( பூரட்டாதி – 4 ஆம் பாதம், உத்திரட்டாதி-1,2.3.4 பாதங்கள் , ரேவதி- 1,2,3,4 பாதங்கள்)
தேவகுருவான குருவை அதிபதியாகக் கொண்ட கீர்த்திமான், கெட்டிக்காரர், இரக்கமுள்ள, அதிக செலவாளியுமான மீனராசி அன்பர்களே! தங்கள் இராசிக்கு குரு பெயர்ச்சி தரும் பலன்களைப் பார்ப்போம். பொதுப் பலன்கள், பார்வை பலன்கள், மூர்த்தி நிர்ணயப்படி சிறப்பு பலன்கள் என அனைத்து இராசி நண்பர்களுக்கும் சீரான சிறப்பான பலன்களே அமையும்.
தங்கள் இராசிக்கும் கர்ம பாவத்திற்கும் அதிபதியான குரு – ஆவணி 27 ஆம் நாள் 8 ஆம் பாவத்திற்கு இடம் பெயர்கிறார். 7 ஆம் பாவத்தில் இருந்தவரை மணமாகாதவர்களுக்குத் திருமணம் சிறப்பாக நடந்திருக்கும். பிள்ளைகளால் பெற்றவர்கள் பெருமை அடைந்திருப்பார்கள். தொழில் துறையில் நல்ல வளர்ச்சி ஏற்பட்டிருக்கும். மனைவி மக்களுடன் வாழ்க்கை சந்தோஷமாகக் கழிந்திருக்கும். இந்த, குருவின் தற்போதைய ஆயுள் பாவ மாற்றத்தால் ‘ இம்மை எட்டில் வாலி பட்டம் இழந்து போம்படியானதும்’ – என்ற பழம் பாடலின்படி, இக் காலத்தில் பதவி, உத்தியோகம், கௌரவம் ஆகியவற்றில் இறக்கம், மாற்றம் அல்லது இழப்பு இவற்றில் ஏதேனும் ஒன்று நிகழலாம். .வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபங்கள் கிட்டாது, கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். கீழ்நிலையில் உள்ளவர்களின் சிநேகத்தால் அவப்பெயர் ஏற்படும். பயணங்களின் போது விபத்துக்களைச் சந்திக்க நேரும். எனவே, பயணங்களின் போது அதிக கவனத்துடன் இருங்கள். கோர்ட், வழக்கு போன்ற தண்டச் செலவுகளால் கைப்பணம் கரையும். பணமுடையும் ஏற்படும். தாள முடியாத மனக் கஷ்டங்களும், அதன் காரணமாக உடல் ஆரோக்கியம் கெடுதல் ஆகியவை ஏற்படும். காரியங்கள் எதுவும் நினைத்தபடி கை கூடாது. உடல் உழைப்பு அதிகமாகி அதற்கேற்ற இலாபமோ, பலனோ எதுவும் இராது. அக்னி விபத்து, அரச கோபம், சரீரக் கஷ்டம் ஆகியவை ஏற்படும். உடல் பலஹீனமும், சோர்வும் ஏற்படும். தேவையற்ற செலவுகள் ஏற்படும். கடன் வாங்கியவர்களிடம் இருத்து வரவேண்டிய பாக்கிகள், நிலுவையாவதால், பொருளாதாரச் சிக்கல்கள் எழும். தந்தை மூலமான விரயங்கள் தவிர்க்க முடியாத்தாகும். மனைவி மூலமான வருமானங்கள் தக்க சமயத்தில் கை கொடுக்கும். மனதளவிலும், உடலளவிலும் இன்னல்கள் எழும். சிலர் தங்கள் பழைய வீட்டை மாற்றி அமைத்து புதுப்பித்துக் கொள்ளக் கூடும். இளைஞர்களும், யுவதிகளும் தங்கள் காதல் விவகாரங்களால் பெற்றோர்களுக்கு மனவருத்தத்தை அளிப்பர்.
குரு தனது 5 ஆம் பார்வையால் விரயபாவத்தைப் பார்ப்பதால், செலவுகள அனைத்தும் சுப செலவுகளாக மாறும். வீட்டில் நடக்கும் சுபகாரியங்களால் செலவுகள் கூடினாலும், சந்தோஷம் நிலவும். வீடு கட்டுதல் போன்ற செலவுகள் ஏற்படும். தொழில், வியாபாரம் என சம்பாத்தியம் காரணமாக வெளியூர், வெளி மாநிலம், வெளிநாடு செல்லவேண்டிய சூழல் உருவாகும். அதன் காரணமாக குடும்பத்தைப் பிரிய நேரும். உடன் பிறப்புகளுக்கு தொழில் மேன்மை ஏற்படுவதோடு, சிலருக்கு நல்ல வேலை வாய்ப்பும் ஏற்படும்.
குரு தனது 7 ஆம் பார்வையால் தனபாவத்தை பார்வையிடுகிறார். அதன் காரணமாக குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரிய நிகழ்வுகள் அதிகம் ஏற்பட்டு சந்தோஷமான தருணங்களாக அமையும். காப்பீட்டுத் திட்டம் மூலமாகவோ, பங்கு சந்தை மூலமாகவோ ஆதாயங்கள் பெருகும். ஏதேனும் ஒரு வகையில் பிறரின் பணம் கையிருப்பு இருந்து கொண்டே இருக்கும். அரசாங்கம் மூலமாக வரவேண்டிய நிலுவைத் தொகைகள் உடனடியாக்க் கிடைக்க வாய்ப்பு உண்டு. அரசியல்வாதிகள் தங்கள் உடன் இருப்பவர்களிடம் அதிகப்படியான எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. கணவன் மனைவி உறவு பலப்படும். தாம்பத்தியத்தில் மகிழ்ச்சி நிலவும்.
குரு தனது 9 ஆம் பார்வையால் சுக பாவத்தை பார்வை செய்வதால் நோய்கள் தீர்ந்து ஆரோக்கியம் பெருகும். பிள்ளைகளின் கல்வி சம்பந்தமான செலவுகள் அதிகரிக்கும். வீடு மராமத்துச் செலவுகள், வாகனம் சரிசெய்யும் செலவுகள் வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும். சிலருக்கு வீடு கட்டும் ஆசை நிறைவேறும். மாணவர்கள் ஆராய்ச்சிக் கல்விக்காக வெளியூருக்குச் சென்று தங்கிப் படிக்க வேண்டிய சூழல் உருவாகும். மனையாளுக்குப் புதிய வேலை வாய்ப்புகள் ஏற்படும். வழக்குகள் வெற்றி அடைந்து முடிவுக்கு வரும். தாயின் ஆரோக்கியம் பெருகி, தந்தைக்கு மனமகிழ்ச்சி ஏற்படுத்தும்.
மீன இராசியினருக்கு மூர்த்தி நிர்ணயப்படி தாமிர மூர்த்தியாக மூன்றாம் நிலையில் அமைவதால் இந்த இராசிக்காரர்களுக்கு செம்பாலான பாத்திரங்கள் சேர்க்கை உண்டாகி ஓரளவு நன்மை அளிக்கும். செப்பு பாத்திரங்களை ஆலயங்களுக்குக் காணிக்கையாக செலுத்துவது நல்லது.
வேலை அல்லது உத்யோகம் (JOB)
வேலையில்லாதவர்களுக்கு வேலை கிட்டும் வேலையில் இருப்பவர்களுக்கு வேலையில் முன்னேற்றமும் ஊதிய உயர்வும் கிட்டும். உயரதிகாரிகளின் அன்பும் ஒத்துழைப்பும் நன்கு அமையும். உடன் பணிபுரிபவர்களால் பிரச்சனைகள் ஏற்பட்டு விலகும். தேவையில்லாமல் யாரையும் பகைத்துக் கொள்ளல் கூடாது. ஒரு சிலருக்கு வேலையில் மாற்றமும் வேலையின் காரணமாக வெளிநாடு செல்லும் வாய்ப்பும் கிட்டும். பரிட்சை எழுதி பாஸ் ஆகி நீண்டநாள் வேலையை எதிர் பார்த்தவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு அமையும். பார்க்கும் வேலையை அவசரப்பட்டு விட்டுவிடுதல் கூடாது.
தொழில் (BUSINESS), வியாபாரம் (TRADE)
உற்பத்தி சார்ந்த துறைகள் ஏற்றம் பெறும். சுய தொழில் சிறுதொழில் புரிபவர்கள் ஏற்றம் பெறுவர். சுயதொழில் புரிபவர்கள் கூட்டாளிகளுடன் சேர்ந்து தொழில் மேற்கொள்வர். இரும்பு எஃகு சிமெண்ட் மருத்துவம் பொறியியல் துறைகள் ஏற்றமாக அமையும். ஆடை, ஆபரணம், பிளாஸ்டிக், கைவினைப் பொருட்கள் துறை ஏற்றம் பெறும். கமிஷன், ஏஜென்ஸி, போக்குவரத்து, பத்திரிக்கை வண்டி வாகனங்கள் ஏற்றமுடையதாக அமையும். நிதி, நீதி, வங்கித் துறைகள் லாபகரமாகவும் இன்சூரன்ஸ், பங்குச்சந்தை சுமாரகவும் இருக்கும். ரோட்டோர வியாபாரம் லாபகரமாகவும் விளம்பரம் செய்தி, பத்திரிக்கை நல்ல ஏற்றமுடனும் அமையும். ரியல் எஸ்டேட் சற்று சுமாராக இருக்கும். லாட்டரி, ரேஸ் சற்று சுமாரகவே இருக்கும்.
விவசாயம்
விவசாயம் ஓரள்வு சுமாராகவே இருக்கும். லாபம் சற்று குறைந்து காணப்படும். கடன்வாங்க சந்தர்ப்பம் அமையும். பழைய நிலங்களை விற்றுவிட வாய்ப்புகள் வந்து சேரும். பழம் காய்கறிகள் தோட்டப்பயிர்களால் சற்று லாபம் அதிகரிக்கும்.
அரசியல்
அரசியல் வாழ்க்கை சற்று சுமாராகவே இருக்கும். கட்சியை விட்டு நீங்க அல்லது நீக்க வாய்ப்பு ஏற்படும். மக்களின் ஆதரவும் சற்று குறைந்து காணப்படும். வழக்குகள் இழுபறியாகவே இருக்கும். தொண்டர்கள் உண்மையாகவும் நேர்மையாகவும் விளங்குவர்.
கலைஞர்கள்
கலைத்துறை ஓரளவு சாதகமாக இருக்கும். நாடகம், சினிமா, இசை, ஓவியம், சிற்பம், ஜோசியம், இன்னும் பிற கலைத்துறைகள் சற்று ஏற்றமாகவும் ஒரு சிலர் புதிய ஒப்பந்தங்கள் மூலம் வெளியூர் வெளிநாடு செல்லவும் வாய்ப்புகள் அமையும்.
மாணவர்கள்
கல்வி நன்கு அமையும். உயர்கல்வி பயில வாய்ப்புகள் ஏற்படும். தேவையில்லாத விஷயங்களில் தலையிடுதல் கூடாது. எதிர்பார்த்த பள்ளி கல்லூரிகளில் இடம் கிடைக்க வாய்ப்பும் நல்ல மதிப்பெண் பெறவும் வாய்ப்புண்டு. படிப்பின் காரணமாக வெளியூர், வெளிநாடு செல்ல ஒரு சிலருக்கு வாய்ப்பு கிட்டும்.
பெண்கள்
சுபகாரியங்களில் அடிக்கடி ஈடுபட வாய்ப்புகள் அமையும். குடும்பத்தில் புது உறுப்பினர் வருகை அமையும். பணப்புழக்கம் கையில் தாரளமாக இருக்கும். புதிய ஆடை ஆபரணச் சேர்க்கை வந்து சேரும். கணவன் மனைவி உறவில் பிரச்சனை ஏற்படாமல் பார்த்துக் கொள்ளல் வேண்டும். தேவையில்லாத விஷயங்களில் தலையிடாமல் சற்று ஒதுங்கியே இருத்தல் நலம். உடலில் வயிறு, கால் போன்ற பகுதிகளில் பாதிப்பு வராமல் பார்த்துக் கொள்ளல் வேண்டும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு வேலையில் சலிப்பு ஏற்பட்டாலும் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். அதே சமயம் உயர் அதிகாரிகள் மற்றும் சீனியர்களிடம் தேவையில்லாமல் பிரச்சனை வளர்த்துக் கொள்ளாமலும் சற்று அடக்கியே வாசித்தல் வேண்டும். குழந்தை பாக்யம் இல்லாதவர்களுக்கு புத்ர பராப்தி அமையும். அவசரப்பட்டு வேலையைவிட்டு விடாமல் அடுத்த வேலை கிடைத்தபின் வேலையை விடுதல் நலம்.
உடல் ஆரோக்யம்
தலை, முகம், காலில் பிரச்சனைகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளல் வேண்டும். அதிக அலைச்சல் இல்லாமல் இருத்தல் நலம். சளித் தொல்லைகள் இல்லாமல் உடலை பேனுதல் வேண்டும். நரம்பு மற்றும் உஷ்ண சம்பந்தமான வியாதிகள் ஏற்பட வாய்ப்பு ஏற்படும். அதனால் உடல் நலத்தில் அதிகக் கவனம் தேவை.
மீனத்துக்கு - தாமிர மூர்த்தியாக இருப்பதால் சுப பலன் குறையும். (8)60%
|