திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள அஷ்டலிங்கங்களில் ஒன்றான வருணலிங்க சன்னிதி முன்பாக, மழை வேண்டி சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.
தமிழகத்தில் பருவமழை சரியாகப் பெய்யாததால், வறட்சியும் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டு உள்ளது. நீர்நிலைகளும் தண்ணீர் இல்லாமல் வற்றிவிட்டன. வறட்சியை சமாளிக்க முடியாமல் மக்கள் மிகவும் சிரமப் படுகின்றனர்.
எனவே, தமிழகம் முழுவதும் உள்ள இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோயில்களில், மழை வேண்டி கடந்த வாரங்களில் சிறப்பு யாகமும், வருண ஜெபமும் நடந்தது.
அதன்படி, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலிலும் மழை வேண்டி யாகம் நடந்தது.கிரிவலப்பாதையில், அஷ்ட லிங்க சன்னதிகளில் ஒன்றாக அமைந்துள்ள வருண லிங்க சன்னதியிலும், மழை வேண்டி சிறப்பு யாகம் நடந்தது. வருண லிங்க சன்னதி எதிரில் யாக குண்டம் அமைத்து, சிவாச்சாரியார்கள் சிறப்பு யாகம் நடத்தினர். மேலும், தண்ணீர் நிரப்பிய அகன்ற பாத்திரத்தில் அமர்ந்தபடி, வருண பகவானை வேண்டி மந்திரங்களை உச்சரித்தனர்.
கிரிவலப்பாதையில் உள்ள அஷ்ட லிங்கங்களும் ஒவ்வொரு விதமான நன்மையை தருபவை என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதன்படி, வருண பகவானால் வழிபாடு நடத்தப்பட்ட லிங்கம் எனும் சிறப்பு மிக்க வருண லிங்க சன்னதியை வழிபட்டால் மழை வரும் என்பது நம்பிக்கை ஆகும். அந்த நம்பிக்கையின் படி வருணலிங்க சன்னிதி முன்பாக யாகம் நடந்தது குறிப்பிடத்தக்கது.
|