|
||||||||
என் இனிய சர்க்கரை நோயே! |
||||||||
![]() என் இனிய சர்க்கரை நோயே! மோ.வெங்கட்ராம்வாசி , சென்னை அரிசிச் சாப்பாடு பிடிப்பவரை உனக்குப் பிடிக்கும். கோதுமை உன் கூட்டாளி. சப்பாத்திகளை உணவில் கூட்டினாலும் நீ பெருக்கப் படுகிறாய். அமர்ந்தே பணி செய்வோர் உடற்பயிற்சி நடைப்பயிற்சி செய்யாவிடில்... அவரிடம் நீ அமர்ந்தே பணி செய்கிறாய். உயிர்க்கொல்லிப் பயிர் நீ... உன்னைச் சாகுபடி செய்வாரைச் சாகும்படி செய்கிறாய். உன்னைப் பணமாக்கப் பார்ப்போரும் குணமாக்கப் பார்ப்போரும்... வேறு வேறு கூட்டம். பெற்றோரிடமிருந்து பிள்ளைகளுக்குப் போகும் சொத்துக்களில் நீயுமுண்டு. உன்னைப் பற்றிய அறிவு நீ பற்றிய பிறகும் வருவதேயில்லை பலருக்கு. காதல் நோயென்று பாடும் கவிகள் உன்னைப் பாடுவதில்லை. நீ நோயில்லை. சில நோய்களின் மாநாட்டு மேடை. உன் பிறப்பிடங்கள்... வெள்ளைச் சீனி, இருட்டுக் குளிர்பானம், துரித உணவுகள். அமைதிப் படை நீ தான். வருவதும் தெரியாது, கொல்வதும் தெரியாது. உன்னை அளப்போம்... வெறும் வயிற்றில் (FP), உண்டபின் 2 மணிகள் கழித்து(PP). அவற்றில்... கட்டுப்பாட்டிலிருப்பதாய் கண்ணாமூச்சி காட்டி... 3 மாதச் சராசரியில்(Hba1c) உயர்ந்து நின்று மிரட்டுவாய். எம்மைக் காதலித்துத் தூக்கம் கெடுக்கிறாய். கண்களில் ஒளி போக்கி... சிறுநீரகங்கள் பழுதாக்கி... இதயத்தை 'துடி துடிக்கச் செய்து'... உள்ளிருப்புப் போராட்டத்தால் உள்ளுறுப்புகள் தாக்குகிறாய். முன்பு பணக்காரர் பக்கமிருந்தாய். சமத்துவச் சிந்தனை வந்து... நடுத்தர,ஏழை மக்களிடம் புரவியின்றிப் பரவினாய். உன்னில் சில வகைகள். துன்பம் வரின் கண்ணீர் சுரக்கும். கணைய நீர் சுரக்காவிடில் துன்பம் வரும். இது முதல் வகை. குருதியிலிருந்து சர்க்கரையைப் பிரித்துச் செல்களுக்கனுப்பும் கணையநீர். கணையநீர் சுரந்தும் செயலிழந்தால்... இது இரண்டாம் வகை. செல்களுக்குச் செல்லாமல் குருதியில் தேங்கும் சர்க்கரை. இனிப்பான உன்னை... கசப்பு,துவர்ப்பு உண்டு எதிர்ப்போம். நெல்லியைக் கிள்ளித் தின்போம். நாவல் பழத்தை நா படத் தின்போம். பாகற்காயைப் பாங்காய்த் தின்போம். கடுக்காய் தின்று மிடுக்காய்த் திரிவோம். யோகாசனம், மூச்சுப்பயிற்சி செய்வோம். விரைவில்... நுண் கருவியை மாத்திரையில் உடலுக்குள் செலுத்தி... சில மாத்திரைகளில் கணையத்தைச் செப்பனிடுவோம். கணையத்தின் பணியைக் கண்காணிக்க... கைப்பேசி செயலி செய்வோம். புவியியலில் கோட்டைவிட்டாலும் அறிவியலில் முன்னேறும் மனிதர் உன்னை ஒழிக்கும் நாள் விரைவில் வரும். |
||||||||
|
||||||||
|
||||||||
|
||||||||
|
||||||||
|
||||||||
by Swathi on 11 Dec 2019 0 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|