LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் -ஜோதிஜி

ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : கொள்ளையடிப்பது தனிக்கலை - அத்தியாயம் 12

கொள்ளையடிப்பது தனிக்கலை


நமக்கு முன்பின் அறிமுகமே இல்லாதவர் திடீரென நமக்கு முன்னால் உட்கார்ந்து கொண்டு மிரட்டும் தொனியில் "எனக்குக் கொடுக்க வேண்டிய அறுபது லட்சத்தை எடுத்து வை?" என்று கேட்டால் என்ன சொல்வீர்கள்? முதலில் குழப்பம் உருவாகும். பிறகு பயம் வரும். ஆனால் எனக்குச் சிரிப்பு தான் வந்தது.


காரணம் இது போன்ற பல பிரச்சனைகள் இங்கே உருவாகும் என்று உள்மனம் சொல்லிக் கொண்டேயிருந்தது. நெருங்கிய நண்பர்கள் ஒவ்வொருவரும் பலவித எச்சரிக்கை செய்திருந்தார்கள் என்று ஏற்கனவே சொல்லியிருந்தேன் அல்லவா? அவர்கள் இந்த நிறுவனம் சார்ந்த நிதி நெருக்கடியைப் பற்றி மேலோட்டமாகச் சொல்லியிருந்தார்கள். அவர்கள் சொல்லாத பலவற்றை நானே யூகித்துக் கொண்டேன். எல்லாவற்றுக்கும் தயாராய் இருந்தேன்.


இது நானே உருவாக்கிக் கொண்ட பாதை. ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மாறுவது என்பது எல்லோருக்கும் எளிதல்ல. அதற்கு மனதை தயார் படுத்தியிருக்க வேண்டும். சவால்களோ? சங்கடங்களோ எதிர் கொள்ளத் தெரிய வேண்டும்? நாம் அவசரப்பட்டு விட்டோமோ? என்று அங்கலாய்ப்பட்டுக் கொள்ளாமல் புதிய சூழ்நிலையை ஏற்றுக் கொள்ளும் மனம் வேண்டும்.


இங்கு எல்லோருக்கும் சுய பாதுகாப்பு என்பது மற்ற அனைத்தையும் விட முக்கியமாக உள்ளது. எத்தனை தத்துவங்கள் சொன்னாலும் அவரவர் பொருளாதாரம் சார்ந்த விசயங்களில் நிறைவு இல்லை என்றால் மனதளவில் சோர்ந்து விடுகின்றார்கள். தேவையான கவலைகள், தேவையற்ற கவலைகள் என்று இனம் பிரிக்கத் தெரியாமல் மொத்தமாகக் கவலைகளைக் குத்தகை எடுத்துக் கொண்டு வாழ்க்கையை நரகமாக்கிக் கொண்டு விடுகின்றார்கள்.


வேறு எதிலும் அவர்களால் கவனம் செலுத்த முடிவதில்லை. நடுத்தரவர்க்கத்தின் மிகப் பெரிய பலவீனமே பற்றாக்குறை பட்ஜெட் தான். இதன் காரணமாகத்தான் இங்கே உரிமைக்கான எந்தப் பெரிய போராட்டமும் நிகழ்வதில்லை. நமக்கேன் வம்பு? என்று ஒதுங்கிப் போய்விடுகின்றார்கள். ஒரு நாள் பொழுது என்பதைத் தங்கள் பொருளாதாரம் சார்ந்து சிந்திப்பதால் வேறு எதிலும் அவர்களால் கவனம் செலுத்த முடிவதில்லை. இதையும் மீறி சிந்தனை ரீதியாக மாற்றம் பெற்றவர்களால் மட்டுமே தனது இலக்கை நோக்கி முன்னேற முடிகின்றது. சாதிக்க விரும்புவர்கள் சங்கடங்களைத் தாண்டித் தானே மேலேறி வர முடியும். அது பண ரீதியோ அல்லது பதவி ரீதியோ எதுவாக இருந்தாலும் சவால்களைச் சந்திக்கத் தயாராக இல்லாதவர்களின் வாழ்வில் எந்த மாறுதலும் நிகழ்ந்து விடுவதில்லை.


நான் சந்தித்த ஒவ்வொரு அனுபவங்களும் ஒவ்வொன்றை எனக்குக் கற்றுத் தந்தது. ஒவ்வொரு காலகட்டதிலும் நான் பணிபுரிந்த ஒவ்வொரு நிறுவனத்திலும் நான் சந்தித்த பலரும் பலவித ஆச்சரியங்களைத் தந்துள்ளனர். அதீதமான புத்திசாலிகள், கடுமையான உழைப்பாளிகள், அடங்கியே பழகிப் போனவர்கள், சுய சிந்தனை என்பதை என்னவென்றே தெரியாமல் வாழப் பழகியவர்கள், நம்மை வேலையில் இருந்து தூக்கி விடுவார்களோ? என்று ஒவ்வொரு நாளும் மறுகிக் கொண்டு வாழ்பவர்கள் என்று பல வகையினராக இருந்துள்ளனரே தவிரத் தன்னை எவரும் மீள் ஆய்வு செய்து கொள்வதில்லை. தன் நிறை குறை குறித்தோ? தான் செல்லும் பாதை குறித்தோ எவரும் கவலைப்பட்டுக் கொள்வதும் இல்லை.


இன்றைய தின கவலைகள் மட்டுமே அவரவர் மனதில் இருந்துள்ளதை கவனித்துள்ளேன். இந்தத் தொழிலில் நாம் எந்த இடத்திற்குச் செல்ல வேண்டும் என்பதைப் பற்றிக் கவலைப்பட்டுக் கொள்வதில்லை. ஆனால் அத்தனை பேர்களும் ஒரு விசயத்தில் கவனமாக இருந்துள்ளனர். இன்றைய தினத்தில் எந்த வகையில் தனது வருமானம் சார்ந்த விசயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்பதில் மட்டும் குறியாக இருந்துள்ளனர்.


இப்படி எண்ணம் கொண்டவர் முதலாளியாக இருக்கும் பட்சத்தில் தனது நிறுவனத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செலுத்த முடிவதில்லை. மாறும் சூழ்நிலைகளை, உருவான மாற்றங்களை உள்வாங்க முடியாமல் தேக்க நிலையில் நின்று தோற்றுப் போய்விடுகின்றார்கள். சிந்தனை ரீதியாக மாற்றம் பெறாத பணியாளர்கள் சொன்னதைத் திரும்பச் சொல்லும் கிளிப்பிள்ளைப் போல மாறி விடுகின்றார்கள். பகுத்தறிவு பின்னுக்குப் போய்விடுகின்றது. அவர்களின் சிந்தனைகளும் எந்திரம் போல மாறிவிடுகின்றது.


ஒவ்வொரு காலகட்டத்திலும் நானே உருவாக்கிக் கொண்ட சவால்களும், என்னைத் தேடி வந்த சவால்களையும் இயல்பாக ஏற்றுக் கொள்ளக்கூடிய பக்குவம் வந்த காரணத்தினால் வாழ்வின் எதார்த்த நிலை புரிபடத் தொடங்கியது. இழப்புகள் ஏராளமாக இருந்தாலும், கற்றுக் கொண்ட பாடங்களைக் கவனமாக உள்வாங்கிக் கொண்டதால் அது இறுதியில் ஏற்றம் தருவதாகவே இருந்தது.

 

Oru Tholitchalaiyin Kurippugal


மேலை நாடுகளில் மாற்றத்தை வரவேற்பார்கள். நம்மவரோ மாற்றத்தைக் கண்டு நடுங்குவார்கள். மரபு வழி சிந்தனையில் ஊறிப்போன சிந்தனையில் எதைக் கண்டாலும் பயமாகத்தான் தெரியும்?


மாற்றம் என்பதை எல்லோராலும் இயல்பாக ஏற்றுக் கொள்ள முடியாது என்பது பொது விதி. பணி மாற்றம் என்பது மட்டுமல்ல, வீடோ, ஊரோ, நிறுவனமோ, நாடோ எதுவாக இருந்தாலும் மாறுதல் என்கிற ரீதியில் நாம் மனதளவில் நம்மைத் தயார்படுத்திக் கொள்ளச் சில காலம் பிடிக்கும் தான். ஆனால் திருப்பூருக்குள் பணிபுரியும் தொழிலாளர்களோ அல்லது பணியாளர்களோ எல்லோருக்குமே இது எளிதான காரியம் தான்.


ஏறக்குறைய மென்பொருள் துறை போலச் சர்வசாதாரணமாக மூன்று மாதத்திற்கு ஒரு முறை இந்த மாற்றங்கள் ஒவ்வொரு நிறுவனத்திலும் நடந்து கொண்டே தான் இருக்கும். ஏன் மாறுகின்றார்கள்? இங்கே என்ன பிரச்சனை? என்று எந்த முதலாளியும் கவலைப்படுவதும் இல்லை. இதைப் போலப் பணிபுரிபவர்களும் நாம் மாறுகின்றோமே? போகின்ற இடம் சரியாக இருக்குமா? என்று கவலைப்படுவதும் இல்லை. ஓடிக் கொண்டிருக்கும் நீரில் மிதக்கும் இலைகள் போலத்தான் இந்த வாழ்க்கை ஒவ்வொன்றையும் நமக்குச் சொல்கின்றது. 'உன்னால் எனக்கு லாபம் இல்லை!' என்று முதலாளி குற்றம் சாட்டுவதைப் போல 'உன்னை நம்பி இனி நான் இங்கே இருந்தால் தெருவில் போய்த் தான் நிற்பேன்?' என்று பணிபுரிபவர்களும் கிளம்பி விடுகின்றார்கள்.


காரணம் இங்கே வாய்ப்புகள் பரஸ்பரம் கொட்டிக் கிடக்கின்றது. தேர்ந்தெடுக்கத் தயாராக இருப்பவர்களும், தேர்ந்தெடுத்ததைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்த தெரிந்தவர்களுக்கான உலகமிது.


நானும் இந்த நிறுவனத்தில் உள்ளே நுழையும் நாளில் இதே போலத்தான் யோசித்துக் கொண்டு சென்றேன். எந்த நிறுவனத்தில் சேர்ந்தாலும் என்னைப் பொறுத்தவரையிலும் காலைப் பொழுது என்பது எனக்கு மிக முக்கியமான ஒன்று. அதுவும் நாம் இந்தப் பதவியில் இருக்கின்றோம். இத்தனை மணிக்குச் சென்றால் போதும் என்று நினைப்பதில்லை. மற்றவர்களை விட நாம் முன்னால் சென்று விடுவது என்ற என் கொள்கைக்குக் காரணமுண்டு.


ஒவ்வொரு அலுவலகத்தின் காலை அலுவலக நேரம் என்பது வெவ்வேறு விதமாக இருந்தாலும் என்னைப் பொறுத்தவரையிலும் தினந்தோறும் காலை எட்டு மணிக்கே அலுவலகத்திற்கே வந்து விடுவது வாடிக்கை.


இங்கும் அதன்படியே காலையில் உள்ளே நுழைந்த போது உள்ளே இருந்த எடுபிடிகள் அத்தனை பேர்களும் என்னை வித்தியாசமாகப் பார்த்தனர். ஒருவர் அவசரப்பட்டு டக்கென்று கேட்டே விட்டார்.

 

Jothi_Ganesan_Factory_35.jpg


"என்ன சார் இத்தனை சீக்கிரமா வந்துருக்கீங்க?" என்றார்.


"ஏனப்பா?" என்ற போது "சார் இங்கே எல்லோரும் வந்து சேரும் போது ஒன்பதரை ஆகி விடுமே. வந்தவுடன் டீ குடித்து விட்டு அவர்கள் சீட்டில் உட்கார்ந்து வேலையைத் தொடங்க பத்து மணி ஆயிடும் சார்" என்றார்.


சிரித்துக் கொண்டே பதில் ஏதும் சொல்லாமல் மாடிப்படிகளில் மேலேறி வந்து விட்டேன். நிறுவனத்தின் வீழ்ச்சிக்கான முதல் காரணம் தெரிந்தது.


ஒருவருக்குக் காலைப் பொழுது என்பது மிக முக்கியமானது. ஒரு நாள் முழுக்க உழைத்து உடலும் மனமும் சோர்ந்து போய்கிடக்க, இரவு தூங்கி எழுந்து அடுத்த நாள் காலை நாம் உருவாக்கிக் கொண்ட புத்துணர்ச்சியை நாம் பணிபுரியும் அலுவலகத்தில் காட்ட முடியும்.


கிராமத்து வாழ்க்கை வாழ்ந்த எனக்கு அதிகாலை எழுவது என்பது இயல்பானதாக இருந்ததால் திருப்பூர் தொழில் வாழ்க்கையில் அதையே இன்று வரைக்கும் கடைபிடித்து வருகின்றேன். இது பலவிதங்களில் என் வளர்ச்சிக்கு உதவிகரமாக உள்ளது.


இதனால் நமக்குத் தனிப்பட்ட அனுகூலம் உண்டு. நமக்குப் பின்னால் வருகின்றவர்களை, தாமதமாக வருகின்றவர்களைக் கவனிக்க முடியும். பணிபுரிபவர்களின் மனோபாவங்களை அமைதியாக உள்வாங்க முடியும்.


அத்துடன் காலை வேலையில் எந்தத் தொந்தரவுமின்றி முடிவெடுக்க வேண்டிய முக்கிய விசயங்களை ஆழ்ந்த உள்வாங்க முடியும்.


உள்ளே நுழையும் போதே கீழ்த்தளத்தில் இருந்த சிலர் என்னைப் பார்த்து வாங்க என்று அழைக்காமல் இந்த முறை நீங்களா? என்று சொல்லித்தான் என்னை வரவேற்றார்கள். அந்த நொடி முதல் உள்ளே இருந்த சொற்ப பேர்களின் செயல்பாடுகளை, அவர்களின் பேச்சுகளைக் கவனித்துக் கொண்டு தான் இருந்தேன்.


முறைப்படுத்தப்படுத்த நிர்வாக அமைப்பில் முதல் முறையாக உள்ளே நுழையும் போது, நமக்கான இருக்கையில் அமர்ந்து நாம் பொறுப்பை ஏற்றுக் கொள்ள முடியும். போட்டிகள் இருந்தாலும் அடிப்படை நாகரிகம் இருக்கும். கொஞ்சம் மரியாதையைக் கூட எதிர்பார்க்கலாம். பொறுப்புகள் முறைப்படி ஒப்படைக்கபட்டு அதனை விளக்க சம்மந்தப்பட்ட நபர் குறிப்பிட்ட நேரம் வரைக்கும் நம்மோடு இருப்பார். அறிமுகப் படலம் நடக்கும். சிலசமயம் கூட்டம் கூட்டப்பட்டு அறிமுகப்படுத்தி வைக்கப்படுவார்கள். இது போன்ற சம்பிரதாயங்கள் இங்கே நூற்றில் பத்து நிறுவனங்களில் நடந்தால் அதுவே ஆச்சரியம் தான்.


காரணம் எந்தத் துறையாக இருந்தாலும் அந்த நிறுவனத்தின் மொத்த செயல்பாட்டின் ஒவ்வொரு அசைவிலும் முதலாளியின் ஒழுக்கம் சார்ந்த செயல்பாடுகள் தான் முன்னிலை வகிக்கும். அவரின் வெளிப்படைத்தன்மை தான் அந்த நிர்வாகத்தை வழி நடத்தும்.


உள்ளே எந்தப் பணியில் இருந்தாலும் ஒவ்வொருவரின் தனிப்பட்ட அசைவிலும் முதலாளியால் உருவாக்கப்பட்ட நிர்வாக ஒழுங்கின் வெளிப்பாடு ஒவ்வொருவரிடத்திலும் வெளிப்பட்டே தீரும். அது பயத்தின் அடிப்படையில் இருக்கலாம். அல்லது நடிப்பின் அடிப்படையில் இருக்கலாம். மொத்ததில் "அரசன் எவ்வழியே மக்களும் அவ்வழியே" என்பது போலத்தான் இருக்கும்.


திருப்பூர் போன்ற முறையற்ற நிர்வாக அமைப்பில் இது போன்ற விசயங்களை எதிர்பார்ப்பது கானல் நீரே.


திருப்பூருக்குள் உள்ள ஏற்றுமதி நிறுவனங்களில் உள்ள நிர்வாகம் முறைப்படுத்தப்பட்டதல்ல. ஒவ்வொரு காலக் கட்டத்திலும் நிர்வாகம் வளர வளர அவ்வப்போது முதலாளியின் விருப்பத்தின் அடிப்படையில் ஒவ்வொன்றாக மாறிக் கொண்டே வரும். பத்து வருடம் விசுவாசமாகப் பணிபுரிந்தவனும் அடிமையே. அதே சமயத்தில் ஒரு மாதம் மட்டும் பணிபுரிந்து விட்டு நிர்வாகத்திற்குப் பெரிய ஆப்பை சொருகி விட்டு செல்பவனும் அடிமையே.


இங்குள்ள எந்த முதலாளியும் அதைக் குறித்துக் கவலைப்பட்டுக் கொள்வதும் இல்லை. பரஸ்பரம் அவநம்பிக்கைதான் இங்கே ஒவ்வொன்றையும் தொடங்கி வைக்கின்றது. முழுமையற்ற சூழ்நிலையும் தெளிவற்ற நோக்கமும் தான் ஒவ்வொரு இடத்திலும் நிலவுகின்றது. மொத்ததில் பணம் வர என்ன வழி? என்று பார்ப்பவருக்கும் அந்தப் பணத்தை நம் பக்கம் திருப்ப வேறென்ன வழியைக் கடைபிடிக்க வேண்டும்? என்பவருக்குண்டான யுத்தமாகவே இருக்கும்.


எந்தப் பதவி என்றாலும் நாம் தான் இருக்கும் பாதங்களையும் கண்டு கொள்ளாமல் கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்க வேண்டும். இது தான் நான் கற்று வைத்துள்ள பாலபாடம். இதற்கு மேலாக ஒவ்வொரு நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருக்கின்ற பழைய நபர்களுக்கு வருகின்ற புது நபர்கள் எதிரியாகத் தான் தெரிவார்கள். வருகின்றவர் எந்தப் பதவிக்கு வந்தாலும் பழைய நபர்களுக்கு அது குறித்துக் கவலையில்லை.



வந்தவன் நல்லவனா? கெட்டவனா? நாணயமானவனா? போன்ற ஆராய்ச்சிகளை விட இவனால் நமக்கு ஏதும் தொந்தரவு வந்து விடக்கூடுமோ? நம் பதவி பறிபோய்விடுமோ? போன்ற அச்சங்கள் எழுவது இயல்பு தானே? இதையும் சமாளிக்கத் தெரிய வேண்டும். பழைய நபர்களுடன் ஒன்றிணைந்து செயல்பட்டே ஆக வேண்டும். இதற்கெல்லாம் மேலாக அவர்களது நம்பிக்கையைப் பெற்றாக வேண்டும்.


நிர்வாக அமைப்பு எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்? முதலாளியின் தனிப்பட்ட குணாதிசியங்கள் கூட விமர்சனத்திற்குரியதாக இருக்கலாம். ஆனால் முதன்மைப் பதவிகளில் இருப்பவர்களின் தனித்திறமையே எப்படிப்பட்ட நிர்வாகமாக இருந்தாலும் மொத்த நிர்வாகத்தையும் மகுடிக்குக் கட்டுப்பட்ட பாம்பு போல மாற்றும் கலையில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

 

Jothi_Ganesan_Factory_34.jpg


முதலாளி என்பவரின் கொள்கை மாறிக் கொண்டே தான் இருக்கும். கோடிட்ட இடம் போலத் தாவி போய்க் கொண்டேயிருப்பார்கள். ஆனால் அதனை நிரப்பி நாம் அத்தனை இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்க வேண்டும்.


எனக்கு இது புதிய இடம். புதுச் சூழ்நிலை. இந்த நிறுவனத்தில் உள்ளே நுழைந்த பத்து நிமிடத்திற்குள் தொடக்கமே கேள்விக்குறியில் தொடங்கியது. நான் நிதானத்தை இழக்காமல் நான் செய்து கொண்டிருந்த வேலையை நிறுத்தி விட்டு புன்னகையுடன் என் முன்னால் அமர்ந்திருந்தவருடன் உரையாடத் துவங்கினேன். மென்மையான குரலில் அனுசரனுடன் பேசினேன்.


"எந்தப் பிரச்சனை என்றாலும் நான் தீர்த்து வைக்கின்றேன். என்னை நீங்கள் நம்பலாம்?" என்றதும் அவர் அவரின் கோபம் அதிகமானது. "ஒரு வருடத்திற்குள் உங்களை மாதிரி பத்துப் பேர்கள் இந்தச் சீட்டில் வந்துட்டு போயிட்டாங்க. ஒவ்வொருவரும் இப்படித்தான் என்னிடம் சொல்லியுள்ளார்கள்?" என்றார்.


"அப்படியா? நல்லது. ஆனால் நான் இங்கே என்ன பிரசச்னை என்றாலும் நிச்சயம் ஒரு வருடமாவது இங்கே இருப்பேன். என்னை நீங்கள் நம்பலாம். உங்கள் பிரசச்னை என்னவென்றே தெரியாமல் எப்படி உங்களுக்கு உதவ முடியும்? என்னை நீங்க நம்புவதும் நம்பாததும் உங்க விருப்பம். ஆனால் என்னிடம் இத்தனை கோபமாகப் பேசும் நீங்க ஏன் முழுமையான விபரங்களைச் சொல்ல மறுக்குறீங்க?" என்றதும் படிப்படியாக அவரது தொனி மாறத் தொடங்கியது. சகஜ நிலைக்கு வந்தவர் கெஞ்சும் நிலைக்கு வந்திருந்தார்.


பிரச்சனையின் மொத்த ரூபமும் புரிந்தது. இந்த நிறுவனம் ஏற்கனவே நடத்திக் கொண்டிருந்த சாயப்பட்டறை மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் சட்டத்திட்டத்தின் படி நிறுத்தப்பட்டு விட்டது. கடந்த ஒரு வருடமாக இயங்கவில்லை. ஆனால் சாயப்பட்டறைக்குத் தேவைப்பட்ட பொருட்கள் அனைத்தும் வந்திருந்தவர் பணிபுரியும் நிறுவனத்தில் கடனுக்குத் தான் வாங்கியுள்ளனர். இவர் பணிபுரியும் நிறுவனத்திற்கு மட்டுமல்ல. பழைய பாக்கி உள்ள எந்தத் துணை நிறுவனத்திற்கும் பத்துப் பைசா கூடக் கொடுக்க வில்லை. பத்தாயிரம் முதல் ஒரு கோடி வரைக்கும் பல நிறுவனங்கள் இருந்தன. வந்திருந்தவர் அவர் பிரச்சனையுடன் இந்த நிறுவனம் சார்ந்த அனைத்து தகவல்களையும் இடையிடையே பேச ஒவ்வொன்றாக எனக்குப் புரியத் தொடங்கியது.


அதில் பாதிக்கப்பட்ட துணை நிறுவனங்களில் இவர் பணியாற்றும் நிறுவனமும் ஒன்று. இவர் அந்த நிறுவனத்தில் வசூலிக்கும் பொறுப்பில் இருப்பவர். இவர் பணிபுரியும் நிறுவனம் இவரிடம் வேறெந்த காரணத்தையும் கேட்கத் தயாராக இல்லை. நாள் தோறும் இவருக்கு மன அழுத்தம் அதிகமாக இன்று நான் இவரிடம் சிக்கிக் கொண்டேன்.


இவர் நொந்து போயிருந்தார். இங்கே இருந்த மற்றொரு முக்கியமான பிரச்சனை தான் இவரை இந்த அளவுக்குக் கோபப்படுத்தி இருந்தது.


இவர் வசூலிக்கச் செல்லும் எந்த நிறுவனத்திற்குச் சென்றாலும் பதில் சொல்ல ஆள் இருப்பார்கள். ஆனால் இங்கே நிரந்தரமாக எவரும் இருப்பதில்லை. வரவேற்பரையில் (RECEIPTION ) இருக்கும் பெண்களும் மாத சம்பளம் சரியாகக் கிடைக்காத காரணத்தால் வந்த ஒவ்வொருவரும் பாதி நாட்களிலே சென்று விடுவதும் வாடிக்கையாகவே இருந்தது. இவர் இங்கே வந்தால் எவரையும் சந்திக்க முடிவதில்லை. 


இங்கே நிரந்தரமாக இருக்கும் நிர்வாக அதிகாரியும் முதலாளி வீட்டில் செய்ய வேண்டிய எடுபிடி வேலைக்கு வெளியே சென்று விடுவதால் எவரையும் சந்திக்க முடியாத எரிச்சல் அனைத்தையும் சேர்த்து வைத்து என்னிடம் காட்டியுள்ளார்.


இவர் பணியாற்றும் நிறுவனம் சாயப்பட்டறைக்குத் தேவைப்படும் சாயப்பொருட்களை 30 நாள் தவணையில் கொடுத்துள்ளனர். ஆனால் அது தற்பொழுது ஒரு வருடமாகி விட்டது. இன்று தான் முக்கியப் பொறுப்பில் ஒருவர் வந்துள்ளார் என்பதை மோப்பம் பிடித்து விடாப்பிடியாகக் கீழே இருந்த தடைகளை உடைத்து என் முன்னால் வந்து உட்கார்ந்து விட்டார்.


பத்து வருடங்களுக்கு முன்பு வரை திருப்பூர் என்பது கடனூராகவே இருந்தது. எங்குத் திரும்பினாலும் கடன். எல்லாத் துறையிலும் கடன். கடன் தான் இந்தத் தொழிலை வளர்த்தது. வாழவும் வைத்தது. சிறிய அளவில் முதலீடு போட்ட அத்தனை பேர்களும் குறுகிய காலத்திற்குள் நம்ப முடியாத அளவிற்கு வளர்ந்தனர். அதாவது நூல் முதல் பெட்டி வரைக்கும் கடனுக்குத் தான் வாங்கிக் கொண்டிருந்தார்கள். அதுவும் முப்பது நாள் தவணை முதல் 120 நாள் தவணை வரைக்கும் என்று புகுந்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். இதன் காரணமாக ஒரு குறிப்பிட்ட சாரரிடம் மட்டும் பணம் சேர்ந்து கொண்டேயிருக்கப் பலரும் பாதிக்கப்பட்டுக் கொடுத்த கடனை வசூலிக்க முடியாமல் அவரவர் செய்து கொண்டிருந்த தொழிலை விட்டு ஓடத் தொடங்கினர்.


ஒரு நபருக்கு கொடுக்க வேண்டிய பத்து லட்சத்தைப் பத்து மாதங்கள் இழுத்தடித்தால் என்னவாகும். நொந்து வெந்து நோய் வாய்ப்பட்டுப் பலர் அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து இறந்து போயிருக்கின்றார்கள். இன்னும் சிலர் தலைமறைவாய் விடுவர்.


நாம் பணம் கொடுக்க வேண்டுமே? என்ற எண்ணம் வளர்ந்த, வளரும் நிறுவன முதலாளிக்கு இருக்காது. மனசாட்சியை அடகு வைத்து விடுவர். இப்படி வளர்ந்தவர்கள் தான் இங்கே எழுபது சதவிகித நபர்கள். இதனை "டெபிட்" (DEBIT) கலாச்சாரம் என்கிறனர். எதற்குத்தான் டெபிட் போட வேண்டும் என்ற வரைமுறையே இல்லாத நபர்கள் தான் இங்குள்ள முதலாளிகள்.


நான் சேர்ந்திருந்த இந்த நிறுவன முதலாளியின் மற்றொரு பெயர் "மலைமுழுங்கி மகாதேவன்". நீயெல்லாம் ஒரு மனுசனா? என்று வந்தவர் சப்தம் போட்டுக் கொண்டிருந்தாலும் வேறு யாரையோ சொல்லிக் கொண்டிருக்கின்றார் என்று அவர் கடந்து போய்க் கொண்டேயிருப்பார். சில நாட்களில் படிப்படியாக ஒவ்வொன்றாகப் புரியத் தொடங்கியது.


சகதியில், தரையில் முளைக்கும் செடிகளை விடப் பாறைக்குள் இருந்து வெளிவரும் செடியின் வேர்களுக்கு வீர்யம் அதிகம். நான் ஏற்கனவே பல பாறைகளைப் பார்த்தவன். எனக்கு இது ஆச்சரியமாகத் தெரியவில்லை. பலவற்றை மனதில் குறித்துக் கொண்டு அவரிடம் "இரண்டு நாட்கள் கழித்து வாருங்கள். முழுமையாகப் பேசுவோம்" என்றேன். சொன்ன மாதிரியே அதே தினத்தில் அவர் வந்த போது "உங்கள் முழுத் தொகைக்கும் நான் பொறுப்பு. நான் உடனடியாக முடியாது. இந்த ஒரு மாதத்தை மறந்து விடுங்க. அடுத்த மாதத்தில் ஒவ்வொரு பதினைந்தாம் தேதி அன்று வந்துடுங்க. மாதந்தோறும் ஒரு தொகையை வாங்கிக் கொண்டு சென்று விடலாம்" என்றதும் மனத்திருப்தியோடு நகர்ந்து சென்றார்.


நான் முதலாளியிடம் எதையும் கேட்க வில்லை. அனுமதி கூடப் பெறவில்லை. வந்தவரை நகர்த்தியே ஆக வேண்டும். இதனால் என்ன பிரசச்னை உருவாகும்? என்று தெரிந்திருந்த போதிலும் கூட என் தன்னம்பிக்கை வழிகாட்டும் என்று அசைக்க முடியாத நம்பிக்கை என்னுள் இருந்தது.


சில வாரங்களுக்குள் நிறுவனத்தின் மொத்த சாதகப் பாதக அம்சங்களும் எனக்குப் புரியத் தொடங்கியது. முக்கியமாக நம்பிக்கையின்மை. நிறுவனத்தின் மீது எவருக்கும் நம்பிக்கை இல்லை என்பதை விட நிறுவன முதலாளியைப் பார்த்தாலே ஒவ்வொருவரும் அவசரமாகக் கடந்து போகத் தான் விரும்பினார்கள். கிராமத்தில் பழமொழியாகச் சொல்வார்களே? 'இவன் முகத்தில் முழித்தால் போன காரியம் விளங்கின மாதிரி தான் என்பார்களே?' அப்பேற்பட்ட நபராகத்தான் இந்த நிறுவனத்தின் முதலாளி இருந்தார்.

 

Jothi_Ganesan_Factory_33.jpg


இருபது வருடங்களுக்கு முன் வருடந்தோறும் ஐம்பது கோடி வரவு செலவு செய்து கொண்டிருந்த நிறுவனத்தின வளர்ச்சியென்பது படிப்படியாக வளர்ந்து பல நூறு கோடிகளைத் தொட்டு நின்றது. பணம் சேரச் சேர முதலாளி தன் மனதில் உள்ள ஒவ்வொரு ஆசைகளின் மீது கவனம் வைத்தாரே ஒழிய நிறுவனத்தின் அன்றாடச் செயல்பாட்டில் கவனம் வைக்காமல் மனம் போன போக்கில் போகத் தொடங்கினார். ஒவ்வொரு இடத்திலும் அடிவாங்கிக் கடைசியில் இன்று வங்கிக்கு கட்ட வேண்டிய தொகை மட்டும் 20கோடி என்ற நிலையில் வந்து நிற்கின்றது. இந்தக் கோடியை விட மற்றொரு கொடுமை முதலாளிக்கு கேடி என்ற பெயரும் நிலைபெற்று விட்டது. முதலாளியின் மனம் மாறவும் தயாராக இல்லை. நிறுவனம் வளர்ந்த பாடாகவும் இல்லை. வங்கியின் நெருக்கடி ஒரு பக்கம். வசூல் செய்ய வருகின்றவர்களின் அதிரடி பேச்சுக்கள் மறு பக்கம்.


ஆனால் முதலாளி வசிக்கும் வீடோ தாஜ்மகால் அழகை தோற்கடிப்பதாக இருந்தது. சலவைக்கல்லால் இளைத்திருந்தார். தொழிலில் என்ன பிரச்சனைகள் இருந்தாலும் அடிப்படை வாழ்க்கையில் எந்தக் குறையும் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருந்தார்.


முதல் அடியை கவனமாக எடுத்து வைத்தேன். அது வெற்றிப் பாதையின் கதவுகளைத் திறந்து விட்டது. ஆனால் மலைமுழுங்கியோ நான் உருவாக்கிய பாதையில் பாறாங்கல்லை தூக்கிப் போட்டார்.


என் ஆட்டம் ஆரம்பமானது. 

 

குறிப்புகள் தொடரும்.....

by Swathi   on 16 Oct 2014  3 Comments
Tags: Tholitchalai   Tiruppur Jothiji   தொழிற்சாலை   கொள்ளை   திருப்பூர்   ஜோதிஜி திருப்பூர்     
 தொடர்புடையவை-Related Articles
வினாக்களால் வியப்பூட்டும் தாய்த் தமிழ் பள்ளி மழலைகள் !! வினாக்களால் வியப்பூட்டும் தாய்த் தமிழ் பள்ளி மழலைகள் !!
ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்.. தொடர் பற்றிய வலைத்தமிழ் ஆசிரியர் குழு மற்றும் வாசகர்களின் பின்னூட்டங்கள்... ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்.. தொடர் பற்றிய வலைத்தமிழ் ஆசிரியர் குழு மற்றும் வாசகர்களின் பின்னூட்டங்கள்...
ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : துணிவே துணை - அத்தியாயம் 20 ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : துணிவே துணை - அத்தியாயம் 20
ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : பெயர் மட்டுமல்ல உழைப்பிலும் ராஜா தான் - அத்தியாயம் - 19 ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : பெயர் மட்டுமல்ல உழைப்பிலும் ராஜா தான் - அத்தியாயம் - 19
ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்.. : பொருளாதாரம் உருவாக்கும் அவதாரங்கள் : அத்தியாயம் 18 ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்.. : பொருளாதாரம் உருவாக்கும் அவதாரங்கள் : அத்தியாயம் 18
ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : அவள் பெயர் ரம்யா - அத்தியாயம் 17 ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : அவள் பெயர் ரம்யா - அத்தியாயம் 17
ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : எந்திர மனிதர்கள் - அத்தியாயம் 16 ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : எந்திர மனிதர்கள் - அத்தியாயம் 16
ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : பணக்காரன் பேசுவதெல்லாம் தத்துவமே - அத்தியாயம் 15 ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : பணக்காரன் பேசுவதெல்லாம் தத்துவமே - அத்தியாயம் 15
கருத்துகள்
18-Oct-2014 07:32:08 டி.என் முரளிதரன் said : Report Abuse
அனுபவங்களால் பண்பட்டிருக்கிறீர்கள் .திடமான நம்பிகையும் பதற்றமடையாத பாங்கும் உங்களை உயர்த்தி இருக்கிறது என்று கூறலாம். இந்தப் பிரச்சனையை எப்படிக் கையாண்டீர்கள் என்பதை தெரிந்து கொள்ள ஆவல்
 
18-Oct-2014 03:30:37 கார்த்திக் said : Report Abuse
விறுவிறுப்பாக உள்ளது... அடுத்த அத்தியாத்திட்காக காத்திருக்கிறேன்.....
 
17-Oct-2014 19:05:56 ப.ராதாகிருஷ்ணன் said : Report Abuse
ஜோதிஜி குட் லாஜிக் திருப்பூர் வளர்ச்சி எப்படி என்று கண்ணாடிபோல் காட்டிஉள் ளீர் கள் .நான் இத் தொ ழி ல் நடத்தும்போது ஏற்பட்டது .கல்லூரி யில் படிக்கும்காலத்தில் புரியா மல் இருந்தது .
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.