LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

செயற்கை நுண்ணறிவுப் பாதையில் தமிழ் மொழி...” - முதல்வர் ஸ்டாலின் கணித்தமிழ் மாநாடு வாழ்த்து செய்தி.

“செயற்கை நுண்ணறிவு யுகத்தில் மொழித் தொழில்நுட்பத்துக்காக இந்தியாவிலேயே முதன்முதலாக மாநாடு நடத்துவது தமிழக அரசுதான் என்று சொல்லிக் கொள்வதில் பெருமை அடைகிறேன். குறுஞ்செய்தி முதல் அனைத்துத் தொடர்புகளையும் முடிந்த வரை தமிழில் கையாண்டால் தலைமுறைகள் தாண்டியும் தமிழ் வாழும்” என முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். செயற்கை நுண்ணறிவுப் பாதையில் தமிழ்மொழியை வெற்றிகரமாகப் பயணிக்க வைக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

 

பன்னாட்டுக் கணித்தமிழ் மாநாட்டு நிறைவு விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலினின் வாழ்த்துச் செய்தியைத் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வாசித்தார். அதில், “ஓலைச்சுவடிக் காலத்திலிருந்து இன்றைய ஆண்ட்ராய்டு காலம் வரையிலும் அனைத்திலும் கோலோச்சி வரும் மொழியாக நமது அன்னைத் தமிழ் மொழி இருப்பது நமக்கெல்லாம் பெருமை. முன்னைப் பழமைக்கும் பழமையாய் - பின்னைப் புதுமைக்கும் புதுமையாய் நம் தமிழ்மொழி இருப்பதைவிட நமக்கு வேறு பெருமை வேண்டுமா?

 

வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் தமிழ்மொழியின் நிலையைக் குறித்து ஆராயவும் விவாதிக்கவும், புதிய சிந்தனைகளை உருவாக்கிக் கொள்ளவும், இளம் திறமையாளர்களை அடையாளம் காணவும், ‘பன்னாட்டுக் கணித்தமிழ் - 24’ என்கிற மாநாடு தமிழ்நாடு அரசின் சார்பில் தமிழ் இணையக் கல்விக் கழகம் சார்பில் பிப்ரவரி 8,9,10 ஆகிய நாட்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சிக்குரியது. கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே தோன்றிய தமிழை, கணினிக் காலத்தில் மட்டுமல்ல, அடுத்து வரும் எந்தக் காலத்துக்கும் நிலைநிறுத்தும் முயற்சியே இந்த மாநாடு ஆகும். பழம்பெருமை பேசிக் கொண்டு மட்டுமே இருப்பவர்கள் அல்ல நாம்; பழம்பெருமையைத் தக்க வைத்துக் கொள்ளவும் எந்நாளும் சிந்தித்துக் கொண்டு இருப்பவர்கள் நாம்.

 

தமிழ் 99 விசைப்பலகை’ 

 

இணையப் பயன்பாட்டாளர்கள் எண்ணிக்கையில் இந்தியா இரண்டாம் இடத்தில் இருக்கிறது. அதில் மாநிலவாரியாகப் பார்த்தால் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக ஐஏஎம்ஏஐ என்ற தொலைத்தொடர்பு ஆய்வகத்தின் அறிக்கை கூறுகிறது. பன்னாட்டுக் கணித்தமிழ் - 24 என்ற இந்த மாநாடு, ‘தமிழ் நெட் - 99’ என்ற மாநாட்டை நடத்திய கருணாநிதியின் நூற்றாண்டில் நடைபெறுவது மிகமிகச் சிறப்பானதாகும்.

 

 

1999-ஆம் ஆண்டு Tamilnet-99 என்ற மாநாட்டின் மூலமாகத்தான் ‘தமிழ் 99 விசைப்பலகை’ உருவாக்கப்பட்டது. தமிழக அரசால் அது அங்கீகரிக்கப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டது. இன்றைக்கு அனைத்துத் தொழில் நுட்ப வடிவங்களிலும் தமிழைப் பயன்படுத்துகிறோம் என்றால் அதற்கு விதை போட்டவர் கருணாநிதி. அதன் பின் 5.7.2000 அன்று தமிழ் இணையக் கல்விக்கழகம் தோற்றுவிக்கப்பட்டது.

 

பன்னாட்டுக் கணித்தமிழ் -24 என்ற மாநாட்டையும் இதே தொலைநோக்குப் பார்வையுடன்தான் நடத்துகிறோம். ஆங்கிலத் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுவரும் Natural Language Processing Tools (NLPT), செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence), இயந்திர வழிக் கற்றல் (Machine Learning), Machine Translation (MT), Sentimental Analysis (SA), Large Language Model (LLM), Automatic Speech Recognition (ASR) போன்றவற்றைத் தமிழில் உருவாக்கும் முயற்சியாக இந்த மாநாடு நடைபெற்றுள்ளது.

 

ஒவ்வொரு நாளும் தொழில்நுட்பம் வளர்ந்து வருகிறது. தொழில்நுட்பத்தில் மொழியின் முக்கியத்துவம் அதிகரித்தும் வருகிறது. எந்த விதமான தொழில்நுட்பம் வந்தாலும் அவை அனைத்திலும் தமிழ் வாழ வேண்டும், ஆள வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கமாகும். மொழி வாழ்ந்தால் இனம் வாழும். மொழி தாழ்ந்தால் இனம் தாழும். ‘தமிழை வளர்த்து தமிழனை உயர்த்துவோம்’ என்பதுதான் எமது அரசின் நோக்கம்.

 

தமிழில் தொழில்நுட்பச் சேவைகள்

 

எப்போது தோன்றியது என்று கண்டறியப்பட முடியாத தமிழ்மொழியை, எப்போதும் சிறப்புற வைக்க இந்தப் பன்னாட்டுக் கணித்தமிழ் மாநாடு 24 அடித்தளம் அமைக்கும் என்பதில் துளியளவும் அய்யமில்லை. செயற்கை நுண்ணறிவு யுகத்தில் மொழித் தொழில்நுட்பத்துக்காக இந்தியாவிலேயே முதன்முதலாக மாநாடு நடத்துவது தமிழக அரசுதான் என்று சொல்லிக் கொள்வதில் பெருமை அடைகிறேன். இந்தியாவில் வேறு எந்த மாநிலமும் மொழிக்காக முன்னெடுக்காத பெருந்திட்டம் இந்த மாநாடு. மொழி காக்க உயிரையே கொடுத்தவர்கள் தமிழர்கள் என்பதும் நமது வரலாறுதான்.

 

செயற்கை நுண்ணறிவு (AI), அதிகளவில் மொழி மாதிரிகளை உருவாக்குதல் (LLM), டிஜிட்டல் உள்ளடக்க உருவாக்கம், கற்றல் கற்பித்தல் தொழில்நுட்பம், மின் ஆளுமை ஆகிய தளங்களில் இம்மாநாடு நடைபெற்றுள்ளது. 2023-24-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் தமிழ்க் கணினிப் பன்னாட்டு மாநாடு நடைபெறும் என்பதை அறிவித்தோம். 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறும் என்று கடந்த அக்டோபர் மாதம் நான் அறிவிப்பை வெளியிட்டேன்

 

செயற்கை நுண்ணறிவுப் பாதையில் தமிழ்மொழியை வெற்றிகரமாகப் பயணிக்க வைக்க வேண்டும். தொழில்நுட்பங்களுக்கு ஏற்பத் தமிழ்மொழி, தகவமைக்கப்பட வேண்டும். ஆங்கிலம் போன்ற மொழிகளைப் போலத் தமிழில் தொழில்நுட்பச் சேவைகள் அனைத்தும் கிடைக்கத் தமிழக அரசும் ஆவன செய்யும். உலகளாவிய நிறுவனங்கள் வெளியிடும் மென்பொருட்கள் மற்ற மொழிகளில் வெளியாகி, தமிழுக்குக் காலதாமதமாக வருகிறது. இந்த இடைவெளியை குறைத்தாக வேண்டும். ஆங்கிலம் போன்ற மொழிகளுக்கு மென்பொருட்கள் வரும்போதே தமிழுக்கும் வந்தாக வேண்டும்.அத்தகைய பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தமிழ்மொழி சார்ந்த வளத்தையும் வழிகாட்டுதல்களையும் தமிழக அரசு வழங்கும்.

 

இளைய தலைமுறையினர் அனைத்துத் தகவல் தொழில்நுட்பங்களிலும் தமிழை அதிகம் பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். குறுஞ்செய்தி முதல் அனைத்துத் தொடர்புகளையும் முடிந்த வரை தமிழில் கையாண்டால் தலைமுறைகள் தாண்டியும் தமிழ் வாழும். தமிழர்களும், தமிழகத்திலிருந்து புலம்பெயர்ந்து உலகின் பல நாடுகளில் வாழ்பவர்களும் இணைய வழியாகத் தமிழ்ப் பாடங்களைப் படிக்க வேண்டும்.

 

தமிழ் ஆர்வத்தை, தமிழ் அறிவாக அனைவரும் மாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். உலகின் பல்வேறு பல்கலைக்கழகங்கள், தமிழ்மொழி கற்பிப்பு, ஆய்வுக்கு வாய்ப்பை ஏற்படுத்தித் தந்துள்ளது. அதனை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தொல்லியலையும் தொழில்நுட்பத்தையும் ஒருசேரப் பற்றி நிற்போம். துறைதோறும் தமிழ்த் தொண்டு ஆற்றுவோம். தமிழைப் புத்தொளி பெற வைப்போம்” என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

by Kumar   on 15 Feb 2024  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஊத்தங்கரையில் 300 ஆண்டுகளில் இல்லாத மழை ஊத்தங்கரையில் 300 ஆண்டுகளில் இல்லாத மழை
நீண்ட நாட்களுக்குப் பின் தஞ்சையில் தமிழ்க்கூடல்…வருக... நவம்பர் 23, 24 நீண்ட நாட்களுக்குப் பின் தஞ்சையில் தமிழ்க்கூடல்…வருக... நவம்பர் 23, 24
மதுரா ட்ராவல்ஸ் கலைமாமணி Dr.V.K.T. பாலன் அவரது மறைவுக்கு புகழஞ்சலி மதுரா ட்ராவல்ஸ் கலைமாமணி Dr.V.K.T. பாலன் அவரது மறைவுக்கு புகழஞ்சலி
அண்ணா நூற்றாண்டு நூலக செந்தமிழ்ச் சிற்பிகள் பட்டியல் அண்ணா நூற்றாண்டு நூலக செந்தமிழ்ச் சிற்பிகள் பட்டியல்
தமிழ்நாட்டு வணிகர்களின் தலைவர் த.வெள்ளையன்  அவர்கள் மறைவுக்கு அஞ்சலி தமிழ்நாட்டு வணிகர்களின் தலைவர் த.வெள்ளையன் அவர்கள் மறைவுக்கு அஞ்சலி
கணிதமேதை சீனிவாச இராமானுசன் அவர்களுக்கு சென்னையில் அருங்காட்சியகம் நடத்தும் கணித ஆர்வலர் கணிதமேதை சீனிவாச இராமானுசன் அவர்களுக்கு சென்னையில் அருங்காட்சியகம் நடத்தும் கணித ஆர்வலர்
பழங்காலச் சுவடிகளைச் செம்மொழி நிறுவனத்திடம் ஒப்படைத்த மாணவர்கள் பழங்காலச் சுவடிகளைச் செம்மொழி நிறுவனத்திடம் ஒப்படைத்த மாணவர்கள்
பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.