வருமான வரித்துறை வழங்கும் பான் அட்டையை க்யூ.ஆர்.கோடு உட்பட இதர பாதுகாப்பு அம்சங்களுடன் ரூ.1,435 கோடியில் புதுப்பிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
நாட்டில் தற்போது 78 கோடி பேரிடம் பான் அட்டை உள்ளது. இதில் உள்ள 10 இலக்க அடையாள எண் மூலம், ஒருவரின் பணப் பரிவர்த்தனை வருமானவரித் துறையுடன் இணைக்கப்படுகிறது. தற்போது இந்த அட்டையை ரூ.1,435 கோடி செலவில் புதுப்பிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் தற்போதுள்ள பழைய பான் அட்டைகள் மற்றும் புது பான் அட்டைகள் க்யூ.ஆர் கோடு வசதியுடன் மேம்படுத்தப்படும். ஏற்கெனவே பான் எண் வைத்திருப்பவர்களுக்கு பான் எண் மாறாது, பான் அட்டை மட்டும் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் மேம்படுத்தப்படும்.
இது குறித்துப் பேசிய மத்தியத் தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், “பான் அட்டையை, வர்த்தகத்துக்கான பொது அடையாள அட்டையாகவும், உண்மை மற்றும் தரவு நிலைத்தன்மையின் ஒற்றை ஆதாரமாகவும் மாற்ற பான் 2.0 திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இது ஏற்கெனவே ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் மூலம் தற்போது பான் அட்டை வைத்துள்ள 78 கோடி பேர் தங்கள் பான் அட்டைகளை இலவசமாகப் புதுப்பித்துக் கொள்ளலாம். பான் 2.0 திட்டம் மூலம் பான் அட்டை வர்த்தகத்துக்கான அடையாள அட்டையாக மாறும். இதில் அனைத்து பான்/டான்/டின் எண்கள் ஒன்றிணைக்கப்படும். வருமான வரித்துறை தொடர்பான அனைத்துப் பணிகளும் காகிதம் இன்றி ஆன்லைன் மூலம் மேற்கொள்ளப்படும். பான் 2.0 அட்டை பெறுவதற்கான விவரங்கள் மற்றும் விண்ணப்பங்களை வருமானவரித் துறை இனிமேல் வெளியிடும்” என்றார்.
|