LOGO
  முதல் பக்கம்    சிறுவர்    தமிழ்க்கல்வி - Tamil Learning Print Friendly and PDF
- தமிழ்க்கல்வி

கல்வி என்றால் என்ன ? பொள்ளாச்சி நசன்


-பொள்ளாச்சி நசன்

ஒருவர் இந்த உலகில் பெறுகிற அறிவு, அனுபவம், ஆற்றல் ஆகியவற்றின் தொகுப்பே கல்வி எனப்படும். ஒருவர் பெறுகிற கல்வி அவரது ஆளுமைக்கும், ஆற்றலுக்கும் அடித்தளமாக இருந்து அவரின் ஒவ்வொரு செயலையும் சிறப்பாகச் செய்ய வழி அமைக்கும்.

கல்வியைப் பெற்றவர்கள் மற்றவர்களிடமிருந்து மாறுபட்டு, மற்றவர்களுக்கு வழிகாட்டுகிற சிறப்புப் பெற்றவர்களாக இருப்பார்கள். நுட்பமாகச் செயற்படுகிற கூர்மையான அறிவுடையவராக இருந்து வழிநடத்துவார்கள்.

பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு கல்வி இப்படித்தான் இருந்தது. கற்றவர்களைத் தேடிச் சென்று, கல்வி கற்று மக்கள் தங்களை உயர்த்திக் கொண்டார்கள். எழுத்தறிவு, எண்ணறிவு, பட்டறிவு, கை வேலைத்திறன், இசை, கூத்து, நுண்கலைகள் எனப் பல்வேறு கூறுகளில் உள் நுழைகிற கருத்துருக்கள் கற்பவருக்குள் மாற்றங்களை ஏற்படுத்தி மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்தியது \ உயர்த்தியது.

ஆளுபவரின் பிள்ளையாக இருந்தால் கூட ஆசிரியருக்கு முன் அவர் ஒரு மாணவர்தான். ஆசிரியருக்குப் பணிவிடை செய்துதான் அவர் கற்றுக் கொண்டார். பொருளை விட மதிப்பும் மரியாதையும் மேலெழுந்து நின்றன. பெற்றோர்களுக்கு அடுத்த படியாக ஆசிரியர் கருதப்பட்டார். மக்களின் வணக்கத்திற்குரியவராக ஆசிரியர் இருந்தார்.

இதற்குப் பின் வந்த காலங்களில்.....

வேதத்தைக் கேட்டால், கேட்ட காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்று என்று சொன்ன ஆசிரியர்கள் தோன்றினார்கள்.

கட்டைவிரலைக் குரு தட்சணையாகக் கேட்ட ஆசிரியரும், மறுப்பேதும் கூறாமல் வெட்டித் தந்த மாணவரும் இருந்தனர்.

கை கட்டி, வாய் புதைத்து, அடங்கி ஒடுங்கி, பணிவுடன் பிரணவ மந்திரத்திற்கான பொருளை முருகனிடம் சிவன் கேட்டு நிற்பதையும், மாணவர்கள் இப்படித்தான் அடங்கி ஒடுங்கி - கற்க வேண்டும் என்பதையும் சூழல் காட்டியது.

சாதி, குலம், வருணம், ஏழை, பணக்காரன் - என்பவை உள்நுழைந்து கற்பவருக்கும், ஆசிரியருக்கும் இடையில் ஒரு பெரிய தடைக் கல்லை உருவாக்கியது. ஒரு பிரிவினர் ஓரங்கட்டப் பட்டனர். கல்வி ஒரு சிலருக்கு எட்டாக் கனி ஆனது.

இன்றைய சூழலில்.....

அறிவியல் கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பச் செறிவு, சுருங்கிப் போன உலகம், பொருளாதார வளர்ச்சி போன்ற காரணிகளால் - கல்வி என்பதற்கான கருத்துருக்களை வெகுவாக மாற்றியுள்ளன.

அறிவு நுட்பத்திற்கான அடித்தளமாக இருந்த கல்வி இன்றைய சூழலில் அந்த நிலையிலிருந்து மாறி, பொருளீட்டுகிற \ வணிகத்திற்கான படிக்கட்டுகளாக மாறியுள்ளது. பெருகி வரும் மக்கட்தொகைக்கு ஏற்றவாறு கல்வியானது வடிவமைக்கப்பட்டு, பொருள்வழிப் பெருகின்ற வணிகப் பொருளாக, கல்வி மாற்றப்பட்டுள்ளது. ஆசிரியர்களும் விற்பனையாளராக மாறி விற்பனை செய்கின்றனர். பொருளீட்டுகின்றனர். இடைத் தரகர்களும் ஆசிரியர்களை கூலிக்கு அமர்த்தி விளம்பரம் செய்து விற்பனையைக் கூட்டுகின்றனர்.

சுதந்திரம் அடைந்த பிறகு....

கல்வி மைய அரசின் நேரடிப் பார்வையில் உள்ளது எனவும், கல்வியில் செய்யும் மாற்றங்கள் அனைத்தும் மைய அரசின் அனுமதி பெற்றே செய்ய வேண்டும் எனவும் விதி முறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

நமது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில், இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் 14 வயது வரை கல்வியைத் தரமாகவும், இலவயமாகவும், கட்டாயமாகவும் தரவேண்டியது அரசின் கடமை என்று அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது.

ஆனால் இன்றைய சூழலில் தொடக்கக் கல்விக்கே பெரும் பொருள் செலவு செய்ய வேண்டியுள்ளது. கல்வி தனியாருக்கான பொருளீட்டும் வழிகளில் ஒன்றாக மாற்றப்பட்டுள்ளது.

தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கையைவிட அதிகமாக உள்ளன. யார் வேண்டுமானாலும் கல்வி நிறுவனங்களை நிறுவி வணிகம் செய்யலாம்.

ஆங்கிலேயன் ஆண்ட பொழுது அவர்களுக்கு உதவுகிற எழுத்தர் வேலைக்காக மெக்காலேயால் அன்றைய கல்வி முறை வடிவமைக்கப்பட்டது. ஆங்கிலேயன் சென்ற பிறகும் கூட ஆங்கிலமும், கல்வி முறையும் இன்னும் இங்கே வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.

உளவியல் அறிஞர்களும், கல்வியாளர்களும் தாய்மொழிக் கல்வியை வலியுறுத்திய போதும் இன்றும் இங்குள்ள பெற்றோர்களின் ஆங்கில மோகத்தால், மழலையர்கள் ஆங்கிலக் கல்வியில் மூழ்கி எழுகிறார்கள். தெளிவான புரிதலுக்கும் நுட்பமான செயற்பாடுகளுக்கும் தாய்மொழிக் கல்வியே சிறந்தது, அதுவும் தொடக்க நிலைகளில் அதுவே கட்டாயமானது என்ற கருத்துருக்கள் இங்கே ஏட்டளவில்தான் இருக்கின்றன. இதை உணர்ந்து செயற்படுகிற பெற்றோர்களோ, கல்வியாளர்களோ, அதிகாரிகளோ இங்கு இல்லை.

இன்றைய சூழலில் கடந்த இருபது ஆண்டுகளாக கல்விக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டு, நாளிதழ்களிலும், மேடைகளிலும், அறிவிப்புகளிலும் அதிகமாகப் பேசப்படுகின்றன. கல்வியாளர் தவே அவர்களால் உருவாக்கிய குறைந்த பட்ச கற்றல் இலக்குகளைக்கொண்ட கல்விமுறை, கற்றலில் இனிமை, அனைவருக்கும் கல்வி, செயல்வழிக் கல்வி, படிப்பும் இனிக்கும் - இப்படிப் பல்வேறு பெயர்களில் கல்விக்கான அணுகுமுறைகளும், கற்றல் கற்பித்தல் வழி முறைகளும் தமிழகத்தில் பயன்பாட்டில் உள்ளன. சமச்சீர் கல்வி என்பதும் பரவலாகப் பேசப்பட்டு வருகின்றன.

கடந்த சில ஆண்டுகளாக அரசுத் தொடக்கப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருகின்றன. மறுபுறம் ஆங்கிலவழி மழலையர் பள்ளிகள் புற்றீசல்களாய் பெருகிக் கொண்டிருக்கின்றன. இதை ஈடுகட்ட தமிழக அரசும் முதல் வகுப்பிலிருந்தே ஆங்கிலத்தை அறிமுகம் செய்கிறது. இந்த மாணவர்களின் வளர்ச்சி நிலையை இன்னும் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ஆய்வு செய்து பார்த்தால் தான் தெரியும்.

பொதுவாக இன்றைய சூழலில் ஆறாம் வகுப்பில் படிக்கும் மாணவர்களில் 15 விழுக்காட்டினருக்குத் தமிழே படிக்கத் தெரியவில்லை.

கல்வி என்பது மாணவர்களுக்கு அடிப்படை அறிவை தந்து அவர்களை ஆற்றலோடு வளர்த்த வேண்டும் என்பதே அறிஞர்களின் உள்ளக்கிடக்கை. இதனையே கல்வியாளர்களும், கல்விக்கூடங்களும், கல்வி அதிகாரிகளும், கல்வித் துறை சார்ந்த அனைவரும் நெஞ்சில் நிறுத்தி திட்டமிட்டு செயற்படுத்த வேண்டும்.

நன்றி Pollachi Nasan

by Swathi   on 30 Mar 2014  0 Comments
Tags: What is Education   Education   Kalvi   What is Kalvi   கல்வி   கல்வி என்றால்   பொள்ளாச்சி நசன்  
 தொடர்புடையவை-Related Articles
தமிழ்நாடு உயர் கல்வி முறை தமிழ்நாடு உயர் கல்வி முறை
தமிழின் சங்க இலக்கியங்களை எளிய முறையில் கற்க உதவும் சங்க இலக்கியக் கல்வி மன்றம்!! தமிழின் சங்க இலக்கியங்களை எளிய முறையில் கற்க உதவும் சங்க இலக்கியக் கல்வி மன்றம்!!
தமிழ்க் கல்வி தமிழ்ப் பள்ளி என முழங்கிய பெட்னா தமிழ் விழா 2016 தமிழ்க் கல்வி தமிழ்ப் பள்ளி என முழங்கிய பெட்னா தமிழ் விழா 2016
கற்றலில் சிறக்க கற்றலில் சிறக்க
இந்தியாவின் டாப் 10 கல்வி நிறுவனங்கள்!! இந்தியாவின் டாப் 10 கல்வி நிறுவனங்கள்!!
கல்விதான் நமக்கு செல்வம் கல்விதான் நமக்கு செல்வம்
தொழில்திறன் மிக்க நாடாக இந்தியா உருவாக வேண்டுமானால் பள்ளிக்கல்வித் திட்டத்தில் மாற்றம் அவசியம் - அப்துல் கலாம் !! தொழில்திறன் மிக்க நாடாக இந்தியா உருவாக வேண்டுமானால் பள்ளிக்கல்வித் திட்டத்தில் மாற்றம் அவசியம் - அப்துல் கலாம் !!
தமிழ்நாடு அரசின் கைவிட்டுப் போகிறதா பள்ளிக் கல்வித் துறை தமிழ்நாடு அரசின் கைவிட்டுப் போகிறதா பள்ளிக் கல்வித் துறை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.