LOGO
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    சிறுகதை Print Friendly and PDF
- அ.முத்துலிங்கம்

ஆயுள்

அவனை யாத்ரிகன் என்று சொல்ல முடியாது. யாத்திாிகன் என்றால் அவனுடைய பயணத்துக்கு ஓர் இலக்கிருக்கும். இது இலக்கில்லாத பயணம். அவன் தேசாந்திாி. தேசம் தேசமாக சுற்றி வருபவன். அவன் பயணங்களுக்கு ஓர் ஒழுங்கு முறை கிடையாது. நியமம் இல்லை. அவன் சந்தோசம் அதில்தான் இருந்தது. காற்றிலே எத்தப்படும் கடுதாசி போல கால்கள் போன போக்கில் அவன் பயணம் நிர்ணயமானது.

அவன் ஒரு வீதி மனிதன். நடத்தல் அவனுக்கு விருப்பமானது. நடந்துகொண்டே இருப்பான். தூரம் என்பது ஒரு பொருட்டில்லை. நிற்கும்போதுதான் அவனுக்கு ஆயாசம் ஏற்படும். மறுபடியும் நடக்கத் தொடங்கிவிடுவான்.

அவனுடைய அம்மா சொல்லுவாள், ஒரு நாள் அவன் தள்ளு வண்டியில் இருந்து தானாகவே இறங்கிக் கொண்டானாம். அதைத் தள்ளியபடியே சிறிது தூரம் நடந்தான். அவளிற்கு ஆச்சாியம். கால்களைக் கண்டுபிடித்த அந்தக் கணத்துக்கு பிறகு அவன் தள்ளு வண்டியில் திரும்ப ஏறவேயில்லையாம்.

வாகனங்களில் ஆட்கள் பிரயாணம் செய்வது அவனுக்கு வியப்பளிக்கும். பள்ளிக்கூடத்திற்கு நடந்துதான் போனான்; வந்தான். விளையாட்டுகளில்கூட அவனுக்கு விருப்பம் இருந்ததில்லை. ஓடுவதுகூட பிடிக்காது. அது கால்களை மறுதலிப்பதுபோல என்பான். கால்களை அழுத்தமாக பூமியில் பதித்து நடக்கவேண்டும் என்பதுதான் அவன் விருப்பம். அப்படித்தான் நடந்து கொண்டிருந்தான்.

பள்ளிக்கூட ஆசிாியர் ஒரு நாள் கேட்டார், 'உனக்கு எதிர்காலத்தில் என்னவாக விருப்பம் ? ' என்று. 'நான் இறக்க விரும்புகிறேன். இறந்து மறுபடியும் சிலந்தியாக பிறக்க வேண்டும், ' என்றான். ஆசிாியர் திகைத்து விட்டார். ஏன் என்ற கேள்விக்கு அவன் இப்படி பதில் கூறினான்.

'வனவிலங்குகளை எனக்குப் பிடிக்கும். அவை சுதந்திரமாக நடந்து திாியும். இரை தேடும், இனப்பெருக்கம் செய்யும், தூங்கும், பயங்கொள்ளும். என்ன உவப்பான வாழ்க்கை! '

'பறவைகளுடைய பரப்பு இன்னும் பொியது. எல்லை கிடையாது. சிறகடித்து பறக்கும், பாடும், பல வர்ணங்களில் மயக்க வைக்கும். அவற்றினுடைய சாகஸத்தை பார்த்தபடியே இருக்கலாம். அவை எனக்கு மிகவும் பிடிக்கும்.

'ஆனால் சிலந்தி. அது வித்தியாசமானது. தன் வாய் நீாில் நூல் செய்து தொங்கும் ஒரே ஜீவன். அந்த நூலில் ஊஞ்சலாடியபடியே பொறுமையோடு காத்திருக்கும். அது உணவை தேடிப் போவதில்லை. உணவு அதைத் தேடி வரும். என்ன உன்னதமான வாழ்க்கை. அதுதான் எனக்கு மிகமிகப் பிடிக்கும். '

வாலிபனானதும் அவன் புறப்பட்டான். நாலு வருடங்களாக நடந்து கொண்டிருந்தான். கிரேக்கத்தில் இருந்து வெளிக்கிடும்போது மூன்று மொழிகள் அவனுக்கு தொிந்திருந்தன. எகிப்து, பாரசீகம், ஆப்கானிஸ்தான் என்று பல தேசங்களை அவன் கடந்துவிட்டான். இப்போது பன்னிரெண்டு மொழிகள் கைவந்தன. இனி எதிர்ப்படும் மொழிகளை இன்னும் சுலபமாக அவன் கற்றுக்கொள்வான். அவன் கால்கள் நகர்ந்து கொண்டேயிருக்கும். இன்று இருக்கும் பூமியில் அவன் மறுநாள் இருக்கப் போவதில்லை.

அவன் முதுகில் ஒரு மூட்டை இருந்தது. மிக அத்தியாவசியமான பொருட்கள் மட்டும் அந்தப் பொதியில் இருந்தன. கம்பளிப்போர்வை, அங்கி, நித்திரைப்பை, சமையல் சாமான் என்று. ஒரு பிளாஸ்டிக் குடுவையில் தண்ணீர் பிடித்து வைத்திருந்தான். அந்த மூட்டையில் அது தொங்கிக்கொண்டு ஆடியது. சூாிய ஒளி படும்போது அது பளிச்சுப்பளிச்சென்று அடித்தது.

இந்துகுஷ் மலைச்சிகரங்களை அணைத்தபடி கிடக்கும் ரம்பூர் பள்ளத்தாக்கைப் பற்றி அவன் நிறையவே கேள்விப்பட்டிருக்கிறான். அநாதிகாலமாக இங்கே பழங்குடியினர் அந்நிய குறுக்கீடுகள் இல்லாமல் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். அலெக்ஸாந்தர் படையெடுத்து வந்தபோது இந்தப் பள்ளத்தாக்கைப் பார்த்து பிரமித்து நின்றானாம். அவனுடைய படை வீரர்களில் சிலர் திரும்ப மறுத்து இங்கேயே தங்கிவிட்டதாகவும் கதைகள் இருந்தன.

பன்னிரெண்டாயிரம் அடி உயரத்தில் அது ஒரு தொட்டில்போல மிதந்துகொண்டிருந்தது. மலைச்சிகரங்களில் வெண்ணிற மேகங்கள் அலை அலையாக படிந்திருந்தன. பெரும் இரைச்சலுக்கிடையில் தோன்றும் மோனம் போல இடைக்கிடை பச்சை பிரதேசம் காணப்பட்டது. பனிக்காலம் வருமுன் இந்தப் பசும்புற்கள் தங்கள் கடைசி முகத்தை காட்டிக் கொண்டிருந்தன. இந்தச் சூழ்நிலையின் எழில் அவன் மனதை சொக்க வைத்தது.

மதங்கள் பிறக்க முந்திய ஒரு காலம். ஆதிமனிதன் இயற்கையுடன் ஒன்றி வாழ்ந்துகொண்டிருந்தான். விலங்குகள் சில வீட்டு மிருகங்கள் ஆகின. பூமி அணைத்தது. ஆகாயம் காத்தது. நதி ஓடியது. பனி பெய்தது. காற்று வீசியது. ஊழி முதலாக வரும் இந்த நியதியில் ஒரு மாற்றமுமில்லை. இந்த மலை வாசிகள் அப்படித்தான் வாழ்ந்துகொண்டிருந்தார்கள்.

பனிதான் நிரந்தரமானது. தண்ணீர் பனியின் மாறுவேடம்தான். சிலுசிலுவென்று தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது. பனி உருகி வழிந்த நீர். அவன் குனிந்து அந்த பிளாஸ்டிக் குடுவையில் அதை நிரப்பினான். திவலைகள் சிதறின. சூாிய ஒளியில் அவை தகதகவென்று பிரகாசித்தன. வாயிலே ஊற்றியபோது குளிர்ந்து அவன் களைப்பை நீக்கியது.

இளம்பெண்கள் சேரும்போது சிாிப்பும் கும்மாளமும் தானாகவே வந்துவிடும். அவர்கள் ஒருவரை ஒருவர் இடித்துக்கொண்டும், கைகளைப் பின்னிக்கொண்டும் வந்தார்கள். இவன் செய்த காாியத்தை வியப்புடன் நோக்கினர். அந்நியர்கள் அங்கே வருவதில்லை. ஆனபடியால் அந்நியர்களைப் பற்றிய பயமும் அவர்களுக்கில்லை. அவனுடைய கண்களும், உடையும், கேசமும் அவர்களுக்கு புதினமாக இருந்தது. ஆனால் அவன் செய்த காாியம்தான் இன்னும் விநோதமாகப் பட்டது.

அவன் கையிலே வைத்திருந்த பிளாஸ்டிக் குடுவையை கண் கொட்டாமல் பார்த்தார்கள். அவர்கள் அதை முன்பின் பார்த்ததில்லை. சுரைக்குடுவையை பார்த்திருக்கிறார்கள்; தோல் பையை பார்த்திருக்கிறார்கள். ஆனால் இப்படி ஓர் அதிசயத்தை கண்டதில்லை.

தண்ணீர் மொள்ளும்போது உள்ளே அது தண்ணீரை காட்டியது. சூாிய ஒளியில் நீர் தளும்பும்போது ஜாலம் செய்தது.

அவர்கள் கைநீட்டி ஜாடை செய்து அந்தக் குடுவையை யாசித்தார்கள். அவன் நீட்டினான். ஒருவர் மாறி ஒருவர் தண்ணீரை பருகினார்கள். பருகிவிட்டு குடுவையை பார்த்தார்கள். அங்கே நீர் குறைந்திருந்தது. கலகலவென்று சிாித்தபடியே குடுவையை திருப்பி கொடுத்துவிட்டு அவர்கள் போய்விட்டார்கள்.

அதில் ஒருத்தி சாத்தியமில்லாத முகத்தை கொண்டிருந்தாள். மலைப்பனி போன்ற உடம்பு. மேடிட்ட மேலுதடுகள். பிராயம் பதினாலுகூட இருக்காது. மை பூசாத கண்களின் வயது அவளுடைய முகத்திலும் பார்க்க இரண்டு வயது அதிகமாய் தொிந்தது. உதாசீனமான பார்வை பார்த்தாள். உலகத்திலேயே அற்பமான உடமைகள் கொண்ட இந்த ஆதிவாசிப்பெண் இவன் பார்வையை அலட்சியப்படுத்திவிட்டு தன்பாட்டுக்கு போய்க்கொண்டிருந்தாள்.

என்ன விசித்திரம். இவன் மனது அவள் பின்னால் சென்றது.

( இங்கே காதல் தொடங்கிவிட்டது என்று நீங்கள் நினைக்கலாம். இதிலே காதல் வளராது. ஏமாற்றம்தான் வளரும். இது இரண்டாவது எச்சாிக்கை. இனியும் தொடரவேண்டிய அவசியமில்லை.)

தன் வழக்கத்துக்கு விரோதமாக அவன் அந்தக் கிராமத்தில் தங்கிவிட்டான். அசாதாரணமான பனிச்சிகரங்களின் வனப்பும், ஆயிரமாயிரம் ஆண்டுகள் ஒருவித மாற்றமுமில்லாமல் இயற்கையுடன் ஒன்றி வாழும் அந்தப் பழங்குடியினாின் விளிம்பு வாழ்க்கையில் ஏற்பட்ட லயிப்பும்தான் முக்கிய காரணம்.

ஹொன்ஸாகூல் இன்னொரு காரணம். அதுதான் அவளுடைய பெயர்.

ஆண்கள் ஆட்டுமந்தைகளைப் பார்த்தார்கள். பெண்கள் வயலில் வேலை செய்தார்கள். தேனடைகளில் தேன் எடுத்தார்கள். அவர்கள் ஆசை அடங்கியவை. தேவைகள் சுருங்கியவை. ஆனால் கேளிக்கைகளுக்கு மாத்திரம் குறைவில்லை. விழாக்காலங்களில் ஆட்டமும் பாட்டுமாக சிறுபிள்ளைகளின் உற்சாகத்தோடு கலந்துகொண்டார்கள்.

வேகமும் யந்திர வாழ்க்கையும் அவனுக்கு பிடிக்காது. இந்த மலைவாசிகள் இயற்கையை பலவந்தம் செய்யாமல் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். இங்கே சத்துருக்கள் இல்லை; ஆகவே சமரும் இல்லை. ஆலைகள் இல்லை அதனால் ஆற்றின் கழிவுகள் இல்லை; ஆகாயத்தை மறைத்து நச்சுப்புகையும் இல்லை. உண்மையான பூமியின் மணம் இங்கே அவனுக்கு கிடைத்தது. எல்லாமே மண்ணில் மறைந்தது; துளிர்த்தது; கிளைவிட்டது; மீண்டும் மறைந்தது.

இறந்தவர்களைக்கூட இங்கே எாிப்பதில்லை; புதைப்பதுமில்லை. சின்ன மரப்பெட்டிகளில் வைத்து மரணபீடத்தில் ஏற்றிவிடுவார்கள். அது அப்படியே மழையில் நனைந்து, வெயிலில் உலர்ந்து இயற்கையாகி காற்றில் கலந்துவிடும். அதுவும் அவனுக்கு பிடித்திருந்தது.

இலையுதிர் காலத்தின் ஆரம்பத்தில் மெல்லிய குளிர் பரவியிருந்த ஒரு நாள் 'உச்சோ ' விழாவின் மும்முரத்தில் அவன் மறுபடியும் அவளைக் கண்டான். இவர்கள் நடத்தும் விழாக்களில் இந்த விழா பிரசித்தமானது. மலையிலிருந்து இடையர்கள் ஆட்டுப்பால் வெண்ணெய் கட்டிகளை கூடை கூடையாக சுமந்து வந்து மரக்குதிரை மேடையில் அர்ப்பணம் செய்தார்கள். சிலர் நாணல் குழல் வாத்தியத்துக்கு நாட்டியமாடினார்கள். ஆண்களின் இந்த ஆட்டத்தில் கலக்காமல் பெண்கள் கூட்டம் சற்றுத் தள்ளி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.

கறுப்பு தேவதை போல அவள் இருந்தாள். ஆட்டு மயிாில் செய்த கறுப்பு கம்பளி உடையால்கூட அவள் அழகை மறைக்க முடியவில்லை. தலைமுடியில் கிாீடம்போல பல வண்ண இறகுகளை செருகியிருந்தாள். கருமணியும், செம்மணியுமாக பல மாலைகள் அவள் கழுத்தைச் சுற்றியிருந்தன. உதடுகள் கர்வமாக இருந்தன. கால்களை சாயவைத்து, உயரம் குறைந்த நண்பியின் தோள்பட்டையில் தன் முகவாயை வைத்து, உடல் பாரத்தை சமன் செய்து நின்றாள்.

சித்திரம் போல் அசையாது அப்படியே கனநேரம் நின்றாள். அவளைப் பார்க்கும் தோறும் அவளுடன் எப்படியாவது பேசிவிடவேண்டும் என்ற ஆர்வம் அவனுள் அதிகாித்தது. அவனுக்கு தொிந்த சொற்ப கலாசுமுன் பாஷை போதுமானதென்று அவனுக்கு பட்டது. தருணம் பார்த்திருந்தான்.

பாஷாலி என்பது மாதவிலக்கு குடிசை. அது ஆற்றின் ஓரத்தில் கிராமத்தை விட்டு தள்ளி இருந்தது. ஆண்கள் அணுகமுடியாத இடம். மூன்று நாட்கள் காத்திருந்தான். ஒரு நாள் அதிகாலையில் மரப்பாவைகளை அணைத்தபடி அவள் பாஷாலியிலிருந்து வெளியே வந்தபோது இவன் திடுமென எதிர்கொண்டான்.

முடிவு பெறாத நித்திரைகள் அவள் கண் மடல்களை அழுத்தின. அவள் ஆச்சாியம் காட்டவில்லை. மாறாக இவன்தான் அவளுக்கும் சேர்த்து ஆச்சாியப்படவேண்டியிருந்தது.

சில விநாடிகள் நகர்ந்தன. நிசப்தம் அங்கே கடுமையாகியது. மனதுக்குள் ஒவ்வொரு வார்த்தையாக பொறுக்கி அடுக்கினான். சிந்தனை நேராக சிறிது நேரம் சென்றது.

'பனிப்பெண்ணே, நான் உன்னை மணக்க ஆசை கொண்டிருக்கிறேன். உன் வார்த்தையை சொல்வாய் ' என்றான்.

'போய்விடு. உன் அம்மாவுடன் போ ' என்றாள்.

இவன் திடுக்கிட்டு விட்டான். அவள் சொன்ன வார்த்தைகளை இன்னொருமுறை அடுக்கிப் பார்த்தான். அப்படித்தான் வந்தது. அவள் பேசிய சொற்கள் இவனுடைய மொழிப்பயிற்சிக்குள் அடங்கித்தான் இருந்தது. கலாஷ் பெண்கள் வசவு மொழியில் வல்லவர்கள் என்பதும் சடுதியில் ஞாபகத்துக்கு வந்தது. அவள் இன்னொரு விசை தன்னை வசையமாட்டாளா என்று ஆசைப்பட்டான்.

தயங்காமல் இரண்டாவது முயற்சியில் இறங்கினான்.

'மலைவாசியே, நான் அந்நியன் என்று யோசிக்காதே. நான் உன்னை நேசமாகக் காப்பாற்றுவேன். '

அவள் அப்போது ஒரு காாியம் செய்தாள். அவனை வயிற்றில் இருந்து கால் பாதம் வரை உன்னிப்பாக நோக்கினாள். அவள் பார்வையே அவனுக்கு கூச்சம் தந்தது.

'உன் கால்கள் இறுக்கமாகத்தான் இருக்கின்றன. உன் கைகளை கீழே விட்டு சொறிந்துகொள் ' என்றாள்.

இம்முறை அவனுக்கு தன் மொழி ஞானத்தில் சந்தேகம் ஏற்படவில்லை. அடுத்து என்ன செய்யலாம் என்று அவன் தீர்மானிப்பதற்குள் அவள் அவசரமில்லாத அசை நடையில் அவனை தாண்டிப் போனாள்.

சூட்டோடு சூடாக அவளுடைய தகப்பனாாிடம் போவதற்கு முடிவு செய்தான். தெம்பு முறிந்துபோன கிழவர் அவர். இரண்டு நாடியுடனும், ஒரு முற்றுப்பெறாத தாடியுடனும் இருந்தார். அவாிடம் தன் விருத்தாந்தத்தைக் கூறி சம்மதம் கேட்டான். அவர் யோசனைகளுக்கு அப்பாற்பட்டு காணப்பட்டார். சீாில்லாத பற்களைக்காட்டி தன் இசைவை தொிவித்தார். ஆனால் அதிலும் ஒரு சிக்கல் இருந்தது. அவர்கள் வழக்கப்படி இந்த ஏற்பாட்டிற்கு ஹொன்ஸாகூலும் சம்மதிக்கவேண்டும் என்று சொல்லிவிட்டார்.

அவன் கால்கள் மறுபடியும் பரபரத்தன. மழைக்காலம் விரைவில் வரப்போகும் அறிகுறிகள் தொிந்தன. தேசாந்திாிக்கு எதிாி மழை. குளிர் காலத்திற்கு வேண்டிய கம்பளி உடைகள் அவனிடத்தில் இருந்தன. வெயில் காலத்துக்கு வெறும் உடம்பும், மர நிழலும் போதுமானது. ஆனால் மழைக்காலம் வந்துவிட்டால் தேசாந்திாி சஞ்சாிப்பது கஷ்டமாகிவிடும்.

பொிய மழைத்துளி ஒன்று மேகத்தில் இருந்து பிாிந்து புவியீர்ப்பில் அசைக்கமுடியாத நம்பிக்கை வைத்து கீழ் நோக்கி வந்தது. இவன் புஜத்தில் விழுந்தது. மேலுலகம் அனுப்பிய செய்தியை புாிந்துகொண்டான்.

கலாஷ் பெண்கள் மண முடித்தாலும் பள்ளத்தாக்கை விட்டு வெளியே வரமாட்டார்கள் என்று அவள் தகப்பனார் கூறியிருந்தார். அவன் மனம் ஒரு முடிவும் எடுக்க முடியாமல் தத்தளித்தது.

புறப்படுமுன் மறுபடியும் அவளை ஒரு முன்மதிய நேரத்தில் சந்தித்தான். அவன் மூச்சு காற்று படும் தூரத்தில் அவள் நின்றாள். அவள் கண் ரப்பை மயிர்களைக்கூட இவன் எண்ணக்கூடியதாக இருந்தது. வந்த நாளில் இருந்து சேர்த்து வைத்திருந்த ஒரு புன்னகையை வெளியே விட்டான்.

அவனுடைய பிளாஸ்டிக் குடுவையில் நீர் நிரம்பியிருந்தது. அதை அவளிடம் நீட்டினான். மறுப்பு பேசாமல் அவள் அதை ஆசையுடன் வாங்கி அருந்தினாள். குழந்தை பால் குடிப்பதுபோல கண்மூடி அதை சுவைத்து சுவைத்து குடித்தாள். அந்தக் குவளையின் பளபளப்பிலும், நேர்த்தியிலும் மனதைப் பறிகொடுத்தாள்.

'மலை மங்கையே! இதை நீயே வைத்துக்கொள், என் ஞாபகமாக. நான் போகிறேன். திரும்பி வரும்போது உன்னை மணப்பேன். ஆனால் இங்கேயே உன்னோடு தங்கிவிடுவேன் ' என்றான்.

அப்போது வசவில்லாத ஒரு வாய்மொழி முதன்முறையாக அவளிடமிருந்து வெளியே வந்தது.

'நிச்சயமாக ' என்றாள் அவள்.

'நிச்சயம். '

'திறமான நிச்சயம். '

'திறமான நிச்சயம். '

அவன் மூட்டையை காவிக்கொண்டு திரும்பிப் போகும்போது கால்களை நிலத்திலே பதித்து வைத்தான். ஆனால் அவை பதியவில்லை. தன்னையே கேட்டுக்கொண்டான். இவள் என்ன பதில் சொன்னாளா அல்லது கேள்வி கேட்டாளா ? 'திறமான நிச்சயம் ' என்று சொல்கிறாளே! அவன் தனக்குள்ளே இன்னொரு முறை சிாித்துக்கொண்டான்.

( முன்பே சொன்னேன். நீங்கள் நம்பவில்லை. இது காதல் கதை அல்ல. இவ்வளவு தூரம் வந்துவிட்டார்கள். மேலும் வருவதற்கு பிாியமில்லாவிட்டால் இங்கேயே இறங்கிக்கொள்ளலாம்.)

ஹொன்ஸாகூல் அந்தக் குடுவையை மாடாவில் வைத்தாள். அதையே பார்த்துக்கொண்டிருந்தாள். காற்றைப்போல திசையில்லாமல் சுற்றிக்கொண்டிருக்கும் அவன் வருவான் என்ற நம்பிக்கை அவளுக்கு குறைந்துகொண்டு வந்தது.

நிச்சயம் வருவேன் என்று கூறியவன் இரண்டு உச்சோ விழாக்கள் கண்டும் திரும்பவில்லை. இதற்கிடையில் ஹொன்ஸாகூலை மணக்க பல மலை மேய்ப்பர்கள் ஆர்வம் காட்டினார்கள். அவர்கள் வழக்கப்படி ஹொன்ஸாகூல் அதில் ஒருவனை தொிவு செய்யவேண்டும். அப்படியே தாழ்ந்த கண்களும், தகுதியில் குறைந்த மீசையும் கொண்ட ஒருவனை அவள் மணந்துகொண்டாள். அந்த மணம் ஓர் ஆறுமாத காலமே நீடித்தது. ஒரு பனிக்காலத்தின் ஆரம்பத்தில் தன் மணத்தை முறித்துக்கொண்டு தனிக்குடிசை ஒன்றுக்கு வந்து சேர்ந்தாள், ஹொன்ஸாகூல்.

காலம் கரைந்தது. ஆறுகள் கடினமாகின, ஓடின, மறுபடியும் உறைந்தன. ஒரு நாள் அவளுடைய தகப்பனார் இறந்தார். அவருடைய சடலம் மரணபீடம் ஏறியது.

இன்னும் பத்து வருடங்கள் பறந்தன. ஒரு காலத்தில் அவளை மணமுடித்து சொற்ப சுகம் தந்த கணவனும் இறந்துபோனான். அவனுடைய சடலமும் மரணபீடம் ஏறியது.

அவள் காத்திருந்தாள். கறுப்பு கம்பளி உடை நைந்து தொங்க கல்லும், மண்ணும், மரச்சுள்ளிகளும் சேர்த்துக்கட்டிய அந்த இருண்ட குடிசையில் கிடந்தாள். அவன் விட்டுச்சென்ற அந்தக் குடுவை அந்த மாடத்தில் வைத்த இடத்திலேயே பல வருடங்களாகியும் அசையாமல் அப்படியே கிடந்தது.

இன்னும் பல மரணிப்புகள் நிகழ்ந்தன.

தட்சணாயணத்தில் ஒரு சில நாட்கள் சூாியனுடைய முதல் வெளிச்சம் கல் நீக்கல் வழியாக வந்து சாி கணக்காக அந்தக் குடுவையின் மீது விழும். அந்த ஒளியில் அது பிரகாசிக்கும்.

மறுபடியும் உத்தராயணத்தில் ஒரு சில நாட்கள் சூாியனுடைய ஒளி தெறிக்கும். அவள் அப்போதுகளில் அவனை நினைத்துக் கொள்வாள்.

ஒரு நாள் அவளும் இறந்துபோனாள்.

நூறு வருடங்கள் கழிந்தன. உலகத்து ஜீவராசிகள் அத்தனையும் மடிந்து மண்ணோடு மண்ணாகி மறைந்து போயின. அவற்றின் இடத்தை முற்றிலும் புது ஜீவராசிகள் நிரப்பின.

மரண பீடத்தில் கிடந்த பிணங்கள் எல்லாம் எலும்பும், ஓடுமாக மாறின. மழையிலே நனைந்து, காற்றிலே காய்ந்து எத்துண்டு மறைந்தன.

ஹொன்ஸாகூலின் குடிசையும் சிதிலமானது. தட்சணாயணத்திலும், உத்தராயணத்திலும் ஓாிரு நாட்கள் ஒளிபட்டு வாழ்ந்த அந்த குடுவையும் இல்லை. அதுவும் எங்கோ மண்ணில் புதைந்து விட்டது.

அதனுடைய ஆயுள் நானூறு வருடம். ஒரு நூறு வருடம்தான் இப்போது கழிந்திருந்தது. ஹொன்ஸாகூலின் காத்திருப்புக்கு சாட்சியாக இருந்த அந்தப் பாத்திரம் மட்டும் அந்தச் சூழலில் இன்னும் அழியாமல் கிடந்தது. அது மண்ணோடு மண்ணாகி முற்றிலும் அழிந்து போவதற்கு இன்னும் முன்னூறு ஆண்டுகள் இருந்தன.

அது மாத்திரம் நிச்சயம்.

திறமான நிச்சயம்.

by Swathi   on 26 Mar 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
இன்னா செய்தாரை இன்னா செய்தாரை
மாங்காய் மாங்காய் மாங்காய் மாங்காய்
உடல்நிலை உடல்நிலை
அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர் அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்
கவனம்-இரமா ஆறுமுகம் கவனம்-இரமா ஆறுமுகம்
நெஞ்சோரமாய்…கலையரசி சிவசுந்தர பாண்டியன் நெஞ்சோரமாய்…கலையரசி சிவசுந்தர பாண்டியன்
கழுதைக்கும் கற்பூர வாசனை தெரியும் கழுதைக்கும் கற்பூர வாசனை தெரியும்
மனித நேயம் மனித நேயம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.