LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- வட அமெரிக்கா

இன்றைய மாறிவரும் சூழலில் தமிழ்ச் சங்கங்களின் அதிகரிக்கும் தேவைகள்.....

இருபது அல்லது முப்பது ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாடு வந்த தமிழர்கள் இன்னொரு தமிழரைச் சந்திப்பதே ஒரு அதிசயமான நிகழ்வாக இருந்திருக்கும். அவர்களுடைய அன்றைய பிரச்சனைகள், சவால்கள், தமிழர்கள் ஒன்றிணைந்து தமிழ் சங்கமாக நம் பண்பாட்டைத் தக்க வைக்க வேண்டிய தேவைகள் என்பது எவ்வளவு கடினம் என்பதை நம்மால் உணர முடிகிறது.

 

அன்றைய காலகட்டத்தில் தமிழர்களுக்கு நம் பண்பாட்டைப் பேண ஒரு மேடை கிடைப்பது அறிய விடயம். தமிழ்க் குழந்தைகளுக்கு அவர்கள் திறமைகளை வளர்க்க மேடைகள் கிடைப்பது சிரமமாக இருந்திருக்கும். அதனால், தமிழ்ச் சங்கங்களின் நோக்கம் ஆண்டிற்கு ஒரு முறை பொங்கல் விழா, குழந்தைகள் விழா போன்ற மூன்று அல்லது நான்கு பண்பாட்டு நிகழ்வுகளை நடத்துவதும், அயல் நாட்டிற்கு வரும் தமிழர்களைப் பெருமைப்படுத்துவதும் முக்கியக் குறிகோளாக இருந்திருக்கும். இது தவிர்த்து தமிழர்கள் ஒருவரை ஒருவர் அறிந்துகொள்ள இது ஒரு அறிய வாய்ப்பாக இருந்திருக்கும். தமிழ்ச் சமுகத்தை பிரதிநிதித்துவப் படுத்தத் தமிழர்களின் அமைப்புகள், சங்கங்கள் பங்காற்ற வேண்டியிருந்திருக்கும்.

 

ஆனால், இன்றைய நிலையில், ஒவ்வொரு மாநிலத்திலும் தமிழர்கள் ஆயிரக்கணக்கில் வாழும் நிலையில், இந்தத் தேவைகள் மட்டுமே போதுமா? ஆரம்பகால குறிக்கோள்களுக்காகக் தொடங்கிய தமிழ் சங்கங்கள் இன்று தங்கள் குறிக்கோள்களை மறு ஆய்வு செய்ய வேண்டியதன் அவசியத்தையும், புதிய தேவைகளைக் கருத்தில் ஏற்று இன்னும் தங்கள் பணிகளை விரிவுபடுத்தத் வேண்டியது பற்றியும் ஆராய்வதே இந்தக் கட்டுரையின் நோக்கும்.

 

இன்றைய நிலையில், அமெரிக்காவை எடுத்துக் கொண்டால், இந்தி, தெலுங்கு பேசும் மக்களுக்கு அடுத்த எண்ணிக்கையில் தமிழர்கள் இருக்கிறார்கள். இன்று இன்னொரு தமிழரை சந்திப்பது ஒரு அரிய விடயம் இல்லை. பெரும்பாலான மாநிலங்கள் ஆயிரம், இரண்டாயிரம் தமிழ்க் குடும்பங்கள் வசிக்கிறார்கள். அவர்களுக்கு, அவர்கள் குழந்தைகளுக்குத் தங்கள் திறமைகளைக் காட்ட மேடை கிடைப்பதும் எளிதாகி விட்டது. தமிழ்ச் சங்கங்களைத் தவிர்த்து, பல்வேறு தமிழ் அமைப்புகள், இசைக் குழுக்கள், நாடகக் குழுக்கள், நாட்டியப் பள்ளிகள், தொண்டு நிறுவனங்கள், தமிழ்ப் பள்ளிகள் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கின்றன. இன்று பெற்றோர்கள் எந்த நிகழ்ச்சிகளில் பங்கெடுப்பது என்பதை தெரிவு செய்ய வேண்டியுள்ளது எதார்த்தம். 

 

இந்த சூழ்நிலையில் பல தமிழ்ச் சங்கங்கள் இந்த மாற்றத்தை உணர்ந்து, தங்களை மறுகட்டமைப்புச் செய்து பயணிக்கிறது. அப்படிப்பட்ட தமிழ்ச் சங்கங்கள் மிக அதிக அளவில் உறுப்பினர்களைக் கொண்டு மிகச் சிறப்பாகத் தங்கள் பயணத்தை தொடர முடிகிறது. இந்த வளர்ச்சியை, மாற்றத்தின் தேவையை அனைவரும் அறியவேண்டும் என்பதே இந்தக் கட்டுரையின் நோக்கம். சரி, ஆரம்பகால நம் தேவைகள் வெகுவாகச் சுருங்கிவிட்டன என்பதை அறிந்தோம், இந்த நிலையில் தமிழ்ச் சங்கங்கள் இன்று வலுவாக இயங்க, ஒவ்வொரு மாநிலத்திற்கும் தாய் அமைப்பாக, தங்களை நிலைநிறுத்திக் கொண்டு அடுத்த நூற்றாண்டை நோக்கி பயணிக்க என்ன வளர்ச்சித் திட்டங்களைச் செய்ய வேண்டும்?

 

1. மாநிலத்தில் ஒவ்வொரு பகுதியிலும் அல்லது நகரத்திலும் தமிழ்ப் பள்ளிகளை தானே உருவாக்கி நடத்துவது அல்லது ஆர்வலர்களால் உருவாகும் பள்ளிகளை  ஊக்கப்படுத்தி அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்வது.

 

2. பல தமிழ்ப் பள்ளிகள் இயங்கும் மாநிலங்களில் பள்ளிகளுக்கிடையில் அல்லது மாநில அளவில் தமிழ் சார்ந்த போட்டிகளை நடத்தி பரிசுகளை வழங்கி ஊக்கப்படுத்துவது. இப்படிப்பட்ட போட்டிகளுக்கு ஒரு கவுரவத்தை ஏற்படுத்த விருந்தினரை வைத்து விருதை வழங்குவது.

 

3. தமிழ் மக்கள் குடியுரிமை பெற்று இன்று பல நாடுகளில் நிரந்தரமாகக் குடியேறி வருவதால், இணையத்தில் இயங்கும் தமிழ்ச் சங்கங்களைக் கொஞ்சம் முயற்சி செய்து கீழே கொண்டுவர வேண்டியதும். ஒவ்வொரு தமிழ் சங்கத்திற்கும் ஒரு நிரந்தர அலுவலகம், கலை நிகழ்ச்சிகள் நடத்த பண்பாட்டுக்கூடம், தமிழ் நூல்கள் கொண்ட நூலகம் போன்ற தேவைகளை உணர்ந்து ஒரு நீண்டகாலத் திட்டத்தை தீட்டுதல்.

 

4. தமிழ்ப் பள்ளிகளை ஒருங்கிணைத்து ஒவ்வொரு மாவட்டமும் தமிப் பாடத்தை அங்கீகரிக்கப் பட்ட மொழியாகச் சேர்க்கப் பாடுபடுதல்.

 

5. தமிழ்ச் சங்கங்கள் தமிழ் வளர்ச்சிக் குழு ஒன்றை ஏற்படுத்தி, மொழி வளர்ச்சி, இலக்கிய கலந்துரையாடல் சார்ந்த செயற்பாடுகளை முன்னெடுத்தல்.

 

6. மாநிலங்களுக்குப் புதிதாக இடம்பெயரும் தமிழர்களை வரவேற்று அவர்களுக்குத் தேவையான ஆரம்பகால உதவிகளைச் செய்து அவர்களுக்குத் தமிழ்சங்க உறுப்பினராக இருப்பதன் அவசியத்தை உணரச் செய்தல்.

 

7. மாநிலத்தில் உள்ள தமிழ் தொழில் முனைவோர்களை, தமிழ் சங்கத்திற்கு உதவும் மற்றத் தொழில் அதிபர்களை தொடர்ந்து முன்னிறுத்தி அவர்களின் பொருளாதார உதவிகளைப் பெற்று சங்கத்தின் வளர்ச்சியைத் திட்டமிடல்.

 

8. மாநிலத்தில் உள்ள தமிழ் மருத்துவர்கள், தமிழ் சட்ட நிபுணர்கள் போன்ற பலரை அடையாளம் கண்டு அவர்களின் துணைகொண்டு தமிழ்ச் சங்க உறுப்பினர்களுக்கு பல உதவிகளைச் செய்தல்.

 

9. தமிழர்கள் அந்நியப்பட்டு விடாமல் வீட்டில் தமிழில் பேசும் சூழ்நிலையை ஏற்படுத்துதல்.

 

10. தமிழ் சங்கப் பொறுப்பு என்பதை ஒரு கவுரவப் பொறுப்பாகக் கருதாமல், அதை தமிழ் உணர்வுள்ள, மொழிப் பற்றுள்ள, தமிழில் நன்கு பேச, எழுத புலமையுள்ள, தலைமைப் பண்பு கொண்ட, சங்கத்தின் நீண்டகாலத் திட்டங்களைச் செயல்படுத்தும் திறன்னுள்ள இளைஞர்களை அடையாளம் கண்டு, அவர்களை உருவாக்கி, தலைவர்களாக நியமித்து அனுபவம் நிறைந்தவர்கள் வழிகாட்டுபவவர்களாக இருந்தால், இன்றைய இளைய தலைமுறையின் சக்தியை நன்கு பயன்படுத்த முடியும்.

 

இவைகளைச் சற்று விரிவாகக் காண்போம்.

 

தமிழ்ப் பள்ளிகள் :

 

உதாரணமாக, வெர்ஜினியா மாநிலத்தில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை இருபது முப்பது குழந்தைகள் தமிழ்ப் படிப்பதே ஒரு செய்தியாக இருந்த நிலையில், இன்று மூன்று தமிழ் பள்ளிகள் வந்த பிறகு, குறைந்தது 350 முதல் 400 குழந்தைகள் தமிழ் படிக்கிறார்கள். இதைப் பார்க்கும்போது, தமிழர்கள் அதிகம் உள்ள பகுதிகளில் சிறு பள்ளிகளாகப் பல பள்ளிகள் உருவாக வேண்டிய தேவை இருக்கிறது என்பதை அறிய முடிகிறது. பள்ளிகள் அருகில் இருந்தால் பெற்றோர்கள் குழந்தைகளைத் தமிழ்ப் பள்ளியில் சேர்க்க ஆர்வமாக இருக்கிறார்கள். இதில் ஒவ்வொரு பள்ளியும் அதன் சட்ட திட்டங்களுக்கு ஏற்பத் தனித்தனியே இயங்கவேண்டியதும், தமிழ்ச் சங்கம் மற்றும் வட அமெரிக்கத் தமிழ் சங்கம் போன்றவற்றுடன் நல்ல உறவைக் கொண்டு இயங்குவதும் நம் சமுக வளர்ச்சிக்கு இன்றியமையாததாகும்..

 

இதுவரை குழந்தைகளுக்கு தமிழை எப்படி சொல்லிக் கொடுப்பது, என்ற குறையைத் தீர்க்க அமெரிக்கத் தமிழ் கல்விக் கழகம் (ATA) போன்ற தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் உருவாகி, பாடத்திட்டம் வடிவமைப்பதும், தக்க அறிஞர்களைக் கொண்டு ஆசிரியர்களுக்குப் பயிற்சி கொடுப்பதும், நாம் நாளும் வளர்ந்துகொண்டுள்ளோம் என்பதையும், நம் ஆரோக்கியமான முன்னேற்றத்தையும் பறை சாற்றுவதாக உள்ளது.

 

சமீபத்தில் டல்லாஸ் மாநிலத்தில் உள்ள சாஸ்தா தமிழ் அறக்கட்டளை, திருக்குறளை விளக்கத்துடன் சொல்லும் குழந்தைகளுக்கு ஒரு குறளுக்கு ஒரு வெள்ளி வீதம் ஐந்தாயிரம் வெள்ளி பரிசு கொடுத்தது மிகச் சிறந்த உதாரணம். இதுபோன்ற நிறைய தமிழ்க் குழந்தைகளை ஊக்கப் படுத்தும் பரிசுகளை, விருதுகளை தமிழ் சங்கங்கள் மற்றும் பல அமைப்புகள் இணைந்து தொடர்ந்து ஆண்டுதோறும் செய்வது மிகச் சிறந்த பயனைக் கொடுக்கும்.

 

தமிழ்ச் சங்கங்களுக்கு நிரந்தர இடம் :

 

பல தமிழ்ச் சங்கங்கள் தங்களுக்கு என்று நிரந்தர இடங்களை ஏற்படுத்தி வருவதைக் காண முடிகிறது. சமீபத்தில் சில தமிழ்ச் சங்கங்கள் இடம் வாங்குவதற்காக ஒரு குழு அமைத்து துரிதமாக வேலை செய்கிறார்கள் என்பது ஒரு சிறந்த முன்னுதாரணம்.இப்படி கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் சங்கங்கள் ஐந்தாண்டுத் திட்டங்களாகவோ, பத்தாண்டு திட்டங்களாகவோ ஏற்படுத்திக்கொண்டு நிரந்தர இடத்திற்கு செல்வதும், அங்கே தமிழ் நூல்களை சேகரித்து படிக்க வகை செய்வதும், தமிழர்கள் சந்திக்க வகை செய்வதும், சமூகத்தை இன்னும் நெருக்கமாக கொண்டுவரும். இதற்கு இந்திய மத்திய மாநில அரசுகளின் பங்களிப்புப் பெற செம்மொழி நிதி போன்ற நிதிகளில் வழங்கியுள்ளதா என்பதை ஆராய்வதும் நல்லது. மேலும், வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கம் இப்படி நிரந்தர கட்டிடம் கட்டும் தமிழ்ச் சங்கங்களுக்கு ஒரு சிறு நிதியைக் கொடுத்து ஊக்கப்படுத்துவதும் நல்ல பலனைத் தரும்.

 

பள்ளிகளில் தமிழ் மொழிக்கு அங்கீகாரம் :

 

ஒவ்வொருவரும் தனித்தனியே போராடி அங்கீகாரம் பெறுவதற்கு பதில், கூட்டு முயற்சியாக அனைத்து தமிழ் சங்கங்களும் ஒருவருக்கொருவர் அனுபவங்களைப் பகிர்ந்து, ஒவ்வொரு மாநில, மாவட்ட சட்டதிட்டங்களுக்கு ஏற்ப அங்கீகாரம் பெறுவது, Credit வாங்குவது, தமிழ் குழந்தைகள் தமிழ்ப் படிக்க ஊக்கப் படுத்தும். இதை ஒரு தொடர் செயல் திட்டமாக தமிழ் சங்கங்கள் எடுத்துச் செல்லவேண்டும். இதை அமெரிக்கத் தமிழ்க் கல்விக் கழகம் தங்கள் செயல்திட்டத்தில் கொண்டு அவர்கள் பல மாநிலங்களில் இப்படிப்பட்ட முயற்சியை மேற்கொண்டு வருகிறது. விரைவில் அமெரிக்காவின் அனைத்து மாநிலங்களிலும் உள்ள பள்ளிகளில் தமிழ் விரைவில் அங்கீகாரம் பெரும் என்ற நம்பிக்கை உள்ளது. உதாரணமாக வெர்ஜினியாவில் Fairfax மாவட்டத்தில் சமீபத்தில் அங்கீகாரம் பெற்றதும். கலிபோர்னியா, ஜார்ஜியா போன்ற பல மாநிலங்களில் தமிழ் சில ஆண்டுகளுக்கு முன்பே அங்கீகாரம் பெற்று முன்னோடியாகத் திகழ்வதும். பெருமைக்குரிய செய்தி. இது ஒரு செய்தியாக இருந்தாலும், இதற்குப் பின்னால் தன்னலமின்றி தமிழ் உணர்வுடன் உழைத்து வரும் அனைவரின் உழைப்பும் போற்றுதற்குரியது.

 

தமிழ் வளர்ச்சிக் குழு :

 

தமிழ் சங்கங்கள் ஒவ்வொன்றும் ஒரு தமிழ் வளர்ச்சிக் குழுவை உருவாக்கி அதில் இலக்கண - இலக்கிய புலமை கொண்ட உறுப்பினர்களைக் கொண்டு தமிழ் பயிற்சிப் பட்டறைகளை நடத்துவதும், கருத்தரங்கங்களை நடத்துவதும் அவசியமாகும். இதன் மூலம் அந்தந்தப் பகுதியில் பல தமிழ் வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுக்கலாம். உதாரணமாக, அருகில் உள்ள நூலகங்களை அணுகி, தமிழ் நூல்களைச் சேகரித்துக் கொடுத்தல், தமிழ்ப் போட்டிகளை நடத்துதல் போன்ற பல தமிழ் வளர்ச்சி சார்ந்த திட்டங்களை முன்னெடுக்கலாம்.

 

இன்றைய எதார்த்தம் என்பது, இன்று முப்பது முதல் நாற்பது வயதில் இருப்பவர்கள் பெரும்பாலும் ஆங்கில வழிப் பள்ளிகளிலோ அல்லது தமிழ் அல்லாத பாடத்தைப் படித்தோ வந்தவர்களாக இருக்கிறார்கள். இவர்களில் குறிப்பாக பொறியியல் படித்த பெரும்பாலானவர்களுக்கு தமிழ் என்பது பேச மட்டுமே தெரியும். தமிழகச் சூழலும், வேலை கிடைப்பதற்கு ஆங்கிலம் தெரிந்தால் போதும், தாய்மொழிக் கல்வி அவசியமில்லை என்ற போக்கும் தொடர்ந்து நிலவுகிறது. சமீபத்திய ஒரு ஆய்வில் ஆங்கில வழிக் கல்வியில் படிக்கும் மாணாக்கர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டிலும் புலமை பெற்றவர்களாக இல்லை என்பதும், தமிழ் வழிக்கல்வி கற்ற மாணவர்கள் ஓரளவு தமிழில் பேச, எழுதக் கூடியவர்களாக இருக்கிறார்கள் என்பதும் தெரியவந்தது. எனவே பொறியியல் படித்து ஒரு குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு தாய்மொழிப் பற்று வரும் போது தமிழில் பேச, எழுத முயற்சிக்கிறார்கள். அப்போது பள்ளியில் மதிப்பெண்கள் பெறுவதற்காகப் படித்த இலக்கணங்களைத் தேவைக்காகப் படிக்கும் தேவை வருகிறது. அந்த நிலையில் அவர்களுக்கு அருகில் உள்ள தமிழ் வளர்ச்சிக்குழு உதவ முடியும். உதாரணமாக வாசிங்டன் வட்டாரத்தில் இலக்கிய வட்டம் என்ற ஒரு அமைப்பு மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.

 

தமிழ்ச் சமூக உதவிக் குழு (Community Support Team) :

 

தமிழ் மக்கள் ஒருவருக்கொருவர் அவ்வளவு எளிதில் அணுக்கமாகப் பழகும் நிலை இல்லை என்பதை உணர்வோம். நாம் அதிகம் கேள்விப்பட்ட ஒரு செய்தி என்னவெனில், இரண்டு மலையாளிகள் சந்திக்கும் போதோ, பாகிஸ்தானியர்கள் அல்லது சீனர்கள் சந்திக்கும் போதோ அவர்கள் தாய் மொழியிலேயே பேசுகிறார்கள்,. ஆனால் இரண்டு தமிழர்கள் சந்திக்கும் போது ஆங்கிலத்திலேயே பேசுகிறோம். இதை பரிசீலனை முறையில் நானே சோதித்துப் பார்த்திருக்கிறேன். தமிழர்கள் பெரும்பாலும் ஒரு எச்சரிக்கை உணர்வுடனே அடுத்தவர்களிடம் பழகுகிறோம், நட்புக் கொள்கிறோம். இதற்கு பல அடிப்படைக் காரணங்கள் இருப்பினும், ஒவ்வொரு தமிழ்ச் சங்கமும் ஒரு குழுவை உருவாக்கி நம் பகுதியில் உள்ள தமிழர்களுக்கு ஏற்படும் அவசரத் தேவைகளுக்கு கைகொடுக்கும் பணிகளைச் செய்யலாம். மேலும் நம் பகுதியில் உள்ள தமிழ் மருத்துவர்களைக் கொண்டு மருத்துவ முகாம்களை ஆண்டுதோறும் ஒருங்கிணைக்கலாம், தொழில் முனைவோர்களைக் கொண்டு கருத்தரங்குகளை நடத்தலாம். எந்த அமைப்பு தொழில் துறையில் உள்ளவர்களை ஊக்கப்படுத்துகிறதோ அந்த அமைப்புகள் பொருளாதாரக் தட்டுப்பாடுகள் இல்லாமல் வலிமையாக இயங்க முடிகிறது.

 

வலைத்தமிழுக்காக,

 

இலக்கியன் ......

by Swathi   on 03 Dec 2013  0 Comments
Tags: Tamil Sangam   US Tamil Sangam   தமிழ் சங்கங்கள்   தமிழ் சங்கங்களின் நிலை           
 தொடர்புடையவை-Related Articles
உலக தமிழர்களின் கவனத்தை ஈர்க்கப்போகும் பன்னாட்டு தமிழ் இலக்கிய மாநாடு !! உலக தமிழர்களின் கவனத்தை ஈர்க்கப்போகும் பன்னாட்டு தமிழ் இலக்கிய மாநாடு !!
வெகு சிறப்பாக நடைபெற்ற வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் தமிழ் விழா !! வெகு சிறப்பாக நடைபெற்ற வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் தமிழ் விழா !!
சப்பான் தமிழ்ச்சங்கத்தில் சிறப்பாக நடைபெற்ற பொங்கல் விழா.... சப்பான் தமிழ்ச்சங்கத்தில் சிறப்பாக நடைபெற்ற பொங்கல் விழா....
அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் இணையதள முகவரிகள் அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் இணையதள முகவரிகள்
அமெரிக்கக் கரோலினா தமிழ்ச் சங்க முன்னாள் தலைவர் பேச்சு எல்லோருக்கும் கட்டாயம் இலவசக் கல்வி தரவேண்டும். அமெரிக்கக் கரோலினா தமிழ்ச் சங்க முன்னாள் தலைவர் பேச்சு எல்லோருக்கும் கட்டாயம் இலவசக் கல்வி தரவேண்டும்.
வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கமும், வாசிங்டன் வட்டார இலக்கிய வட்டமும் இணைந்து நடத்திய 2014-ம் ஆண்டிற்கான முதல் இலக்கியக் கூட்டம் வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கமும், வாசிங்டன் வட்டார இலக்கிய வட்டமும் இணைந்து நடத்திய 2014-ம் ஆண்டிற்கான முதல் இலக்கியக் கூட்டம்
தமிழ் குழந்தைகளே தமிழை மறந்து வரும் இந்த சூழலில் அமெரிக்க குழந்தைகளுக்கு தமிழ் கற்றுத்தரும் பனை நிலம் தமிழ்ச் சங்கம் !! தமிழ் குழந்தைகளே தமிழை மறந்து வரும் இந்த சூழலில் அமெரிக்க குழந்தைகளுக்கு தமிழ் கற்றுத்தரும் பனை நிலம் தமிழ்ச் சங்கம் !!
இன்றைய மாறிவரும் சூழலில் தமிழ்ச் சங்கங்களின் அதிகரிக்கும் தேவைகள்..... இன்றைய மாறிவரும் சூழலில் தமிழ்ச் சங்கங்களின் அதிகரிக்கும் தேவைகள்.....
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.