LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் -ஜோதிஜி

ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : வண்ணங்களே வாழ்க்கை - அத்தியாயம் 14

வண்ணங்களே வாழ்க்கை


"பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும்" என்பார்கள். பெரிய போர்ப்படையே பாம்பைக் கண்டவுடன் சிதறி ஓடுவார்கள் என்ற அர்த்தத்தில் சொல்லி இருப்பார்களோ?


ஆனால் எனக்குப் பயத்தோடு பல கேள்விகளும் வியர்வையுடன் வந்தது. ஒரு நிறுவனத்தில் குறிப்பிட்ட பகுதியில் பாம்புகள் குடும்பத்துடன் வந்து குடியிருக்கின்றது என்றால், 'இந்தப் பகுதி கவனிப்பார் இன்றி ஆள் ஆரவமின்றி இருக்கின்றது என்று அர்த்தம்' என்பதை மனதில் குறித்துக் கொண்டேன்.


பிரிண்டிங் (PRINTING DEPARTMENT) துறை என்பது ஆயத்த ஆடைத்துறையில் முக்கியமான துறையாகும். வெள்ளை மற்றும் வண்ண ஆயத்த ஆடை என்றால் அதற்குத் தனிப்பட்ட மதிப்பு எதுவும் இருக்காது. அதுவே அந்த ஆடையின் மேல் ஒரு சிறிய பிரிண்ட் அல்லது எம்ட்ராய்டரி இருக்கும் பட்சத்தில் அதன் மதிப்பே தனி. விலையும் அதிகமாக இருக்கும். இவற்றைத்தான் மேலை நாடுகள் விரும்புகின்றன.


திருப்பூரில் உள்ள நிறுவனங்களுக்கென்று சில சிறப்புத் தகுதிகள் உண்டு. கடினமான விசயங்களை இயல்பாக எடுத்துக் கொண்டு சாதிக்கும் வல்லமை கொண்டவர்கள். அசராத உழைப்பு. இந்த இரண்டும் தான் மத்திய, மாநில அரசாங்கங்கள் ஒத்துழைப்பு கொடுக்காத பட்சத்திலும் கூட பல சிரமங்களையும் கடந்தும் திருப்பூர் வளர்ந்து கொண்டே இருக்கின்றது.


உலகளாவிய போட்டி உள்ள இந்தத் தொழிலில் திருப்பூருக்குப் போட்டியாகப் பங்களாதேஷ், பாகிஸ்தான், இலங்கை, சீனா, இந்தோனேஷியா, பர்மா போன்ற பல நாடுகள் இருந்தாலும் திருப்பூரின் வளர்ச்சியை நிறுத்த முடியவில்லை. அதற்கு முக்கியக் காரணம் இந்தப் பிரிண்ட்டிங் என்றால் மிகையாகாது.

 

Jothi Ganesan Factory 41


காரணம் மற்ற நாடுகள் கடினமான வேலைப்பாடுகள் நிறைந்த ஆயத்த ஆடைகளை விரும்புவதில்லை. வேலை செய்ய எளிமையாக உள்ள வடிவமைப்புகளைத் தான் முதன்மையாகத் தேர்ந்தெடுக்கின்றார்கள். மேலும் ஒரு ஆயத்த ஆடை தயாரிப்புச் செலவில் தங்கள் லாபத்தைக் குறைத்துக் கொள்கின்றார்கள். உற்பத்திச் செலவை பல விதங்களில் தாங்கள் விரும்பும் அளவுக்குக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்கின்றார்கள்.


காரணம் அங்குள்ள தொழிலாளர்களை எந்த நிறுவனமும் மனிதர்களாக மதிப்பதில்லை. எவ்வித அடிப்படை வசதிகளையும் உருவாக்கித் தருவதில்லை. திருப்பூரில் உள்ள ஒரு டைலர் பெறும் (எட்டு மணி நேரத்திற்கு அதிகபட்சமாக ரூபாய் 450) சம்பளத்தில் நான்கில் ஒரு பங்கு மட்டுமே மேலே குறிப்பிட்டுள்ள நாடுகளில் உள்ள டைலர் சம்பளமாகப் பெறுகின்றனர். பத்து நபர்கள் பணிபுரிய வேண்டிய இடங்களில் மூன்று நபர்களை வைத்தே மொத்த வேலையையும் வாங்குகின்றார்கள். 'மனித வளத்துறை' என்ற பெயரில் பட்டியில் அடைக்கும் மாடுகளைப் போல நெருக்கமான இடங்களில் வைத்து வேலை வாங்குகின்றார்கள்.


இது போன்று பல விதங்களில் உற்பத்திச் செலவை கட்டுப்படுத்தி மேற்கத்திய சமூகம் விரும்பும் விலையை அவர்களால் கொடுக்க முடிகின்றது. ஆனால் எப்போதும் போல மேலை நாடுகளில் உள்ள கணவான்கள் மனித உரிமைகளைப் பற்றி வாய் கிழிய பேசுகின்றார்கள்.


இது தவிர அந்தந்த அரசாங்கம் அங்குள்ள ஏற்றுமதியாளர்களுக்கு "ஊக்கத் தொகை" (DUTY DRAW BACK) என்ற பெயரில் வாரி வழங்குகின்றார்கள். இதற்கு மேலும் ஏழை நாடுகள் என்ற பெயரில் அவர்களிடம் இருந்து வாங்கும் பொருட்களுக்கு இறக்குமதி வரியை (IMPORT DUTY) வளர்ந்த நாடுகள் தள்ளுபடி செய்கின்றது.


இதன் காரணமாக இறக்குமதியாளர்களுக்குத் தனியாக 12 சதவிகித லாபம் கிடைக்கின்றது. கனடா, அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளில் உள்ள இறக்குமதியாளர்கள் திருப்பூரில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு அவரவர் வாழும் நாட்டின் அரசாங்கத்திற்கு இறக்குமதி வரி என்ற பெயரில் 12 சதவிகித வரியைக் கட்டிய பின்பே துறைமுகத்தில் இருந்து சரக்கை வெளியே எடுக்க முடியும்.


இந்த வசதிகள் எதுவும் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்பவர்களுக்குக் கிடைக்காது. சென்ற காங்கிரஸ் ஆட்சியில் ஆனந்த் ஷர்மா என்பவர் வர்த்தகத் துறை அமைச்சராக இருந்தார். ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பந்தம் உருவாக்கி திருப்பூர் ஏற்றுமதியாளர்களுக்கு வரிவிலக்கு வாங்கித் தருகின்றேன் என்று ஆசையைக் காட்டி அவர் கோட் பையை நிரப்பிக் கொண்டது தான் மிச்சம். இங்கே இருந்த அவரின் அடிபொடிகளும் அவருக்கு ஆராதனை செய்து காசைக் கொண்டு போய்க் கொட்டினார்கள்.


ஆனால் இவற்றையெல்லாம் மீறி திருப்பூர் இன்று வரையிலும் சந்தையில் நிற்பதற்கு முக்கியக் காரணம் இந்த வண்ண வண்ண பிரிண்ட்டிங் துறையே. பல வித வண்ணங்களோடு தங்கள் வாழ்க்கையைப் பின்னிப் பிணைந்து வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் வாழ்க்கையை இன்றைய மின்சாரத் தட்டுப்பாடு தடுமாற வைத்துக் கொண்டிருக்கின்றது.


இத்தனை பிரச்சனைக்கிடையேயும் இங்கே மற்ற நாடுகள் தர முடியாத தரத்தையும், விலையையும் கொடுக்கக் கூடியவர்களாக இருக்கின்றார்கள்.


இறக்குமதியாளர்கள் விரும்பும் குறுகிய காலகட்டத்திற்குள் கொடுத்து விடுவதால் "எனக்கு உன் விலை கட்டுபிடியாகாது" என்று செல்பவர்கள் குறிப்பிட்ட காலகட்டத்திற்குப் பிறகு மீண்டும் வந்து விடுகின்றார்கள். இந்தச் சமயத்தில் இந்தப் பிரிண்ட்டிங் துறையைப் பற்றிப் பார்த்து விடுவோம்.


ஆயத்த ஆடையின் மேல் தீர்மானிக்கப்பட்ட பிரிண்ட எந்த அளவுக்குத் தேவைப்படுகின்றதோ அதன் வடிவத்தைக் காகித வடிவில் DESIGNER பார்வையிடுகின்றார். குறிப்பிட்ட வடிவ அடிப்படையில் எந்த அளவுக்கு உருவாக்கப்பட வேண்டும் என்பதை மனதில் கொண்டு அதற்கான ஆயத்த ஏற்பாடுகளைத் துவங்கின்றார். டிசைனர் கணினியில் வரைந்து கொடுத்து விடுவார். மற்றொருவர் அதனைக் கொண்டு பிலிம் உருவாக்கி விடுவார்.


அதன் அடிப்படையில் பிரிண்ட்டிங் பட்டறைக்குத் தேவைப்படும் அளவுக்குச் சதுர மற்றும் செவ்வக வடிவில் நைலான் துணியில் பிரிண்டிங் வடிவத்தை மற்றொருவர் உருவாக்கித் தந்து விடுவார். அந்தக் குறிப்பிட்ட மாடல் என்பது மெல்லிய நைலான் துணியில் உருவாக்கப்பட்டு இருக்கும். நான்கு புறமும் கம்பி வடிவிலான உருளைகளால் உருவாக்கப்பட்டுச் சதுர மற்றும் செவ்வக வடிவிலான மாடல் உருவாக்கப்பட்டு விடும். இந்த வடிவமைப்புப் பிரிண்ட்டிங் பட்டறைக்கு வருகின்றது.


ஒவ்வொரு பிரிண்டிங் பட்டறையிலும் தொழிலாளிகள்  புஜபலபாரக்கிரமசாலிகளாக இருப்பதால் சலிக்காமல் வேலை செய்பவர்களாக இருப்பார்கள். பெரும்பாலும் தமிழகத்தின் தென் மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளிகள் தான் சாயப்பட்டறைத் துறையிலும் பிரிண்ட்டிங் துறையிலும் இருப்பார்கள்.

 

Jothi Ganesan Factory 44


மெல்லிய நைலான் வடிவ துணியின் மேல் தேவைப்படுகின்ற வண்ண சாயத்தை அளவு பார்த்து ஊற்றுவார்கள். மேஜையின் மேல் விரிக்கப்பட்டுள்ள துணி அல்லது நறுக்கப்பட்ட துணியின் மேல் வைத்து மேலும் கீழும் SCRAPPER துணை கொண்டு சாயம் எல்லா இடங்களிலும் பரவும்படி இழுப்பார்கள்.


கொட்டப்பட்டுள்ள சாயத்தை நைலான் துணியில் அழுத்தி இழுக்கும் போது நைலான் துணியின் மேலே உள்ள சாயமானது நைலான் துணியில் உள்ள மெல்லிய துளை வழியே (குறிப்பிட்ட வடிவம் சார்ந்து உருவாக்கப்பட்டு இருக்கும்) உள்ளே இறங்கி துணியில் நாம் எதிர்பார்த்த புதிய வடிவம் பிறக்கும்.


ஒரு வடிவமைப்புக்கு எத்தனை நிறங்கள் தேவைப்படுகின்றதோ ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு SCREEN தயாராக இருக்கும். இப்படித்தான் ஆயத்த ஆடைத் துணியில் தேவைப்படுகின்ற பிரிண்ட்டிங் வடிவத்தைக் கொண்டு வருகின்றார்கள்.


திருப்பூரில் உள்ள ஆயத்த ஆடைத்துறையில் உள்ள ஒவ்வொரு துணைத் துறைகளிலும் பங்கு பெறும் தொழிலாள வர்க்கத்தில் சில சிறப்புத் தகுதிகள் உண்டு என்பதை நாம் எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டும். டைலர் என்பவர்களுக்கு உடல் உழைப்பு அதிகமாக இருக்காது. ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டு பணிபுரிபவர்களாக இருப்பார்கள். கட்டிங் மாஸ்டர்கள் எந்திரங்களின் துணை கொண்டு பணிபுரிபவர்களாக இருப்பார்கள். செக்கிங் என்ற தரம் பார்த்துப் பிரிக்கக்கூடிய பகுதியில் பெண்கள் நாள் முழுக்க நின்று கொண்டே பணிபுரிய வேண்டியதாக இருக்கும்.

 

Jothi Ganesan Factory 42


இது போன்று இங்குள்ள ஒவ்வொரு துறையிலும் SKILLED AND SEMI-SKILLED என்ற வகையில் கலந்து கட்டியதாக இருக்கும்.


ஆனால் சாயப்பட்டறை மற்றும் பிரிண்ட்டிங் துறையில் முழுக்க முழுக்க உடல் உழைப்பை நம்பியே செயல்பட வேண்டியதாக இருக்கும். இன்றைய சூழ்நிலையில் நவீன தொழில் நுட்ப வசதிகள் வந்திருந்த போதிலும் மனித ஆற்றலின் பங்கு இங்கு அதிகமாகத் தேவைப்படும். உடல் வலு உள்ளவர்களால் மட்டுமே இது போன்ற துறைகளில் காலம் தள்ள முடியும்.


பிரிண்ட்டிங் துறையில் பல பிரிவுகள் உள்ளது. TABLE PRINTING, MECHINE PRINTING, ROTARY PRINTING, STICKER PRINTING, FUSING PRINTING என்று பல பிரிவுகள் உள்ளது.


தொடக்கத்தில் இந்தத் துறை எந்த நவீனமும் எட்டிப்பார்க்காத நிலையில் இருந்தது. இதனைப் பிரிண்ட்டிங் பட்டறை என்று அழைத்தார்கள். ஓடு வேயப்பட்ட நீண்ட செவ்வக வடிவில் தாழ்வாரம் போன்ற அமைப்பில் கிடைத்த இடத்தில் இருந்து கொண்டு செயல்பட்டார்கள். முழுக்க மனித உழைப்பை மட்டுமே நம்பி செயல்பட்டார்கள். செவ்வக மேஜை, அந்த மேஜையைத் தாங்க பத்தடிக்கு ஒரு கடப்பா கல் போன்ற அமைப்பில் உருவாக்கியிருப்பார்கள். அதன் மேல் கெட்டியான காடாத்துணியைப் போட்டு இரண்டு பக்கமும் இறுகக் கட்டியிருப்பார்கள். ஏறக்குறைய 120 அடி நீளமுள்ளதாக இருக்கும்.


ஆனால் இன்று மொத்தமாக மாறி விட்டது. மனித உழைப்புகள் தேவைப்பட்ட இடத்திற்கு எந்திரங்கள் வந்து விட்டது. இரண்டு நிறத்திற்கு யோசித்தவர்கள் இன்று 14 நிறம் வரைக்கும் கலக்கிக் கொண்டிருக்கின்றார்கள். அதாவது உங்கள் புகைப்படத்தை அல்லது குடும்ப உறுப்பினர்களைக் கொண்ட புகைப்படத்தை ஒரே நாளில் வண்ண வடிவமாக மாற்றித் துணியில் பிரிண்ட் அல்லது எம்ப்ராய்ட்ரி வடிவத்தில் தந்து விடக்கூடிய நவீன தொழில் நுட்ப வசதிகளைக் கொண்டது தான் இன்றைய ஆயத்த ஆடை உலகம்.


இது தவிர ரோட்டரி பிரிண்டிங் என்றொரு பூதம் இந்தத் துறையையே மாற்றி விட்டது. ஒரு பெரிய தொழிற்சாலை போலவே 24 மணி நேரமும் இயங்கிக் கொண்டிருக்கின்றது. இது எந்த அளவுக்கு வளர்ந்துள்ளது தெரியுமா?


எத்தனை ஆயிரம் கிலோ? உங்களுக்கு எத்தனை மணி நேரத்தில் வேண்டும் என்கிற அளவுக்கு இன்றைய நவீன தொழில் நுட்பம் இந்தத் துறையை வளர்ச்சியடைய வைத்துள்ளது.


என்ன வேண்டுமானாலும் பெறலாம். எப்போது வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம் என்கிற அளவுக்கு வளர்ந்து விட்டது. மொத்தத்தில் முதலீடு செய்யப் பணம் இருந்தால் போதும். உலகளாவிய வணிக ஒப்பந்தத்தம் உருவாக்கிய செயல்பாட்டின் காரணமாக எந்த உயர் ரகத் தொழில் நுட்பத்தையும் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் திருப்பூருக்குள் கொண்டு வந்து விடலாம். அந்நிய முதலீடு என்பது நம் நாட்டிற்குத் தேவையில்லை என்ற கருத்து முழுமையாகச் செல்லுபடியாகாத ஒரே ஊர் என்றால் அது திருப்பூர் மட்டுமே. காரணம் இங்குள்ள ஒவ்வொரு துறையிலும் உள்ள பல வித நவீன ரக எந்திரங்கள் அனைத்தும் ஒவ்வொரு நாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்யப்பட்டவையே. ஐந்து லட்சம் முதல் ஐந்து கோடி வரைக்கும் பலதரப்பட்ட எந்திரங்கள் தான் இங்கே ஆட்சி செய்கின்றது.

 

Jothi Ganesan Factory 43


ஆனால் வருடந்தோறும் லட்சணக்கான பொறியாளர்களை இந்தியா உருவாக்கிக் கொண்டிருக்கின்றது என்பதை நாம் நினைவில் வைத்திருக்க வேண்டும். இங்கே எந்தக் கண்டுபிடிப்பும் உருவாக்கப்பட வில்லை என்பதோடு அதற்கான முயற்சிகளின் தொடக்கம் கூட இங்கே உருவாக்கப் படவில்லை.


அது குறித்து இங்கே எந்த ஆட்சியாளர்களும் கவலைப்படவும் இல்லை என்பது தான் ஆச்சரியத்தின் உச்சம். நாம் 66 ஆண்டுகளுக்கு முன்னால் வரைக்கும் யாருக்கோ அடிமையாகத் தான் இருந்து அடக்கமாக வாழ்ந்து பழகியிருந்தோம். இன்றும் பெரிய மாறுதல்கள் இல்லை.


சந்தைப் பொருளாதாரத்தில் ஒரு அங்கமாக இருக்கின்றோம். ஆனால் நம்மை ஏதோவொரு சர்வதேச நிறுவனம் ஆட்டிப்படைத்துக் கொண்டிருப்பதைத் தெரியாமலே பணம் துரத்தும் பறவையாக மாறி நாமும் சுதந்திரமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்று நம்பிக் கொண்டிருக்கின்றோம்.


இருட்டுக்குள் பாம்புகளுடன் நின்று கொண்டிருந்தாலும் பலவற்றையும் யோசித்துக் கொண்டிருந்த என்னை வெளியே நின்று கொண்டிருந்த முதலாளி "இருட்டுக்குள் என்ன பார்த்துக் கொண்டிருக்கீறீங்க?" என்ற அழைத்த குரல் கேட்டதும் சுயநினைவுக்குத் திரும்பினேன்.


இப்போது என் எதிரே படம் எடுத்து எதிரே நிற்கும் பாம்பு பங்களாளிகளுடன் ஒரு சமாதான உடம்படிக்கையை அவசரமாக உருவாக்கியே ஆக வேண்டும் என்ற அவசரத்தில் இருந்தேன். நான் பாம்பு என்று கத்தினால் வெளியே இருக்கும் இரண்டு ஜம்பவான்கள் நிச்சயம் உள்ளே வந்து காப்பாற்றுவார்கள் என்ற எண்ணம் எனக்குத் துளி கூட இல்லை. பெல்ட்டு அவிழ்வது கூடத் தெரியாமல் தலை தெறிக்க ஓடி விடுவார்கள் என்று யோசித்துக் கொண்டே என் இக்கட்டான சூழ்நிலையை எப்படி வென்று வருவது என்று சுற்றும் முற்றும் பார்த்தேன். ஒரே கும்மிருட்டாக இருந்தது. பக்கத்தில் என்ன இருக்கிறது என்பதைக் கண்டு கொள்ளவே சற்று நேரம் பிடித்தது.


இக்கட்டான சூழ்நிலையில் நம் தைரியமே ஆதாரம். அவசரப்பட்டு ஒன்றும் ஆகப்போவதில்லை என்பதை உணர்ந்து கொண்டு கண்களை இருட்டுக்குள் துழாவினேன்.


பக்கத்தில் தெரிந்த மேஜையின் மேல் கால் வைத்து ஏறினேன். அது படபடவென்று சரிந்தது. சரிந்த வேகத்தில் உருவான சப்தம் கேட்டுப் பாம்புகள் வேகமாக ஊர்ந்து மறைந்தது.


எந்த விலங்கும் மனிதர்களை வம்புக்கு இழுப்பதில்லை. அதற்குண்டான வாழ்க்கையில் மனிதர்கள் குறுக்கிடும் போது தான் முதலில் முறைக்கின்றது. பிறகு எதிர்க்கின்றது. கடைசியில் போராடத் துவங்குகின்றது. நானும் ஒரு வழியாக அந்த இருட்டுக்குள் போராடி தட்டுத்தடுமாறி வெளியே வந்தேன்.


ஆனால் நான் இப்போது இந்த நிறுவனத்தில் பார்த்த பிரிண்ட்டிங் துறையில் பார்த்த வசதிகள் புதிய தொழில் நுட்ப வசதிகள் உருவாகாத காலகட்டத்திற்குள் இருந்த நிலையில் இருந்தது. அதாவது எந்தத் தொழில் நுட்ப மாறுதல்களையும் இவர்கள் உள்வாங்கவே இல்லை என்பதைத் தெரிந்து கொள்ள முடிந்தது.

 

Jothi Ganesan Factory 45


மொத்தத்தில் நிறுவனத்திற்கு ஒரு பெயர். அதற்கு நான் தான் முதலாளி என்ற கம்பீரம். ஆனால் உள்ளே உயிரற்ற உடம்பாய் மொத்த நிர்வாகமும் ஸ்தம்பித்துப் போய்க் கிடக்கின்றது. அது குறித்த அக்கறையின்றி இன்னமும் சுயபெருமையைப் பறைசாற்றிக் கொண்டு வெட்கமின்றித் திரியும் மனிதர் வெளியே நின்று கொண்டு இன்னமும் தனது சுயபுராணத்தை நிறுத்தாமல் சொல்லிக் கொண்டிருந்தார்.


இவரை எப்படி அழைப்பீர்கள்? எல்லாத் தொழிலும் முதலீடு செய்துள்ளவர்கள் முதலாளி தான். ஆனால் அதற்கான தகுதிகள் எதுவுமின்றி இருந்தால் வந்த சுவடு தெரியாமலேயே போட்டு முதல் அனைத்தும் குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் காணாமல் போய்விடும் அல்லவா? அப்படித்தான் இங்கேயும் நடந்துள்ளது.


முதலாளி வெளியே நின்று கொண்டு இன்னமும் தன் சுயபுராணக் கதையைப் பேசிக் கொண்டிருந்தார். விதியே என்று நொந்தபடி மீண்டும் அவர்களுடன் பயணித்து அலுவகத்திற்குத் திரும்பினேன்.


என் மனதிற்குள் வைராக்கியம் இன்னும் ஒரு படி அதிகமாக உருவாகியிருந்தது. அவசர சிகிக்சையில் இருப்பவனுக்கு ஆறுதல் தேவையில்லை. உடனடியாகச் செய்தே ஆக வேண்டிய முதலுதவிகள் தான் தேவைப்படும்.


இந்த நிறுவனத்தை மேலே கொண்டு வருவதற்கு முக்கியமான இரண்டு விசயங்களை உடனடியாகச் செய்தே ஆக வேண்டும் என்று என் மனதில் தோன்றியது. உடனடி வருமானம் வரக்கூடிய விசயங்களில் கவனம் செலுத்த வேண்டும். அதுவும் உடனே செய்தாக வேண்டும். தோட்டத்திற்குள் உற்பத்தித் துறை தவிர்த்து தனியாக மூன்று துறைகள் இருந்தது.


நிட்டிங் மற்றும் பிரிண்டிங் என்ற இரண்டு துறைகளில் கவனம் செலுத்தினால் வாரந்தோறும் குறிப்பிட்ட வருமானத்தை உள்ளே கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கை உருவானது.


இவை இரண்டும் வாரந்தோறும் ஆயிரக்கணக்கில் வரக்கூடிய வருமானமாகத் தான் இருந்தது. ஆனால் உள்ளே இருந்த மற்றொரு துறையான சாயப்பட்டறையை மட்டும் இயக்க முடிந்தால் லட்சக்கணக்கில் கொண்டு வர முடியும். ஆனால் அரசாங்க நடைமுறைகள் தொடங்கி ஒவ்வொன்றும் பயமுறுத்துவதாக இருந்தது.


சாயப்பட்டறையைப் பழையை நிலைமைக்குக் கொண்டு வருவது சாதாரண விசயமாகத் தெரியவில்லை. அரசாங்கம் சம்மந்தப்பட்ட பல சட்டசிக்கல்கள் இருந்தது. இதற்கு முன்னால் இருந்தவர்கள் புகுந்து விளையாடி இருந்தார்கள். மின்சார வாரியம் ஒரு பக்கம் சீல் வைத்து விட்டு சென்று விட மற்றொரு புறம் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆப்பு அடித்திருந்தார்கள்.


எந்தப்பக்கம் திரும்பினாலும் சேதாரம் ஏராளமாக இருந்தது. இது தவிர இதை மீண்டும் இயக்க கோடிக்கணக்கான ரூபாயை இதற்குள் இறக்கியிருந்தார்கள். புதிய உபகரணங்கள் என்று ஆலோசனை சொன்ன ஒவ்வொருவரையும் நம்பி மனம் போன போக்கில் செலவழித்து இருந்தார்கள்.


"பட்ட காலிலே படும். கெட்ட குடியே கெடும்" என்ற பழமொழியைக் கேள்விப்பட்டு இருக்கின்றார்களா? இதற்கான முழு அர்த்தமும் எனக்கு இங்கே தான் தெரிந்தது. ஒவ்வொரு விசயத்திற்குள்ளும் உள்ளே நுழைந்து வெளியே வந்த போது ஒரு நல்ல சிறுகதையின் சுவராசியம் போலவே எனக்குத் தெரிந்தது.


நேர்மையுடன் வந்து அணுகியவர்கள் அத்தனை பேர்களுக்கும் இவர் நாமத்தை பரிசாகத் தந்த காரணத்தினால் நேர்மையற்ற அத்தனை பேர்களும் வந்து அல்வா கொடுத்து விட்டு சென்று இருந்தார்கள்.


செலவு அதிகமானதே தவிர எந்தச் செயல்பாடுகளும் முடிவடையவில்லை. எல்லாமே அறைகுறையாக இருந்தது. ஒவ்வொன்றையும் மனதிற்குள் குறித்து வைத்துக் கொண்டேன். என் கருத்து எதையும் சொல்லவில்லை.


எனக்கு நன்றாகப் புரிந்து விட்டது. எவர் எதைச் சொன்னாலும் அதைச் சந்தேகத்தின் அடிப்படையிலே பார்த்துப் பழகியவரிடம் நாம் என்ன சொன்னாலும் எடுபடாது என்பதைப் புரிந்து கொண்டேன். நம் செயல்பாடுகள் மட்டுமே இவர் குணத்தை மாற்றும் என்பதை உறுதியாக நம்பினேன். அப்பாவும், மகனும் என்னை மீண்டும் அலுவலகத்தில் கொண்டு வந்து விட்டதும் என் திட்ட அறிக்கையைத் தயார் செய்யத் துவங்கினேன்.


முக்கியமாக உடனடியாகச் செய்ய வேண்டிய வேலைகள். நிரந்தரமாகச் செய்ய வேண்டிய வேலைகள் என்று இரண்டு பகுதியாகப் பிரித்துக் கொண்டேன். மூன்று வாரங்கள் இடைவிடாது பாடுபட்டதன் பலனாகப் பாதையின் தொடக்கம் தெரிந்தது.


முக்கியப் பதவிகளில் தகுதியான நபர்களை நியமிக்க முடிந்தது.  அதிர்ஷ்டவசமாக ஒரு பெரிய ஒப்பந்தம் கைக்கு வந்தது.


பிரிண்ட்டிங் மற்றும் நிட்டிங் துறைக்கு நியமிக்கப்பட்டவர்களிடம் முதலில் சுத்தம் செய்து விட்டு எது முதலில் தேவை? என்பதை கணக்கு எடுக்கச் சொன்னேன். 


சிறிய முதலீடுகள் தேவை என்பதை உணர்த்திய போதும் முதலாளி அது குறித்து கவலைப்பட்டதாகவே தெரியவில்லை.  தொடர்பில் இருந்த நபர்கள் மூலம் கடனுக்கு ஏற்பாடு செய்து வேலைகள் நிற்காத அளவுக்கு விரட்டி வேலை வாங்கிக் கொண்டிருந்தேன்.


மாத இறுதியில் புதிதாகச் சேர்ந்தவர்களுக்குச் சம்பளம் நிர்ணயித்த போது தான் முதலாளியின் முழுச் சொரூபமும் எனக்குப் புரிந்தது. நாம் ஏன் இந்தச் சாக்கடையில் இருக்க வேண்டும் என்ற எண்ணமும் உருவானது.

 

குறிப்புகள் தொடரும்.....

by Swathi   on 30 Oct 2014  2 Comments
Tags: திருப்பூர் பின்னலாடை தொழில்   திருப்பூர் ஜோதிஜி   Tiruppur Textile Industry   Tiruppur Jothiji   Vannangal   Vaalkkai   பணக்காரன்  
 தொடர்புடையவை-Related Articles
பல்வேறு வண்ணங்களின் தமிழ்ப் பெயர்கள் !! பல்வேறு வண்ணங்களின் தமிழ்ப் பெயர்கள் !!
வாழ்க்கை ஒரு நாடகம் வாழ்க்கை ஒரு நாடகம்
ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்.. தொடர் பற்றிய வலைத்தமிழ் ஆசிரியர் குழு மற்றும் வாசகர்களின் பின்னூட்டங்கள்... ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்.. தொடர் பற்றிய வலைத்தமிழ் ஆசிரியர் குழு மற்றும் வாசகர்களின் பின்னூட்டங்கள்...
ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : துணிவே துணை - அத்தியாயம் 20 ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : துணிவே துணை - அத்தியாயம் 20
ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : பெயர் மட்டுமல்ல உழைப்பிலும் ராஜா தான் - அத்தியாயம் - 19 ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : பெயர் மட்டுமல்ல உழைப்பிலும் ராஜா தான் - அத்தியாயம் - 19
ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்.. : பொருளாதாரம் உருவாக்கும் அவதாரங்கள் : அத்தியாயம் 18 ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்.. : பொருளாதாரம் உருவாக்கும் அவதாரங்கள் : அத்தியாயம் 18
ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : அவள் பெயர் ரம்யா - அத்தியாயம் 17 ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : அவள் பெயர் ரம்யா - அத்தியாயம் 17
ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : எந்திர மனிதர்கள் - அத்தியாயம் 16 ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் : எந்திர மனிதர்கள் - அத்தியாயம் 16
கருத்துகள்
31-Oct-2014 12:04:22 ஜெ.பாண்டியன் said : Report Abuse
வெறுமனே தொழிற்சாலைகளின் நடவடிக்கைகளை அதன் போக்கில் கூறாமல், வாழ்க்கைக்கான விழுமியத்தை தெளித்துக் கொண்டு செல்கிறீர்கள். தொடர்ந்து படித்து வருகிறேன். உங்களுக்கு சிறுகதைக்கான சுவாரசியம் நிகழ்வுகளுக்கிடையே கிடைப்பது போல, உங்களின் எழுத்து வடிவில் நானும் உணர்கிறேன்..
 
31-Oct-2014 12:04:22 ஜெ.பாண்டியன் said : Report Abuse
வெறுமனே தொழிற்சாலைகளின் நடவடிக்கைகளை அதன் போக்கில் கூறாமல், வாழ்க்கைக்கான விழுமியத்தை தெளித்துக் கொண்டு செல்கிறீர்கள். தொடர்ந்து படித்து வருகிறேன். உங்களுக்கு சிறுகதைக்கான சுவாரசியம் நிகழ்வுகளுக்கிடையே கிடைப்பது போல, உங்களின் எழுத்து வடிவில் நானும் உணர்கிறேன்..
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.