திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவம் அக்டோபர் 10- ந் தேதி தொடங்கி 18-ந் தேதி வரை நடக்கிறது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த ஆண்டுக்கான வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த மாதம் 13ம் தேதி தொடங்கி, 21ம் தேதியுடன் நிறைவு பெற்றது.
நவராத்திரி பிரம்மோற்சவம் வரும் 10ம் தேதி தொடங்கி 18ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த பிரம்மோற்சவத்தில் கொடியேற்றம் இல்லை. மர தேருக்கு பதில் தங்க ரதம் மற்றும் புஷ்ப பல்லக்கு நடைபெறும்.
9ம் தேதி இரவு 7 மணிக்கு அங்குரார்ப்பணம், 10ம்தேதி மாலை 6 மணிக்கு ஊஞ்சல் சேவை, இரவு 8 மணிக்கு பெரிய சேஷ வாகனத்தில் உற்சவரான மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
11ம்தேதி காலை சின்ன சேஷ வாகனத்திலும் இரவு ஹம்ச (அன்ன) வாகனத்திலும், 12ம் தேதி காலை சிம்ம வாகனத்திலும், இரவு முத்துப்பந்தல் வாகனத்திலும், 13ம் தேதி காலை கல்ப விருட்ச வாகனத்திலும், இரவு சர்வ பூபால வாகனத்திலும் வீதி உலா நடக்கிறது.
14ம் தேதி காலை பல்லக்கில் மோகினி அலங்காரத்தில் வீதிஉலா வரும் மலையப்ப சுவாமி அன்றிரவு 7 மணிக்கு கருட வாகனத்தில் வீதி உலா வருகிறார். பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வாக இது கருதப்படுகிறது.
15ம் தேதி காலை மலையப்ப சுவாமி அனுமந்த வாகனத்திலும், மாலை புஷ்ப பல்லக்கிலும், இரவு 8 மணிக்கு கஜ வாகனத்திலும், 16ம் தேதி காலை 9 மணிக்கு சூரிய பிரபை வாகனத்திலும் இரவு 8 மணிக்கு சந்திர பிரபை வாகனத்திலும் வருகிறார்.
17ம் தேதி காலை 7 மணிக்கு தங்கத் தேரோட்டம் நடக்கிறது. இரவு 8 மணிக்கு குதிரை வாகனத்தில் வருகிறார். 18ம் தேதி காலை 6 மணிக்கு சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் பிரம்மோற்சவம் நிறைவடைகிறது. பிரம்மோற்சவத்தையொட்டி கோயிலில் நடைபெறும் அனைத்து ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
|