சிறுமியர் குழுவாக இணைந்து ஆடும் விளையாட்டு இது. சிறுமியர் பூக்குழு, பூப்பறிக்கும் குழு என இரு குழுக்களாகப் பிரிந்து எதிர்எதிர் வரிசையில் நின்று கொள்வர். பூக்குழுவில் இடம்பெறும் சிறுமியர் ஒவ்வொருவரும் ஒரு பூவின் பெயரைத் தங்களுக்குச் சூட்டிக் கொள்வர் (சிலர் தங்கள் பெயருக்குப் பின்னால் தேவி பூ, கமலா பூ, எழில் பூ என்று சூட்டிக் கொள்வதும் உண்டு). யார் யார் எந்தப் பூவின் பெயரைச் சூட்டியுள்ளனர் என்பது பூப்பறிக்கும் குழுவிற்குத் தெரியாது. பூப்பெயர் தெரியாத நிலையில் தேவி பூ, கமலா பூ என்று பெயரைக் குறிப்பிட்டே அழைப்பதும் உண்டு. பூப்பறிக்கும் குழுவினருக்குத் தனிப் பெயர் சூட்டப் படுவதில்லை.
முதலில் பூப்பறிக்கும் குழு எதிர்வரிசையில் நிற்கும் பூக்குழுவை நோக்கி, "பூப்பறிக்க வருகிறோம்", "பூப்பறிக்க வருகிறோம்" என்று பாடிக் கொண்டே முன்னேறிச் செல்வர். பின்பு பூக்குழுவினர் "எந்தப் பூவைப் பறிக்கிறீர்?" "எந்தப் பூவைப் பறிக்கிறீர்?" என்று பாடிக் கொண்டு முன்னோக்கி வருவர். பூக்குழு முன்னோக்கி வரும்போது பூப்பறிக்கும் குழுவினர் பின்னோக்கிச் செல்வர். மீண்டும் பூப்பறிக்கும் குழுவினர் "தேவி பூவைப் பறிக்கிறோம்", "தேவி பூவைப் பறிக்கிறோம்" என்று பாடிக் கொண்டு முன்னோக்கிச் செல்வர். இப்படியாக இரு குழுவினரும் பாடிக் கொண்டே முன்னோக்கியும் பின்னோக்கியும் சென்று வருவர்.
இறுதியில், பறிக்கப் போகும் பூ அடையாளப் படுத்தப்பட்டவுடன்
அடையாளப் படுத்தப்பட்ட சிறுமியும் பூவைப் பறிக்கும் குழுவிலிருந்து ஒரு சிறுமியும் முன்னால் வந்து எதிர்எதிர் நின்று கொள்வர். குழுவிலுள்ள ஏனையோர் ஒருவர் பின் ஒருவராகக் கயிறு இழுக்கும் போட்டியில் நிற்பதைப் போல் நின்று கொள்வர். பின் பூப்பறிக்கும் குழுவினர் தாங்கள் விரும்பிய பூவைத் தங்கள் பக்கம் இழுக்க முயற்சி மேற்கொள்வர். பூவைப் பறித்துத் தங்கள் பக்கம் சேர்த்துக் கொண்டு மீண்டும் விளையாட்டைத் தொடருவர். கடைசிப் பூவைப் பறிக்கும் வரை விளையாட்டுத் தொடர்ந்து கொண்டே இருக்கும். (இவ்விளையாட்டில் இடம்பெறும் பாடல் விளையாட்டுப் பாடல்கள் என்னும் பகுதியில் முழுமையாகத் தரப்பட்டுள்ளது.)
|
பூக்களின் பெயர்களை அறிதல், மாதங்களின் பெயர்களை அறிதல், இழுவைப் போட்டி, உடல் திறன் என்று மகிழ்ச்சியாக இவ்விளையாட்டு ஆடப்பெறும்.
|
சிறப்பு
|
சிறுமியர் விளையாட்டில் ஓடுதல், குதித்தல், சுழலுதல், நொண்டுதல், பாடுதல் என்ற செயல்கள் முதன்மையாய் அமைகின்றன. மேலும், கீழ்ப்படிதல், பொறுப்புடன் நடந்து கொள்ளுதல், பாதுகாப்புணர்வு போன்றவற்றின் பயிற்சிக் களமாகவும் சிறுமியர் விளையாட்டுகள் அமைந்திருப்பது குறிப்பிடத் தக்கதாகும்.
|
|