LOGO
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    கட்டுரை Print Friendly and PDF
- இவர்களுக்குப் பின்னால் (Behind These People)

இவர்களுக்குப் பின்னால் (மணியம்மையார்) - பகுதி 6

இவர்களுக்குப் பின்னால் (மணியம்மையார்) - பகுதி 6 

-சூர்யா சரவணன்

         மணியம்மையார்  (1917& 1978)

 

  இந்திய நாட்டில் பெண்கள் சகல துறைகளிலும் தீண்டப்படாத மக்கள் அடைந்துவரும் கஷ்டத்தைவிட அதிகமாகவே அனுபவித்து வருகிறார்கள்.


      தந்தை பெரியார்.

   1993ல் நாகம்மை காலமான பின்பு பெரியாரின் தேவைகளை கவனிக்க ஆள் இல்லை. இடையறாது திராவிட இயக்கப் பணியில் இருந்தார். சாப்பிட்டாரா? உறங்கினாரா? என்பது குறித்து கேட்கவும் கவலைப்படவும் ஆள் இல்லை. அண்ணன் வீட்டிலிருந்தோ தங்கை வீட்டில் இருந்தோ உணவு கிடைக்கும். ஓயாத உழைப்பிலேயே வாழந்து வந்தார்.  அந்தக் கால கட்டத்தில் தான் பெரியாருக்கு உற்ற துணையாக

மணியம்மை வந்து சேர்ந்தார். பெரியாரின் நண்பர் வி.எஸ்.கனகசபை ஒருமுறை பெரியாரை நலம் விசாரித்து ஒரு கடிதம் எழுதினார். அந்த கடிதத்திற்கு பதில் எழுதிய பெரியார்,

 

‘‘எல்லோரும் என்னை தூர இருந்தபடிதான் உடலை ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ளும்படி கூறுகிறீர்கள். என்னுடன் இருந்து உதவி செய்ய யாரும் இல்லை’’என்ற ஆதங்கத்தை கடித்தத்தில் வெளிப்படுத்தியிருந்தார்.

அந்த கடித்தத்தை படித்ததும் கணகசபை தனது மகள் மணியம்மையை அழைத்து வந்தார்.

 

 ‘‘இந்தப் பெண் தங்களுடன் இருந்து தங்களுக்குத் தேவையான பணிவிடைகளை செய்வார்’’ என்று பெரியாரிடம் கூறினார்.

 

   வி.எஸ்.கனகசபை&பார்வதி தம்பதிக்கு மகள் மணியம்மை 10.3.1917ம் நாள் பிறந்தார். மணியம்மைக்கு மூன்று சகோதரர்கள், ஒரு சகோதரி, வேலூர் அரசுப் பெண்கள் உயர் நிலைப்பள்ளியில் இறுதியாண்டுவரை படித்தார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குலசேகரப்பட்டினம் சி.டி.நாயகம் தமிழ் கல்லூரியில் தமிழ் புலவர் பட்டம்பெற படித்துக்கொண்டிருந்தபோது அவரது படிப்பு பாதியில் நின்றது. பெரியார் ஒருமுறை வேலூரில் திருமண நிகழ்சிக்கு வந்தார். அப்போது மணியம்மை நான்காவது பாரம் படித்துக் கொண்டிருந்தார். சிறுவயதிலிருந்தே மணியம்மைக்கு திராவிட கொள்கையின் மீதும் பகுத்தறிவின் மீதும் அதீதப்பற்று ஏற்பட்டது. பள்ளியில் படிக்கும்போது பகுத்தறிவு கொள்கையை பேசியதற்காக பள்ளியில் இருந்து ஒருமுறை நீக்கப்பட்டார்.

 

       பெரியாரின் கொள்கையின் மீது உள்ள பற்றால் அவருக்கு பணிவிடை செய்து தனது வாழ்நாளை பயனுடையதாக ஆக்கிக்கொள்ள விரும்பினார் மணியம்மை இந்த நோக்கத்துடன் பெரியாரிடம் வந்து சேர்ந்தார். அன்றுமுதல் பெரியாரின் உடைமைகளை சுத்தம் செய்வது, அவருக்கு தேவையான உணவுகளை தயார் செய்து தருவது. பெரியாரை வற்புறுத்திக் குளிக்கச்செய்வது, குடியரசு பதிப்பகத்தின் நூல்களை மூட்டையாக சுமந்து விற்பது என்று அவரது பணி தொடர்ந்தது.

  

  மணியம்மை குறித்து பாவேந்தர் பாரதிதாசன் தனது ‘‘குயில்’’ இதழிலில் எழுதிய கட்டுரையில் (10.5.1970) ,

  பெரியார், நோய்வாய்ப்பட்டிருந்த காலத்தில் அவருக்கு முன்னறிவிப்பு இல்லாமல் பெருகும் சிறுநீரை உடனிருந்து கலம் ஏந்தி காத்த அவரது அருந்தொண்டுக்கு ஈடு இணையில்லை. பெரியாருக்காக தன் வாழ்நாளை ஒப்படைத்த பொடிப் பெண்ணை ‘‘அன்னை’’ என்று போற்றுதலே சிறப்பு. பெரியார் மேடையில் வீற்றிருப்பார். தமிழர் அவரது தொண்டை போற்றி மல்லிகை உள்ளிட்ட மலர்களாலும் வெட்டிவேர் முதலிய நறுமணப் பொருளாளும் அழகு பெறக்கட்டிய மாலை ஒவ்வொன்றாக சூட்டிப் பெரியார் எதிரில் வண்டி வண்டியாக குவிப்பார்கள். ஆனால் மணியம்மை ஓர் வேலைக்காரியைப்போல் அரைக்கல் தொலைவில் தனியாக அமர்ந்து சுவடி விற்றுக் கொண்டிருப்பார். ஒரே ஒரு மாலையாவது எடுத்து என்னுடைய அன்னைக்கு போடுங்கள் என்று எந்தப் பாவியும் சொன்னதில்லை. என் அன்னையாவது தனக்கு முன்னே குவிந்துள்ள மலர்களை எடுத்து தன் தலையில் சூடிக்கொள்ளவும் இல்லை.’’

 

    ஒருமுறை பெரியார் சிறையில் இருந்தபோது கழகப் பணியையும் நிர்வாகப் பணியையும் மிகவும் திறமையாக கவனித்துக்கொண்டார் மணியம்மை, அந்த செயலுக்குகாக 19.7.1959ம் ஆண்டு நடந்த பாராட்டுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

     மணியம்மை அம்மையாரை திருமணம் செய்து கொள்வதாக முடிவு செய்தபோது அதை பகிரங்கமாக எந்தவித ஒழிவு மறைவும் இல்லாமல் பெரியார் அறிவித்தார்.

 

   ‘‘மனைவி வேண்டும் என்பதற்காகவோ, உடல் இச்சைக்காகவோ நான் திருமணம் செய்து கொள்ளவில்லை. இயக்க நலன், பொதுத்தொண்டு, என்னுடைய பாதுகாப்பு ஆகியவற்றை உத்தேசித்துதான் திருமணம் செய்கிறேன்’’ என்று கூறினார். 9.4.1949ம் ஆண்டு அவர்களது திருமணம் நடந்தது. அவர்களது திருமணம் பற்றி அண்ணா வெளியிட்ட அறிக்கையில்,

 ‘‘பெரியார்&மணியம்மை திருமணத்தை இனி யாராலும் தடுக்க முடியாது என்பது உறுதியாகிவிட்டது. சென்ற ஆண்டு நாம் பெரியாரின் 71வது பிறந்த நாள் விழாவை கொண்டாடினோம். ஆனால் இந்த ஆண்டு அவரது திருமண வைபவத்தை வந்து காணும்படி நம்மை அழைக்கிறார். இல்லை நமக்கு அவர் அறிவிக்கிறார். இந்த ஆறு ஆண்டுகளாக பெரியாருடைய உடலை கவனித்துக் கொள்ளும் தொண்டில் தன்னை அர்ப்பணித்த மணியம்மைக்கு வயது 26, பெரியாருக்கு வயது 72.’’

 

      ‘‘பொருந்தா திருமணம் நாட்டுக்கோர் சாபக்கேடு என அவர் ஆயிரம் மேடைகளில் முழங்கினார். ஆனால் அவரே இப்படி ஒரு  திருமணத்தை செய்கிறார் என்றால் கண்ணீரை காணிக்கையாக தருவதை தவிர வேறென்ன நிலை இருக்கும்?’’

பெரியாரே இப்படி ஒரு பொருந்தா திருமணம் செய்து கொள்கிறீர்களே இது சரியா? என்று கேட்கிறோம். ஆனால் அவர் போடா போ! நான் திருமணம் மட்டுமா செய்து கொள்ளப்போகிறேன் என்னுடைய இயக்கத்தையே மணியம்மையிடம் தான் ஒப்படைக்கப்போகிறேன். என்று கூறுகிறார். ’’

 

   மணியம்மை, பெரியாரின் திருமணம் ஒரு மாபெரும் வரலாற்று மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. மணியம்மையின் தலைமையின் கீழ் தொண்டாற்ற விரும்பாதவர்கள் திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்து திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கினர். ஒருவகையில் திமுக உருவாக மணியம்மை காரணமாக இருந்தார். 1952ல் பெரியார், மணியம்மையை சுயமரியாதை நிறுவனத்தின் ஆயுள் செயலாளராக நியமித்தார்.    

 

    மணியம்மை கலந்து கொண்ட போராட்டங்கள்

 

     20.12.1948ம் ஆண்டு குடந்தையில் (கும்பகோணம்) நடந்த மொழி உரிமைப்போரில் அரசின் தடையை மீறியதற்காக கைது செய்யப்பட்டு பாபநாசம் சிறையில் அடைக்கப்பட்டார் விசாரணைக்குப் பின் இரண்டு மாதங்கள் மணியம்மைக்கு சிறை தண்டனை கிடைத்தது. வேலூர் சிறையில் மணியம்மை அடைக்கப்பட்டார். 23.2.1948ம் ஆண்டு வேலூர் சிறையில் இருந்து வெளியில் வந்த மணியம்மையை பெரியார் வரவேற்றார்,

 

   19.1.1949ம் ஆண்டு விடுதலையில் ஒருவர், ‘‘இளந்தமிழர் புறப்படு’’ என்று ஒரு கட்டுரை எழுதினார். இந்த கட்டுரை சம்பந்தமாக ஆசிரியரும் வெளியிடுபவருமான ஈவேரா மணியம்மை மீது வழக்கு தொடரப்பட்டது. ரூ.100 அபராதம் அல்லது சிறைத் தண்டனை என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. ரூ,100 தர மறுத்த மணியம்மைக்கு சிறை தண்டனை கிடைத்தது. திராவிடர் கழகத்தின் மீது பற்றுக்கொண்ட ஒரு தொண்டர் ஒருவர் அபராதத்தொகை கட்டியதால் மணியம்மை விடுதலை செய்யப்பட்டார். 

 

      பெண்ணடிமை விலங்கை உடைப்போம் ! 

 

தலைவர்களே, தோழர்களே!

 

   இன்று மாதர் சங்கத்தை கல்வி நிலையத்தின் சார்பாக திறந்து வைக்கும் பெருமை அளித்ததற்கு நன்றி செலுத்துகிறேன். மாதர் சங்கமென்பது ஒவ்வொரு ஊரிலும் தனியாக ஒன்று இருக்க வேண்டியது அவசியமாகும். நம் நாட்டில் மாதர்களுக்குச் செய்ய வேண்டிய நலன்களுக்கு மாதர்கள் ஆண்களையே எதிர்பார்க்கின்றனர். ஆண்கள் தங்கள் அடிமைகளுக்கு எவ்வளவு நன்மை செய்ய முடியும்? தங்களுக்கு நல்ல அடிமையாய் இருப்பதற்கு ஏற்ற நன்மைதான் செய்ய முடியும். அதனால்தான் இந்த நூற்றாண்டிலும் மற்ற நாட்டுப் பெண்மணிகள் ஆகாயக் கப்பல் விடவும் பட்டாளத்தில் சேவிக்கவும் கல்வி மந்திரியாக இருக்கவும் ஆன நிலை ஏற்படும். நம் நாட்டு நிலை ஆண்களுக்கு வாய் ருசிக்க சமைப்பதும் மெய் சிலிர்க்க கொஞ்சுவதுமான நிலை இருந்து வருகிறது. நம் நாட்டுப் பெண்மணிகளின் திறமை எல்லாம் தங்களை ஆண்கள் மெச்சும்படி ஆசை கொள்ளும்படி அலங்கரித்துக் கொள்ளவும் தங்கள் ஆண்களுக்கு கடமைப்பட்டு நன்றி செலுத்தும்படி விலை உயர்ந்த நகைகளும் புடவைகளும் அணிந்து கொள்ளவுமே ஆகிவிட்டது. பெண்கள் படிப்பு விஷயம்கூட நம் நாட்டுப் பெண்களுக்கு படிப்பு தேவை இல்லை என்றே எனக்குத் தோன்றுகிறது. ஏனெனில் படித்த பெண்கள் என்ன செய்கிறார்கள்? பெரும்பாலும் சமையல்தான் செய்கின்றார்கள். ஆகவே, ‘‘அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு?’’ என்பது நியாயமான பேச்சாகும். சமையல் செய்யத் தகுந்தபடியே தங்கள் பெண்களைப் பயன்படுத்தும் பெண்களுக்கு பெற்றோர்கள் அதிகப் படிப்பளிப்பது நாட்டின் செல்வம், நேரம், ஊக்கம் பாழ் செய்யப்படுவதாகும்.

 

 ஆதலால் பெற்றோர்கள் தெரியாமல் கல்வி கொடுத்து விட்டாலும் கல்வி கற்ற பெண்கள் கண்டிப்பாய் சமையல் வேலைக்கு போய்விடக் கூடாது. சமையல் வேலைக்கும் குடும்ப நிர்வாகத்திற்கும் என்று மாத்திரம் நன்றாகப் படித்தப் பெண்களை பயன்படுத்த பெற்றோர்கள் கல்யாணம் செய்வார்களானால் கண்டிப்பாக படித்த பெண்கள் கல்யாணத்தை மறுத்துவிட வேண்டும். பெற்றோர்கள் கட்டாயப்படுத்தினால் பெண்கள் வீட்டை விட்டு வெளியேறிவிட வேண்டும். நாம் படிப்பது அடிமையாகவா அல்லது மென்மையும் விடுதலையும் பெறவா? நன்றாக நடத்துவார்கள். ஆதலால், பெண்கள் அடிமை ஆகக்கூடாது. இதற்கு மாதர்சங்கம் பயன்பட வேண்டும் என்று சொல்லி இச்சங்கத்தைத் திறந்துவைக்கிறேன்.

 

 

  (ஈரோடு உண்மை விளக்கம் கல்வி நிலையத்தில் மாதர் சங்கத்தைத் திறந்து வைத்து அன்னை மணியம்மையார் ஆற்றிய சொற்பொழிவு

குடியரசு 19.8.1955)     

 

 

    8.3.1958ல் சாதி ஒழிப்பு போராட்டத்தின்போது சுமார் 300 பேர்

இந்திய அரசியல் சட்ட சாதி பாதுகாப்புப்பிரிவுகளை பொது அரங்கில் தீயிட்டுக் கொளுத்தி£ர். இந்தப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான இயக்க தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் சிலர் சிறையிலேயே மாண்டனர். அவர்களது சடலத்தை போலீசார் தர மறுத்தனர். மணியம்மை, அப்போதைய முதலமைச்சர் காமராஜரை நேரில் சந்தித்து தோழர்களின் உடலை பெறும் ஆணையை வாங்கினார். மேலும் சடலங்களை மீட்டு தனது தலைமையில் ஊர்வலம் நடத்தினார்.

 3.4.1974 அன்று அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் வகையில் மத்திய அரசை வற்புறுத்தி சென்னை தலைமைச் செயலகம் முன்பு மறியல் செய்தார். 26.5.1974ல் பெரியார் திடலில் நடந்த ‘‘ இராவண லீலா’’ என்ற நிகழ்ச்சி சம்பந்தமாக கைது செய்யப்பட்டார்.

 

   1976ல் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்ட நேரத்தில் பெரியாரும் இயக்கத் தோழர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர். அப்போது மணியம்மை தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து  தீவிர பிரச்சாரம் செய்தார்.

 

     1976ல் இராவண லீலா வழக்கில் மணியம்மையாருக்கும் மற்ற தோழர்களுக்கும் 6 மாத சிறை தண்டனை வழங்கப்பட்டது. வழக்கை எதிர்த்து அப்பீல் செய்யப்பட்டது. 1976ல் தந்தை பெரியார் பிறந்தநாள் வந்தபோது அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்ட மணியம்மை 2 நாட்களுக்கு பின்பு விடுதலை செய்யப்பட்டார். 30.10.1977ம் நாளன்று தமிழகம் வந்த இந்திராகாந்திக்கு மணியம்மை கருப்புக்கொடி காட்டினார்.

 

 

    அடுத்தது என்ன?

 

  என்றுமே ஈடு செய்ய முடியாத இழப்புக்கு ஆளாகிவிட்டோம்.

இத்தகைய விபத்து நம் வாழ்வில் வந்து விழுந்துவிடும் என்று நினக்கக்கூட முடியாத அளவுக்கு சடுதியில் அய்யா அவர்கள் மறைந்து விட்டார்கள். நாம் அனைவரும் நொந்த இதயத்திலே வேதனையைத் தாங்கி தளர்ந்து நிற்கிறோம். யாருக்கு யார் ஆறுதல் கூறிட முடியும்?

 

ஆறுதலாலும் தேறுதலாலும் நம் உள்ளந்தான் அமைந்தி அடைந்திருமா? அடையாது!

 

 அவர் விட்டுச்சென்ற பணியினை அவர் போட்டுத் தந்திருக்கிற பாதையிலேயே வழி நடந்து முடிக்கிறவரையிலே மன அமைதி நமக்கேது?

அந்தப் பணியினை ஆற்றிட அருமைத் தோழர்களே அணிவகுத்து நில்லுங்கள் அய்யா அவர்களின் லட்சியத்தை ஈடேற்றியே தீருவோம். என்ற உறுதியினை சங்கல்பத்தினை இன்று எடுத்துக்கொள்வோம். என்னைப் பொறுத்தவரையில் வினா தெரிந்த காலத்திலே இருந்து என் வாழ்வினையே அவர் தொண்டுக்கென அமைத்துக் கொண்டுவிட்டவள்.

 

  எனது துடிப்பினை இதோ நிறுத்திக் கொள்கிறேன்! என்று எனது இருதயம் சதா எச்சரித்துக் கொண்டே படுக்கையிலே என்னை கிடத்திவிட்ட போதிலும்கூட,  அய்யா அவர்கள் தூய தொண்டுக்கென அமைத்துக் கொண்ட என் வாழ்வினை என் இறுதி மூச்சு அடங்கும் வரையிலே அந்தப் பணிக்கே செலவிடுவேன் என்ற உறுதியினை உங்களுக்கு அறிவித்துக் கொள்கிறேன்.

 

  இனி, மேலாக நடக்க வேண்டியதை நாம் அனைவரும் விரைவில் ஓர் இடத்தில் கூடி அய்யா அவர்கள் விட்டுச் சென்ற பணியினைத் தொடர முடிவெடுப்போம்.

 

  கண் கலங்கி நிற்கும் கழகத் தோழர்களே! கட்டுப்பாட்டோடு கழகக் கொடியின் கீழ் அணிவகுத்து ஏற்றுக் கொண்ட பணியினை நடத்திட துணை புரிந்திட கேட்டுக் கொள்கிறேன்.

 

டாக்டர் கே.இராமச்சந்திரா, டாக்டர் பட், டாக்டர் ஜான்சன் ஆகியவர்களுக்கும் அவர்களுடன் பாடுபட்ட இதர பல டாக்டர்களுக்கும் எப்படி நன்றி எழுவதோ தெரியவில்லை!

 

 மதிப்பிற்குறிய அண்ணா அவர்கள், ‘‘ இந்த அமைச்சரவையே அய்யா அவர்களுக்கு காணிக்கையாக்குகிறோம்’’ என்று சொன்ன மொழிப்படி, அமைச்சர் பெருமக்களும் தங்களது பற்றை, பாசத்தை கொட்டிக் காட்டினார்கள். அய்யாவுக்கு அரசு மரியாதை கொடுத்து அய்யா அவர்களுக்கும் கழகத்திற்கும் பொருமை வழங்கி உள்ளார்கள்.

 

  நாடு முழுவதிலுமிருந்து அய்யா அவர்களின் மறைவுக்கு அனுதாபம் தெரிவித்து, நமது துக்கத்தில் பங்கேற்றவர்களுக்கும் நேரில் வந்து ஆறுதல் வழங்கிய பல லட்சம் மக்களுக்கும் கழகத்தின் சார்பில் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

 

  ( தந்தை பெரியார் அவர்கள் மறைவுக்குப்பின் அன்னை மணியம்மையார் அவர்கள் எழுதிய தலையங்கம்   ‘‘விடுதலை’’ & 27.12.1973 )

 

    1973 ஆம் நாள் அன்று பெரியார் மறைந்த பின்பு ‘‘ஐயா, அவர்கள்

வழங்கிச் சென்ற பகுத்தறிவுக் கொள்ளைகளை, அவர் வகுத்துச்சென்ற

செயல்திட்டங்கள், கொள்கை விளக்கங்கள் பயிற்சிகள் ஆகியவற்றை ஒரு நூழிலைகூடப் பிசகாமல் நடக்கும்’’ என்றார். ஆனால் இன்றைய திராவிடர் கழகம் பகுத்தறிவை பரப்பாமல் தோழர்களுக்கு குறைந்த வட்டிக்கு கடன் தருவதிலும் ஆங்கில அறிவை வளர்ப்பதிலும் கவனம் செலுத்துகிறது. ஒரு பெரிய பகுத்தறிவு கட்சி லப்பர் ஸ்டாம் கட்சியைப்போல் நடக்கிறது. பெரியாருக்குப்பின் பகுத்தறிவுக் கொள்கைகளை வீதி வீதியாக பரப்புவதற்கு யாரும் முன் வராததால் இன்றைய இளைஞர்கள் மூடநம்பிக்கையில் சிக்கித் தவிக்கிக்கிறார்கள்.  -தொடரும்..............by Swathi   on 30 Sep 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்கள் - டாக்டர். திரு. சின்னத்துரை,அமெரிக்கா வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்கள் - டாக்டர். திரு. சின்னத்துரை,அமெரிக்கா
தகைமை சால் தமிழறிஞர்கள் - பேராசிரியர் மறைமலை இலக்குவனார் தகைமை சால் தமிழறிஞர்கள் - பேராசிரியர் மறைமலை இலக்குவனார்
குலவை -தமிழர்கள் எழுப்பும் மங்கல ஒலி குலவை -தமிழர்கள் எழுப்பும் மங்கல ஒலி
வெளிநாட்டு வாழ் தமிழர்கள் தாய்மொழியையும், தலைமுறைப் பெருமையையும் வளர்க்கிறார்களா…? -பன்னாட்டுச் சிறப்புப் பட்டிமன்றம் வெளிநாட்டு வாழ் தமிழர்கள் தாய்மொழியையும், தலைமுறைப் பெருமையையும் வளர்க்கிறார்களா…? -பன்னாட்டுச் சிறப்புப் பட்டிமன்றம்
வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்கள் - திரு. சதீஸ் குமார் வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்கள் - திரு. சதீஸ் குமார்
வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்கள் - திரு. சுரேஷ் பாரதி வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்கள் - திரு. சுரேஷ் பாரதி
வேர்மறவா வெளிநாடு வாழ் தமிழர்கள் - திரு. ரவிச்சந்திரன் சோமு வேர்மறவா வெளிநாடு வாழ் தமிழர்கள் - திரு. ரவிச்சந்திரன் சோமு
வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்கள் - திரு. ராமலிங்கம் கோவிந்தராஜ் வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்கள் - திரு. ராமலிங்கம் கோவிந்தராஜ்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.