LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் -ஜோதிஜி

ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : துணிவே துணை - அத்தியாயம் 20

துணிவே துணை

 

"வெளிச்சத்திற்குப் பின்னால் இருள் நிச்சயம் உண்டு" என்பதனை நீங்கள் நம்புகின்றீர்களோ? இல்லையோ திருப்பூர் வாழ்க்கையில் நான் உணர்ந்ததும் அதிகமாய் யோசிப்பதும், ஆச்சரியப்படுவதும் இதே தான். கடந்த இருபது வருடத்தில் சிறிய மற்றும் பெரிய முதலாளிகளுடனும் அதே சமயத்தில் மிகப் பெரிய செல்வாக்கு உள்ள முதலாளிகள் என்று பலதரப்பட்ட பேர்களுடன் பழகி வந்துள்ளேன். பழக்கம் என்பது ஒரு நிறுவனத்தில் அவர்களுடன் நிறுவனம் சார்ந்து செயல்பட்ட விதம் என்று மட்டும் நினைத்து விட வேண்டாம். ஒரு நிறுவன முதலாளியின் தனிப்பட்ட குணாதிசியங்கள், அவர் குடும்பம் சார்ந்த செயல்பாடுகள், அவரின் வெவ்வேறு முகங்கள் என்று தொடங்கி அவருக்கு எங்கிருந்தெல்லாம் நிதி ஆதாரங்கள் வருகின்றது என்பது வரைக்கும் பல விசயங்களைக் கவனித்துள்ளேன். சில நிறுவன முதலாளிக்குப் பின்னால் அரசியல் பின்புலங்கள் போன்ற பலவற்றையும் பார்த்துள்ளேன். அனைத்துச் சாதகப் பாதக அம்சங்கள் எனப் பலவற்றையும் கூர்ந்து கவனித்து வந்துள்ளேன். ஒவ்வொரு நாளும் ஆச்சரியம் படத்தக்க வகையில் பல நிகழ்வுகளைக் கடந்து வந்து உள்ளேன். இன்று அனைத்தையும் திரும்பிப் பார்க்கும் போது மனதில் ஒரு விதமான வெறுமையே எனக்குள் உருவாகின்றது.


பல நிறுவனங்களில் பணிபுரிந்துள்ளேன். நானே சொந்தமாகத் தொழில் தொடங்கியும் இருக்கின்றேன். என் தோல்விகளையும் நான் அடைந்த வெற்றிகளையும் வைத்து யோசித்துப் பார்த்தாலும் கூட இந்தத் தொழில் எவ்வித திருப்தியையும் எனக்குத் தந்ததில்லை. எனக்கு மட்டுமல்ல. இந்தத்துறையில் பணிபுரியும் எவரிடம் கேட்டாலும் இதே தான் பதில் வரும். ஒரு துறையில் குறிப்பிட்ட காலம் ஒருவர் பணியில் இருந்தால் பணிபுரிந்தவர்கள் குறிப்பிட்டத்துறையில் அடுத்தக் கட்டத்திற்கு நகர்வது வாடிக்கை தானே? ஆனால் ஆயத்த ஆடைத்துறையில் பணிபுரிந்தவர்களில் பெரும்பாலோனோர் அடுத்தக் கட்டத்திற்கு நகர்ந்ததே இல்லை. நகர்ந்து வந்தாலும் அவர்களால் நீடித்து இருந்ததும் இல்லை. ஏன்?


இங்கே பணிபுரிந்தவர்களுக்கு மட்டுமல்ல இந்தப் பிரச்சனை. முதலாளிகளும் இதே தான் பிரச்சனையாக உள்ளது. மற்ற துறைகள் என்றால் முதலாளிகள் அடுத்தடுத்து விரிவாக்கத்தில் தான் கவனம் செலுத்துவார்கள். ஆனால் இங்கிருப்பவர்களோ இருக்கும் தொழிலை காப்பாற்றிக் கொள்ளத் தினந்தோறும் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். ஒரே காரணம் இத்துறை பெரும்பாலும் மனித உழைப்பை நம்பித்தான் உள்ளது. அவர்களை அனுசரித்துப் போனால் மட்டுமே வேலைகள் நடக்கும் என்ற சூழ்நிலையில் உள்ளது. தினந்தோறும் எத்தனை நவீன தொழில் நுட்பங்கள் வந்த போதிலும் ஒவ்வொரு இடத்திலும் மனிதர்களின் திறமை மூலம் நவீன எந்திரங்களுக்காக முதலாளியால் போடப்பட்ட முதலீடு காப்பாற்றப்படுகின்றது.

 

Jothi Ganesan Factory


வாழ்வில் கால் பகுதி இந்தத் துறையில் நான் செலவழித்த போதிலும் என்ன சாதித்தோம்? என்று இன்று யோசித்துப் பார்க்கும் போது நான் பெற்ற அனுபவங்களை எழுத்தாக மாற்ற முடிந்ததுள்ளது என்பது மட்டும் தான் மிஞ்சுகின்றது. தமிழ்நாட்டில் சமீப காலமாகத்தான் தொழில்துறை சார்ந்த எழுத்துக்கள் கவனம் பெறத் தொடங்கியுள்ளது. இன்னும் பலவருடங்கள் கழித்து இந்தத் துறையில் ஈடுபட நினைப்பவர்களுக்கு என் எழுத்துக்கள் பயன்படக்கூடும்.


திருப்பூர் என்பது தமிழ்நாட்டில் உள்ள பல மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கி உள்ளது. இன்னமும் வழங்கிக் கொண்டே இருக்கப் போகின்றது. இது நாணயத்தின் ஒருபக்கம். ஆனால் இதற்கு மற்றொரு புறம் உண்டு. திருப்பூர் என்ற ஐம்பது கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட இந்த ஊரின் ஏற்றுமதி தொழில் என்பது சுற்றிலும் உள்ள பல்லாயிரக்கணக்கான ஏக்கர்களை அடுத்தத் தலைமுறை வரைக்கும் பயன்படுத்த முடியாத அளவுக்குச் சாயத்தண்ணீரால் பாழ்படுத்தியும் உள்ளது.


தமிழ்நாட்டில் உள்ள மற்ற துறைகளை விட இங்குள்ள முதலாளிகள் நம்பமுடியாத அளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ளனர். இங்கே பணிபுரியும் தொழிலாளர்கள் குறுகிய காலத்திற்குள் தேவையான பணத்தைச் சேர்த்துள்ளனர். தனி நபர் வருமானத்திற்கும் உதவும் இத்துறையை முறைப்படுத்த இன்று வரையிலும் எந்த அரசாங்கமும் முயற்சி எடுக்கவில்லை. எல்லா இடங்களிலும் பணம் தான் பேசுகின்றது. எல்லா மனிதர்களையும் பணம் தான் செயல்பட, செயல்படாமல் இருக்கத் தூண்டுகோலாய் உள்ளது.


இனி எழ வாய்ப்பில்லை என்று கருதப்பட்ட சில நிறுவனங்களை நம்ப முடியாத அளவிற்கு வளர்த்துக் காட்டியுள்ளேன். வளர்ந்த பிறகு முதலாளிகளின் எண்ணத்தில் உருவாகும் மாறுதல்களைக் கண்டு மிரண்டு போய் ஒதுங்கி வந்துள்ளேன். முதலீடு போட்டவன் வாழ்க்கை முழுக்க இரண்டு வாழ்க்கை வாழ கடமைப்பட்டவன் என்ற நிலையை ஏற்றுக் கொள்ள முடியாமல் அமைதியாக ஒதுங்கியும் வந்துள்ளேன்.


ஆனால் வருடத்திற்கு நூறு கோடி வரவு செலவு செய்தவர்கள் கூட ஒழிந்து வாழும் சூழ்நிலையில் தான் இன்று இருக்கின்றனர். படிப்படியாக வளர்ந்து கொண்டு இருப்பவர்கள் கூட அழிந்து போனவர்களைப் பாடமாக எடுத்துக் கொள்ளாமல் அதே அழிவுப் பாதையில் தான் சென்று கொண்டிருக்கின்றனர். காலப்போக்கில் நம்பிக்கை நாணயம் தேவையில்லை என்பதனை உறுதியாகக் கடைபிடிக்கத் தொடங்கி விடுகின்றனர். மொத்தத்தில் ஒவ்வொருவரும் சொல்லமுடியாத அளவிற்கு மன அழுத்தத்தில் சிக்கித் தவிக்கின்றனர்.


கடந்த இருபது ஆண்டுகளில் என்னுடன் பணிபுரிந்தவர்களில் முக்கால்வாசி பேர்கள் இந்த ஊரில் இல்லை. எவரும் மேம்பட்ட பதவிகளை அடையவே இல்லை. தன்னளவில் சம்பாரித்தவர்கள் ஊரில் வாங்கிய கடன்களைக் கட்டியுள்ளனர். கௌரவத்திற்காகத் தங்களது சொந்த ஊரில் வீடு கட்டியுள்ளனர். அக்கா, தங்கைகளைத் திருமணம் செய்து கொடுத்துள்ளனர். இது அத்தனைக்கும் சேர்த்துத் தங்கள் ஆரோக்கியத்தை விலையாகக் கொடுத்து உள்ளனர். குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு செயல்படமுடியாத நிலைக்கு மாறிப் போயுள்ளனர். தொழிலாளர்களின் வாழ்க்கை இப்படியென்றால் முதலாளிகளின் வாழ்க்கை இதைவிடக் கொடுமையாக முடிந்துள்ளது. திடீர் சாவு. மனம் வெறுத்துப் போய்த் தூக்கில் தொங்குதல். மதுவில் கலந்த விஷம் மூலம் பரலோகத்தைப் பார்த்தவர்கள் என்று பட்டியலிட்டால் இதன் நீளம் அதிகமாகும்.


ஒரு குடும்பத்தில் பணப்பிரச்சனை என்றால் அதன் பாதிப்பு சிலருக்கு மட்டுமே. ஆனால் சிறிய அல்லது பெரிய நிறுவனங்களில் ஏற்படும் பொருளாதார இழப்புகள் என்பது பல ஆயிரம் பேர்களைப் பாதிக்க வைக்கக்கூடியது. ஒரு நிறுவனத்தை நம்பி பல துறைகள் செயல்படுகின்றது. அரசு சார்ந்த துறைகள் முதல் அரசு சாராத தனியார் துறைகள் என்று ஒவ்வொரு துறையையும் நம்பி நேரிடையாக மறைமுகமாகப் பல துறைகள் உள்ளது. ஒரு நிறுவனத்தின் வீழ்ச்சி என்பது ஒரு தனிநபரின் கொள்கை முடிவால் உருவானது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். அவருக்குக் கீழே எத்தனை பேர்கள் இருந்தாலும் தோல்வி என்றால் நம்மால் ஒருவரைத்தான் சுட்டிக்காட்ட முடியும். ஒருவரின் தவறான முடிவென்பது மேலே சொன்ன அத்தனை துறைகளையும் பாதிப்படையச் செய்கின்றது.

 

Jothi Ganesan Factory


தலைமைப்பண்பு என்பதனை எவராலும் கற்றுத் தர முடியாதது. எத்தனை நவீன பள்ளி, கல்லூரிகள் இதனைப் பாடமாகக் கற்றுத் தந்தாலும் நம் நாட்டைப் பொறுத்தவரையிலும் இங்கு எதுவுமே கடைசி வரைக்கும் நிச்சயம் இல்லை. காரணம் சட்டம் என்பது இங்குச் சாதாரண மனிதர்களுக்கு ஒரு விதமாகவும், பணம் படைத்தவர்களுக்கு வேறு விதமாகவும் இருப்பதால் அவரவர் வாழ்க்கையை அவரவர் தான் பார்த்துக் கொள்ள வேண்டியதாக உள்ளது. இதன் காரணமாக "தப்பிப்பிழைப்பதே வாழ்க்கை" என்பதே ஒவ்வொருவரின் தாரக மந்திரமாக உள்ளது.


ஒரு நிறுவனத்தின் முதலாளி என்பவர் மிகச் சிறந்த தலைமைப்பண்பு உள்ளவராக இருக்க வேண்டும். 'குணம் நாடி குற்றமும் நாடி' என்பதைப் புரிந்தவராக இருத்தல் வேண்டும். 'இதனை இதனால் இவன் முடிக்கும்' என்று ஆராய்ந்து பார்த்துத் தனக்குக் கீழே உள்ளவர்களைக் கணிக்கத் தெரிந்தவராக இருக்க வேண்டும். இத்தகைய குணம் இல்லாதவர்கள் கையில் நிர்வாகம் இருந்தால் என்னவாகும்? என்பதைத்தான் இங்கே உள்ள நிறுவனங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது.


ஒருவரின் தனிப்பட்ட பழக்கவழக்கம் மாறும் போது அவரால் எடுக்கப்படும் முடிவுகளும் மாறுகின்றது. 'ஒழுக்கம் உயிரை விட மேலானது' என்று வள்ளுவர் சொன்னதன் காரணத்தை எவரும் யோசிப்பதே இல்லை. ஆனால் ஒரு மனிதனின் அனைத்து தோல்விகளும் அவனின் ஒழுக்கம் சார்ந்த நடவடிக்கை தொடங்கி வைக்கின்றது. அவனுடைய ஆசைகள் அதனை விரைவு படுத்துகின்றது. இது தான் சரியென்று அவனது பேராசை உறுதிப்படுத்துகின்றது. இதன் வழியே சென்று அழிந்தவர்கள் தான் இங்கே முக்கால்வாசி பேர்கள் உள்ளனர்.


நிர்வாக ரீதியான முடிவுகள் என்பது நாம் நினைப்பது போன்று எளிதன்று. நிகழ்காலம், எதிர்காலம் இரண்டையும் ஒப்பிட்டுப்பார்த்து இறந்த கால நிகழ்வுகளை மனதில் கொண்டு ஒவ்வொரு முடிவையும் எடுக்கப்பட வேண்டும் என்று இங்குள்ள எத்தனை முதலாளிக்குத் தெரியும் என்று நம்புகின்றீர்கள்? முதலாளிகளைக் குறை சொல்வது எளிது. உன்னால் ஏன் ஜெயிக்க முடியவில்லை? என்ற கேள்வி பலமுறை என்னைத் தாக்கியுள்ளது. இங்குள்ள மண்ணின் மைந்தர்களுக்குப் புத்திசாலித்தனத்தை விட அவர்களின் தந்திரங்கள் உதவியுள்ளது. அவர்கள் வைத்திருந்த இடத்தின் மதிப்பு பல விதங்களில் உதவி புரிந்துள்ளது. உறவுகள் உறுதுணையாய் இருந்துள்ளனர். இவர்களின் பின்புலம் வங்கியை வளைக்கக் காரணமாக இருந்துள்ளது. வளர்த்துக் கொள்ள வேண்டிய நிர்வாக அறிவை விட எவரையும் விலை பேசிவிடத் துணிச்சல் இருந்த காரணத்தால் எளிதாக முன்னேறி வர முடிந்துள்ளது.


20 ஆண்டுகளுக்கு முன்னால் போட்டி போட ஆள் இல்லாத காரணத்தால் நினைத்தபடியே பலவற்றையும் சாதிக்க முடிந்தது. ஆனால் இன்று உலகளாவிய பொருளாதாரச் சூழலில் போட்டிகள் பல முனைகளில் இருந்து தொடர்ந்து தாக்குதல்களாக நெருக்க இன்று செயல்பட முடியாத நிலைக்கு மாறிக் கொண்டு இருக்கின்றனர்.


திருப்பூரைச் சுற்றியுள்ள எந்த ஊரிலும் இந்த ஊரின் காசோலையை மதிப்பதே இல்லை என்பதை வைத்தே இங்குள்ளவர்களின் "நிர்வாகத்திறமையை" உங்களால் புரிந்து கொள்ள முடியும். நம்பமுடியாத அளவிலான பணம் நம் கைக்குத் திடீரென வந்தால் நம்மில் எந்த விதமான மாற்றங்கள் உருவாக்கும் என்பதற்குத் திருப்பூரில் வாழ்கின்றவர்களே மிகச் சிறந்த உதாரணமாக எனக்குத் தெரிகின்றார்கள்.


நான் வாழ்ந்த காரைக்குடி பகுதியில் பல தலைமுறைகளாக எவ்வித லாபம் நட்டம் வந்தாலும் பாதிக்கப்படாத நிலையில் வாழ்ந்த கொண்டிருந்த பல பணக்காரர்களைப் பார்த்து வந்துள்ளேன். அவர்களின் அமைதியே பலவற்றை உணர்த்தியுள்ளது. அவர்களின் வாழ்க்கையில் ஆடம்பரம் பார்க்க முடியாது. கஞ்சன், கருமி, சிக்கனம், பணத்தின் மேல் உள்ள மரியாதை, தகுதிக்கேற்ற வாழ்க்கை என்ற வார்த்தையைக் கொண்டு அவர்கள் வாழ்க்கையை நம்மால் அளவிட முடியும். அவர்கள் சேர்த்த எந்தச் சொத்துக்களும் வங்கிக்குச் சென்றதும் இல்லை. வாழும் வரைக்கும் கொடுத்த வாக்குறுதியை உயிர் போலக் கருதினார்கள். பல தலைமுறைகள் சொத்துக்கள் அழியாமல் காப்பாற்பட்டு தொடர்ந்து அடுத்தத் தலைமுறைக்கு வந்து கொண்டே இருக்கின்றது.


ஆனால் திருப்பூரில் கடந்த 25 வருடங்களில் திடீரென உருவான ஆயத்த ஆடைத்தொழில் கொடுத்த சுதந்திரமும், அளவுக்கு மீறி கிடைத்த பணமும் தனி மனிதனை எந்த அளவுக்கு மாற்றியுள்ளது என்பதனை பார்த்துத் திகைப்படைந்துள்ளேன். தினந்தோறும் நான் சந்திக்கும் பலதரப்பட்ட நிகழ்வுகள் பலவித அதிர்ச்சியை எனக்குள் உருவாக்கிக்கொண்டே இருக்கின்றது. பணம் என்ற காகிதம் அதிகளவில் சேரச் சேர கொள்கை, குணம், பேச்சு என்று அனைத்தும் ஒவ்வொருவருக்கும் படிப்படியாக மாறத் தொடங்கி விடுகின்றது. முதல் தலைமுறை உருவாக்கிய 500 கோடி சொத்துக்கள் 25 வருடங்கள் கழித்து அடுத்தத் தலைமுறைக்குக் கைமாறிய போது காணாமல் போய்விடுகின்றது என்பதை நீங்கள் வாசிக்கும் போது உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கக்கூடும். ஆனால் இங்கே இருப்பவர்கள் எதிர்பார்த்தது தானே? என்று கடந்து போய்க் கொண்டேயிருக்கின்றார். காரணம் இங்குள்ள ஒவ்வொரு வெற்றிக்குப் பின்னாலும் பல நூறு மனிதர்களின் மேல் ஏறி மிதித்து வந்த கதைகள் தான் உள்ளது.


கடந்த 19 அத்தியாயங்களின் வாயிலாக நான் கடந்த காலங்களில் பணிபுரிந்த இரண்டு நிறுவனங்களின் மூலமாக அங்குப் பணியில் இருந்த சமயத்தில் சந்தித்த செயல்பாடுகள் மூலம் இந்தத் துறையைப் பற்றி உங்களுக்குப் புரிய வைக்க முயற்சித்துள்ளேன்.

 

Tiruppur Jothiji


இது முழுமையானது அல்ல. ஏற்கனவே எனது முதல் புத்தகமாக வெளிவந்துள்ள டாலர் நகரம் என்ற நூலின் மூலமாகத் திருப்பூர் என்பதைப் பொதுப்பார்வையில் எழுதி வைத்தேன். அதன் தொடர்ச்சியாகத் திருப்பூரில் உள்ள தொழில் நிறுவனங்கள் சார்ந்த செயல்பாடுகளை எழுதி வைத்தால் மட்டுமே என் பார்வை முழுமையடையும் என்பதால் ஒரு தொழிற்சாலையின் குறிப்புகளாக இதை உங்களுக்குத் தந்துள்ளேன்.


நான் இந்தத் தொடரில் எழுதியுள்ள முதல் நிறுவனத்தோடு தற்பொழுது எனக்கு எவ்வித தொடர்பு இல்லை. ஆனால் இந்தத் தொடரை அந்த நிறுவனத்தில் தற்பொழுது பணிபுரிந்து கொண்டிருக்கும் இருவர் இந்தத் தொடரை தொடர்ந்து படித்து வந்துள்ளனர். நிச்சயம் அவர்கள் மூலம் பலருக்கும் போய்ச் சேர்ந்து இருக்கக்கூடும். ஒருவர் என்னை அழைத்துப் பேசினார். நான் ஆர்வம் மேலிட "இப்போது நிர்வாகம் எப்படி உள்ளது?" என்று கேட்டேன்.


நான் எழுதியுள்ள முதல் நிறுவனத்தில் தினந்தோறும் தொழிலாளர்களை ஏற்றி வரும் வாகனத்திற்குப் பெட்ரோல் போட வழியில்லாமல் தடுமாறிக் கொண்டிருக்கின்றார்கள் என்று சொன்னார். மாதந்தோறும் தொழிலாளர்களுக்கு வழங்கிக் கொண்டிருந்த சம்பளத்தை இரண்டு மாதத்திற்கு ஒரு முறை மாற்றியுள்ளனர். தொழிலாளர்கள் கலைந்து செல்ல தற்பொழுது மிகுந்த நெருக்கடியில் வாரச்சம்பளமாக மாற்றித் தொழிலாளர்களைத் தக்க வைத்துக் கொள்ளப் பாடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். பணிபுரியும் ஊழியர்களுக்கு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அல்லது நினைத்த போது சம்பளத்தை வழங்குகின்றனர். இந்த வார்த்தைகளை எழுத எனக்குப் பயமில்லை. காரணம் இது தான் உண்மை.


இந்தத் தோல்விக்குக் காரணம் ஒரு தனி மனுஷியின் ஈகோ. தான் என்ற அகம்பாவம். அடுத்தவர்களைக் கிள்ளுக்கீரையாக மதிக்கும் தான்தோன்றித்தனம்.


அந்தத் தொழிற்சாலையில் தினந்தோறும் 12 மணி நேரம் வேலை நடந்தால் மாதம் இரண்டு லட்சம் ஆடைகள் தயாரித்து ஏற்றுமதி செய்ய முடியும். நான் அங்கே நுழைவதற்கு முன்பு மாதம் தோறும் 25000 ஆடைகள் தான் தயாரித்துக் கொண்டிருந்தார்கள். நம்ப முடியாத அளவிற்குத் தொழிற்சாலையின் உள்ளே அனைத்து விதமான வசதிகளும் இருந்தது. தொழிலாளர்களுக்குத் தேவைப்படுகின்ற அனைத்து வசதிகளையும் உருவாக்கிக் கொடுத்திருந்தார்கள். ஆனால் முறையற்ற நிர்வாக அமைப்பால் உள்ளே பணிபுரிந்த அத்தனை பேர்களும் தெளிவற்ற முறையில் பணியாற்றிக் கொண்டிருந்தனர். காரணம் அவர்களை வழிநடத்த சரியான ஆட்கள் இல்லை. சரியான நிர்வாக முறைகள் தெரிந்த எவரையும் அந்தப் பெண்மணி செயல்பட அனுமதிக்கவும் இல்லை.


எந்தத் தொழிற்சாலையிலும் தொழிலாளர்களைக் குறை சொல்ல முடியாது. அவர்கள் எப்போதும் போல அவர்களுடைய தனிப்பட்ட சிந்தனையில் தான் செயலாற்றிக் கொண்டிருப்பார்கள். தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களுக்குத் தான் அவர்களை எப்படி வேலை வாங்க வேண்டும்? நிறுவனத்தின் லட்சியம் என்ன என்பதற்கேற்ப படிப்படியான நிர்வாக ஒழுங்கமைப்பை உருவாக்க வேண்டும். அங்கே மற்றொரு ஆச்சரியம் என்னவென்றால் உள்ளுர் தொழிலாளர்களை விட வட மாநில தொழிலாளர்கள் தான் அதிகம்.


மனிதவளத்துறையில் இருந்தவர்களுக்கும், உற்பத்தித் துறையில் இருந்தவர்களுக்கும் அவர்கள் சவாலாக இருந்தனர். மொழி முதல் அவர்களுடைய தனிப்பட்ட பழக்கவழக்கங்கள் வரைக்கும் வட்டத்திற்குள் சிக்காதவர்களாக இருந்தனர்.


எனக்கும், தொடக்கத்தில் அங்கிருந்த ஒவ்வொருவரும் இதனைத் தான் குறிப்பிட்டு இந்த நிறுவனத்தின் தோல்விக்குக் காரணம் என்றனர். நான் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. எந்த இடத்தில் பிறந்தாலும் அத்தனை பேர்களின் சிந்தனையிலும் பணம் என்பது தான் அடித்தளமாக இருக்கும் என்பதனை உறுதியாக நம்பி என் பணியைத் தொடங்கினேன். புதிதாகத் தொழில் தெரியாமல் ஒரு இடத்திற்கு வருபவர்களை உங்கள் சிந்தனைகளுக்கேற்ப அவர்களை மாற்றி விட முடியும். ஆனால் நன்றாகத் தொழில் தெரிந்து அடம்பிடித்துக் கொண்டு சோம்பேறியாகத்தான் இருப்பேன் என்பவர்களை வளைப்பது தான் கடினம்.


அந்தக் கடினப் பணியைத்தான் தைரியமாக மேற்கொண்டேன். உலகில் இதமான வார்த்தைகளும், ஆறுதல் மொழிகளால் எந்த மனிதனையும் வசப்படுத்திவிட முடியும் என்பதனை உறுதியாக நம்பினேன்.


படிப்படியாக ஆள் குறைப்புச் செய்யப் பல இடங்களில் ஆட்டம் காண ஆரம்பித்தது. பிரித்தாளும் சூழ்ச்சியை உருவாக்கி சிலரை மேலே கொண்டு வர வேறு சிலருக்குப் பொறாமை மேலோங்கத் தொடங்கியது. அவர்களுக்குள் பிரச்சனை உருவாக அடுத்தடுத்து இடைவெளி உள்ள இடங்களில் உள்ளூர் மக்களை வேலையில் அமர்த்த ஒவ்வொருவராக வழிக்கு வரத் தொடங்கினர். பெட்டிப்பாம்பு போல மாறத் தொடங்கினர். மிரட்டல், அச்சுறுத்தல், அவமரியாதை போன்றவற்றைக் கணக்கில் எடுத்துக் கொண்டால் அது நமக்கு மன உளைச்சலைத்தான் தரும். இப்படிப்பட்ட அவமரியாதையை நான் ஏற்கனவே பலமுறை பார்த்து வந்தவன் என்று அவர்கள் எதிர்பார்க்கும் நிலைக்குக் கீழே பல படிகள் இறங்கிப் பாருங்கள். அட இவன் நம்மளை விட மோசமானவன் போல? என்று ஒதுங்கி விடுவார்கள்.

 

Jothi Ganesan Factory


இப்படிக் கையாண்டு தான் இரண்டாவது மாதத்தில் ஒரு லட்சம் ஆடைகள் என்ற இலக்கை அடைந்தேன். இதற்காகக் கோவையில் ஒரு நட்சத்திர விடுதியில் சாதனை விழா கூட நடத்தினார்கள். ஆனால் அந்தச் சமயத்திலும் உழைத்த தொழிலாளர்களுக்குச் சேர வேண்டியதை கவனமாகச் சேர்த்தேன்.


தொழிலாளர்களுக்கு என் மேல் அதிக ஈர்ப்பு உருவாகக் காரணமாக இருந்தது. ஆனால் என் நிர்வாகத்தில் "நான் சொல்வதைத் நீ கேட்க வேண்டும்" என்று முதலாளியின் மனைவி வந்து என் பாதையில் பெரிய பாறாங்கல்லை தூக்கிப் போட்ட போது அதைத் தூளாக்கி விட்டு முன்னேறிச் சென்றேன். முதலாளி முதல் அங்கிருந்த பல துறைகளில் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் வரைக்கும் எனக்கு ஆதரவு குரல் எழுப்பிய போதும் கூட அந்தப் பெண்மணியின் இறுதி ஆயுதம் அவரின் அழுகையாக இருந்தது. தன் மனைவியைத் திருத்த முடியாத நிலையில் உள்ள கணவரால் என்ன செய்ய முடியும்?


எனக்கும் அவருக்கும் முட்டல் மோதல் உருவானதற்கு அவரின் ஈகோ தான் காரணம். "என் நிறுவனத்தில் நான் வைத்தது தான் சட்டம்" என்று என்னிடம் மல்லுக்கு நின்ற போது "சரி நீங்க சொல்றபடியே நான் நடக்கின்றேன்? ஆனால் மாதம் இத்தனை ஆடைகள் ஏற்றுமதியாக வேண்டும் என்ற கோட்பாடுகளை உடைத்து விடலாம். அப்படிப் போக வேண்டும் என்றால் உள்ளே உள்ள நிர்வாகம் என் விருப்பப்படி தான் இருக்க வேண்டும்" என்றேன். "அது முடியாது? மாதம் இத்தனை லட்சம் ஆடைகள் போக வேண்டும். ஆனால் நான் சொல்கின்றபடி நான் நீ நடக்க வேண்டும்" என்று பேசுபவரை எப்படி எதிர் கொள்வீர்கள்?


நான் வெளியே வந்த பிறகு நான் இருந்த பதவிக்கு வருடந்தோறும் பத்துப் பேர்கள் வந்து போய்க் கொண்டே தான் இருந்தார்கள். சில வருடங்கள் கவனித்து விட்டு அந்த நிறுவனத்தை மறந்தே போய்விட்டேன்.


இரண்டாவதாகக் குறிப்பிட்டுள்ள நிறுவனம் தற்பொழுது எப்படி உள்ளது?


வங்கிக்கடன் கழுத்தை நெறிக்கப் பாதிக்கும் மேற்பட்டதை விற்று விட்டார்கள். மீதி உள்ளதை ஒப்பந்த ரீதியாகப் பார்த்துக் கொள்ள ஆட்களைத் தேடிக் கொண்டிருக்கின்றார்கள். அடுத்தவனின் காசுக்கு ஆசைப்பட்டே தன்னை வளர்த்துக் கொண்டவர் இன்று விரக்தியில் தடுமாறிக் கொண்டிருக்கின்றார்.


முதல் நிறுவனம் அடுத்தவர் காசுக்கு ஆசைப்பட வில்லை. ஆனால் ஒரு நிறுவனத்தின் நிர்வாகம் என்பது வேறு தங்களின் விருப்பங்கள் என்பது வேறு என்பதை உணர மறுத்தார்கள். பொறுப்பில் உள்ளவர்களைச் சுதந்திரமாகச் செயல்பட அனுமதித்து அவர்கள் மூலம் தங்கள் விருப்பங்களைச் செயல்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை உணர மறுத்தார்கள். அடுத்தடுத்த தோல்விகள் வந்த போதிலும் தனக்குக் கீழே இருப்பவன் அத்தனை பெருமைகளையும் பெறுகின்றானே? என்ற குழந்தைத்தனமான பிடிவாதம் நிறுவன வளர்ச்சியைக் கீழே இறக்க காரணமாக இருந்தது.


ஆனால் நான் இரண்டாவதாக அறிமுகப்படுத்திய நிறுவனம் தொடக்கம் முதல் அடுத்தவரின் சொத்தை அபகரித்து, அடுத்தவரை செயல்பட முடியாத அளவிற்கு முடங்கச் செய்து தன் வளர்ச்சியைப் படிப்படியாக வளர்த்துக் கொண்டு வந்தது. போட்டிச்சூழல் மாறத் தொடங்க தனக்குக் கீழே பணிபுரிந்தவர்கள் கேள்வி கேட்க அவர்களின் ஈனத்தனமான புத்தி அடிவாங்கத் தொடங்கியது. இன்று வங்கிக்கடன்களைக் கட்டிமுடித்தால் சில சொத்துக்கள் மட்டுமே மிஞ்சும். ஆனால் செய்து வந்த பாவத்திற்கு என்ன தண்டனை கிடைக்குமோ?


திடீர் பணத்தைப் பார்த்தவர்களால் தங்கள் ஈகோ தனத்தை மூட்டை கட்டி வைத்துக் கொள்ள முடியவில்லை. தொழிலில் வரும் பணம் அனைத்தும் தங்கள் வாழ்க்கைக்கு மட்டுமே என்று உறுதியாக நம்புகின்றார்கள். பிழைக்க வந்தவர்களை எச்சில் இலை போலக் கருதுகின்றார்கள். தங்கள் நிறுவன வளர்ச்சியில் இவர்களுக்குப் பங்குண்டு என்பதை நம்ப மறுக்கின்றார்கள். தூங்குபவனை எழுப்ப முடியும்? தூங்குவது போல நடிப்பவனை எழுப்ப முடியுமா? இதன் காரணமாகத்தான் இங்கே உள்ள ஒவ்வொரு நிறுவனமும் செயல்பட முடியாத நிலைக்குத் தள்ளப்படுகின்றது.


ஒரு தொழிற்சாலை குறிப்புகளில் சில இடங்களில் தொடர்பு இல்லையே? என்ற உங்களின் வருத்தம் எனக்குப் புரிந்தாலும் எல்லாவற்றையும் எல்லா இடங்களிலும் அப்படியே போட்டு உடைத்து விட முடியாது. நிஜவாழ்க்கை எதார்த்தம் ஒரு பக்கம் இருக்கின்றது என்பதை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.


நீ என்ன சாதித்தாய்? என்ற கேள்வி உங்களிடமிருந்து வருமானால் நிம்மதியாக வாழ்கின்றேன். தினந்தோறும் பலதரப்பட்ட மனஉளைச்சல் என்னைத் தாக்கிக் கொண்டே இருந்தாலும் படுத்தவுடன் தூக்கம் வந்து விடுகின்றது. மனைவி திட்டும் அளவுக்குச் சாப்பாடு விசயத்தில் இன்னமும் வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கின்றேன்.


குழந்தைகள் எங்களைக் கொண்டாடுகின்றார்கள். அடிப்படை வசதிகளுக்கு எவ்வித பஞ்சமில்லை. ஆடம்பர தேவைகளை நாடியதும் இல்லை. துணிவே துணை என்று வாழ்வதால் என் பணி ஏதோவொரு நிறுவனத்திற்குத் தேவைப்படுகின்றது.


தேவைப்பட்டவர்கள் என்னைப் பயன்படுத்திக் கொள்கின்றார்கள். என்னை விடத் திறமைசாலிகள் இங்கு ஏராளமான பேர்கள் இங்குண்டு. ஆனால் ஒரு பெரிய நிர்வாகத்தை எப்படி வழிநடத்த வேண்டும் என்பதில் தான் அவர்களுக்கும் எனக்கும் பெரிய அளவில் வித்தியாசம் உள்ளது. இது போன்ற இடங்களில் என் தனித்திறமை ஜெயிக்கக் காரணமாக உள்ளது. என் முழுமையான ஈடுபாடு ஒரு நிறுவனத்தின் வளர்ச்சியை விரைவு படுத்துகின்றது. ஒரு நிறுவனத்தை விட்டு வெளியே வந்தவுடன் அவர்கள் பலமுறை மீண்டும் அழைத்தும் அந்தப்பக்கம் திரும்பிப் பார்ப்பதும் இல்லை என்ற கொள்கையைத் தொடக்கம் முதல் கடைபிடித்து வருகின்றேன். என் கொள்கை கோட்பாடுகள் நிர்வாக அமைப்போடு ஒத்துப் போகும் வரைக்கும் "என் கடன் பணி செய்து கிடப்பதே" என்று ஒவ்வொரு நாளும் இனிதாக நகர்ந்து கொண்டேயிருக்கின்றது.


ஒரு நிறுவனத்தை விட்டு நகர்ந்து வந்த பிறகு ஏதோவொரு இடத்தில் அடையாளம் தெரியாத தொழிலாளர் உண்மையான அக்கறையோடு என்னைப் பற்றி எங்கள் குடும்பத்தைப் பற்றி அக்கறையோடு விசாரிக்கின்றார்கள். "நீங்க இருந்த வரைக்கும் நாங்க நன்றாக இருந்தோம்" என்று சொல்கின்ற அவர்களின் அந்த வார்த்தைகள் தான் இன்னமும் என்னை இந்தத் துறையில் இயங்க வைத்துக் கொண்டேயிருக்கின்றது. கோடி கோடியாய் சேர்த்தவனும் இறுதியில் திருப்பூரில் மின் மயானத்திற்குத்தான் செல்லப் போகின்றான். நானும் அங்கே தான் செல்லப் போகின்றேன். கோடிகளைச் சேர்த்து வைத்தவனின் வாரிசு அவனை எளிதில் மறந்து விடக்கூடும்.


ஆனால் என் கொள்கைகள் என் வாரிசுகளை வழி நடத்தும். அவர்களும் பலரின் வாழ்க்கைக்கு உதவக் கூடியவர்களாக இந்தச் சமூகத்தில் எதிர்காலத்தில் செயலாற்றுவார்கள் என்ற ஆழ்ந்த நம்பிக்கை எனக்குள் உண்டு.


நம்பிக்கை தானே வாழ்க்கை.


(இதுவரையிலும் என்னோடு பயணித்து வந்த உங்களுக்கு என் நன்றி. முற்றும்.)


குறிப்பு  :

அடுத்து வரும் சில அத்தியாயங்கள் வாயிலாக இத்தொடர் குறித்த கருத்துக்களைப் பற்றி வலைத்தமிழ் குழுவினர் மற்றும் நண்பர்களின் கருத்து வெளியிடப்படும்.

 

by Swathi   on 11 Dec 2014  7 Comments
Tags: திருப்பூர் ஜோதிஜி   ஆயத்த ஆடைத் துறை   ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்   Oru Tholitchalaiyin Kurippugal   Tiruppur Jothiji   Jothiji Tiruppur     
 தொடர்புடையவை-Related Articles
ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்.. தொடர் பற்றிய வலைத்தமிழ் ஆசிரியர் குழு மற்றும் வாசகர்களின் பின்னூட்டங்கள்... ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்.. தொடர் பற்றிய வலைத்தமிழ் ஆசிரியர் குழு மற்றும் வாசகர்களின் பின்னூட்டங்கள்...
ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : துணிவே துணை - அத்தியாயம் 20 ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : துணிவே துணை - அத்தியாயம் 20
ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : பெயர் மட்டுமல்ல உழைப்பிலும் ராஜா தான் - அத்தியாயம் - 19 ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : பெயர் மட்டுமல்ல உழைப்பிலும் ராஜா தான் - அத்தியாயம் - 19
ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்.. : பொருளாதாரம் உருவாக்கும் அவதாரங்கள் : அத்தியாயம் 18 ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்.. : பொருளாதாரம் உருவாக்கும் அவதாரங்கள் : அத்தியாயம் 18
ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : அவள் பெயர் ரம்யா - அத்தியாயம் 17 ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : அவள் பெயர் ரம்யா - அத்தியாயம் 17
ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : எந்திர மனிதர்கள் - அத்தியாயம் 16 ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : எந்திர மனிதர்கள் - அத்தியாயம் 16
ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : பணக்காரன் பேசுவதெல்லாம் தத்துவமே - அத்தியாயம் 15 ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : பணக்காரன் பேசுவதெல்லாம் தத்துவமே - அத்தியாயம் 15
ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : வண்ணங்களே வாழ்க்கை - அத்தியாயம் 14 ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : வண்ணங்களே வாழ்க்கை - அத்தியாயம் 14
கருத்துகள்
31-Dec-2014 04:19:25 சண் நல்லையா,நோர்வே said : Report Abuse
அருமையான ஆக்கம்! பல நூல்களை வெளியிடுக!
 
17-Dec-2014 22:49:15 மா.ரவீந்திரன் said : Report Abuse
ஒருவரின் தனிப்பட்ட பழக்க வழக்கம் மாறும்பொழுது அவரால் எடுக்கப்படும் (அவரின்) முடிவுகளும் மாறுகிறது. ஒழுக்கம் உயிரை விட மேலானது என்று வள்ளுவர் சொன்னதின் காரணத்தை மறந்துவிடுகிறார்கள். ஆனால் ஒரு மனிதனின் அனைத்து தோல்விகளையும் அவனின் ஒழுக்கம் சார்ந்த நடவடிக்கை தொடங்கி வைக்கிறது. அவனுடைய ஆசைகள் அதனை விரைவுபடுத்துகிறது. இதுதான் சரியென்று அவனது பேராசை உறுதிபடுத்துகின்றது. இதன் வழியே சென்று அழிந்தவர்கள்தான் இங்கே முக்கால்வாசி பேர்கள் இருக்கின்றனர். - ஒருவன் வாழ்வதையும் வீழ்வதையும் இந்த வரிகள் அற்புதமாக விளக்குகின்றன. நீங்கள் இவை எல்லாவற்றையும் விலகி நின்று கவனித்ததால்தான் உங்களால் இதை தெளிவாக எழுத முடிகின்றது. அருமை. அருமை. வாழ்த்துக்கள். என்றும் அன்புடன் மா.ரவீந்திரன், மதுரை 9442738002
 
16-Dec-2014 06:04:31 கருணாகரன் said : Report Abuse
நீங்கள் சீக்கரம் முடித்து விட்டது கண்டு கவலையே மிஞ்சுகிறது. இன்னும் நெறைய விசயங்களை தேறிந்துகொள்ள முடியாமல் போனதே என்று. வாழ்த்துகள். மீண்டும் வேறு தலைப்பில் விரைவில் எழுதவீர்கள் என்ற நம்பிக்கையில் மன அமைதி கொள்கிறேன். நன்றி. வாழ்த்துக்கள்.கருணாகரன், சென்னை
 
15-Dec-2014 02:04:25 minnalnagaraj said : Report Abuse
அடடா ,,உங்கள் குறிப்புகளை அதற்குள் முடித்து விட்டீர்களே??இன்னும் சொல்ல வேண்டியது உங்கள் மனதில் நிறைய இருக்கிறது .நான் எனது 35 வருட அனுபவத்தில் அடைந்ததை நீங்க 20 வருடத்திலேயே அடைந்திருக்கிறீர்கள்.அதுசரி அந்த முதலைகளை ஆம் முதலைகளை கோடி காட்டியிருந்தால் வாசிக்கும் நாங்கள் ஊகித்திருப்போம் .சார் உங்க தனியாக பதிவிடுங்கள் அதில் தெரிந்து கொள்கிறோம்.உங்கள் எழுத்து நடை அருமை !!
 
13-Dec-2014 23:37:16 சா. சுரேஷ்பாபு said : Report Abuse
ஒரு தொழிற்சாலை நிர்வாகம் எப்படி இருக்க வேண்டும்! எப்படி இருக்க கூடாது! என்பதை இத்தனை அத்தியாயங்களில் சுருக்கமாக விவரித்து பின்னலாடை தொழில் பற்றி மிகச்சிறப்பாக விவரித்தீர்கள்! சுவாரஸ்யமான தொடர்! நன்றி!
 
13-Dec-2014 18:34:27 டி.என்.முரளிதரன் said : Report Abuse
"நீங்கள் இருந்தவரைக்கும் நாங்கள் நன்றாக இருந்தோம்" இது நிச்சயம் பல விருதுகளுக்கு சமம். இத் தொடரில் நீங்கள் குறிப்பிட்டவை நிச்சயம் தொழில் முனைவோருக்கு பயனுள்ளதாக அமையும் என்பதில் ஐயமில்லை . ஒரு அத்தியாயம் விடாமல் அனைத்தயும் படித்தேன் ஒரு நிர்வாகப் பாடத்தை சுவாரசியமான கதை போல் சொன்னதன் மூலம் உங்கள் எழுத்து திறமியின் வீச்சை அறிய முடிகிறது . பாராட்டுக்கள் விரிவான விமர்சனம் பின்னர் என் வலைப்பதிவில் எழுத முயற்சிக்கிறேன்.
 
13-Dec-2014 06:40:25 krishnamoorthy said : Report Abuse
இந்த 20 பதிவுகளையும் இது கடந்த காலத்தின் நிகழ்வு போல உங்களை பற்றி அறியாதவர்கள் சில பேர் படித்து இருக்க கூடும் ஆனால் இது நேற்றும் இன்றும் நாளையும் - உலவும் திருப்பூர் உண்மைகள் .பேராசை எனும் எரிமலை போல மற்றவரை பாதிக்குதோ இல்லையோ அவர்களை உள்ளே போட்டு விழுங்கி விடுகிறது என்பதர்க்கான அத்தாட்சி பத்திரம் போலத்தான் இந்த பதிவுகள் அதை பார்த்து மற்றவர் சிலர் மட்டுமே சுதாரித்து கொண்டு இருக்கிறார்கள் .இங்கு இன்னும் பேச உங்களுக்கு ஆயிரம் ஆயிரம் விசயம் இருக்கிறது ஆனாலும் வேறு ஒரு பார்வையில் அது வளரலாம் ..ஆனால் இன்னும் இருக்கே சொல்லுவதர்க்கு அதர்க்குள் இந்த மனிதன் சட்டென்று முடிந்தது விட்டது என்று போட்டு உடைத்து விட்டாரே என்ற நெருடல் அல்லது ஆதங்கம் எனக்கு உள்காயம் போல உறுத்துகிறது ...!
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.