இறைவன் படைப்பில் எத்தனையோ ஜீவன்கள் தோன்றி மறைந்தாலும் மனிதப்பிறவி மட்டுமே சிறப்பான ஒன்றாகும். மனிதனுக்கு மட்டுமே இறைவன் அறிவைப் படைத்து எதையும் சிந்திக்கும் ஆற்றலை வழங்கி உள்ளார்.
மனிதனுக்கு மட்டுமே நவக்கிரகங்களின் தாக்கம் எந்தளவுக்கு இருக்கும் என்பது தெரியும். ஒரு மனிதனது வாழ்வில் அவனுக்கு ஏற்படும் இன்பதுன்பம் ஏற்ற இறக்கும் உயர்தாழ்வு இவை அனைத்தும் அவரவரது ஜென்ம ஜாதகத்தில் கிரகங்கள் அமர்ந்துள்ள நிலையைப் பொருத்தே அமையும். ஒரு மனிதனது எண்ணம் ஆசை அபிலாஷை எப்பொழுது பூர்த்தியாகும் எக்காலகட்டங்களில் அவைகள் எல்லாம் நடந்தேறும் என்பதைக் கோட்சாரம் காட்டும்.
கோட்சாரம் என்பது கிரகங்கள் சுற்றிச் சுழன்று கொண்டு செல்வதைக் குறிக்கும். எந்தக் கிரகமும் நிரந்தரமாக நிற்பதில்லை. அவை தொடர்ந்து ஒவ்வொரு ராசியில் முன்பின்னாக சுற்றி வருவதால் ஒருவரது வாழ்வில் பல்வேறு விதமான நிகழ்வுகள் நடந்தேற வாய்ப்புகள் அமைகின்றன.
அதனடிப்படையில் இங்கு 2017ம் வருட ஆங்கிலப் புத்தாண்டு பலன்களைப் திருக்கணிதப் பஞ்சாங்கப்படி பொதுவாகப் பார்க்க இருக்கிறோம். இந்த 2017ம் ஆண்டில் 17-08-2017 அன்று ராகு கேது பெயர்ச்சியும் 12-09-2017 அன்று குருப்பெயர்ச்சியும், 26-01-2017 அன்று சனிப்பெயர்ச்சியும் நடைபெறுவதால் இவைகளையெல்லாம் கருத்தில் கொண்டு இவ்வருடம் ஒவ்வொரு ராசி மற்றும் லக்னகாரர்களுக்கு நடக்கும் பொதுப்பலன்களைப் பார்க்க இருக்கிறோம்.
இங்கு குறிப்பிடும் பலன்கள் எல்லாம் பொதுவானது ஆகும். அவரவர் பிறந்த ஜாதகத்தின் அடிப்படையில் அவர்களுக்கு நடக்கும் நடப்பு தசாபுத்தி அந்தரங்களில் அடிப்படையிலேயே பலன்கள் நடைபெறும் என்பதை இங்கு அவசியம் அனைவரும் அறிந்து கொள்ளல் வேண்டும். உங்களது தனிப்பட்ட ஜாதகமே உங்கள் வாழ்க்கையின் எல்லாவிதமான அம்சங்களையும் துல்லியமாகக் காட்டும். அவற்றுடன் இந்தக் கிரகங்களின் தாக்கங்களால் ஏற்படும். பொதுப்பலன்களையும் தாங்கள் தெரிந்துகொள்வது ஓரளவு நன்மை தருபவையாக அமையும்.
இந்த 2017ம் வருடம் கன்யா லக்னம், மகர ராசி, திருவோண நட்சத்திரத்தில் உதயமாகிறது. எனவே அதனடிப்படையில் அமையும் கிரகங்களில் தன்மையையும் கணக்கில் கொண்டு பலன்கள் கணிக்கப்பட்டுள்ளன.
|