- எந்தத் தலைபோகும் அவசரமாக இருந்தாலும் ஒரு சமயத்தில் ஒரே ஒரு வேலையைச் செய்யுங்கள்.
- பிரச்னையை முழுவதும் புரிந்து கொண்ட பின் செயல்படத் துவங்கவும். பிரச்னை எதுவாக இருந்தாலும் அதை முதலில் புரிந்துகொள்ளவும். அடுத்தது அலசி ஆராயவும். கடைசியில் பிரச்னை முடிச்சை அவிழ்க்கவும். (Understand the problem Analyse the problem Attack the problem)
- காது கொடுத்துக் கேளுங்கள். எதிராளி (உங்கள் செல்ல பப்லுக்குட்டியோ... உங்கள் ஜெனரல் மானேஜரா) அவர் சொல்ல வந்ததை முழுவதும் சொல்லட்டும். குறுக்கே பேசாமல் உன்னிப்பாக கவனியுங்கள். கேட்பதை மனதில் வாங்கிக்கொண்டு பிறகு பதில் பேசலாம்.
- கேள்வி கேளுங்கள். மிகவும் அற்புதமாகத் தோன்றும் சந்தேகத்தைக் கூட உதாசீனப்படுத்தாமல் விடை காண முயலவும், ஒர சிறிய கேள்வி வரவழைக்கும் விடைகளால் உங்கள் பிரச்னைக்கு முற்றிலும் ஒரு புதிய பரிமாணமே கிடைத்தாலும் கிடைக்கும்.
- யாரொருவருடன் பேசும்போதும் அவருடைய கண்களைப் பார்த்துப் பேசுங்கள். அடுத்தவர் உங்களிடம் பேசும்போதும் அவர் கண்களையும் முகபாவங்களையும் உன்னிப்பாகக் கவனிப்பது முக்கியம். இதனால் நீங்கள் எதிராளியின் நம்பிக்கையை எளிதில் பெறுவீர்கள்.
- மாறுதல்களை எளிதாக ஏற்றுக்கொள்ளுங்கள். நேற்று சரியான முறை என்று நாம் நினைப்பது இன்று மாறிவிடுகிறது. திறந்த மனதுடன் புதிய முறைகளை வரவேற்பது உங்கள் வெற்றியைச் சுலபமாக்கும்.
- தவறுகளை ஒப்புக்கொள்ளுங்கள். நம்மில் யாருமே ‘சூப்பர் பர்ஃபெக்ட்’ இல்லை. தவறைப் புரிந்துகொண்டு ஒப்புக்கொண்டு திருத்திக்கொள்ள முற்பட்டால் யாருமே உங்களைத் தாழ்வாக நினைக்க மாட்டார்கள். மாறாக, உங்கள் மதிப்பு உயரக் கூடும்.
- சொல்ல வந்ததை எளிமையாகச் சொல்லுங்கள். சுற்றி வளைத்த, ஜாடை மாடை பூடகப் பேச்சோ, உங்கள் மொழிப்புலமையை வெளிக்காட்ட உதவும் பல்லை உடைக்கும் சொற்களோ தேவையில்லை. ஒரு குழந்தை கூடப் புரிந்துகொள்ளக்கூடிய எளிய முறையில் பேசுங்கள். அதற்குத்தான் எதிர்பார்த்த பலன் இருக்கும்.
- அமைதியாக இருங்கள். வீட்டிலோ - வெளியிலோ எங்குதான் பிரச்னைகளில்லை? அதுவும் நம் ரத்தக் கொதிப்பை எகிற வைக்கும் விஷயங்களுக்குக் குறைவா, என்ன? சட்டென்று பதிலடி (வார்த்தைகளால்தான்!) கொடுக்கும் முன் ஒரு நிமிடம் ஆழமாக மூச்சிழுங்கள். பிறகு சொல்ல வேண்டியதை அழுத்தமாகவும் நிதானமாகவும் யோசித்துச் சொல்லுங்கள். படபடப்பாய் பொரிந்து தள்ளுவது சுலபம். ஆனால் அது பிரச்னையை திசை மாற்றிவிடும். அதனால் நிகர நட்டம் உங்களுக்குத்தான்.
- கடைசியாக... அடிக்கடி புன்னகையுங்கள். காசா பணமா செலவு? ஒரு சிறு புன்னகை பல சிக்கல்களை அவிழ்க்கும். பாதைகளை சீராக்கும். உங்கள் முகத்தையும் கூட இன்னும் அழகாக ஆக்கும்
|