LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    கட்டுரை Print Friendly and PDF
- தத்துவங்கள் (Quotes )

மௌனமாக இருப்பதும் தனிமையாக இருப்பதும் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டதா?

பேச்சை அறு.
மௌனமாக இருப்பதும் தனிமையாக இருப்பதும் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டதா?
 
ஆரம்ப கட்டத்தில் ஆமாம். மௌனமாக இருப்பதற்கு முனிவர்களும், ரிஷிகளும் வனாந்தரங்களுக்குப் போனார்கள். நிசப்தம் கருதிப் போகவில்லை. வனம் சப்தமில்லாத இடம் என்று அவர்கள் போகவில்லை. விலங்குகளின் உறுமல்களும், பறவைகளின் கூச்சல்களும், வண்டினங்களின் முரல்களும், காற்றின் சீழ்கை ஒலியும், அருவியின் இடையறாத ஓசையும் அவர்களுக்குக் கேட்டுக்கொண்டு தானிருக்கும்.
 
ஆனால், இவை அவர்கள் கவனத்தை ஈர்க்காது. அதே நேரம் இதற்கிடையில் ஒரு குழந்தையின் அழு குரல் கேட்டால் அவர்கள் திடுக்கிட்டுப் போவார்கள். மனிதர்களின் பேச்சுக் குரல் கேட்டால் நிச்சயம் மனம் திசை திரும்பும்.
 
யாரோ முனிவர் உட்கார்ந்திருக்கிறார். வா நமஸ்கரித்து விட்டு போகலாம்” என்றால் அந்தத் தவம் கண்டிப்பாகக் கலையும்.
மனிதர்கள் நடமாட்டம் இல்லாத வனாந்தரங்களும், மலை உச்சிகளும், குகைகளும் அவர்களுக்கு மௌனம் பழக வசதியாய் இருந்தது. இன்றைக்கும் மௌனம் பழக அதுதான் வசதி. ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் கிடைத்த விடுமுறையில் எந்த வனாந்தரத்துக்குப் போவது, எந்தக் குகையில் போ உட்கார்ந்துகொள்வது என்று நீங்கள் கவலைப்படலாம். கொஞ்சம் யோசித்தால் வேறு உபாயங்கள் இருக்கின்றன.
 
நிசப்தம் அல்ல நாம் கேட்பது. பேச்சு அறுப்பது. பேச்சிலிருந்து விடுபடுவது. இதற்குப் பேருந்துப் பயணங்கள் உதவுமோ என்று எனக்குத் தோன்றுகிறது. காலையில் எழுந்திருந்து தொலைதூர பஸ் ஏதேனும் பிடித்து நாற்பது மைல், ஐம்பது மைல் தள்ளிப் போய் ஏதேனும் ஒரு ஓட்டலில் உணவருந்தி விட்டு, எங்கேனும் ஒரு கோயிலில் உட்கார்ந்து விட்டு அல்லது ஏதேனும் ஒரு பேருந்து நிலையத்தில் அமர்ந்து விட்டு அந்தி சாய்ந்ததும் மறுபடியும் பேருந்து ஏறி வீட்டுக்கு வரலாம்.
தெரிந்தவர் யாரும் இல்லாத ஒரு ஊரில் தனியே உட்கார்ந்திருக்கலாம். ஆனால், உலகம் உங்களைச் சும்மா விடாது. சாருக்கு எந்த ஊரு?” பதில் சொல்லாது நீங்கள் பேந்தப்பேந்த விழிக்கலாம்.
 
பேச்சு வராதா?” அவர் துக்கப்படலாம்.
 
மௌனமாய் தலைகுனிந்து நீங்கள் உட்கார்ந் திருக்க, காது செவிடு போல இருக்கு. கண்றாவி.’ அவர் முகம் சுளிக்கலாம்.
எத்தனை நேரம் அருகில் இருந்து உற்றுப் பார்ப்பார்? நகர்ந்து விடுவார். நிம்மதி. நீங்கள் தனிமையில் மூழ்கியிருக்கலாம். மௌனத்தைக் கடைப் பிடிக்கலாம். மறந்து போய் உங்கள் ஊரைச் சொல்லி விட்டால், ஆமா ஆமா. என் மச்சினன்கூட அங்கு தான் இருக்கான். என் உடன் பொறந்தாகூட அங்க வாழ்க்கைப்பட்டிருக்கா”’ என்று ஆரம்பித்து விடுவார்.
 
பிறகு ஒன்றை ஒன்று பிடித்துப் பிடித்துப் பேச்சு தொடர்ந்துகொண்டிருக்கும். பேச்சு முற்றி முதிர்ந்து, நம்ம சி.எம். தப்பா, சரியா சொல்லுங்க பார்க்கலாம்” என்று மிகப் பெரிய கேள்வி உங்கள் முன் வைக்கப் படும். எதற்கு இது? இதனால் பத்து பைசாவுக்கு லாபம் உண்டா? யார் கேட்டார்கள்? எதை நிரூபிக்க இந்தக் கேள்வி அல்லது பதில். பொழுதைக் கொல்கிற ஆட்கள்தான் அதிகம்.
 
மனத்தை வெகு எளிதில் பார்த்து விட முடியாது. மனத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே மனம் உங்களை வேறு பக்கம் திசை திருப்பும். இந்த நேரம் மௌனமாக இருக்கிறதா? எதுவும் பேசாது இருக்கிறதா? உங்களால் பேசாது இருக்க முடியாது. மனம் பேசாது இருக்கிறது. நீங்கள் என்ன செய்வீர்கள்? அப்போது நீங்கள், மனம் என்று இரண்டு விஷயங்களாக இருப்பீர்களா? ஆமாம். இது இன்னொரு விசித்திரம். மனத்தை மனத்தால்தான் உற்றுப் பார்க்க முடியும். உற்றுப் பார்த்த மனம் மௌனமானதும், அதைப் பார்க்கின்ற மனம் ஓயத் தொடங்கும். அப்போது உள்மனம் ஒரு தந்திரம் செய்யும். மனம், உள்மனம் இரண்டும் ஒன்றே.
 
இன்னும் ஆழமாகவும் இதைப் பார்க்கலாம். அவன் வருகிறான், இவள் நிற்கிறாள், அது காகம், இது கழுதை என்று மனம் மூளையிலிருந்து தகவல் எடுத்து வெளியே உங்களுக்குள்ளே சொல்லிக் கொண்டிருக்கும். அது மட்டுமல்ல. இம்மாதிரியான உருவங்களற்ற கலைடாஸ்கோப் விஷயங்களையும் மனம் போடும். எந்த உருவமற்ற நிறங்களை, நிறப் பிரிகைகளை, வடிவங்களை மனம் காட்டும். உலகில் இல்லாத சில வண்ணங்கள், சில வடிவங்கள் உள்மனதில் தோன்றும். மறுபடியும் சொல்கிறேன். மனம், உள்மனம் இரண்டும் ஒன்றே.
 
நீங்கள் மனத்தை கவனித்ததில்லை என்று அர்த்தம். நீங்கள் மனத்தைக் கவனிக்கத் தொடங்கினால் நான் சொல்வதை விட பலநூறு குரங்கு சேஷ்டைகளை இந்த மனம் செய்வதைக் கவனிக்கலாம். திருடு, பொய், கற்பழிப்பு, கயவாளித்தனம் சகலமும் இந்த மனம் பொழுது விடிந்து பொழுது போனால் செய்து கொண்டிருப்பதைக் கவனிக்கலாம்.
 
நல்லதாக யோசி என்று நான் சொல்லவில்லை. நல்லதோ, கெட்டதோ மனம் இடையறாது சலனப்பட்டுக் கொண்டே இருக்கிறது. சலனத்தை நிறுத்தும் முயற்சிதான் மௌனம். அதிரடி ஆட்டத்தை நிறுத்துகின்ற தொடக்கம்தான் மௌனம். மௌனத்துக்குத் துணை போவதுதான் தனிமை.
 
தனிமையும், தனிமையால் ஏற்பட்ட பேச்சறுப்பும் உங்களை அதிகம் மனத்தைக் கவனிக்கத் திருப்பும். இது விட்டுவிட்டுத்தான் ஏற்படும். மனம் விலகி வேறு எங்கேனும் அலையும்பொழுது, வேறு ஏதேனும் கற்பனைக்குப் போகும்பொழுது மிகப் பெரிய பணக்காரனாக நீங்கள் வாழ்வதாக யோசிக்கும் பொழுது சட்டென்று அறுத்துவிட்டு, என்ன யோசிக்கிறா என்று மறுபடியும் உற்றுப் பார்க்க மனம் சுருண்டு பின்னடைவது தெரியும்.
 
உண்மையில் மனம் என்ற சாமான் இல்லை. ஆனால் மனம் என்ற சாமான் எங்கோ இருக்கிறது. எங்கு இருக்கிறது? தொடையிலா, குடலிலா, மூளையிலா? இல்லை. நான் என்று எதைச் சொல்கிறோம்? நெஞ்சைத் தொட்டுத்தானே. நெஞ்சு எங்கே? இடது பக்கம் இருதயத்தையா தொடுகிறோம். இல்லை. நடுவில். நெஞ்சுக்கு நடுவில் நான் என்று சொல்கிறோம். அங்கு தான் தட்டுகிறோம்.
 
அப்படியானால் நான் என்கிற அந்த மனம் எங்கிருக்கிறது? மார்புக் குழியின் நடுவிலிருந்து ஒரு விரல் நுனி தள்ளி வலப் பக்கம் இருக்கிறது. அந்த இடத்தில்தான் உயிர் என்பதும், அந்த இடத்திலிருந்து தான் எண்ணங்கள் தோன்றுவதும் நடக்கின்றன. எண்ணங்கள் எங்கு தோன்றுகிறதோ அந்த இடத்திற்கே மனம் என்று பெயர்.
மனம் என்பது ஒரு உறுப்பு அல்ல. ஆனால் அது ஒரு உறுப்பு போலும் ஒரு இடத்தில் இருக்கிறது. உறுப்பாக இல்லாது வேறு ஏதோ ஒரு சக்தியாக இருக்கிறது. உயிர் என்ற சக்தியாக இருக்கிறது. உயிர் சக்தி மனதுக்கு அருகே இருக்கிறது. அல்லது மனம்தான் உயிர் சக்தியாக தோற்றமளிக்கிறது. அதனால்தான் உயிர் என்பதையும், மனம் என்பதையும் பார்க்க முடியவில்லை. அது வெறும் சக்தி. சக்தி ரூபம். சக்தி நகர்ந்தால் இந்த உடம்பு சவம். அந்த சக்தி இருக்கும் வரை இது சிவம். ஆற்றல் மிகுந்த விஷயம்.
அந்தச் சக்தியின் அசைவே, அலைவே உங்களைக் காரியம் செய்யத் தூண்டுகிறது. நீங்கள் செய்யும் காரியத்தை செவ்வனே செய்வதற்கு அந்தச் சக்தியைப் புரிந்து கொள்ள வேண்டும். மனம் என்ற அந்தச் சக்தியைக் கவனித்தாலொழிய அதைப் புரிந்து கொள்ள முடியாது. ஒருவரோடு சேர்ந்து பழகினாலொழிய அவர் யார் என்று தெரியாது.
 
உங்கள் மனத்தோடு நீங்கள் பழகியிருக்கிறீர்களா?
 
அதோடு சினேகிதம் கொண்டிருக்கிறீர்களா? அதைக் கவனித்திருக்கிறீர்களா? அதைக் கருணையோடு பார்த்திருக்கிறீர்களா? அதைக் கவலையோடு யோசித்திருக்கிறீர்களா?
 
ஆமாம். உங்களைப் பற்றி, உங்கள் மனம் பற்றி நீங்கள் கவலையோடும், கருணையோடும் யோசிக்கத் தொடங்குவதே தியானத்தின் ஆரம்பம். இதற்கு மௌனம் ஒரு நல்ல வழி. மௌனத்துக்குத் தனிமை தான் மிகச் சிறந்த சாதனம்.
 
ஆனால் இந்தத் தனிமை மிகப் பெரிய கலவரத்தைக் கொடுக்கிறது. ஏன்? அது மரணத்தின் சாயலைக் கொண்டிருக்கிறது. யாருமே இல்லாது, எதுவுமே இல்லாது ஒரு வாழ்க்கை இருப்பின் அது மரணம் போலும் பயம் மிக்கது. இத்தனை பேர் இருக்கிறாங்க. பேசிப் பழகி, புகுந்து புறப்பட்டு வெளியே வர வேண்டாமா? எதுக்கு இது பேசாமல் இருக்கிறது என்று கேட்கலாம்.
 
வாழ்க்கை என்பது தொடர்புகொள்ளுதல். பிறரைத் தொடர்பு கொள்ளத் தன்னைப் புரிந்து கொள்ள வேண்டும். தான் யார் என்று தெரியாது, தனக்கு என்ன வேண்டும் என்று தெரியாது. தன்னுடைய குணம் தெரியாது மற்றவரோடு பழகினால் நாம் இடையறாது பிறரைத்தான் குறை சொல்லிக் கொண்டிருப்போமே தவிர, பிறர் குணங்களை அறியும் அமைதி நமக்கு வரவே வராது.
 
அவரை எடை போடும் கருவி நமக்குள் இருக்கவே இருக்காது. அவரை அணுக வேண்டிய முறை பற்றி நமக்குத் தெரியவே தெரியாது. ஏனென்றால் நம்மைப் பற்றியே நமக்குத் தெரியாதபோது அடுத்தவரைப் பற்றிய எல்லாவித அபிப்ராயங்களும், எடை போடல்களும் குப்பையாகத்தான் போகும்.
 
எனவே, மௌனம்தான், உங்களை அறிவதுதான், அதற்காகத் தனிமையில் இருப்பதுதான் மிகச் சிறந்த வழி.
by Swathi   on 07 Jun 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
வள்ளலார் அவதரித்த 200ம் ஆண்டை கொண்டாட இன்று முதல்  அடுத்த 200 நாட்களுக்கு 200 வள்ளலார் தமிழிசைப் பாடல்களை வழங்குகிறார் வள்ளலார் அவதரித்த 200ம் ஆண்டை கொண்டாட இன்று முதல் அடுத்த 200 நாட்களுக்கு 200 வள்ளலார் தமிழிசைப் பாடல்களை வழங்குகிறார்
எங்கள் குல தெய்வம் -கட்டுரை, காணொளிப் போட்டி எங்கள் குல தெய்வம் -கட்டுரை, காணொளிப் போட்டி
வாழ்க்கை எனபது ஒரு பாதை வாழ்க்கை எனபது ஒரு பாதை
வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள்! இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது. வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள்! இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது.
அலகபாத்தில் உள்ள 128 வருடங்கள் பழமையான சத்திரம் அது. அலகபாத்தில் உள்ள 128 வருடங்கள் பழமையான சத்திரம் அது.
கோயிலா? கோவிலா? எது சரி? கோயிலா? கோவிலா? எது சரி?
உச்சியில் அஸ்திவாரம்- ''தஞ்சை பெரிய கோவில்''! உச்சியில் அஸ்திவாரம்- ''தஞ்சை பெரிய கோவில்''!
உலக அதிசயப்பட்டியலில் இடம்பெறாத தமிழர்கள் கண்டறிந்த உலக அதிசயப்பட்டியலில் இடம்பெறாத தமிழர்கள் கண்டறிந்த
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.