக்கு வேலை தரப்படும்”. BSMS படித்த பட்டதாரி சித்த மருத்துவர் மட்டும் சித்த மருத்துவத்தை வளர்த்து எடுக்க முடியாது என்பதுதான் இதன் உட்பொருள். மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்படும் சித்த மருத்துவம் குறித்த விழிப்புணர்வுதான், சித்த மருத்துவர்களின் வாழ்வாதாரத்தை முடிவு செய்கிறது. வெறும் இரண்டாயிரம் பேர் மட்டும் இருந்து கொண்டு இந்த துறையை முன்னேற்ற பாதையில் எடுத்து செல்வது இயலாத காரியம். சித்த மருத்துவ கருத்துக்களை அறிவியல் அறிஞர்களிடம் கொண்டு சேர்த்தால், அவர்கள் அதை மக்களிடமும், ஆட்சியாளர்களிடமும், உலக அரங்கிலும் எளிதில் கொண்டு செல்லும் வல்லமை அவர்களுக்கு உண்டு. அறிவியல் அறிஞர்கள், தமிழ் அறிஞர்கள், மற்றும் எல்லா துறையினரின் உதவியோடுதான் சித்த மருத்துவம் என்னும் தேர் இழுக்கப்பட வேண்டும், இழுக்கப்பட முடியும். 14. நமக்குள் கருத்துகளை பரிமாறிக்கொள்வோம் காலம் காலமாக நாம் பயன்படுத்தி வரும் ஒரு மருந்து சந்தர்ப்ப சூழலில் வேறு ஒரு நோய்க்கு குணம் தருமாயின் அதை drug repositioning என்று அழைப்பர். உதாரணமாக, நீர்கோவை மாத்திரை என்பது sinusitis நோயில் காணும் தலைவலிக்கு நீரில் உரைத்து நெற்றியில் பூச வேண்டிய மருந்து ஆகும். ஒருநோயாளிக்கு, இதை பூசி வரும்போது, நெற்றியில் இருந்த மருவும் (warts) மறைந்ததை கண்ட எனது மருத்துவ தோழி, அதை மற்றைய மரு நோயாளிகளுக்கும் கொடுத்து நல்ல பலன் அடைந்ததை என்னிடம் பகிர்ந்து கொண்டார். என்னிடம் அவர் சொல்லியிருக்காவிட்டால், நானும் தெரிந்து கொள்ள முடியாது, உங்களிடம் இதைப்பற்றி எழுதியிருக்கவும் முடியாது. இதை உரிய முறையில் ஆவணமாக்கி, அறிவியல் உலகத்துக்கும், சித்த மருத்துவர் உலகத்துக்கும் நாம் தெரியப்படுத்த வேண்டும். தற்போது, சித்த மருத்துவர்கள் WhatsApp group, Facebook group, Telegram group போன்ற குழுக்கள் ஏற்படுத்தி அவற்றின் மூலம், மருத்துவ பயிற்சியின் அனுபவங்களை தங்ககுள்ளுள் பகிர்ந்து கொள்வது ஆரோக்கியமான ஒன்று. இங்கு ஒரு உண்மை சம்பவத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஒருநாள் எனக்கு முகநூலில் ஒருவர் புற்று நோய்க்கு சித்த மருத்துவத்தில் என்ன இருக்கிறது என்றும் தான் ஒரு MD படித்த ஆங்கில மருத்துவர் என்றும் செய்தி அனுப்பி இருந்தார். மகாராஷ்டிராவை சேர்ந்த அந்த மருத்துவருக்கு தமிழ் தெரியாது, சித்த மருத்துவம் தெரியாது. ஆனால் அவருக்கு மருத்துவ அறிவியலும் ஆங்கிலமும் தெரியுமாதலால், நான் எழுதி இருந்த புற்று நோயை பற்றிய ஒரு ஆராய்ச்சி கட்டுரையை படிக்க நேர்ந்ததாகவும், அதன் பின்னர்தான் சித்த மருத்தில் cancer நோயை புற்று நோய் என்று சொல்லியிருப்பதைப் பற்றி அவருக்கு தெரிய வந்ததாகவும் சொன்னார். அவரின் மருத்துவமனைக்கு என்னை அழைத்து சித்த மருத்துவமும் புற்று நோயும் பற்றி சொல்லிதர கேட்டிருந்தார். சித்த மருத்துவம் மீது கொண்ட தீராத காதலால், ஹிந்தி மற்றும் மராட்டி மொழி தெரியாத போதும், நான் எப்படியோ தட்டு தடுமாறி அங்கு சென்று சேர்ந்தேன். முப்பது படுக்கை வசதி, அறுவை சிகிட்சை வசதி, அவசர மருத்துவ வசதி மற்றும் Intensive care unit வசதி கொண்ட அந்த மருத்துவமனையை, ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து மருத்துவர்கள் சேர்ந்து Mhaswad என்ற இடத்தில் நடத்தி வருகிறார்கள். ஒரு நாள் முழுவதும் சித்த மருத்துவத்தின் பெருமைகளை அவரிடம் எடுத்தியம்பி கொண்டு இருந்த என்னை, பல அறிவியல் பூர்வமான கேள்வி கணைகளால் துளைத்து எடுத்தார். சளைக்காமல் என்னால் முடிந்த அளவு பகிர்ந்துகொண்டேன். அதன்பின்னர், அவர் புற்று நோய், தோல் நோய்கள், காமாலை, நீரிழிவு போன்ற நோய்களில் என்னுடைய ஆலோசனையின் பேரில், சித்த மருந்துகளை சேர்த்து கொடுத்து, பல அதிசயங்களை நிகழ்த்தி உள்ளார். தனது மனைவி (MBBS) கர்ப்பிணியாக இருந்த போது, பாவன பஞ்சாங்குல தைலம் என்ற சித்த மருந்தை நான் சொன்னதன் பேரில், கொடுத்து இயற்கை முறையிலேயே பிரசவம் நடந்தது கண்டு அதிசயித்துப் போனது என்னமோ நான்தான். அவர் மூலம், எனக்கு தற்போது சித்த மருத்துவத்தில் நம்பிக்கை பன்மடங்காக உயர்ந்து இருக்கிறது. அந்த அளவுக்கு அவர் சித்த மருத்துவம் மீது நம்பிக்கை கொண்டு உள்ளார். இன்றோ, அவர் மருத்துவ மனைக்கு வரும் எல்லா கர்ப்பிணி பெண்களும் இந்த தைலத்தை உட்கொள்ளுகிறார்கள், Intensive care unit க்குள் உள்ள நோயாளிகளுக்கு அகத்தியர் குழம்பு கொடுத்து அசத்துகிறார், சித்தாத்தி எண்ணெய் இல்லாமல் அவரது மருத்துவமனை இயங்காது. பல பெருமருந்துகளை கொடுத்து பார்த்த பிறகு என்னிடம் அவர் சொன்னது “டாக்டர்.. ஆயுர்வேத மருத்துவ முறை என்பது General Practice போல உள்ளது. ஆனால் சித்த மருந்துகள் என்பதை நான் specialty and superspeciality உயரத்தில் வைத்து பார்க்கிறேன். மிக மிக குறைந்த செலவில், நோயாளிகளுக்கு சித்த மருந்துகளால் மட்டுமே சேவை செய்ய முடியும். இனி எனது மருத்துவமனையில் ஒரு சித்த மருத்துவ பிரிவை ஆரம்பிக்க விரும்புகிறேன். எனக்கு தெரிந்த சில மருந்துகளே அற்புதம் செய்கின்றன. அப்படி என்றால் முழு சித்த மருத்துவத்தையும் நாம் வெளியே கொண்டு வந்தால் மட்டுமே, முழு ஆரோக்கியம் சாத்தியம்”. இந்த வாக்கு, நான் வெளியிட்ட ஒரே ஒரு அறிவியல் ஆராய்ச்சி கட்டுரையின் விளைவால் நடந்தது ஆகும். எனவே நமக்குள், சித்த மருத்துவம் குறித்த கருத்துக்களை நாம் பரிமாறிக் கொள்ள தயங்க வேண்டாம். பிற மருத்துவர்களிடம் நாம் அறிவியல் பூர்வமாக சொன்னால் மட்டுமே அதை அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள். நம்மை நாமே அறிவில் வளர்த்துக்கொள்ள ஒரே வழி, நமக்குள் கருத்துக்களை பரிமாறி கொள்வதே. 15. Get support from Well-wishers and philanthropist to invest/open siddha clinic பொதுவாக சித்த மருத்துவர்கள்தான், சித்த மருத்துவமனையை நிறுவி நடத்தி வருகின்றனர். பெரும்பாலான சித்த மருத்துவர்கள், நடுத்தர குடும்பத்தை சார்ந்தவர்களாதலால், அவர்களால் அதிகம் பணம் செலவு செய்து சித்தர்மனைகள் அமைப்பது கடினமாக இருக்கும். மக்கள் அதிகம் நடமாடும் இடங்களில் அதிக வாடகைக்கு அறைகள் எடுத்து கிளினிக் நடத்துவதும் பல நேரங்களில் சாத்தியம் இல்லை. தன்னை ஒரு நிலைக்கு கொண்டு வருவதற்குள் ஆயுள் முடிந்து விடுவதால், அடுத்து என்ன என்பதை பற்றி நினைக்க நேரமில்லாமல் போய் விடுகிறது. அதற்கு நாம் ஒரு சிறிய முயற்சி செய்யலாம். அருகில் உள்ள நவீன மருத்துவமனை, சித்த மெடிக்கல் கடைகளில் இடம் கேட்கலாம். அதற்கு குறைந்த வாடகை அல்லது, வாடகை இல்லாமல் வசூல் செய்யப்படும் பணத்தில் பாதிக்கு பாதி, என்ற விகிதத்தில் பேசி மருத்துவமனை நடத்துவதன் மூலம், பல செலவுகளை குறைக்கலாம். ஊரில் உள்ள செல்வந்தர்கள், வசதி படைத்தவர்களிடம் மனம் திறந்து பேசி உதவி கேட்டால், அவர்களே முன்வந்து, அவர்களின் இடத்தில் அல்லது கட்டடத்தில் ஒரு அறை நமது சித்த மருத்துவமனைகாக தர வாய்ய்பு உள்ளது. சித்த மருத்துவமனையின் நன்மைகள், மக்களின் ஆரோக்கியம் மற்றும் அதில் இருந்து வருவாய் ஈட்டுதல் போன்றவைகளை எடுத்துரைத்தால், அவர்கள் அதை எளிதில் புரிந்து கொள்வார்கள். சித்த மருத்துவ துறையில் முதலீடு செய்வது அவர்களுக்கு ஒரு சிறிய விடயம்தான். மேலும், நற்பணி மன்றங்கள், பள்ளிகள், பொதுநல சமுதாய கூடங்கள், சாதி சங்க கட்டடங்கள், மத அமைப்பின் கட்டடங்கள், உள்ளூர் அரசியல் வாதியின் கட்டடம், என எதையும் விட்டுவிட வேண்டாம். “கேளுங்கள் தரப்படும், தட்டுங்கள் திறக்கப்படும், தேடுங்கள் கிடைக்கும்” என்ற வாக்குக்கிணங்க, நாம் தட்டிக் கொண்டேதான் இருக்க வேண்டும். கண்டிப்பாக உங்களுக்காகவே கதவுகள் காத்துகிடக்கத்தான் செய்யும். யார் யாரெல்லாமோ நம்ம ஊரில் பிழைக்கும் போதும், சித்த மருத்துவம் படித்த நம்மால் ஏன் நன்றாக வாழ முடியாது? சித்த மருத்துவர்களின் முன்னேற்றம்தான் சித்த மருத்துவத்தின் முன்னேற்றம். எனவே சித்த மருத்துவர்களின் முன்னேற்றம் நம் துறையின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியம். “வாழ நினைத்தால் வாழலாம், வழியா இல்லை உலகிலே” என்பது போல, வாய்ப்புகளை நாம்தான் உருவாக்க வேண்டும். மனமிருந்தால் மார்க்கம் உண்டு என்பதற்கிணங்க, மனம் வைப்போம், சித்தர்கள் அருளால் வாழ்வில் உயர்வோம். நாளை நமதே. சித்தம் தெளியும் (சித்தம் வளரும்)
|
||||||||
by Swathi on 05 Sep 2018 2 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | ||||||||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|