LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    கட்டுரை Print Friendly and PDF
- மற்றவை

இறவாத இன்ப அன்பு - முனைவர். மு. வள்ளியம்மை

சமய நெறி பரப்பும் சமயவாதிகள்,சமய அருளாளர்கள் அன்பு

வாழ்க்கை  மூலம் இறையன்பைபரப்பினர். சைவ சமயம் செழிக்க அரும்பணி ஆற்றிய காரைக்காலம்மையாரே சமய நெறி பரப்பும் பணியில் முன்னோடியாக நிற்கிறார். சிறு பிள்ளைப் பருவம் முதல் இரவும் பகலும் எப்போதும் நெஞ்சிலே நினைவிலே ,உள்ளிலே,உயிரிலே இறைவனை எண்ணி எண்ணி வாழ்ந்தவர்.இவர் பாடிய அற்புத்த் திருவந்தாதியின் முதற் பாடலின்,

                ”பிறந்த மொழி பயின்ற பின்னெல்லாங் காதல்

                 சிறந்து நின் சேவடியே சேர்ந்தேன்”

என்ற முதல் இரண்டடிகள்  இவர் இறைவன் மீது கொண்ட அன்பையும்,சமயம் சார்ந்த உணர்வையும் சமயக் கொள்கையில் வழுவாமல் இருந்த தன்மையையும் உணர்த்துகின்றன.          

          அம்மையார் சிவ வழிபாட்டில் அக வழிபாடு, புற வழிபாடு என்ற முறையையும் அறிமுகப்படுத்தியவர்.அதன் தொடர்பாகப் பின் வந்த அடியார்கள் வாழ்வில் சிவத்தொண்டும் ,சிவ வழிபாடும் ,சிவானுபவமும் மட்டுமேயல்லாது சிவ வழிபாட்டில் அதி தீவிர முறையும் காணப்படுகிறது.

              அம்மையார் தோற்றுவித்த சிவன்பால் கொண்ட பக்தியும் உறுதிப்பாடும் அம்மையாரின் மனத் திண்மையும் அவர் காலத்துக்குப் பின்னால் வந்த அடியார்கள் வாழ்விலும் வெளிப்படுகின்றது.அம்மையார் காட்டிய நெறி பிற்காலத்தில் அடியார்க்கு வாழ்வில் அன்பு நெறியாக மலர்கிறது .அன்பு நெறியில் திளைத்த அடியார்கள் தங்கள் வாழ்வில் கொண்ட பற்று, பாசம் , இல்லறம் இவற்றைத் துறந்தனர் என்பதைப் பெரிய புராணம் விளக்கும்.

         அடியார்களை வழிபடல், பேணல் , ஆகியனவும் இறைவனை வழிபடலுக்குச் சமமானது என்பதைக் காரைக்கால் அம்மையார் உணர்த்தினார். சிவனை மட்டுமல்லாது சிவனேயச் செல்வர்களையும் வழிபட்டனர். அப்பூதியடிகள் அப்பரையும் ,கணனாதர் சம்பந்தரையும் ,பெருமிழலைக் குறும்பர் நம்பியாண்டார் நம்பிகளையும்,இன்னும் ஐயடிகள் காடவர்கோன் ,குலச் சிறையார்,ஏயர்கோன் கலிக்காமர் ஆகியோர் அடியவர்களையும் வழிபட்டு உய்தி பெற்ற  சிவத் தொண்டர்கள்.இவர்களெல்லாம் இறைவனால் ஆட்கொள்ளப் பெற்ற அருளாளர்கள்.ஆனால் காரைக்கால் அம்மையாரே திருவடியின் கீழ் இருக்கும் பேறு பெற்றவர்.இறைவன் ஓர் பெண்ணை அம்மையாக ஏற்றுக் கொண்டார்.ஓர் ஆணை அப்பனாக ஏற்றுக் கொண்டார்.அம்மை காரைக்கால் அம்மை ;அப்பன் கண்ணப்பன்.அம்மையைத் தூக்கிய திருவடியின் கீழ் வைத்தார்.அப்பனைத் தன் வலப் பக்கத்தில் வைத்தார்.இருவரையுமே தன் பக்கத்தில் வைத்துக் கொள்ளவேண்டும் என்பதால் இடது புறத்தை உமையம்மைக்கும் வலது புறத்தை இவர்கள் இருவருக்கும் கொடுத்தான். இப்படிப்பட்ட பேறு அம்மைக்கு எப்படிக் கிடைத்தது?அவர் கேட்டுப் பெற்ற வரத்தால் கிடைத்தது. வரத்திற்குப் பொருளாய் அமைந்தது ஒர் கனி. கனியை வைத்தே அம்மையின் வாழ்வில் தன் பணியைத் தொடங்குகிறார் இறைவன்.

      காரைக்கால் அம்மையார் ஈசனிடத்தும் அடியவரிடத்தும் செலுத்திய அன்பு  ஒரு தாய் தன் குழந்தையிடம் காட்டும் அன்பாக அமைந்தது. அதனால் ஈசன் அவரைத் தாயாகக் கொண்டான்.பானினைந்தூட்டும் தாயாய்,கறியமுது இல்லையே என ஏங்கி,கணவன் கொடுத்தனுப்பிய கனிகளில் ஒன்றைச் சிவனடியார்க்கு இட்டு மகிழ்ந்த பண்பேஇறைவன் இவரைத் தாயக ஏற்றுக் கொள்ளச் செய்தது. இறைவனிடம் காட்டிய தாயன்பை இவரது திருப் பாட்டுக்களில் காணமுடிகிறது.பெருமானிடத்தும் பிராட்டியிடத்தும் அம்மையார் தாயாந் தன்மை நிலையில் தலையன்பு கொண்டு பேணினார்.

பாம்புகளை அணியாதீர் , “பொன்னாரம் மற்றொன்று பூண்

இரந்துண்ண வேண்டாம்”,இடுகாட்டில் ஆடும் போது பிராட்டியைக் கூட வைக்க வேண்டாம்”,பிராட்டி பேய்களுக்கு அஞ்சுவாள்”,என்றிவ்வாஅரு உலகியல் தாயின் பரிவோடு பாடும் பாட்டுக்கள் இத்தன்மையை விளக்குகின்றன.இத்தன்மையால் ‘இவள் நம்மைப் பேணும் அம்மை காண்என்று திருவுள்ளம் மலர்கிறார் இறைவன்.அம்மையே! என்றழைத்து என்ன வரம் வேண்டும் என்றூ கேட்கிறார் எம்பெருமான்.அம்மை கேட்ட வரம் நம்மைச் சிந்திக்க வைக்கிறது. அவரது மன உணர்வுகளோடு ஒன்றிய எண்ண எழுச்சியின் வெளிப் பாடாக அவ்வரங்கள் அமைகின்றன.

        “இறவாத இன்ப அன்பு வேன்ண்டிப் பின் வேண்டுகின்றார்

         பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண்டேல் உன்னை என்றும்

         மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும் நான் மகிழ்ந்துபாடி                                               

          அறவா நீ ஆடும்போது அடியின் கீழ் இருக்க என்றார்

என்று பாடுவார் சேக்கிழார் பெருமான்.   

            ஒரு உயிர் மற்றொரு உயிரால் நேசிக்கப்பட வேண்டுமென்று விரும்புவது இயற்கை.அந்த அன்பும் நிலைத்து நிற்க வேண்டும் என்று எண்ணுவதும் இயல்பே.இந்த அன்பே அம்மையின் வார்த்தைகளில் தொனிக்கிறது.உலக உயிர்கள் அனைத்தும் இன்பத்தையே விரும்புவன.இறவாத இன்ப அன்பு என்று இயம்புங்கால் ,அன்பு வேண்டும்;அது மாறாமல் இருந்தால் மட்டும் போதாது;இன்பமானதாகவும் இருத்தல் வேண்டும் என்பதுதான் அவருடைய முதல் வரம்.கணவனின் அன்பு தன் கடைசிக் காலம் வரை இருக்கும் என்று நம்பிக் கைப் பிடித்த அம்மையார் அது இல்லை என்றானதும் இறைவனின் அன்பை இறவாத இன்ப அன்பாக வேண்டுகிறார்.

              இந்த உலகில் உண்மை அன்பு உணரப்படாமலும் போற்றிப் பேணுவாரற்றும் போய் விடுகிறது.ஒருதலைப் பட்சமான போலியான அன்பு உணர்ச்சியே எங்கும் பரவலாக உணரப்படுகிறது.இதுபோல் உதட்டளவில் அன்பு செலுத்துகின்ற ,செலுத்திய உண்மை அன்பைப் புரிந்து கொள்ளாத இந்த முரண்பாடான மானிடர் சமுதாயத்தில் இனி தாம் பிறக்கவே கூடாது என்று எண்ணுகிறார்.இவ் வரத்தினையே ‘மீண்டும் பிறவாமை வேண்டும் என இரண்டாவதாக வைக்கிறார்.இவ்வுலகின் மீது கொண்ட வெறுப்பின் உச்ச நிலையாக மூன்றாவது வரம் அமைகிறது.மாறாகப் பிறந்துவிட்டால் உன்னைவிட்டுப் பிரித்து விடாதே.உன் அருகிலேயே என்னை வைத்துக் கொள் என்று வேண்டுகிறார்.கணவன் தன்னை வேண்டாம் என விட்டபின் படர்க்கையில் ஒருமையாகிப் போனான்.ஒன்றிய உணர்வின் மிக்க நிலையில் உடனே இறைவனோடு ஒன்றிப் போனார். இவர் கேட்கும் வரங்களில் தற்சிந்தனையே மேலோங்கி நிற்கிறது.அச்சிந்தனையோடு அடுக்கடுக்காகக் கேட்கும் வரத்தின் மூலம் அவரது ஆழமான மன வடுவே வெளிப்படுகிறது.

        இப்படிப்பட்ட வரங்களை அம்மையார் கேட்டவுடன் இறைவன் அதைக் கூடும்படி அருள் ச்ய்கின்றார்.இதைச் சேக்கிழார்

             கூடுமாறு அருள் கொடுத்துக் குலவுதென்திசையில் என்றும்

             நீடுவாழ் பழன மூதூர் நிலவிய ஆலங்காட்டில்

              ஆடுமா நடமும் நீகண்டு ஆனந்தம் சேர்ந்து எப்போதும்

              பாடுவாய் நம்மை என்றான் பரவுவார் பற்றாய் நின்றான் .

                                                                  (கா.பு.61)

என்று பாடுவார்.பாடுவாய் நம்மை –எப்பொழுது? எப்போதும் பாடுவாய்.எப்படிப் பாடுவாய்?மகிழ்ந்து பாட வேண்டும் என்று கேட்டாயல்லவா?ஆனந்தம் சேர்ந்து பாடுவாய்.இப்படி இறவாத இன்ப அன்பு வேண்டிப் பெற்ற அன்னை  திருவாலங்காடு என்னும் தலத்தினைத் தலையாலே நடந்து வந்தடைந்தார்.ஆலங்காட்டு ஆலயத்தினுள்சென்று அங்கு அண்டமுற நிமிர்ந்தாடும் ஆண்டவனைக் கண்டு “கொங்கைதிரங்கி நரம்பெழுந்து………….என்று தொடங்கும் மூத்த திருப் பதிகம் பாடினார்.இறைவன் திரு நடனத்தைக் கண்டு வணங்கிய பேரன்பு மேன்மேலும் பொங்கி எழ “எட்டி இலவமீகை ………..எனத் தொடங்கி “முழவம் கொட்டக் குழகன் ஆடும் “என்ற முடிப்பினையுடைய திருப்பதிகம் பாடி அருளினார்.

                    சித்தாந்த நெறிப்படி ஆன்மா இறைவனைச் சேர ,சில படி நிலைகலைக் கடக்க வேண்டும்.பாச நீக்கம், சத்தி நிபாதம்,மலபரி பாகம் , வீடு பேறு என்பன கிட்ட வேண்டும் . பசுவானது பாசத்தைவிட்டுப் பதியைச் சென்றடைய இவை எல்லாம் நிகழ வேண்டும்.காரைக்காலம்மையார் இந்த நெறியில் இறைவனைச் சென்றடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

        பாசத்திற்குக் காரணமாகிய உடம்பை நீத்த்து பாச நீக்கம்; தலையால் நடந்து வரும்  அந்த எற்புடம்பின் அன்புதான் என்னே!என்ற அம்மையின் திருக்கண் நோக்கின் அருள் சத்தி நிபாதம்.இறைவன் அம்மையே! என ஏற்றுக் கொண்ட திறம் மலபரிபாகம் .பிறவாமை வேண்ஊ எனக் கேட்டுக் கூடுமாறு அருள் கொடுத்தது வீடுபேறு.ஆடும் போடு உன் அடியின் கீழிருக்க எனக் கேட்டுப் பெற்றது சாமீபம்.

         “தலையாய வைந்தினையுஞ் சாதித்துத் தாழ்ந்து

          தலையா யினவுணர்ந்தோர் காண்பர்—தலையாய

          வண்டத்தா னாதிரையா னாலால முண்டிருண்ட

           கண்டத்தான் செம்பொற்கழல்”

                                       திருவிரட்டை மணி மாலை10

    சாதனமாகிய சிவ ஞானத்தையும் ,சாதிக்கும் முறையினையும் ,சாதித்தற்கண் வரும் இடையூறுகளை நீக்கும் வழிகளையும் குருவருளால் அறிந்தோர்  ஏனை அண்டங்கள் அனைத்திற்கும் தலையாய் விளங்கும் சிவயோக வாழ்வு தரும் சிவ புவனம் காண்பர் என்பது இப்பாடலின் மையக் கருத்து.கழல் காண்டல் என்பது வீடு பேறெய்தல் .இப்பாடல் அம்மையாரின் சிவானுபவ வெளிப்பாடு. தாம் பெற்ற இன்பத்தைப் பிறரும்பெற வேண்டும் என்ற நல்ல நோக்கில்  வழிமுறைகளைக் காட்டக் கூடியதாக இவர் பாடல்கள் அமைந்திருப்பது தனிச் சிறப்பு.

       எந்த அடியாருக்கும் கிடைக்காத பேறு பெற்றவர் காரைக்காலம்மையார்.எப்போதும் பாடிக்கொண்டிரு என்ற திருவாக்கும்  எந்த அடியாருக்கும் கிடைக்காதது.தாயன்பு காட்டிய அம்மையார் எப்போதும் இறையடியில் இருக்கும்  இறவாத இன்ப அன்பினைப் பெற்றார்.திண்ணிய நெஞ்சமும் தெளிந்த அறிவும் கொண்ட காரைக் காலம்மையாரின் மன உறுதியை அவர்தம் பாடல்களில் அகச் சான்றாக்க் காண முடிகிறது.

          எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியர்

          திண்ணியர் ஆகப் பெறின்  

என்ற வள்ளுவத்திற்கு எடுத்துக் காட்டாய் வாழ்ந்து சிறந்தவர் காரைக்காலம்மையார்.               

by Swathi   on 29 Jul 2018  0 Comments
Tags: கரைகாலம்மையார்   Karaikal Ammaiyar                 
 தொடர்புடையவை-Related Articles
இறவாத இன்ப அன்பு - முனைவர். மு. வள்ளியம்மை இறவாத இன்ப அன்பு - முனைவர். மு. வள்ளியம்மை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.