தெய்வத்தின் அருள் பெற்ற தெய்வப் பிரதிநிதியான மனிதன் ஆடும் ஆட்டம் சாமியாட்டம் எனப்படும். இது கோமரத்தாடி ஆட்டம், சுடலை கொண்டாடி ஆட்டம், அம்மன் கொண்டாடி ஆட்டம் என வேறு பெயர்களிலும் வழங்கப்படுகிறது. கோவில்களில் சாமியாடுவது இன்றளவும் தமிழ்நாட்டில் பரவலாக உள்ளது. இது கரகாட்டத்தின் துணை ஆட்டமாகவும் கரகாட்டத்தின் இடைநிகழ்ச்சியாகவும் நடத்தப்படுகிறது. இவ்வாட்டம் இரண்டு வகையாகக் கருதப்படுகிறது. முதலாவதாக சாமியாடிகளின் போலித் தனத்தைத் தோலுரித்துக் காட்டுவதாக அமைகிறது. மற்றொரு முறை உண்மைச் சாமியாடியாக நடித்துக் காட்டுவது. பெரும்பாலும் கோவில்களில் முதல் வகை விரும்பப்படாததால், இரண்டாவது நிகழ்ச்சிக்கே பெரிதும் வரவேற்பிருக்கும்.
|