-சாவித்திரிகண்ணன்
சுண்டியிழுக்கும் சுவை, மறக்க முடியாத ருசி, ஏகப்பட்ட மருத்துவகுணங்கள் கொண்டவை நம் பாரம்பரிய அரிசிகள்!
அந்தந்த மண்ணுக்கேத்த தரம், ருசி, மணம், வடிவம் கொண்டவை நம் பாரம்பரிய அரசி ரகங்கள்!
இன்றைக்கும் பாரம்பரிய நெல்ரகங்களை மட்டுமே பயிரிடும் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தமிழ்நாட்டில் இருக்கத்தான் செய்கிறார்கள்!
அப்படிப்பட்ட பாரம்பரிய அரிசிகளைத் தவிர மற்றவற்றை விரலாலும் தீண்டமறுக்கும் பல ஆயிரக்கணக்கான குடும்பங்களும் உள்ளன!
பாரம்பரிய நெல் என்பவை இந்த தமிழ்மண் நமக்குத் தந்த வரம்! அதற்கு தேவையில்லை ரசாயண உரம்! அவை அத்தனையும் உன்னதத்தரம்! அரிசி என்றால் பச்சரிசி அல்லது புழுங்கலரிசி என்பதைக் கடந்து, வேறொன்றும் தெரியாத - தங்களை மெத்த படித்த அறிவாளிகளாக கருதிக்கொண்டிருக்கும் - ஆனால் அடிப்படையில் அறியவேண்டியவற்றை அறியாமல் உழன்று கொண்டிருக்கும் - கோடிக்கணக்கானவர்கள் இன்று உள்ளனர். ஐயோ பரிதாபம்...! இந்த தேசத்தின் உண்மையான சொத்து என்ன? சுகம் என்ன? இயற்கை தந்துகொண்டிருக்கும் கற்பகத்தரு என்ன? என்பதைத் தெரியாமலே பலர் வாழ்ந்தும் மடிந்தும் போய் விடுகின்றனர்!
50 வருஷத்திற்கு முன்பு வரை கூட நாம் பாரம்பரிய அரிசி ரகங்களை மட்டுமே உண்டு வாழ்ந்தோம் என்பது பொய்யாய் பழங்கதையாய் போனதுவோ....?
மணப்பாறை மாடுகட்டி மாயவரம் ஏரு பூட்டி... பாடலில்,
"ஆத்தூரு கிச்சிலிச்சம்பா பாத்து வாங்கி விதைவிதைச்சு..." என்ற வரி ஞாபகம் இருக்கிறதா?
தைப்பிறந்தால் வழிபிறக்கும் தங்கமே தங்கம் தங்கச்சம்பா நெல்விளையும் தங்கமே தங்கம் பாடல் ஞாபகம் இருக்கிறதா? இந்தத் தலைமுறையில் எத்தனைபேர் கிச்சலிச்சம்பா, தங்கச்சம்பா சோறு சாப்பிடும் வாய்ப்பு பெற்றுள்ளனர்? அடடா, அந்தச்சுவையை எழுத்தில் சொல்லக் கைகூடுமா?
அதையெல்லாம் சாப்பிட்டு வந்தால் நமக்கு நோய்நொடி தான் வருமா? எப்போது நம் பாரம்பரிய நெல்ரகங்கள் முழுமையான பயன்பாட்டுக்கு வருகிறதோ? அன்றைக்கு தான் தமிழர்களின் ஆரோக்கியம் சிறக்கும்! அப்போது இங்கே மருத்துவர்களுக்கும், மருத்துவ மனைகளுக்குமான வேலை ரொம்ப குறைஞ்சி போயிடும்.
பசுமைபுரட்சியும், ரேஷன்அரிசி விநியோகத்திட்டமும் பாரம்பரிய அரிசப்பயன்பாடு பறிப்போக காரணங்களாகி விட்டன! விலையில்லா அரிசியை பெற்று வாழக்கூடிய ஒரு சமூகத்தை இன்று அரசியல்வாதிகள் உருவாக்கிவிட்டனர். ஆனால், தங்கள் ஆரோக்கியத்தை காப்பற்றுவதற்காக பெரும் விலையை கொடுத்தாக வேண்டிய கட்டாயத்திற்கு நம் சமூகம் தள்ளப்பட்டுவிட்டதே!
ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் தருபவர்கள் பாரம்பரிய அரிசி ரகங்களை தேடி வாங்கிச் சாப்பிடுங்கள். அப்படிச் சாப்பிடத்தொடங்கினால் பாரம்பரிய நெல்பயிரிடும் விவசாயிகளின் எண்ணிக்கையும் கூடிவிடும்! நமது பாரம்பரிய நெல்ரகங்கள் பெரும்பாலானவை நீண்டநாள் பயிர்களாகும். அதில் தான் நீடித்த ஆயுளுக்கான வாய்ப்பையும் நாம் பெறலாம்!
மாப்பிள்ளை சம்பா , தங்கச்சம்பா, சம்பாமோசனம், சண்டிகார், கைவரச்சம்பா போன்றவை 160 முதல் 170 நாட்கள் பயிர்களாகும்.
நெல்ரகங்கள் - நாட்கள்
கருடன் சம்பா - (170 -180) குடவாழை - (140 -145) நீலச்சம்பா - (175 - 180) கிச்சிலிச்சம்பா - (140 - 145) கருப்புகவுணி - (140 - 150) காட்டுயாணம் - (180 - 185) ஓட்டையான் - 190 நாட்கள் கரைநெல் - 270 நாட்கள் மூங்கிலரிசி - 12,24,30,40 என வருடக்கணக்காகும் பயிர்களாகும்!
பாரம்பரிய அரிசிகள் பயன்கள்
பிசினி அரிசி, வாலான் அரிசி - பருவ வயது பெண்ணுக்கு உகந்தது பூங்கார், வாலான், சிகப்புக்கவுணி - கர்பிணி பெண்களுக்கு உகந்தது கிச்சிலிச்சம்பா, நீலச்சம்பா, குழிவெடிச்சான் - தாய்பால் சுரப்புக்கு உகந்தது மாப்பிள்ளை சம்பா - நரம்புகளை பலப்படுத்த, உயிரணுக்களை அதிகரிக்க, நீரழிவைதடுக்க காட்டுயாணம் - இதயபாதுகாப்பு, புற்றுநோய் எதிர்ப்பு, மூட்டுவலிதீர்வு, நீரழிவு தடுப்பு நீலசம்பா ; ரத்தசோகை விலக குள்ளக்கார், பெருங்கார், கருத்தகார் ; மலச்சிக்கல்தீர, மூலம்விலக வாடான் சம்பா ; அமைதியான தூக்கத்திற்கு கோரைச்சம்பா ; பித்தசூடுவிலக, உடல்குளிரவிக்க கட்டச்சம்பா ; கடும் உழைப்பாளிகளுக்கு மூங்கிலரிசி, மிளகி, கல்லுடைசம்பா,கவுணி ; எலும்பு பலப்பட கருங்குறுவை ; இழந்த சக்தியை மீட்டெடுக்க, கொடிய நோய்களிலிருந்து மீள, புற்றுநோய், தோல்நோய் சீராக குடவாழை ; குடலை வாழவைக்கும் இலுப்பை பூ சம்பா ; பக்கவாதம் விலக, கால்வலி சரியாக தூயமல்லி ; உடலின் உள் உறுப்புகளை வலுப்படுத்தும் சேலம் சன்னா ; தசை, நரம்பு, எலும்பு பலப்பட... சூரக்குறுவை ; உடலிலுள்ள கெட்ட கொழப்பை வெளியேற்ற... தங்கச்சம்பா ; இதயம் வலுப்படும், கால்சியம் அதிகமுள்ளது நீலச்சம்பா ; ரத்தசோகைவிலகும்
பாரம்பரிய நெல்ரகங்களை பயிரிட விரும்பும் விவசாயிகளுக்கு அவை கிடைக்கும் இடங்கள்
ஸ்ரீசாராதா ஆஸ்ரமம், விவேகானந்தா நகர், உளுந்தூர்பேட்டை -9943064596 'நெல்' இரா.ஜெயராமன் திருத்துறைப்பூண்டி - 9443320954 பி.துரைசிங்கம் பரமகுடி -9443381816 இரா.பொன்னம்பலம் நாகர்கோவில் - 9443482599 கோ.சித்தர் தஞ்சாவூர் - 04362 233788 ரோஸ்தொண்டு நிறுவனம் புதுக்கோட்டை -9842093143 ஆர். ரெங்கநாதன் டி.இ.டி.இ டிரஸ்ட் சென்னை -9443346369 ஆர். ஸ்ரீராம் - கதிராமங்கலம் -9467188531 இந்திய பாரம்பரிய அறிவியல்மையம் சீர்காழி புதுச்சேரி இயற்கை வேளாண் சங்கம் இலுப்பூர் வென்சர் டிரஸ்ட் பாரம்பரிய விதைகள் மையம் கலசபாக்கம் திருவண்ணாமலை
பாரம்பரிய நெல்ரகங்களை பயிரிடுவோம். தமிழ் மக்களின் இழந்த ஆரோக்கியத்தை மீட்டெடுப்போம்.
|
Disclaimer: Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை. |